என் ஜீவனில் உறைந்திடு – 7 (1)

ரோஜாவுக்குக் கைக் கொடுத்து எழுந்து நிற்க உதவினான் இளமாறன்.

அவன் கண்கள் ரோஜாவின் கை, கால்களைப் பதட்டத்துடன் ஆராய்ந்தது. ரோஜா காலை சரியாக ஊன்றி நிற்க முடியாமல், உதறினாள். சட்டென அவளை அணைவாகப் பிடித்துக் கொண்டான் அவன். இடது காலிலும், வலது முழங்கையிலும் லேசான சிராய்ப்பு காயமும், அதிலிருந்து இரத்தமும் கசிய, “சாரி” என்றான் அவன்.

ரோஜா பதட்டம், படப்படப்பு, கோபம் எனக் கலவையான உணர்வுகளை அடக்கிக் கொண்டு நின்றதில் அவளுக்கு மூச்சு வாங்கியது. கைகளில் மிதமான நடுக்கமிருந்தது.

“சாரி, பிளீஸ்” என்றான் மீண்டும்.

அதுவரை கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த ரோஜா, “என்ன சாரி? எதுக்குச் சாரி? சாரி, அதை நிஜமா மனசுல உணர்ந்து சொல்லணும். சும்மா அர்த்தமில்லாம ஜஸ்ட் லைக் தட் சொல்லக் கூடாது” என்று கத்தினாள்.

“ரோஜா, எதிர்ல ஹாஸ்பிடல் இருக்கு. போகலாம் வாங்க” எதிரில் இருந்த மருத்துவமனையைக் கண் காட்டி நிதானமாகச் சொன்னான்.

“ஒரு செகண்ட் மிஸ்ஸாகி இருந்தா என்னாகி இருக்கும் தெரியுமா செஃப்? எவ்வளவு கூலா ஹாஸ்பிட்டல் போகலாம் வான்னு சொல்றீங்க? நீங்க ரோடு கிராஸ் பண்ணும் போது கவனமா இருக்க வேணாமா? கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாம அப்போ போய்ப் போனை கையில எடுத்துட்டு இருக்கீங்க? அப்படியென்ன தலைப் போகுற அவசரம் நடுரோட்டில் வச்சுப் போனை எடுக்கிற அளவுக்கு? ஒரு நிமிசம் வெயிட் பண்ண முடியாதா உங்களால?”

“ரோடை அல்மோஸ்ட் க்ராஸ் பண்ணிட்டேன். அதுனாலதான்…”

“அல்மோஸ்ட் க்ராஸ் பண்ணிட்டீங்களா? அதை உங்களை இடிக்க வந்த அந்தப் பஸ்காரன்கிட்ட சொல்ல வேண்டியது தானே?”

“சாரி, இனிமே இப்படி நடக்காது.”

“இப்போ நடந்ததுக்கு என்ன பதில் செஃப்? அந்தச் சாரியை திரும்பச் சொல்லாதீங்க.” கத்தினாள்.

சுற்றுப்புறத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு, ரோஜாவை பார்த்தான் அவன்.

“என் கையை விடுங்க. எனக்கு வர்ற கோபத்துக்கு ஏதாவது சொல்லி உங்களை ஹர்ட் பண்ணிடுவேன்” என்ற ரோஜா அவன் கையை உதற முயன்றாள்.

“ரோஜா..”

அந்த அதட்டலில், ஆத்திரத்துடன் விரிந்தது அவள் விழிகள்.

“என்ன அதட்டுறீங்க? நான் மட்டும் உங்களைத் திரும்பிப் பார்க்கலைன்னா என்னாகி இருக்கும் தெரியுமா? என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியல.” ரோஜாவின் குரல் தழுதழுக்க, கண்கள் தளும்பி நின்றது.

இப்போது தான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது என்பது புரிந்தவன் அவள் முகம் பார்த்து மௌனமாய் நின்றான். அந்தக் குரலும், கண்களும் அவனை என்னவோ செய்தது.

“ஒரு செகண்ட் உங்க வீட்டை நினைச்சு பார்த்தீங்களா? உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா, அவங்க எவ்வளவு ஃபீல் பண்ணுவாங்க? அன்னைக்கு உங்கப்பா, அம்மா பதறினது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு. அதுக்குள்ள..” அவளைப் பிடித்திருந்த அவன் கை சட்டெனத் தளர, அவனை முறைத்துப் பார்த்தாள் ரோஜா.

‘எனக்காக ஃபீல் பண்ண ரெண்டே ரெண்டு ஜீவன்தான் இருக்கு. அவங்களைத் தவிர யாருக்கும் என் இழப்புப் பெருசா பாதிக்காது ரோஜா. என்னை எளிதா கடந்து, மறந்திடுவாங்க. இப்போ மட்டும் அவங்க ஞாபகத்தில் நான் இருக்கேனா என்ன?’ என்று மனதில் புலம்பி வருந்திக் கொண்டான்.

“எப்பப் பாரு கையில போனை வச்சுட்டுக் கனவு காணுறவங்களை, செல்ஃபி, வீடியோ பைத்தியங்களை, பார்த்தாலே பத்திக்கிட்டு வரும் எனக்கு. நமக்கு டெக்னாலஜி வரமாதான் இருக்கணும். சாபமா இருக்கக் கூடாது. நம்மளோட ஆக்கத்துக்குதான் டெக்னாலஜி. அழிவுக்கு இல்ல” பேசியபடியே ரோஜா நடக்க முற்பட, அவளைப் பிடித்தபடி கூடவே நடந்தான் இளமாறன்.

திடிரென்று திரும்பி, “உங்க போனை கொடுங்க” என்றாள்.

அவன் ஒரு நொடி அதிர்ந்துப் பார்க்க, “இளா..” என்று அழுத்தமாக அழைத்தாள்.

கேள்விகள் எதுவும் இல்லாமல், தன் அலைபேசியைக் கையில் எடுத்தவன், வேகவேகமாகக் குறுஞ்செய்தி ஒன்றை தட்டச்சுச் செய்ய, ரோஜா பல்லைக் கடித்தாள்.

மறுநொடியே அவளிடம் தன் அலைபேசியைத் தந்திருந்தான், அவனை முறைத்துக் கொண்டே அவள் வாங்க, “ஒரு மீட்டிங்க்காக ஏர்லைன் ஆஃபீஸ் வந்தேன். இப்போ வேற வேலையா இருக்கேன், மீட்டிங்க்கு வரலைன்னு அவங்களுக்கு இன்பார்ம் பண்ணேன் ரோஜா” என்று விளக்கம் கொடுத்தவன், “என்னோட வண்டி அங்கருக்கு, எடுத்துட்டு வரவா? உன்னால நடக்க முடியுமா?” என்று அவன் அக்கறையுடன் கேட்க, “இதோ இருக்க ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு வண்டி?” என்று விட்டு வேகமாக நடக்க முயன்று, வலியில் முகம் சுருக்கினாள்‌.

அவளை அமைதியாக மருத்துவமனை அழைத்துச் சென்றான். அங்கிருந்த செவிலியர் அவளின் காயங்களைப் பரிசோதித்து, பெரிதான அடியில்லை என்று உறுதி செய்தனர். இரத்தக் கறையைச் சுத்தம் செய்து, சிராய்ப்புக் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருக்க, இளமாறன் எழுந்து வெளியில் சென்றான்.

பத்து நிமிடங்கள் கழித்துச் சிகிச்சைப் பெற்று, காயங்களில் சிறிய கட்டும், அவை புரையோடாமல் இருக்க ஊசியும் போட்டுக் கொண்டு ரோஜா வெளியில் வர, மருத்துவமனை வாயிலில் அவளுக்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தான் இளமாறன்.

“உங்களுக்கு வெளில வேலை எதுவும் இருக்கா ரோஜா?” அவன் கேட்டதும், மறுப்பாகத் தலையசைத்தாள்.

“காஃபி எங்க ஹோட்டல்ல சாப்பிடலாம் தானே? உங்களுக்குப் பிராப்ளம் இல்லையே? ஹோட்டல் பக்கத்திலதான் இருக்கு”

ரோஜா சரியென்றும் சொல்லவில்லை. அவனது அழைப்பை மறுக்கவும் இல்லை.

“பிளீஸ்” என்று அவன் சொல்ல, மெலிதான தயக்கத்துடன் அவன் பின்னால் அமர்ந்தாள். வண்டியை சீரான வேகத்தில் நிதானமாகச் செலுத்தினான் இளமாறன்.

ஹோட்டலுக்குப் பின் புறமாகச் சென்று பணியாளர்களுக்கென்று இருக்கும் வழியில் நுழைந்து, வண்டியை நிறுத்தி விட்டு, அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

அவனது அறைக்குள் நுழைந்ததும், “ஃப்ரெஷ்ஷாகி வாங்க ரோஜா. நான் இப்போ வந்துடுறேன்” என்று விட்டு விலகிச் சென்றான்.

ரோஜாவின் உடலில் இன்னமும் நிதானம் வந்திருக்கவில்லை. அங்கிருந்த சோஃபாவில் தயக்கத்துடன் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

முதல் முறை விபத்து நேர்ந்த காட்சி, இரத்தம் தோய்ந்த இளமாறனின் முகம் அவள் மனக் கண்ணில் வர, தற்போது அவன் மீது ஆத்திரமாக வந்தது.

அப்படியென்ன வாழ்க்கையின் மீது அப்படியொரு அசட்டை? என்ற அவளின் யோசனையைக் கலைத்தான் இளமாறன்.

“ரோஜா”

“ம்ம்”

“பிளீஸ், முகம், கை கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம்” அவனது அறையின் மூலையில் இருந்த ஓய்வறையைக் கைக் காட்டினான்.

அவள் எழுந்து செல்ல, தன் மேஜை மேலிருந்த இன்டர்காமை எடுத்து எண்களை அழுத்தினான்.

“காஃபி சொல்லியிருந்தேன் இல்லையா?. அதைக் கேன்சல் பண்ணிட்டு லஞ்ச் அனுப்பிடுங்க பாலாஜி. ம்ம். சிம்பிளா ஏதாவது ஓகேதான். இல்ல, அவர்தனா பஃபேல இருந்து கொடுத்து விடுங்க. ரெண்டு பிளேட்ஸ்” அந்த ஹோட்டலின் தென் இந்திய உணவகமான அவர்த்தனாவில் இருந்து இருவருக்குமான உணவினை அனுப்பச் சொல்லி விட்டு அவன் நிமிர, ரோஜா முகத்தில் பனித் துளிகளாக நீர்த் துளிகள் மின்ன வந்து நின்றாள்.

அவளை நோக்கி டிஸ்யூவை நகர்த்தியவன் கண்கள், அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தது.

அவள் கண்களில் பசித் தெரிந்தது. வெறும் காஃபி போதாதென்றுதான் மதிய உணவை சொல்லியிருந்தான் அவன்.

“லஞ்ச் சாப்பிடலாம் ரோஜா. இப்போ வந்திடும்” என்று அவன் சொல்லும் போதே, உணவு அடங்கிய ட்ரேவுடன், கதவை தட்டி விட்டு இருவர் உள்ளே வந்தனர்.

அப்போது அலைபேசி அடிக்கும் சத்தம் கேட்க, தன் கைப்பையைப் பார்த்தாள் ரோஜா. மாறனின் அலைபேசிதான் அடித்தது. அதைக் கடுப்புடன் எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவனுக்கு வந்த அழைப்பை ஏற்று, “ஹாய் ஷெரீஃப், எஸ் எஸ். ஹோட்டல்ல பிஸியா இருக்கேன். எஸ். கண்டிப்பா நாளைக்குப் பார்க்கலாம்” என்று பேசி முடித்து வைத்தான்.

அவர்களுக்கான உணவை எடுத்து வந்தவர்கள் அவன் அறையில் இருந்த மேஜையில் உணவை அவர்களே போட்டுக் கொண்டு உண்பதற்கு வசதியாக வைத்து விட்டு அவர்கள் வெளியேற, “உட்காருங்க ரோஜா” என்றான் மாறன்.

வேலைக்கான நேர்காணல், பயண அலைச்சல், மதிய வெய்யிலில் அலைந்தது என மிகவும் சோர்ந்து போயிருந்த ரோஜாவிற்கு உணவின் மணம் அதுவரை அடங்கியிருந்த அவளது பசியைத் தூண்டி விட்டது.

அவனுக்கு எதிரே சென்று அமர்ந்தவள் தன் அலைபேசியைக் கையில் எடுக்க, மாறனின் உதட்டில் புன்னகையின் சாயல்.

“அம்மா, நான் வர கொஞ்சம் லேட்டாகும்.” அவனது புன்னகையைக் கண்ணைச் சுருக்கி பார்த்தபடி அம்மாவிடம் பேசினாள் ரோஜா.

“ம்ம், இன்டர்வியூ எப்பவோ முடிஞ்சதுமா. இல்ல, லஞ்ச் சாப்பிட வந்தேன். நம்ம செஃப் இளமாறன் இல்ல? அவங்க கூட. ம்ம். வீட்டுக்கு வந்து பேசுறேன்ம்மா. ம்மா, நான் வந்து எல்லாத்தையும் சொல்றேன். பை” அவள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டபடி அமர்ந்திருந்தவனின் கண்களில் வந்து போன உணர்ச்சிகளை அவதானிக்க முயன்று தோற்றாள் ரோஜா.

“நான் தேவையில்லாம போனை தொட மாட்டேன் செஃப்.” நக்கலாகச் சொன்னவளை பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன்.

“சாரி” என்றான்.

“நீங்களா இருக்கப் போய்த் தப்பிச்சீங்க. வேற யாராவது இருந்தா, இந்நேரம் அவங்க காது தீஞ்சி போற அளவு திட்டியிருப்பேன்”

‘ஏன், நான் என்ன ஸ்பெஷல்?’ என்ற கேள்வியை மனதில்தான் கேட்டான் அவன்.

“ஆமா, இந்த லஞ்ச் எதுக்கு? எனக்குத் தேங்க்ஸ் சொல்றதுக்கா?”

“இது காஃபி சாப்பிடுற நேரமில்ல. அதான்” என்று இருவருக்கும் உணவைத் தட்டில் பரிமாறத் தொடங்கினான்.

“சாப்பிடுங்க ரோஜா, ஐ பிராமிஸ் யூ, இனிமே ரொம்பக் கவனமா இருப்பேன்” அதற்கு மேல் அவனை முறைக்க, நக்கல் பேச முடியாமல், அமைதியானாள்.

இப்போது மீண்டும் அவன் அலைபேசி ஒலியெழுப்ப, அவளின் கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் கனலை கக்கியது. இம்முறை அழைப்பின் ஒலி வித்தியாசமாக இருக்க, ஒரு ஆர்வத்தில் ரோஜா எட்டிப் பார்க்க, “டாக்டர்” என்று காட்டியது திரை.

யார் அந்த டாக்டர்? என்று யோசித்து, சுகந்தி டாக்டரா? என்று அவள் கண்கள் விரிய, சட்டெனக் கை நீட்டி அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் மாறன்.

error: Content is protected !!
Scroll to Top