தனசேகர் குடும்பம் விருதுநகரில் இருந்து கிளம்பும் போதே பின் மாலைப் பொழுதாகி இருந்தது. இங்கும் பொறுப்புகள் பல இருக்க அப்படியே விட்டுட்டு விரைவது எளிதில்லையே.
அங்குப் பங்குனி பொங்கல் என்பது பெரும் திருவிழா போலிருக்கும். அதற்கேற்ப செலவும் இருக்கும். இப்போது அந்தப் பணத் தேவை பற்றிய எண்ணமெல்லாம் அவன் மனத்தில் எழவேயில்லை.
அண்ணன் குணசேகர் மட்டுமே அவன் மனத்தை ஆக்கிரமித்திருந்தான்.
தங்க மீனாட்சிதான், “மாமா, நாளைக்குத்தேன் நமக்குச் சீட்டுப் பணம் தர்றேண்டு சொல்லியிருக்காங்க. இந்நேரம் நாம ஊருக்கு போயிட்டா, அந்தப் பணத்தை எப்படி மாமா வாங்குறது?” என்று விவரமாக அவனிடம் கேள்வி கேட்டிருந்தாள்.
“உங்கப்பாவ வாங்க சொல்லுவோம் மீனா.”
“செரி, அவரு வாங்கிட்டு? பணத்தை எடுத்திட்டு அப்பாவ மதுர வரச் சொல்றீங்களா?”
“இருடி, நா பேசி முடிக்க மின்ன குதிக்காத. உன் தம்பி பிரேம் ஊருக்கு வந்திருக்கான்ல, அவெங்கிட்ட குடுத்து விடச் சொல்லு” என்றான்.
“அவெங்கிட்ட அம்புட்டு பணத்தையா மாமா? அவேன் கவனமா கொண்டுட்டு வந்துருவானா? அப்பா அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரு” என்று அவள் சொல்ல, “மாமா கிட்ட நான் பேசிக்கிறேன் மீனு. உன் தம்பி பச்ச புள்ளையாடி? பணத்தைப் பத்திரமா கொண்டுட்டு வர மாட்டியான்னு பயந்து நடுங்கற? இந்த அழகுல அவனுக்குக் கல்யாணம் வேற பேசுறீங்க நீங்க” என்றவனை முறைத்தாள் மீனாட்சி.
இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பும் முன் மாமனாருக்கு அழைத்து விட்டான் தனசேகர்.
அவன் சூழலை அவருக்குப் புரியும்படி விளக்கிச் சொல்ல, “சரிங்க மாப்ள. நீங்க சூதானமா போயிட்டு வாங்க. இங்கன எல்லாத்தையும் நா பார்த்துக்கறேன்” என்று அவனுக்கு நம்பிக்கை அளித்தார் முருகானந்தம்.
“உங்களுக்குப் பணம் எதுவும் தேவைப்பட்டா சொல்லுங்க மாப்ள, நா இப்பவே கொண்டுட்டு வந்து தாறேன்” என்று அவர் சொல்ல, “தேவைப்பட்டா நானே கேக்கறேன் மாமா” என்றான்.
“பொங்கலுக்கு இங்கன வந்திருவீங்கதானே மாப்ள?” என்று தொடர்ந்து அவர் கேட்க, அவனால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.
முதலில் ஊருக்கு செல்ல வேண்டும். அண்ணனை கண்ணார காண வேண்டும். அக்கா வீட்டு சடங்கு, சீர் என எல்லாமே தற்போது அதன் முக்கியத்துவத்தை அவன் மனத்தில் இழந்திருந்தது.
ஆகவே மாமனாரிடம் மழுப்பலாக ஒரு பதிலை சொல்லி நழுவியிருந்தான்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருக்கிறது அவர்களின் சொந்த ஊரான சாத்தமங்கலம் கிராமம். விருதுநகரில் இருந்து ஆட்டோவிலேயே பயணித்தார்கள்.
அவன் மகள் தமிழழகிக்கு அப்பாவின் ஆட்டோவில் பயணிப்பது என்றால் அத்தனை பிரியம்.
“அப்பா காருப்பா, அப்பா பஸ்ஸுப்பா. அப்பா வேகமா போப்பா. பஸ்ஸ முந்துப்பா” என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள் குழந்தை.
பின்னிருக்கையில் அம்மாவின் மடியில் ஏறி நின்று கொண்டு, ஓட்டுநர் இருக்கையில் இருந்த அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டு கதை பேசியபடியே வந்தாள். அவன் மனம் விரைந்து வீடு செல்லும் உந்துதலில் இருக்க, மகளின் பேச்சும், ஸ்பரிசமும்தான் அவனைச் சீராகச் சாலையில் ஆட்டோவை செலுத்த வைத்தது.
மகளுக்கு இடையே உண்ண கொடுக்க வாழைப்பழம் வாங்கி வைத்திருந்தாள் மீனாட்சி.
“ம்மா தண்ணி தாம்மா” என்று மகள் கத்தவும், அடுத்து வந்த சந்திப்பின் சாலையோரம் இருந்த இளநீர் கடையின் முன் ஆட்டோவை நிறுத்தினான் தனா.
“ரெண்டு எளநீ கொடுங்கண்ணே” என்று அவன் சொல்ல, “ஏ உங்களுக்கு வேணாமா?” என்று அவனிடம் கேட்டாள் மனைவி.
“பாப்பா குடிக்க மாட்டா மீனு. அவ குடிச்சுட்டு மிச்சம் வச்சா நான் குடிச்சுக்கறேன்” என்றான்.
“அவ அதெல்லாம் முழுசா குடிப்பா. நீங்க உங்களுக்கும் ஒன்னு சேர்த்து சொல்லுங்க. இல்லண்டா எனக்கும் வேணா” என்றாள் அவன் முகம் பார்த்து அழுத்தத்துடன்.
“என்னா மீனு” என்று கோபமாகச் சலித்தவன், “நீ குடிச்சுட்டு குடு” என்றான்.
“பெரிய மாமா வாராகண்டு நீங்க பட்டினியா கெடக்கணுமா மாமா?”
“யாருடி இவ நான் எங்க பட்டினியா கெடக்கேன். மதியம் ஓம் முன்னுக்க ஓங்கையாலதானே சோறு வாங்கிச் சாப்பிட்டேன்” என்று முறைத்தான்.
இரண்டு இளநீரை சீவி அவனிடம் ஒவ்வொன்றாக நீட்டினார் கடைக்காரர். அதை வாங்கி மனைவி, மகளுக்குக் கொடுத்தான். அவன் தோளில் ஒய்யாரமாகச் சாய்ந்தபடி இளநீரை குடித்தாள் அவன் மகள்.
அவன் சிறுவனாக இருக்கும் போதெல்லாம் இளநீர் குடிப்பது எல்லாம் ஆடம்பரம். அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நான்கு தென்னை மரங்கள் இருக்கும். எப்போதாவது அண்ணன் திருட்டுத்தனமாகப் பறித்துப் பதமாகச் சீவி இளையவனுக்குக் குடிக்கத் தருவான். அந்த இளநீர் அத்தனை இனிப்பாக இருக்கும். அந்த நினைவே அடி நாக்கில் உறைந்த இனிப்பாக உறைக்கக் கண்ணை மூடித் திறந்து மகளைப் பார்த்தான்.
“போதும்ப்பா” என்று இளநீரை அவன் முகத்துக்கு முன் நீட்டினாள் மகள். அவனை முறைத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தபடியே இளநீரை குடித்து, மகளுக்கு அதைச் சீவி வாங்கி வழுக்கையை ஊட்டினான்.
“ஜெல்லிப்பா” என்று சிரித்துச் சப்பு கொட்டி சாப்பிட்டாள் குழந்தை.
“இந்தாங்க” மனைவி நீட்டியதை மறுக்காமல் வாங்கி மென்றான். பத்து நிமிட ஓய்வுக்குப் பிறகு அவர்களின் பயணம் தொடர்ந்தது.
மேலூருக்குள் நுழைந்து பேருந்து நிலையத்தைக் கடக்கையில் அவன் கண்ணில் பட்டது அந்தத் தேநீர் கடை. அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் கோபத்தில் ஆட்டோவை முறுக்கினான் தனா.
அங்கிருந்தவன் ராமமூர்த்தி. குணசேகரின் மச்சினன்.
தனசேகரின் காதல் கை சேராமல் போனதற்குக் காரணமாக இருந்தவன்.
இப்போது குணசேகரை அவர்கள் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வதும் அவன்தான்.
அவனை ஓரப் பார்வையில் எரித்து விடுவது போலப் பார்த்துத் தனா கெட்ட வார்த்தையை உதிர்த்து பல்லைக் கடிக்க, “மாமா, புள்ள இருக்கையில என்னா பேசுறீங்க” என்று அவன் தோளில் அடித்தாள் மீனாட்சி.
“அவளுக்குக் கேட்டிருக்காது. அவ வெளில வேடிக்கத்தேன் பார்க்கறா” என்று சினந்தான்.
“நீங்களும் பராக்கு பார்க்காம நேரா ரோட்ட பார்த்து ஓட்டுங்க” என்று அவள் கடிய, தலையை நன்றாகத் திருப்பி ஒரு முறை அவனை முறைத்து விட்டே தன் கண்களைச் சாலைக்குத் திருப்பினான்.
அவர்கள் பக்கத்து ஊரான தனியா மங்கலத்தைக் கடக்கையில் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவர்கள் ஊர் நோக்கி நடந்து கொண்டிருந்த குடும்பத்தைக் கண்டதும் ஒரு நொடி அதிர்ச்சியாகி வண்டியின் வேகத்தை முழுமையாகக் குறைத்திருந்தான் அவன்.
அது அவனது அண்ணி தமிழ் செல்வியின் குடும்பம். அதாவது குணசேகரின் மாமியார் குடும்பம்.
“இவிய்ங்களுக்கு இப்போ இங்கன என்னடி வேலை மீனு? நம்ம ஊருக்குத்தேன் நடக்குறாய்ங்க போல?” என்று கண்ணாடியில் மனைவியைப் பார்த்து கேட்டான்.
“என்னைய கேட்டா? நானும் உங்களோடத்தானே மாமா வர்றேன்? எனக்கு மட்டும் எப்படி வெவரம் தெரியுமாம். ஆனா நம்ம ஊருக்குத்தேன் அவிங்களும் வாராய்ங்க போல” என்று இழுத்து நிறுத்தினாள்.
“அது தெரியுது. ஆனா என்னாத்துக்கு இப்போ வாராய்ங்கன்னு தெரியலையே” என்று சத்தமாகப் புலம்பி தலை கோதி, முடியை பிய்த்துக் கொண்டான்.
மீனாட்சி எட்டி அவன் கையைத் தட்டி விட்டாள்.
“அவுங்க பக்கத்துல போயி நிப்பாட்டுங்க. அந்தப் பெரியம்மாவையும், அந்தப் புள்ளையையும் நம்மளோட கூட்டிட்டு போவோம்” என்றாள்.
“ஆங் போறாய்ங்க பொழப்பு இல்லாம, போடி அங்குட்டு..” என்று கோபமாகக் கத்தினான். அவன் சத்தம் கேட்டு அவர்கள் திரும்பி அவர்களைப் பார்க்க, சட்டென ஆட்டோவின் வேகத்தைக் கூட்டி அவர்களைக் கடந்து விட்டான் தனா.
அண்ணன் குணாக்கு நேர்ந்தது மிகப் பெரிய இழப்பு. அவனுக்காக அவன் குடும்பம் மொத்தமும் வருந்த, தன் இழப்பில் இடிந்து போய் இருந்தவன் கண்ணுக்கு அவர்கள் யாருமே தெரியவில்லை போலும்.
ஒட்டு மொத்த குடும்பத்தினரிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டான். ஆனால், மாமியார் வீட்டுடன் மட்டும் அவன் உறவு தொடர்கிறது என்பதைக் கேள்வி பட்டதும் தனசேகருக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றே தெரியவில்லை.
“அப்போ நாங்கலாம் உனக்கு வேணாம். ஆனா உன் மாமியா வீடு மட்டும் உனக்கு ஓசத்தியா போச்சாக்கும்?” என்று அவர்களின் அம்மா போல அழுது புலம்பவில்லை அவன். ஆனால் மனத்தளவில் பெரியதாக அடிவாங்கி இருந்தான்.
அப்போது அவர்கள் வீடு துக்கத்தில் மூழ்கியிருந்தது. திடீரென்று ஒருநாள் விடியலில் அண்ணனை வீட்டில் காணவில்லை. அன்று மாலை வரை வீடு வரவில்லை அவன். மூன்றாம் நாள் காலை அவனைத் தேடி ஊரெங்கும் சுற்றினார்கள்.
கடைசியில் அவனுக்கு அண்ணனை குறித்த தகவல் சொன்னது குணசேகரின் மனைவி தமிழ் செல்வி வீட்டினர்தான்.
அவர்கள் சொல்லித்தான் அண்ணனை பற்றித் தெரிந்து கொள்ள நேர்ந்த அவலம் அவனுக்குக் கோபத்தோடு, அவமானத்தையும் சேர்த்தே தந்தது.
இன்றைக்கும் அந்த வருத்தம் அவனுக்கு இருக்கத்தான் செய்கிறது.
அவன் நினைவலைகளில் மூழ்கியிருக்கையில் வீட்டுக்கு அழைத்து, “நாங்க ஊருக்குள்ள வந்துட்டோம்த்தே” என்று மாமியாருக்கு செய்தி சொல்லி விட்டாள் தங்கமீனாட்சி. அவர்களின் ஆட்டோ சத்தம் தெரு முனையில் கேட்டதும் வாசலுக்கு வந்து நின்று விட்டார் கமலா.
அவர்கள் மூவரையும் வரவேற்று, “தங்கப் புள்ள வாங்க” என்று பேத்தியை தூக்கிக் கொண்டார்.
“அப்பாத்தா, நாங்க ஆட்டோலயே வந்தோமே” என்று அவரிடம் கதைச் சொன்னாள் அழகி.
“அப்படியாத்தா. நான் ஆட்டோலயே போனதில்ல” என்று அவர் பாவம் போலச் சொல்ல, “பொய்யி, நாளைக்கு அப்பா ஆட்டோல நீங்க போனீங்க” என்று கண்ணை உருட்டினாள் அவள்.
“இல்லையேத்தா, நீயி இப்போ கூட்டிட்டு போறியா?”
“எனக்கு ஓட்ட தெரியாது. அப்பாவ ஓட்ட சொல்றேன் அப்பத்தா” என்றவள், “அப்பா, அப்பத்தாவ ஒரு ரவுண்டு கூட்டிட்டு போப்பா” என்று மூக்கை சுருக்கி கெஞ்சலாக அவள் சொல்ல, “ம்ம்” என்றான் தனா.
அப்படியே நின்று வீட்டை நிமிர்ந்து நோக்கினான். கடைசியாக அண்ணனை இங்குதான் பார்த்தது, இருவரும் சரியாகப் பேச கூட இல்லை.
குணசேகர் சட்டையெல்லாம் கசங்கி, ஆளும் அலுங்கி, தோற்றமும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லாத நிலையில் அன்றிருந்தான்.
அவனது உயரத்துக்கும், உடல் வாகுக்கும் பதினைந்தே நாள்களில் உருக்குலைந்து போய்த் தெரிந்தான் அவன்.
மனைவியின் இறப்பு அவனை முழுதாக ஒடித்துப் போட்டிருந்தது.
“அண்ணே” என்று இவன் அழைத்து அவனை நெருங்க, அவனை நிமிர்ந்து ஒரு நொடி நோக்கினான். அவ்வளவுதான். அப்படியே அவனைக் கடந்து படிகளில் இறங்கி, தெருவில் புழுதி பறக்க நடந்திருந்தான்.
இப்போதும் மாடி படியை அவன் பார்க்க, அண்ணன் அங்கு நிற்பது போலப் பிரம்மை.
“தனா, தம்பி. என்னய்யா அப்படியே வாசல்ல நின்னுட்ட வீட்டுக்குள்ளாற வாய்யா” என்று அம்மா அழைக்க, “வா மாமா” என்று அவன் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் மீனாட்சி.
அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவனுக்கு வெவ்வேறு நினைவுகளைக் கிளறி விட்டது.
கிராமத்து பாணியில் கட்டப்பட்ட கல் வீடு அது. இரண்டு படுக்கையறை, கூடம் என அளவான வீடு. அந்த வீட்டின் பக்கவாட்டில் கூரை வேய்ந்த சிறிய அறை உண்டு. அதுதான் அவர்களின் சமையல் அறை. வீட்டின் பின்பக்கம் தனித்தனியாகக் குளியல் அறை, கழிவறை வசதி உண்டு.
அவர்கள் வீட்டுக்குள் நுழைய, கூடத்தில் அமர்ந்திருந்தார்கள் அவனது அப்பத்தா, அப்புச்சி.
“எப்பே, வாப்பே” என்று அவனது அப்பத்தா மாரியம்மாள் கை நீட்டி பேரனை ஆசையாக அழைத்தார்.
கொள்ளு பேத்தியை கண்டதும், “தங்கப் புள்ள” என்று கண் கலங்க அவளை இழுத்து கொஞ்சினார்.
அன்றைய நாள் விரைந்து ஓடியது. அன்றிரவு அவனுக்குத் தூக்கமே இல்லை.