“தாத்தா…” என்ற ரகுவரனின் அழைப்பில் மெலிதான அதட்டல் தொனி இருந்தது.
“அடடே ரகு. வாய்யா, உன் நிச்சயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கும் போது நீயே வந்துட்ட” வைத்தியலிங்கத்திற்கு பேரன் அந்நேரம் அங்கு வந்ததில் அத்தனை மகிழ்ச்சி.
சிவஹரி, சித்ரா இருவரும் அவனிடம் புன்னகைத்து, நலம் விசாரித்தனர். சித்ரா எழுந்து அவனுக்கு சிற்றுண்டி எடுத்து வரச் செல்ல, “அத்த, இப்போ எனக்கு எதுவும் வேணாம். பிளீஸ்” என்று வேகமாக மறுத்தான் அவன்.
தாத்தா அமர்ந்திருந்த இருக்கையில் அவருக்கு நெருக்கமாக அமர்ந்தவன், “இங்க என்ன பண்றீங்க?” என்று அடிக்குரலில் கேட்டான்.
“அதான் சொன்னேனேய்யா. உனக்கும், ரோஜாவுக்கும் நிச்சயம்…” அவர் முடிக்கும் முன்பே இடைப் புகுந்தான் அவன். “நம்ம வீட்ல பேசி முடிவு பண்ணி இருக்கணும், அதை விட்டு நேரடியா இங்க வந்து பேசுவீங்களா?” என்றவன், “நேத்து நான் ரோஜாகிட்ட, எனக்கு அவளைப் பிடிக்கல. இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். நீங்க என்னன்னா, இன்னைக்கு அவங்க வீட்ல வந்து உட்கார்ந்து நிச்சயதார்தத்தை முடிவு பண்ணிட்டு இருக்கீங்க. ரோஜா என்னப் பத்தி என்ன நினைப்பா?” அவன் குரலைத் தழைத்திருந்தான். ஆனால், நிசப்தமான அந்த அறையில் அவன் சொன்னது அனைவருக்கும் துல்லியமாக கேட்டது.
“என்னடா சொல்ற?” பாட்டி அதிர்ந்து கேட்க, சிவஹரி அதற்கு குறையாத அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார். வைத்தியலிங்கம் பேரனின் தோளில் அடித்து, “என்னடா பேசுற நீ? ரோஜாவை பிடிக்கலைன்னு சொல்லிட்டியா? மூளை மழுங்கி போச்சாடா உனக்கு? அவ முகத்தைப் பார்த்து எப்படி பிடிக்கலை சொன்ன நீ?” என்று கேட்க, ரகுவரன் தாத்தாவின் கையைப் பிடித்தான்.
சித்ரா, ரோஜா இருவரும் அதிர்ச்சியும், வியப்பும், சற்றே ஆச்சரியமுமாக ரகுவை பார்த்தனர்.
சிவஹரிக்கு அதிர்ச்சியும், கோபமும் சேர்ந்து படபடப்பை தர, அவருக்கு முன்னிருந்த தண்ணீரை எடுத்து அருந்தினார். மனைவி, மகளைத் திரும்பிப் பார்த்தார் அவர்.
அவருக்கு தன் மகளை ஒருவன் வேண்டாம் என்று சொல்வதா, என்ற எண்ணம் மனதில் எரிச்சலை தந்தது.
“பேரன் என்னமோ அவன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கான். நாம நடக்க வேண்டியதை பார்ப்போம்.” வைத்தியலிங்கம் இப்போதும் தன் பிடியில் உறுதியாக நிற்க, சிவஹரி ரகுவரனை பார்த்தார்.
“ஏன் தாத்தா இப்படி பிரச்சனை பண்றீங்க? ரோஜா வீட்டுக்கு உங்களை யார் வரச் சொன்னா இப்போ?” தாத்தாவின் கைப் பிடித்து இழுத்தபடி அவன் கேட்க, “ஆமா, இந்நேரம் நீ எப்படி இங்க வந்த? நாங்க இங்க வர்றதை உங்கப்பா, அம்மாகிட்ட கூட சொல்லலையே? உனக்கு எப்படித் தெரியும்?” பாட்டி கேட்க, அவன் பார்வை ஒரு நொடி ரோஜாவிடம் சென்று பின் பாட்டியிடம் வந்தது. அவ்வளவுதான் பிடித்துக் கொண்டார் அவர்.
“ரோஜா நீ எதுவும் தப்பா நினைக்க வேணாம் மா. இவனை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு” என்று பெரியவர் சொல்ல, தன் மௌனத்தை கலைத்தார் சிவஹரி.
“ஐயா, உங்க சொல் எனக்கு வேதவாக்கு. என் பொண்ணை நீங்க கேட்டதுக்காக கண்ணை மூடிட்டு உங்க பேரனுக்கு கட்டி வைப்பேன். ஆனா, மாப்பிள்ளை ரகுவே பிடிக்கலை, வேணாம்னு சொல்லும் போது எனக்கு மனசு நெருடுது. நீங்க எதுக்கும் வீட்ல போய் கலந்து பேசிட்டு எங்களுக்கு பதில் சொல்லுங்க. உங்க வார்த்தையை நான் என்னைக்கும் மீற மாட்டேன். உங்க ஆசையை மறுக்கவும் மாட்டேன்” சிவஹரி சொல்ல, வைத்தியலிங்கம் தன் இருக்கையில் இருந்து எழுந்து நெகிழ்ச்சியுடன் அவரின் கையைப் பிடித்து கொண்டார்.
“ம்ம். நாம ஒன்னு ஆசைப்படுறோம். ஆனா, இந்த பசங்க? அவங்க நல்லதுக்கு சொல்றோம்னு புரியாம அடம் பண்ணி அழிச்சாட்டியம் பண்ணுதுங்க. நாங்க வீட்டுக்கு போய் நிதானமா ரகுகிட்ட பேசிட்டு முடிவை சொல்றோம்.”
எனவும் மெல்ல தலையசைத்தார் சிவஹரி.
ரோஜா, இந்தக் கல்யாணத்தை அவள் மறுத்திருக்க அதற்கு ரகு பழி ஏற்றுக் கொண்டது அவளுக்கு குற்ற உணர்வைத் தந்தது. அனைவரின் முன்னிலும் அவனிடம் எதுவும் பேச முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் அதையும் வேறொரு கோணத்தில் பார்த்ததை அவள் அறியவில்லை.
“சித்ரா மா, எல்லாம் நல்லபடியா நடக்கும். அதுக்கு நாங்க பொறுப்பு” என்ற வைதேகியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் நின்றார் சித்ரா.
பெரியவர்கள் சில நிமிடங்கள் மாறி மாறி அதையே பேசிக் கொண்டிருந்தனர். ரகுவரன், ரோஜா இருவரும் அதில் மாட்டிக் கொண்டு விழிக்க, பெரியவர்களை அதட்டி, அங்கிருந்து அழைத்துப் போனான் ரகுவரன்.
“என்னைய தலை குனிய வச்சுட்டடா நீ” புலம்பிக் கொண்டே பேரனின் பின்னால் சென்றார் வைத்தியலிங்கம்.
அவர்கள் கார் வெளியேறியதும் சித்ரா கணவரின் பக்கம் திரும்ப, ரோஜா அப்படியே வாடிப் போனாள்.
அவள் கல்யாணத்தை குறித்து கனவுகள் காணாமல், பிரியம், நேசம், ஈர்ப்பு, காதல், புரிதல் இதுப் பற்றியெல்லாம் யோசிக்காமல், ரகுவரனிற்கு சரியென்று சொல்லியிருந்தால் இப்போது பெற்றோருக்கு இடையே நடக்கப் போகும் சண்டையை தவிர்த்திருக்கலாமோ என்ற சிந்தனை அவள் மனதில் பலமாக எழுந்தது.
இதுதான் காரணம் என்றில்லை. சித்ரா கோபம் கொள்ள ஆயிரம் காரணங்களை அடுக்கடுக்காக கொடுத்துக் கொண்டே இருப்பார் சிவஹரி. இன்றைக்கு அந்தக் காரணம் அவளாகி போனது துரதிஷ்டம்தான்.
அவளுக்கு, தனக்காக ரகுவரன் பேசியது மனதில் ஓடிக் கொண்டேயிருக்க, “இந்த விஷயத்தை இவ்வளவு காம்ப்ளிகேட் பண்ணினதுக்கு ரொம்ப சாரி ரகு. அண்ட் தேங்க்ஸ்.” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.
“தாத்தா ரொம்ப திட்டினாரா? சாரி. பிளீஸ் மன்னிச்சிடுங்க” என்று இன்னொரு செய்தியை அனுப்பி வைத்தாள். வேறென்ன சொல்வது? என்ற அவள் யோசனையை கலைத்தது சித்ராவின் குரல்.
“என்ன தெரியணும் இப்போ உங்களுக்கு? ஆமா, எனக்கு முன்னாடியே விஷயம் தெரியும்தான். அதுக்கு?”
“சித்ரா..”
“நம்ம பொண்ணுக்கு உங்க ஐயா குடும்பத்தில் ஆசையா கல்யாணம் பேசினா போதாது. அதுல அவளுக்கு ஆசை இருக்கா? அவளுக்கு விருப்பமா? அவளுக்கும், ரகுவரனுக்கும் சம்மதமா, இதெல்லாத்தையும் பார்க்கணும், கேட்கணும். நாம பொண்டாட்டியைதான் மதிக்கிறது கிடையாது. பெத்த பிள்ளைங்களையாவது…”
“அம்மா, பிளீஸ்..” ரோஜா கெஞ்ச, ஓரப் பார்வையில் அவளை அடக்கினார் அவர்.
“இப்ப வந்து என்னை கேள்வி கேட்கறீங்களே? ரோஜா உங்க பொண்ணு தானே? நேத்து உங்ககிட்ட சொல்லிட்டு தானே ரகுவை பார்க்கப் போனா? நீங்க நைட் வீட்டுக்கு வந்ததும் அவகிட்ட ஒரு வார்த்தை பேசினீங்களா? எப்படி பேசுவீங்க? வீட்டுக்கு வர்றதே நடுராத்திரியிலதான். அட்லீஸ்ட் அவகிட்ட போன் பண்ணி பேசலாம் இல்ல? கேன்டீன் விஷயம்னா பத்து தடவை போன் போடுறீங்க? இப்படி தொழிலை கட்டிட்டு குடும்பம் நடத்துற உங்களுக்கு எதுக்கு பொண்டாட்டி, பிள்ளைங்கன்னு ஒரு குடும்பம்? நான் புரியாமதான் கேட்கறேன்”
“சித்ரா, எதுக்கு இப்படி காச் மூச்னு கத்திட்டு இருக்க?”
“கத்தாம என்ன செய்ய சொல்றீங்க? இன்னைக்கு காலைல இருந்து உங்க கூட தானே ரோஜா இருக்கா? அவகிட்ட தனியா பேச ஒரு அஞ்சு நிமிஷம் உங்களுக்கு கிடைக்கலயா? என்னம்மா ரகு என்ன சொன்னார்? நீ என்ன சொல்றனு கேட்க முடியலையா?”
“வேலையா இருந்தேன் சித்ரா. என்னை கேன்டீனை விட்டுட்டு வீட்ல உட்கார சொல்றியா நீ? நான் எதுக்கு ஓடுறேன்? யாருக்கு சம்பாதிக்கறேன்? எல்லாம் உங்களுக்கு தானே?”
“இதை ஒன்னு சொல்லிடுங்க எப்பவும். அப்படியே தலைப் போற வேலை, அதான் முக்கியம். நைட் வந்ததும் அசதின்னு படுத்தாச்சு. காலைல அவசரம்னு கிளம்பியாச்சு. நான் சொல்ல வந்ததை காது கொடுத்து கேட்க கூட உங்களுக்கு பொறுமையும், நேரமும் இல்ல. நீங்க காஃபி குடிக்கிற நேரத்துல நான் விஷயத்தை சொல்லியே முடிச்சுருப்பேன். நைட்ல தூக்கம் வருது, பேசாம இரு. காலைல நேரமாச்சு கிளம்பிட்டேன்னு சாக்கு சொல்ல வேண்டியது. நானும் காலைல இருந்து நாலு தடவை போன் பண்ணேன். அப்பவும் வீட்டுக்கு வந்து பேசுறேன் சொல்லிட்டீங்க. இப்போ வீட்டுக்கு வந்ததும் என்னாச்சு?”
சித்ரா கேள்விகளை ஆதங்கத்துடன் தொடுக்க, சிவஹரி அசையாமல் நின்றார்.