தம்பி உடையான் – 1 (1)

அந்த மாலைப் பொழுதை மயக்கும் மாலைப் பொழுதென்று வர்ணிக்க முடியாது. சூரியன் அத்துணை உக்கிரமாகச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். பங்குனி மாதம் பிறந்தாலே விருதுநகர் விழாக்கோலம் பூண்டு விடும். பங்குனி பொங்கல் அங்கு மிகப் பிரசித்தம். விருதுநகர் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்த மாரியம்மன் கோவிலுக்கு எதிர்ப்புறம் இருந்த ஆட்டோக்கள் நிற்குமிடத்தில் சாய்ந்து நின்றிருந்தான் தனசேகர். வெயில் வியர்வையாய் அவன் மேனியில் வழிந்து ஓடியது.

“அண்ணே பாண்டியன் நகர் போகணும்” என்று தனசேகர் முன்னே ஒரு குடும்பம் வந்து நிற்க, “போலாம் ஏறுங்க” என்றான் அவன்.

“எம்புட்டுன்னு சொல்லுங்க”

“எப்பயும் குடுக்கறத குடுங்க” என்றான்.

“இல்ல, நீங்க எம்புட்டுன்னு சொல்லுங்க” என்று அந்த ஆண் அழுத்தி கேட்கும் போது தனசேகரின் அலைபேசி இசைத்தது. அவன் கண்கள் அனிச்சையாக அலைபேசியைத் திரையை நோக்கின.

அதில் அம்மாவின் பெயர் ஒளிர்ந்தது. ஒரு நொடி தயங்கி பின்னர் அழைப்பை ஏற்கும் முன்னர், “ஏறுங்க” என்று அக்குடும்பத்தினரிடம் சொன்னான்.

“நீங்க மொத போனை பேசி முடிச்சுட்டு வண்டியை எடுங்க தம்பி” என்றார் எதிரே நின்றவர்.

அவசரமாக அழைப்பை ஏற்று, “எம்மா, நான் வண்டியோட்டிட்டு இருக்கேன். செத்த நேரம் சென்டு திரும்பக் கூப்பிடுறேன் வைங்க” என்று அம்மா பேசுவதற்கு இடமே கொடுக்காமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

அந்தக் குடும்பத்தை ஏற்றிக் கொண்டு பாண்டியன் நகர் நோக்கி ஆட்டோவை செலுத்தினான். அவன் அம்மா திரும்பத் திரும்ப அவனை அழைத்துக் கொண்டேயிருந்தார். பொதுவாக அவரிடம் இருந்து இத்தனை அழைப்புகள் தொடர்ச்சியாக வராது. பெரும்பாலும் காலை அல்லது இரவில்தான் அவனை அழைப்பார். அந்நேரம் வீட்டில் இருக்கும் அனைவரும் அவனிடம் பேசுவார்கள்.

அவனும் ஆட்டோ ஓட்டும் போது அலைபேசி அழைப்புகளை ஏற்பது இல்லை. ஆகவே, விடாமல் அடித்தாலும் அழைப்பை ஏற்கவில்லை அவன். ஆனால் அவன் மனம் பதற்றமடைந்தது என்னவோ உண்மை.

‘யாருக்கும் என்னவோ?’ என்று மனம் பதற பாண்டியன் நகரில் அந்தக் குடும்பத்தை இறக்கி விட்டதும் உடனடியாக வண்டியை ஓரங்கட்டி அம்மாவை அழைத்து விட்டான்.

“ம்மா, என்னம்மா? எல்லாம் நல்லா இருக்கீங்கதானே? என்னாத்துக்கு இம்புட்டுத் தரம் போன போட்டு என்னைய பதற வைக்குற?” என்று முயன்று வருவித்த நிதானத்துடன் கேட்டான்.

“எல்லாம் நல்லாத்தேன் இருக்கோம் சாமி. ஆருக்கும் ஒன்னுமில்ல” என்று அந்தப் பக்கமிருந்து பதில் வரவும் ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து விட்டு ஆட்டோவில் சாய்ந்து நின்றான்.

“அப்புறம் ஏன் எனக்கு இம்புட்டுத் தரம் போன் போட்டீங்க?”

“ஏலேய் தம்பி, இப்போ என்னா ஆத்தா உனக்குப் போன் போட்டது குத்தமாய்யா?” என்று அவர் சடைத்துக் கொள்ள, “இல்ல ஆத்தா, சொல்லு. எப்படி இருக்க? அப்பா, அப்பத்தா, அப்புச்சி எல்லாரும் எப்படி இருக்காங்க. ஊர்ல என்னா செய்தி?” என்று நலமும், நடப்பும் விசாரித்தான்.

“நாங்க எல்லாம் நல்லாத்தேன் இருக்கோம். நீயும், உன் பொண்டாட்டி புள்ளையும் எப்போ ஊருக்கு வர்றீங்க?”

“எம்மா, இப்போ என்னாத்துக்கு எங்களை ஊருக்கு வரச் சொல்ற?”

“ஏலே மறந்து போனியாடா?” என்று அங்கலாய்த்தார் அவன் அம்மா கமலா.

அவன் சட்டெனச் சுதாரித்து, “அதெல்லாம் மறக்கல” என்றான்.

“சும்மா சமாளிக்காதடா. உங்கக்கா, எம் பேத்திக்கு சடங்கு வச்சுருக்கா இல்ல? அதுக்குத்தேன் எப்போ வர்றீங்கண்டு கேக்கறேன்”

“அதுக்கு இன்னும் நாள் கெடக்கு இல்லம்மா. நாங்க இப்பவே அங்கன வந்து என்னா செய்யப் போறோம்?” என்று சலிப்புடன் கேட்டான்.

“என்னடா இம்புட்டு சலிச்சுக்கற? தாய் மாமேன் நீங்கதான் சபை நெறைச்சு சீர் செய்யணும். நீயி என்னாண்டா இப்போவே வந்து என்னா செய்யன்னு கேக்கறவன்..” என்று அவர் அலுத்துக் கொள்ள, “நாங்க நாள மறுநாள் வர்றோம்மா” என்றான்.

“ஏன்யா அம்புட்டுச் சீக்கிரம் வர்றீங்க. செத்த பொறுமையா விசேஷத்தன்னைக்கி வாவேன் போதும்” என்று கோபமாகச் சொன்னார்.

“எம்மா..”

“எங்களுக்கு இருக்கறது ஒரே மவடா. அவளும் ஒத்த மவளை பெத்து ரத்தினமா வளர்த்து வச்சுருக்கா. நீங்க ஒழுங்கு மரியாதையா வந்து, தாய் மாமன் முறைய ஊர் மெச்ச செஞ்சுப்புடுங்க சொல்லிட்டேன். நமக்கு ஒத்த சொல்லு கொறயா வந்துட கூடாது..” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, “எம்மா, அதெல்லாம் நல்ல மாரியா செஞ்சுடலாம். நீயி மனச போட்டு ஒழப்பிக்காத” என்று உறுதியாகச் சொன்னான்.

“நீயும் நல்லாத்தேன் பேசுற. ஆனா என்னத்த செய்யப் போறீங்களோ? ஊருக்கு வரவே உங்கள இம்புட்டுத் தரம் போன் போட்டு அழைக்க வேண்டியதா இருக்கு. இதுல…”

“கையில் காசு இல்லாம இப்போ ஊருக்கு வந்து நா என்னம்மா செய்யப் போறேன். நகை, சீரு வரிசை, கெடா குட்டி எல்லாம் பிடிக்கணும்னா காசு வேணாமா? அதென்ன வானத்தைப் பொத்துக்கிட்டா கொட்ட போகுது. நான் கேட்ட இடத்துல இருந்து காசு கைக்கு வந்ததும் கிளம்பி வாரேன்ம்மா” என்றான்.

“ஏன்யா தனா, கையில் காசு இல்லண்டா மருகற? நீ கிளம்பி வா, நாம பார்த்துக்கலாம். உங்க அப்பாரு கிட்ட கேட்டா கொடுப்பாரு” என்று அவர் சொல்ல, “உங்ககிட்ட காச வாங்கி நானு சீரு செய்யவாம்மா? நல்லா இருக்கே நீங்க சொல்ற கோளாறு” என்று சினந்தவன், “இங்கன மீனா எங்களுக்குத் தெரிஞ்ச எடத்துல ஒரு லட்ச ரூபா சீட்டு போட்டுருக்கா, அது இந்த மாசம் எங்களுக்குத் தரச் சொல்லி கேட்டுருக்கோம். அவுகளும் நாளைக்குத் தர்றேன்னு சொல்லியிருக்காங்க. அத்த வாங்கிட்டு அப்புறமா வர்றோம்மா” என்றான்.

“சரிய்யா” என்று அவர் தயங்கி இழுத்து நிறுத்த, “என்னம்மா?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“அது அண்ணே..” என்று அவர் உச்சரித்ததுமே அவன் உடலின் அனைத்து அணுக்களும் விழித்துக் கொண்டன.

“அண்ணே இத்தன வருஷமா வராதது இப்போவாம்மா வரப் போகுது?” என்று வருத்தத்துடன் ஒலித்தது அவன் குரல்.

“மொத என்னைய பேச விடுய்யா தனா. உங்கண்ணே, உங்கக்கா மவ சடங்குக்கு வர்றானாம்ய்யா. இப்போத்தேன் உங்கக்கா போன் போட்டு சொன்னா..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, அவனோ அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்று விட்டான்.

“அண்ணன் வருகிறான்” மீண்டும் மீண்டும் அந்தவொரு வாசகம் அவன் மனத்தில் ஓட, நெஞ்சில் யாரோ ஏறி நின்றது போல மூச்சடைத்தது அவனுக்கு.

“ஏய்யா தனா..”

அம்மா திரும்பத் திரும்ப அவன் பெயர் சொல்லி அழைத்தார். அவரின் அழைப்பு அவன் செவியில் விழுந்தாலும், பதில் சொல்ல வாய் வரவில்லை. அதிர்ச்சியில் பேச்சு மறந்த நிலை அவனுக்கு.

“எய்யா ஏதாவது பேசுய்யா. நீயி இப்படித் தெகைச்சு நிண்டா நான் என்னாண்டு நினைக்க?” என்று அந்தப் பக்கம் அவர் தவிக்க, “அண்ணே நெசமா வருதாம்மா” என்று நம்ப இயலாத அதிர்ச்சியுடன் கேட்டிருந்தான்.

“ஆமாய்யா. அவனே உங்கக்காக்கு போன போட்டு வர்றேன்னு சொன்னியானாம். இதெல்லாம் உறுதியா தெரியாம நான் உங்கிட்ட சொல்லுவேனாய்யா?” என்று அவன் மனத்தின் தவிப்பு புரிந்தவராகக் கேட்டார் அவர்.

“அண்ணே எப்போ வருதாம்?”

“நாளைக்கு வந்துருவியானாம். அதயும் உங்கக்காகிட்டதேன் சொல்லியிருக்கியான். எங்களுக்கே அவச் சொல்லித்தேன் தெரியும்” என்றார். அவர் குரலில் இருந்த வருத்தத்தை அவனால் உணர முடிந்தது. பின்னே பெற்ற மனம் அல்லவா? பிள்ளைகள் எத்தனை பெரியவர்கள் ஆனாலும் பெற்றவளுக்குக் குழந்தைதானே? அவளுக்கு எதிர்பார்ப்பு, ஏக்கம், பாசம் ஏகத்துக்கும் இருக்கத்தானே செய்யும். பிள்ளைகளுக்குப் பல நேரம் அது புரிவதில்லை. புரிந்தாலும் ஒரு அசட்டை காலப்போக்கில் வந்து விடுகிறது. அதற்காக அவர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது.

அவர்களுக்கும் குடும்பம், குழந்தை என வாழ்க்கை வேறு விதமாக வாய்த்திட, பிள்ளைகளின் படிப்பு, பொறுப்புகள் என அதன் பின்னாலேயே ஓடுவதில் நாளடைவில் பெற்றவர்கள் பின்னுக்குச் சென்று விடுகிறார்கள்.

“தனா..”

“நா இப்பவே வர்றேன்ம்மா” என்று மின்னல் வேகத்தில் வந்தது அவன் பதில்.

“இப்போ எப்படிய்யா வருவ? நாளைக்குத்தானே காசு கைக்கு வருதுன்னு சொன்ன? நீயி பதறாம நாளைக்குக் காசு கைக்கு வந்ததும் வாவேன்” என்றார்.

“இல்லம்மா, காசு கெடக்குது. அத பெறகு பார்த்துக்கலாம். நா இப்போ கிளம்பி வாறேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“இல்லய்யா..”

“என்னம்மா இப்போ காசு இல்லாம உம் பேத்தி சடங்குக்குச் சீரு சரியா செய்யாம உட்ருவேன் நெனைக்கறியா நீயி? அப்படியெல்லாம் விட்ர மாட்டேன்ம்மா. எம் பொண்டாட்டி தாலி சங்கிலிய அடமானம் வச்சாவது உம் மவ பெருமைய காப்பாத்திருவேன். நீயி போன வைம்மா. நா வர்றேன்” என்று படபடத்தவன் மேலே அம்மா பேசுவதற்கு இடம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்திருந்தான்.

“அண்ணன் வருகிறான்” வாய் விட்டுச் சத்தமாகச் சொல்லிக் கொண்டான். அவனையும் அறியாமல் அவனுக்குக் கண்கள் கலங்கின.

ஆட்டோவில் சாய்ந்து நின்றிருந்தவன் அப்படியே திரும்பி அதன் முகப்பை வருடினான். அவனவன் ஆட்டோவில் நடிகர்கள் பெயர், படம் என ஒட்டியும் எழுதியும் இருப்பார்கள். சிலரது ஆட்டோவில் அவர்களின் பொண்டாட்டி, பிள்ளைகள் பெயர் இருக்கும். ஆனால் அவன் ஆட்டோவில் அண்ணன் பெயர்தான் இருக்கும். அத்தனை பாசமா என்றால் அவனுக்குப் பதில் சொல்லத் தெரியாது.

error: Content is protected !!
Scroll to Top