“நான் உங்க ஃபீட்பேக் செஃப்கிட்ட சொல்லிடுறேன். ஒருவேளை நீங்க மீட் பண்ணனும்னு நினைச்சா, அவரை வரச் சொல்லி ரெக்வஸ்ட் பண்றேன்” ரகுவிடம், ராஜேஷ் சொல்லிக் கொண்டிருக்க, ரெஸ்டாரண்ட்டிற்குள் நுழைந்தார் செஃப்.
“வேணாம் ராஜேஷ். அவர்கிட்ட நீங்களே சொல்லிடுங்க” என்ற ரகு, ரோஜாவை நிமிர்ந்து பார்த்தான். அவனுக்குப் பின்னால் யாரையோ பார்த்து முகம் மலரப் புன்னகைத்து கையசைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் பார்வையைத் தொடர்ந்து ரகுவரன் பார்க்க, அங்கே ஒரு தம்பதிகளுடன் பேசியபடி நின்றிருந்தார் செஃப்.
அவர் மெல்ல பார்வையை திருப்பி ரோஜாவை பார்த்த மறுநிமிடம் அவர்களை நோக்கி வந்தார்.
“ரகு, அவர்தான் எங்க புது எக்ஸிக்யூட்டிவ் செஃப்.” ராஜேஷ் சொல்ல, ரகுவின் பார்வை தங்களை நோக்கி வந்தவன் மேல் அழுத்தமாக படிந்தது.
“செஃப் இளமாறன்” அறிமுகப்படுத்தினான் ராஜேஷ்.
ரோஜாவின் கண்கள் மலர்ந்து, இதழ்கள் மொத்தமும் புன்னகையில் பிரிந்திருக்க, “ஹாய் செஃப்” என்று உற்சாகத்துடன் அவனுக்கு கை நீட்டினாள்.
“இவர் ரகுவரன், அமிர்தா பவன் இவங்க ஃபேமிலிக்கு சொந்தமானது. அண்ட் இவங்க..” ராஜேஷ் அவர்களை அறிமுகப்படுத்த, “ரோஜா” என்று அவள் பெயரை சொல்லி முடித்தான் இளமாறன்.
ரோஜா நீட்டிய கரத்தைப் பற்றி மென்மையாய் குலுக்கினான்.
ராஜேஷிற்கு மற்றொரு வாடிக்கையாளரிடம் இருந்து அழைப்பு வர, அவர்களிடம் சென்றார் அவர்.
ரகுவரனை நோக்கி கை நீட்டிய இளமாறன், “தேங்க்யூ மிஸ்டர் ரகுவரன்” என்றான்.
“எதுக்கு?” என்ற ரகுவரன், விபத்தில் இருந்து காப்பாற்றியதை குறிப்பிடுகிறான் என்பது புரிந்து, “ஓ, தட்ஸ் ஓகே செஃப்.” என்றான் புன்னகையுடன்.
“இப்போ உங்க ஹெல்த் எப்படியிருக்கு?”
“நீங்களே பார்க்கறீங்க தானே? ரொம்ப நல்லாருக்கேன். அப்புறம் புட் எப்படி இருந்தது?” என்று இளமாறன் கேட்க,
“ஓட்டிமோ” என்று அந்த இத்தாலிய உணவகத்தின் பெயரையே சொன்னாள் ரோஜா. அவனையும் அறியாமல் சிரித்து விட்டான் இளமாறன். ரகு அவர்களைப் புரியாமல் பார்க்க, “இத்தாலிய மொழியில் ஓட்டிமோன்னா எக்ஸலண்ட்ன்னு அர்த்தம் ரகு” கண் சிமிட்டி அவள் சொல்ல, இளமாறன் அவர்கள் இருவரையும் ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
“ஓ, ஓகே.” என்று சிரித்த ரகுவரன், “எஸ் செஃப். ரோஜா சொன்ன மாதிரி எக்ஸலண்ட் புட்தான். தேங்க்யூ” என்றான்.
ரோஜா தனக்கு முன் உண்டு முடிக்கப்படாமல் இருந்த திராமிசுவை முட்கரண்டியில் வெட்டி எடுத்து உண்ண, இளமாறனின் கண்கள் அவள் ரசித்து உண்பதை பார்த்தது.
“மிஸ்டர் ரகு, எனக்கு உண்மையா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. அன்னைக்கு நீங்க மட்டும் என்னை அப்படியே விட்டுட்டு போய் இருந்தா, நான் என்னாகி இருப்பேன்னு தெரியல”
“அப்படியெல்லாம் யோசிக்காதீங்க செஃப். நாங்க இல்லனா வேற யாராவது உங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருப்பாங்க.”
“தேங்க்ஸ் சொல்லி பெருசு பண்ண வேணாம்.” ரகுவரன், ரோஜா மாறி மாறி சொல்ல, “ஓகே” என்ற இளமாறன், “இது என்னோட கார்ட். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை எனக்கு ஆஃப். அப்போ நீங்க ரெண்டு பேரும் சாப்பிட என் ரெஸ்டாரண்ட் வந்தா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். எனக்கு நன்றி சொல்லதான் வராது. ஆனா, ரொம்ப நல்லா சமைக்க வரும். நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்” இருவரிடமும் தனது விசிட்டிங் கார்டை கொடுத்து, அவன் அழைப்பும் விடுக்க, ரோஜா, ரகுவரனின் முகத்தைப் பார்த்தாள்.
அவள் கண்களில் தெரிந்த ஆவலைப் பார்த்த ரகுவினால், இளமாறனின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை.
“உங்க சாப்பாட்டுக்கு நோ சொல்ல முடியுமா செஃப்? எங்களுக்கு வர ஆசைதான். ஆனா, அடுத்த வாரம் என்ன வேலை இருக்கும்னு சொல்ல முடியாது. ஒரு ரெண்டு நாள் முன்னாடி கன்பார்ம் பண்ணா ஓகே தானே?” ரகுவரன் கேட்க, “ம்ம். ஒரு நாள் என் ரெஸ்டாரன்ட் வர்றீங்க. அவ்ளோதான். அது அடுத்த வாரமா இருந்தாலும் சரி. இல்ல அதுக்கு அடுத்த வாரமா இருந்தாலும் சரிதான்” என்றான் இளமாறன்.
இருவரிடமும் மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு இளமாறன் விடை பெற்றுக் கொண்டான்.
ரோஜாவின் பார்வையில் இருந்து மறையும் முன் திரும்பி அவளைப் பார்த்தான். இளமஞ்சள் நிற நீண்ட உடையின் ஓரமெங்கும் வெள்ளி நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மஞ்சள் அவளை பளிச்சென தனித்துக் காட்டியது.
“போகலாமா ரோஜா?” தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டே ரகு கேட்க, அவனோடு இணைந்துக் கொண்டாள் ரோஜா.
காரில் ஏறியதும், “வீட்ல நான் பேசிக்கிறேன் ரோஜா. நீ எதுவும் சொல்ல வேணாம். ஓகே?” என ரகு கேட்க, “என்ன சொல்லப் போறீங்க?” என்று படபடத்தாள்.
“நான் அம்மாகிட்ட பேசுறேன். அவங்க பார்த்துப்பாங்க. நீ பயப்படாத ரோஜா. நீ வேணாம்னு சொன்னேன்னு அம்மாகிட்ட சொல்ல மாட்டேன்” முடிவாக சொன்னான் ரகுவரன். ஏனோ அப்போதும் அமைதியாக உணரவில்லை அவள். மனதில் ஒருவித அலைக்கழிப்பு இருந்து கொண்டே தானிருந்தது.
மறுநாள் பெரியவர் வைத்தியலிங்கம் அவள் வீட்டுக்கு வந்த போது அது இன்னும் அதிகரித்தது.