என் ஜீவனில் உறைந்திடு – 6 (2)

“பொண்ணுக்கு பார்க்கற மாப்பிள்ளையும் உங்களைப் போலவே பார்த்தா எப்படி? வேலை, வேலைன்னு வீட்டை மறந்து ஓடுறவனை எதுக்கு…”

“சித்ரா” குரலை உயர்த்தினார் சிவஹரி. 

“நீ நினைக்கிறத எல்லாம் ரோஜா மேல திணிக்காத. அவ வாழ்க்கையை அவ விருப்பப்படி முடிவு பண்ணட்டும்” என்றவரை முறைத்தார் சித்ரா.

“அதையேதான் நானும் சொல்றேன். இது அவ வாழ்க்கை, இங்க உங்க விருப்பம், உங்க கௌரவம், உங்க முதலாளி, இப்படி எதுவுமே முக்கியமில்ல. ரோஜாக்கு பிடிக்கணும் முதல்ல. அவ வசதியா இருக்கறதை விட நிம்மதியா, சந்தோஷமா இருக்கணும். அது மாதிரி ஒரு வாழ்க்கையை அவளுக்கு அமைச்சு கொடுக்கற கடமை நமக்கிருக்கு”

சிவஹரி திரும்பி மகளைத் தேடினார். சோஃபாவில் சம்மணமிட்டு, கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த மகளைப் பார்த்ததும், மனைவியின் மேல் கோபம் வந்தது அவருக்கு. 

ரோஜாவிற்கு இது புதிதல்ல. பெற்றோரின் சண்டையை, வாக்குவாதங்களை, அமைதியை பார்த்தே வளர்ந்தவள் அவள். ஆரம்பத்தில் அம்மாவின் மீதுதான் அதிக கோபம் வரும். அப்பாவை பார்க்க பாவமாய் இருக்கும். 

இப்போது இருவர் பக்க நியாயமும் புரிகிறது.

அவளுக்கு மீண்டும் மீண்டும் ஒரே யோசனைதான். அவள் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தால், இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாமோ?

“ரோஜா, என்னம்மா? நேத்து ரகு என்ன சொன்னான்? அப்பா வேலைக்கு நடுவுல உன்கிட்ட அதைப் பத்தி கேட்க மறந்துட்டேன். அதுக்காக உன் மேல அக்கறை, பாசம் எல்லாம் எனக்கில்லைனு இல்லம்மா..” ரோஜாவின் அருகில் சென்று அமர்ந்து ஆதுரத்துடன் மகளைப் பார்த்து சொன்னார் சிவஹரி. 

“சாரி ரோஜா. உனக்கு அப்பா மேல கோபமிருக்கும்.”

“அச்சோ, அப்படியெல்லாம் இல்லப்பா..” தவறு தன் மேல் இருக்க, ரோஜாவால் அப்பாவின் கண் பார்த்து பேச முடியவில்லை. 

“ம்ம். இனி ஆயிரம் சமாதானம் சொல்வார். அதைக் கேட்டு நாங்க உடனே அமைதியாகிடணும்.” சித்ரா புலம்பிக் கொண்டே உள்ளே செல்ல, “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லப்பா. நேத்து ரகுகிட்டயும் இதைத்தான் சொன்னேன்” என்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார் சிவஹரி. 

“என்னம்மா சொல்ற?” 

“சாரிப்பா. ரகு ஃபேமிலி உங்களுக்கு ரொம்ப முக்கியம்னு எனக்குத் தெரியும். அதான், இது பத்தி உங்ககிட்ட பேச எனக்கு பயமாருந்தது ப்பா.” 

“அவங்க எல்லோரையும் விட எனக்கு நீதான் முக்கியம் ரோஜா” மகளின் தலைக் கோதி சொன்ன தந்தையை பிடிக்காமல் போக, அவளிடம் எந்தக் காரணங்களும் இல்லை. 

அவளுக்கு அம்மா, அப்பா இருவரையும் பிடிக்கும். இருவரின் மீதும் அலாதி பாசம் வைத்திருந்தாள். சித்ரா, சிவஹரி இருவரும் ஆதர்ச தம்பதிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவளைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பெற்றோர் அவர்கள். அவளின் பெற்றோர்கள் அவர்கள். அது போதுமே அவர்களை நிபந்தனையின்றி அவள் நேசிக்க போதுமான ஒற்றைக் காரணம். 

அடுத்து வந்த இரு நாட்களும் வீட்டில் லேசான சலசலப்புகள் இருந்து கொண்டேயிருந்தது. 

அவள் பல முறை ரகுவரனுக்கு நன்றி சொல்லி விட்டாள். அதைவிட அதிகமாக மன்னிப்பு கேட்டு விட்டாள். ஆனாலும், அவனை காயப்படுத்தி விட்டது போன்ற குற்ற குறுகுறுப்பு அவளை விட்டு நீங்கவேயில்லை. 

“நீ என்ன இவ்வளவு ஃபீல் பண்ற? தாத்தா வேற நீ எப்படிடா ரோஜாவை வேணாம் சொல்லுவன்னு என்னை பார்க்கும் போதெல்லாம் திட்டிட்டே இருக்கார். எனக்கும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீயும் வேற ரொம்ப ரொம்ப ஃபீல் பண்றியா. என்ன பண்ணலாம்? நாம பேசாம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவோமா?” என்று ரகு கேட்டதும்தான் மௌனமானாள் ரோஜா. சத்தமாக சிரித்தான் அவன். 

“நல்லாரு போ. ரோஜா எங்கிருந்தாலும் வாடாமல் வாழ்க” என்று அவன் சோகமாக முடிக்கையில் அவளுக்கு சிரிப்பு வந்தது. அதனோடு கூட அவர்களுக்கு நடுவில் நல்லதொரு நட்பும் வந்திருந்தது. அவர்கள் சிறு வயதில் இருந்தே ஒருவருக்கொருவர் அறிமுகம்தான் என்றாலும் கூட, இப்போது புதிதாக, புரிதலுடன் கூடிய நட்பு அவர்களுக்குள் மலர்ந்திருந்தது. 

***

அன்று காலையிலேயே பெற்றோர் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது ரோஜா இதழ்கள் புன்னகையில் விரிந்தது. 

பெற்றோர் இருவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தாள். ரோஜா முகம் முழுதாக மலர்ந்திருந்தது. ஆனால்,

நண்பகல் பொழுதில் ரோஜாவின் முகம் அதற்கு நேர்மாறாக வாடி விட்டது. 

மனதிற்குள் எரிச்சலுடன் புலம்பலாக முணுமுணுத்துக் கொண்டே அந்த அலுவலகத்தின் கதவை ஒருவித வேகத்துடன் திறந்தாள் அவள். பட்டென யார் மீதோ கதவு மோதிய சத்தத்தில் பதறி, “சாரி” என்று நிதானத்திற்கு வந்து அவள் மன்னிப்பு கேட்க, எதிரே மூக்கை இரு விரல்களால் தேய்த்து விட்டபடி நின்றிருந்தான் இளமாறன்.

“ஹாய் செஃப், நீங்களா? சாரி, சாரி.. அடிபட்டுடுச்சா?” என்று கேட்டவள், “ரியலி சாரி செஃப், நான் நீங்க வந்ததை கவனிக்கல” என்றாள் தயக்கத்துடன்.

“ஹாய்” என்ற இளமாறன், கதவில் இருந்து விலகி, வழி விட்டு நின்றான். 

“செஃப்” என்று ரோஜா அழைக்கவும், “ஐ ஆம் ஓகே” என்றான் புன்னகையுடன். 

“அப்பாடா, நல்லவேளை உங்களுக்கு அடிபடல.” என்றவள், நிமிர்ந்து அவனை நன்றாகப் பார்த்தாள். 

கருப்பு ஜீன்ஸ், வெள்ளை டி-ஷர்ட் என்று அந்த உடையிலும் பார்க்க செஃப் போலவே இருந்தான் அவன். 

“சென்னை ரொம்ப சின்னதுதான் போல. இல்ல, செஃப்? நாம அடிக்கடி பார்க்கறோம்”

“ம்ம். நீங்க டிக்கெட் புக் பண்ண வந்தீங்களா?” அவர்கள் இருந்த ஏர்லைன்ஸ் அலுவலகத்தை கண் காட்டி அவன் கேட்க, “இல்ல இல்ல செஃப். நான் வேலை கேட்டு வந்தேன். இன்டர்வியூ” என்றாள் ரோஜா. 

“ஓ, கங்கிராட்ஸ்.” 

“என்ன நீங்க, எதுவுமே கேட்காம விஷ் பண்றீங்க? இவங்க எனக்கு வேலை தர முடியாது, சொல்லிட்டாங்க.” உதடு சுளித்து, போலி சோகத்துடன் சொன்னாள். 

“ஓ, சாரி.” என்றவன், “இங்க இருக்க ஹெச்ஆர் எனக்கு நல்ல பழக்கம். நான் வேணா உங்களுக்காக பேசட்டுமா?” சற்றே தயக்கத்துடன் அவன் கேட்க, “அச்சோ. அதெல்லாம் வேணாம் செஃப். நம்ம திறமைக்கு வேலை கொடுத்தா போதும்” பட்டென மறுத்தாள் ரோஜா. 

“நீங்க இன்டர்வியூ எப்படி பண்ணீங்க? அவங்க உங்களை ரிஜெக்ட் பண்ண என்ன ரீசன் சொன்னாங்க?”

“அவங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் நல்லாதான் பதில் சொன்னேன். என் பதில் அவங்களுக்கு பிடிக்கல போல. உண்மையை சொல்லப் போனா அவங்க கேள்வியும் எனக்குப் பிடிக்கல” என்றாள்.

“ஓ. அப்படியென்ன கேள்வி கேட்டாங்க? வேலை சம்மந்தப்பட்ட கேள்விகள் தானே கேட்டிருப்பாங்க?”

“ம்ம். இல்ல செஃப். பெர்சனல் கேள்வி எல்லாம் கேட்டாங்க” அவன் புருவம் உயர்த்த, “இன்டர்வியூ அப்படினாலே கேட்கணும்னு ஒரு பத்து கேள்வி வச்சுருப்பாங்க இல்ல? அதுல ஒன்னு கேட்டாங்க. நான் நேர்மையா பதில் சொன்னேன். அவங்களுக்குப் பிடிக்கல போல?” என்று சொல்லி அசட்டையாக தோள் குலுக்கினாள். 

அப்படி என்ன கேள்வியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவன் பார்க்க, “பத்து வருஷம் கழிச்சு என்னவா இருக்க ஆசைப்படுறீங்கன்னு கேட்டாங்க. நான் கல்யாணமாகி ரெண்டு குழந்தையோட இருப்பேன்னு நினைக்கறேன் சொன்னேன். அதைக் கேட்டதும் அவர் முகமே மாறிப் போச்சு. ப்ச், தப்பான பதில் போல” ரோஜா சுற்றிலும் பார்த்துக் கொண்டே உச் கொட்டி சொல்ல, இளமாறனின் முகத்தை நிறைத்தது மென்னகை. 

அதில் ஈர்க்கப்பட்டு ரோஜா அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “காஃபி ரோஜா? பக்கத்தில ஒரு நல்ல கஃபே இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா போலாம்” என்றான் அவன். 

“இதுக்குதான் ஒரு செஃப் வேணும்னு சொல்றது. இவங்களுக்கு ஒரு மணி நேரமா பதில் சொல்லியே என் தொண்டை வறண்டு போச்சு செஃப். கண்டிப்பா காஃபி வேணும்” என்று அவள் பேசிக் கொண்டே போக, இளமாறன் முன்னே நடந்தான். அவனைப் பின் தொடர்ந்தாள் ரோஜா. 

இருவரும் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியில் வந்தனர். 

“எங்கப்பா அப்பவே எங்கம்மாகிட்ட சொன்னாராம். இன்னைக்கு இருக்க டிமாண்ட்டுக்கு நல்ல வேலை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அதுவும் முன் அனுபவம் இல்லாதவங்களுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்லியிருக்கார். பொண்ணு ஆசைக்கு டிரை பண்ணிட்டு வரட்டும்னு பெர்மிஷன் கொடுத்திருக்கார். ம்ம், அப்பா சொன்னது போலவே நடந்துடுச்சு” அவன் கேளாமலேயே கதைச் சொன்னாள். 

சில குரல்களை, சில முகங்களை, சில மனிதர்களை பிடிக்க நமக்கு காரணமே தேவைப்படுவதில்லை. நம்மையும் அறியாமல் ஒரு நெருக்கம் இயல்பாய் தோன்றி விடும். முதல் பார்வையில் வரும் பிரியத்திற்கு நம்மால் பெயரிடவே முடியாது. 

ரோஜாவிற்கு அவள் அக்கா நித்யா மிக நெருக்கம். அவளிடம்தான் இப்படி மனதில் உள்ளதை எல்லாம் வடிகட்டாமல் பேசுவாள். இப்போது இளமாறனிடம் அந்த நெருக்கமும், உணர்வும் வர, அன்றைய நிகழ்வை, தன் மனதில் தோன்றியதை எல்லாம் பகிர்ந்துக் கொண்டாள் அவள். 

இளமாறன் இயல்பில் அதிகம் பேசாதவன். ஆனால், ரோஜா பேசுவதை கேட்டுக் கொண்டான். அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

“சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். ஃபீல் பண்ணாதீங்க” என்று அவன் சொல்ல, “எனக்கு நம்பிக்கையில்ல செஃப். உங்களுக்கு நாங்க எதிர்பார்க்கற எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு சொல்லிதான் என்னை ரிஜெக்ட் பண்ணாங்க. அப்புறம் எதுக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்னு போட்டிருந்தீங்கன்னு கோபமா கேட்டுட்டுதான் வந்தேன். ப்ச்” என்று சலித்துக் கொண்டாள் ரோஜா. 

அவளுக்கு அப்பாவின் கேன்டீன் போதும். மற்ற பழம் எல்லாம் புளிக்கும் என்ற மனநிலை இந்த ஒற்றை நேர்காணலிலேயே வந்திருந்தது. 

அது சென்னையின் மையப் பகுதி. மருத்துவமனை, வங்கி, விமான நிறுவனத்தின் அலுவலகம் என மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலும் நிறைந்த, பரபரப்பான இடம். 

அவர்கள் நின்றிருந்த சாலையின் எதிர்புறத்தில் இருந்த கஃபேயை ரோஜாவிடம் பார்வையில் சுட்டிக் காட்டினான் மாறன். இருவரும் சாலையை ஒன்றாக கடக்க முற்பட்டனர். 

அந்நேரம் மாறனின் அலைபேசி ஒலியெழுப்ப, சாலையை கடந்து கொண்டே அதைக் கையில் எடுத்தான் அவன். 

அவனது அலைபேசி திரையில் மருத்துவர் சுகந்தியின் பெயர் ஒளிர, ஒரு வினாடி திரையை வெறித்து பார்த்து விட்டு, நகர்ந்தான் அவன். 

அதற்குள் சாலையில் சிவப்பு மாறி பச்சை விளக்கு விழுந்திருக்க, போக்குவரத்து முழு வேகத்தில் தொடங்கியிருந்தது. 

“செஃப்…” என்ற ரோஜாவின் அலறல் அவன் காதில் ஒலிக்க, வேகமாக ஓடி வந்து அவனைப் பிடித்து இழுத்தாள் அவள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு விபத்து நேர்ந்திருக்கும். அவனை உரசி விடும் நெருக்கத்தில் கடந்தது அரசு பேருந்து ஒன்று. 

ஓட்டுநர் மதிய வெயிலின் தாக்கத்தை அவனை நோக்கி வீசிய வசவு வார்த்தைகளில் காண்பித்தார். 

அவனை இழுத்து சாலை ஓரத்தில் நிறுத்திய ரோஜா, அதே வேகத்தில் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்திருந்தாள். 

இளமாறனுக்கு தன்னை நிதானப்படுத்திக் கொள்ளவே சில நொடிகள் பிடித்தது. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவன் மெல்லத் திரும்பி ரோஜாவை பார்க்க வலியினால் அவள் முகம் வாடியிருந்தது.

“ரோஜா…” பதறியபடி அவளை நோக்கி குனிந்தான் இளமாறன். 

error: Content is protected !!
Scroll to Top