தம்பி உடையான் – 1 (2)

ஆட்டோ முகப்பில் அண்ணன் பெயர், பின்பக்கம் தன் மகளின் பெயரை எழுதியிருக்கிறான். அதில் அவனது பொண்டாட்டிக்குச் சடவு வேறு. பின்னே உடமைப்பட்டவள் அவள் பெயர் இல்லையே என்ற வருத்தம் அவளுக்கும் இருக்கத்தானே செய்யும்.

அண்ணன் குணசேகர்.

அவன் தொடர்பில்லாமல் தொலைந்து போய் நான்கு ஆண்டுகள் நெருங்கப் போகின்றன.

தனசேகரை விட நான்கு ஆண்டுகள் பெரியவன். இந்த மாசி பிறந்தால் அவன் வயது முப்பத்தி ஐந்தை தொட்டு விடும். இந்த வயதில் ஒருவன் எப்படித் தொலைந்து போவான்? தனது ஊரையும், உறவுகளையும் வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கி, விரும்பியே காணாமல் போனவனை எங்கு வலைப் போட்டு தேடினாலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

இந்தக் கணினி யுகத்தில் குணசேகரை அப்படியா கண்டுபிடிக்க முடியாமல் போய் விடும்?

தனசேகர், குணா வீட்டை விட்டு வெளியேறிய மூன்றாம் மாதமே அவனைக் கண்டுபிடித்து விட்டான். அதனால் என்ன பயன்? ஒரு மாற்றமும் நிகழவில்லை. குணா மனம் வைத்தால் மட்டும்தானே அவனைக் காண முடியும்.

அவனைத் தேடி அலைந்து திரிந்தது எல்லாம் வீண் அலைச்சலாகி போனது அனைவருக்கும். ஆனால் அவனுக்கு நிச்சயமாக அது அலைச்சலில் வராது. விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் அண்ணனை காணச் சென்றான்.

அவனே தம்பியை அலைபேசியில் அழைத்து, “இந்தாரு தனா, சும்மா எதுக்கு எம் பின்னாலயே சுத்திட்டு இருக்க? உனக்கு வேல பொழப்பு இல்லையா? போய் அதைப் பாரு சொல்லிட்டேன். இன்னொருக்கா என்னைய தேடி வந்தேன்னு தெரிஞ்சது..” என்று மிரட்டும் குரலில் சொன்னவன், “நீயி கண்டுபிடிக்க முடியாத ஊருக்கு..நா கண் காணாம போயிடுவேன் பார்த்துக்கோ” என்று அப்பட்டமாக மிரட்டியிருந்தான் குணசேகர்.

“என்னண்ணே இப்படிப் பேசுற?” உடைந்த குரலில் அவன் கேட்க, “என்னைய விட்ருங்கடா. நா நிம்மதியா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று கத்தியிருந்தான் குணா.

“உனக்குமாடா எந்நிலம புரியல?” என்று கேட்கையிலேயே தளுதளுத்தது அவன் குரல்.

“அண்ணே..”

“போடா” என்று விரக்தியுடன் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் குணசேகர். அதன் பிறகு அண்ணனிடம் அவன் பேசவேயில்லை. அவனுக்குப் பேச ஆசையிருந்தாலும் அண்ணன் அதற்கு வாய்ப்பு தர வேண்டுமே.

இந்த நான்கு ஆண்டுகளில் அவன் வாழ்வில் எத்தனை மாற்றங்கள்.

அவனுக்கு மகள் பிறந்ததைக் கூட அண்ணனிடம் நேரடியாகச் சொல்ல முடியாத வருத்தம் அவனுக்கு நிறையவே இருந்தது.

அண்ணனுக்கு அப்படியும் தகவல் தெரிவித்தான்தான். அப்போது அவன் நிச்சயமாக வருவான் என்று அறுதியிட்டு நம்பினான்.

எங்கே? அவன் வரவேயில்லையே என்ற அவனது ஏக்கம் இப்போதும் அவனுக்குப் பெருமூச்சமாக வெளிப்பட்டது.

தன் நினைவலைகளை ஒதுக்கி, ஆட்டோவை ஆக்கிரமித்து இயக்கினான்.

பழகிய ஊரும் பாதையும் அவனைப் பத்திரமாக வீட்டில் கொணர்ந்து சேர்ந்திருந்தது.

“மீனா.. ஏய் மீனாட்சி” என்று மனைவியின் பெயரை சத்தம் போட்டு அழைத்தப்படி வாசல் கதவை தட்டினான்.

“இந்தா வந்துட்டேன் மாமா” என்ற பதில் குரல் வந்தது. அவனது அவசரம் புரியாமல் இவள் வேறு என்று அலுத்துக் கொண்டவன், தன் பலம் மொத்தத்தையும் திரட்டி கதவை ஓங்கி தட்டினான்.

“இப்போ எதுக்கு மாமா கதவை ஒடைக்கற? நாந்தேன் வர்றேன்டு சொல்றேன்ல” கோபத்துடன் கேட்ட குரல், ஓடி வந்ததில் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க கதவை திறந்து விட்டது.

அவன் எதிரே இடுப்பில் கை வைத்து அவனைக் கடுமையாக முறைத்து நின்றாள் அவன் மனைவி தங்கமீனாட்சி.

“இல்ல மீனா..” என்று அவன் தடுமாற, “அ..ப்பா” என்று ராகம் போட்டு அவன் காலை கட்டிக் கொண்டாள் அவனது இரண்டரை வயது மகள், தமிழழகி.

“என் அழகியே” குனிந்து மகளைக் கையில் அள்ளிக் கொண்டான். அப்பாவின் மீசையைப் பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் முத்தம் வைக்கும் சாக்கில் எச்சில் செய்தாள் மகள்.

மகளின் ஸ்பரிசம் அந்நேரம் அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது, கண்களை மூடி மகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“ம்க்கும்” என்ற செருமல் சத்தத்தில் அவன் கண்களைத் திறக்க, அவன் கண் முன்னே இடுப்பில் கை வைத்து அவனைக் கடுமையாகக் கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள் தங்கமீனாட்சி.

“மீனு..” அந்த அழைப்பே அவளை உருக்கிட, “என்ன மாமா?” என்று கேட்ட குரலில் இளக்கம் இருந்தது.

அவனுக்கு உணர்ச்சி மிகுதியில் குரல் பிசிரடிக்க, “நாளைக்கு அண்ணே வருதாம்டி மீனு” என்றான்.

அவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, “என்ன மாமா சொல்ற?” என்று கத்தியே விட்டாள்.

“நெசமாத்தேன் மீனு. அம்மா இப்பத்தேன் போன் போட்டு சொல்லுச்சு”

“அத்தையா? அவுகளுக்கு எப்படித் தெரியுமாம்? பெரிய மாமா போன் போட்டுச்சா? அதிசயமால்ல இருக்கு” என்று பரபரத்தாள் அவள். பின்னே இருக்காதா? இன்றைக்கு அவள் வாழும் வாழ்க்கை அவனால் சாத்தியமானதாயிற்றே.

தனசேகர் காதல் தோல்வியில் துவண்டு திருமணமே வேண்டாம் என்று வெறுத்து திரிந்த காலம் அது.

அவளைப் பெண் பார்த்து பேசி சென்றது எல்லாம் தனாவின் வீட்டினர்தான்.‌ அவளுக்கு அது பெரும் உறுத்தலாக‌ இருக்க, இந்தத் திருமணம் தனக்கு வேண்டுமா எனும் யோசனைக்குச் சென்றிருந்தாள். அவளின் மனக் குழப்பம் புரிந்து அவளிடம் தனியாகத் தம்பியை பற்றிப் பேசி, அவளின் மனக் கலக்கத்தைப் போக்கி, அவர்களின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைத்தது குணசேகர்தான். ஆனால் அவன் வாழ்வு இப்படிப் பாதியில் தரிசாகி போய் இருக்க வேண்டாம். மனைவியை இழக்கும் வயதா அவனுக்கு?

அதிலும் அன்று அவனது மனைவி இருந்த நிலை என்று கடந்த காலத்தினை யோசிக்க யோசிக்க அவள் கண்கள் மளுக்கென்று உடைந்து குளம் கட்டின.

அவளின் மனநிலையை உணர்ந்தது போல, “என்ன மீனா, அப்படியே நின்னுட்ட? உன் கேள்விக்கெல்லாம் போற வழியில பொறுமையா பதில் சொல்றேன். இப்போ நாம அவசரமா ஊருக்கு போகணும். நீ போய்க் கிளம்பு. நம்ம எல்லோருக்கும் துணி எடுத்து வை, ஓடு. வேகமா” என்று மனைவியை விரட்டி அவள் பின்னேயே அவனும் சென்றான். அவளுக்கு உதவினான்.

அவன் கைகள் அதன் போக்கில் வேலை செய்தாலும் மனம் அண்ணனை சுற்றியே வட்டமடித்தது.

“நீயெல்லாம் என் அண்ணனாடா? எம் மூஞ்சிலயே முழிக்காத சொல்லிட்டேன். துரோகி. உன்னைய போய் நா நம்பினேன் பாரு. இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்பண்ணே. உனக்கு அன்னைக்குப் புரியும் என் வலி” என்று அண்ணனுக்கு அவன்தான் சாபம் விட்டிருந்தான். அன்று அவன் இருந்த சூழல் அப்படி.

காதல் தோல்வியில் மனம் உடைந்து போய் இருந்தான். அவன் விரும்பிய பெண்ணுக்கு வேறு ஒருவனுடன் திருமணமாகிட, இவன் வாழ்க்கையை வெறுத்த நிலையில் அன்றிருந்தான்.

அச்சமயம் அண்ணன் மேல் அவனுக்கு அத்தனை கோபமும், அதனால் விழைந்த வெறுப்பும் இருந்தது. அக்கணத்தில் கண் மண் தெரியாத வெறுப்பில் வார்த்தைகளை வரம்பின்றி வாரி இறைத்திருந்தான். அது அப்படியே பலிக்கும் என்று அவனென்ன கனவா கண்டான்? கொடும் கனவுதான்.

அவன் சொன்னது போல அண்ணன் மனம் உடைந்து மட்டும் போகவில்லையே. தனி மரமாக அல்லவா நிற்கிறான்.

இன்று தான் நன்றாக மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழும் போது அண்ணன் வாழ்க்கையை, மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டல்லவா நிற்கிறான்.

அதிலும் கர்ப்பிணி மனைவியை இழப்பது எத்தனை பெரும் கொடுமை? அப்போது யாராலும் அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் போனது. அவனும் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை.

இப்போது இத்தனை வருடங்கள் கழித்து ஊர் வருகிறான். இதோ அண்ணனை காணும் ஆவலில் விரைந்து மதுரையை நோக்கி தன் ஆட்டோவை செலுத்தினான் தனசேகர்.

குணசேகர் சொன்ன சொல் தவறாமல் ஊருக்கு வருவான்தானே?

error: Content is protected !!
Scroll to Top