என் ஜீவனில் உறைந்திடு – 4 (1)

காரில் ஒலித்த பாடலுடன் தானும் பாடிக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருந்தான் ரகுவரன். அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஜாவிற்கு பாடலை விட நகரமும் போக்குவரத்தும் கவனத்தை ஈர்த்தது போலும். வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். 

அடுத்த வாரம், நாளை என்று சாக்கு சொல்லியே நாட்களைக் கடத்தி விட்டு, பதினைந்து நாள்கள் கழித்து இன்றுதான் இருவரும் வெளியில் செல்ல சமயம் வாய்த்திருக்கிறது. 

“சாரி ரோஜா” என்ற ரகுவரனிடம், “இட்ஸ் ஓகே ரகு. நீங்க பிஸியா இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது. அதுனால நான் தப்பாவே நினைக்கல. கூல்” என்றாள் புன்னகையுடன். 

அவனும் சிரித்து, அவளுக்காக கார் கதவை திறந்து விட்டான். காரில் ஏறும் முன்பே, “இது நார்மல் லஞ்ச் தானே? நீ, நீங்க எதுவும் இமேஜின் பண்ணிக்க…” அவள் தடுமாற, “மாட்டேன்” என்று அவள் சொல்ல வந்ததை முடித்து வைத்தான் ரகுவரன். 

“நாம இதுக்கு முன்னாடி சேர்ந்து சாப்பிட்டது இல்லையா ரோஜா? என் வீட்ல நீயும், உன் வீட்ல நானும் சாப்பிட்டது இல்லையா? இதையும் அப்படியே நினைச்சுக்கோ. ஓகே?” என்று அவன் கேட்க, தலையசைத்தாள். ஆனாலும் உள்ளுக்குள் இருவரும் தனியாக ஒரு நாளும், வெளியில் சென்று உணவருந்தியது இல்லை என்பது மனதில் உறைக்க, அதை அப்படியே ஒதுக்கி ஓரமாக வைத்து விட்டாள் அவள். 

“பிளீஸ்” என்று அவன் கண் காட்ட, காரில் ஏறி அமர்ந்தாள். அதன் பின்னர் பேசாமல் வந்தவளை ரகுவரன் தொல்லை செய்யவில்லை. 

இதுவொரு இயல்பான மதிய உணவிற்கான சந்திப்பு என்றவன் அழைத்து வந்த இடத்தைப் பார்த்தும், ரோஜாவின் விழிகள் பெரிதாக விரிந்தன.

“ஃபேன்ஸி அண்ட் லக்சுரி” என்று அவள் சொல்ல, சத்தமாக சிரித்தான் ரகுவரன். 

சென்னையின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் இருந்த, “ஓட்டிமோ” (Ottimo) என்ற இத்தாலிய உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தான். ஏற்கனவே அவர்களுக்காக மேஜை பதிவு செய்யப்பட்டிருக்க, காத்திருக்க தேவையின்றி உணவுண்ண அமர்ந்தனர். 

“ஹாய் ரகு, ஹாய் மேம். வெல்கம்” அவர்களை வரவேற்றபடி வந்த மேனஜர், ரகுவரனின் கைப் பிடித்து குலுக்கினார். 

“ஹாய் ராஜேஷ், எப்படியிருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?” என்று அவரிடம் விசாரித்த ரகு, மெல்லத் திரும்பி ரோஜாவை கைக் காட்டி, “மீட் ரோஜா” என்றவன், சிறிய தயக்கதிற்கு பின், “ப்ரெண்ட் அண்ட் மாமா பொண்ணும் கூட” என்றான். 

“நான் நல்லாருக்கேன் ரகு. இங்கேயேதான் இருக்கேன். உனக்குதான் இந்தப் பக்கம் வர டைமில்ல” என்ற ராஜேஷ், “ஹலோ ரோஜா” என்று புன்னகைத்தான். 

“நானும், ராஜேஷிம் பாண்டிச்சேரியில் ஒரே ஹோட்டல்ல ட்ரைனிங் பண்ணோம் ரோஜா.” 

“ஓ, ஓகே”

“நாம இன்னொரு நாள் பேசுவோம். இப்போ நீங்க என்ன சாப்பிடுறீங்க. சொல்லுங்க” ராஜேஷ் கேட்க, ரோஜாவின் விருப்பத்தின் பேரில் அந்த உணவகத்தின் பிரபலமான “செவன் கோர்ஸ் மீல்” (Seven course meal) தருமாறு கேட்டுக் கொண்டான் ரகுவரன்.

“ஓகே. நீங்க பேசிட்டு இருங்க. 10 நிமிஷத்தில் சாலட் வந்திடும்” என்று விலகினார் ராஜேஷ். 

“வெரி வெரி இம்பார்ட்டன்ட் கெஸ்ட். எதுவும் சொதப்பாம பெஸ்ட் புஃட் கொடுங்க” அவரே நேரடியாக கிட்சென் சென்று உணவிற்கான ஆர்டரை கொடுக்க, அதைக் கையில் வாங்கி, “விவிஐபி கெஸ்ட். சீசர் சாலட், ஆர்ட்டிசோக் சூப், கிராப் ராவியோலி, பீட்ஸா மார்கரிட்டா..” என்று சத்தமாக அறிவித்து உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கியது சமையல் அறை. 

அந்நேரம் அங்கு வந்த செஃப், “யாரந்த விவிஐபி கெஸ்ட்?” என்று விசாரித்துக் கொண்டே தானும் வேலையில் இறங்க, “செஃப், அமிர்தா பவன் ஹோட்டல் ஓனர் வந்திருக்கார்” என்றதும், “ஓகே” என்று ராவியோலியை தானே சமைக்கத் தொடங்கினார் செஃப்.  

“ஒயின் ரோஜா?” ரகுவரன் கேட்க, “ஐயோ, அதெல்லாம் வேணாம் ரகு” என்று அலறினாள் அவள். 

“ஹேய், இத்தாலியன் புட் கூட ஒயின் இல்லாம?” என்று அவன் புருவம் உயர்த்த, “அது இல்லாமலும் புட் நல்லாதான் இருக்கும்.” பட்டென பதில் சொன்ன ரோஜா, “ஏதாவது நார்மல் ரெஸ்டாரண்ட் போய் இருக்கலாம் ரகு. ஏன் இவ்வளவு காஸ்ட்லியா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் எல்லாம்?” என்று கேட்க, “இத்தாலியன் புட்தான், உலகத்திலேயே டேட்ஸ்ட்டியானது. தெரியும் இல்ல?” என்றான் ரகு. 

“எல்லாத்துலயும் சீஸை கொட்டினா டேஸ்ட்டா இல்லாம என்ன பண்ணும்? உலகம் முழுக்க பீட்ஸா அடிக்ட்ஸ் இருக்காங்கன்னா, சும்மாவா? பீட்ஸாவை ஜங்க் புட், உடம்புக்கு நல்லதில்லைன்னு சொல்ல ஆரம்பிச்சுடுச்சு உலகம்” ரோஜா சொல்ல, சிரிப்புடன் தங்களை சுற்றிப் பார்த்தான் ரகுவரன். 

“எங்க வந்து என்னப் பேசுற நீ?” 

அவன் முறைக்க, சிரித்தாள் ரோஜா. ஆனால், உணவு வந்ததும் ரசித்து உண்டாள். அன்றாட உணவிற்கு மாறுதலாக, உயர்தர சுவையுடன், சிறிய அளவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்ட உணவு அலாதி சுவையில் இருந்தது. 

“வாவ்” கண்ணை மூடி சொன்னாள். நம் ஊர் கொழுக்கட்டை போல ஆனால் தட்டையாக செய்யப்படும் பாஸ்தாவினுள், நண்டு இறைச்சி, சீஸ் பொதியப்பட்டு, அதற்கான சாஸுடன் இருந்த, “கிராப் ராவியோலி” அவள் இதற்கு முன் உண்டிராத ருசியில் இருந்தது. 

“லாஸ்ட் வீக் ஒரு பிசினஸ் லஞ்ச்க்காக இங்க வந்தேன் ரோஜா. அன்னைக்கு சாப்பிடும் போதே முடிவு பண்ணிட்டேன். உன்னை இங்க கூட்டிட்டு வரணும்னு. புது செஃப் கலக்கறார்” ரகு சொல்ல, “ஆஹா, தேங்க்ஸ் ரகு” என்ற ரோஜா, “உங்க ஹோட்டல் மெனு டேஸ்ட்டிங் எப்படி போச்சு?” என்று கேட்க, “ம்ம், எப்பவும் போலதான். நான் நார்த் இந்தியன், சைனீஸ், கிரில் இப்படி நிறைய மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். தாத்தாவும், அப்பாவும் அரைச்சு விட்ட சாம்பார், அவரைக்காய் பொரியல்னு இன்னும் அதுலயே இருக்காங்க” சலிப்புடன் சொன்னான். 

“நார்த் இந்தியன், சைனீஸ் எல்லாம் ஏற்கனவே இருக்கு தானே ரகு”

“இருக்குதான். ஆனா, இன்னும் நிறைய ஐட்டம்ஸ் சேர்க்கணும்னு நான் நினைக்க, பெரியவங்க முட்டுக்கட்டை போடுறாங்க” 

“அவங்க சொல்றதுதான் சரி ரகு. என்னைக்கோ ஒரு நாள் சைனீஸ் சாப்பிட ஓகே. ஆனா, டெய்லி எல்லாம் அதை சாப்பிட ஆசைப்பட மாட்டோம் இல்ல? இதோ இந்த ராவியோலி, பீட்ஸா எல்லாம் மாசத்தில் ஒரு நாள் ஓகே. டெய்லி சாப்பிடுவோமா? முடியாது இல்ல? தினமும் சோறை தானே தேடுவோம்?”

“ம்ம்”

“அதே போல நார்த் இந்தியால இட்லி, தோசை வேணா ஃபேமஸா இருக்கலாம். நம்ம வத்த குழம்பு, வாழக்காய் பொடிமாஸ் எல்லாம் அவங்க மெனுவில் பார்க்க முடியுமா என்ன?” 

“இதுக்கு நம்ம தாத்தாவே மேல். ஆளை விடுத் தாயே” கிட்டத்தட்ட கையெடுத்து கும்பிடாத குறையாக அவன் சொல்ல, பக்கென்று சிரித்து விட்டாள் ரோஜா. 

இருவரின் உணவுத் தட்டும் நீக்கப்பட்டு, டேசர்ட் எனப்படும் இனிப்பு பரிமாறப்பட்டது. 

ரோஜாவிற்கு மிகவும் பிடித்தமான திராமிசு கேக், காஃபி மற்றும் சாக்லேட் சுவையுடன், மாஸ்கபேன் சீஸின் போதையூட்டும் ருசியுடன் நாவில் வழுக்கிக் கொண்டு சென்றது. 

“இனிமேல் இப்படி அடிக்கடி வெளில வரணும் ரோஜா. நாம ஏன் இதுவரை தனியா மீட் பண்ணதேயில்ல?” 

ரகுவரனின் கேள்வியில் ரோஜாவின் பதிலும் ஒளிந்திருந்ததாக உணர்ந்தாள் அவள். 

அவன் மேல் எந்த வித உணர்வும் அவளுக்கில்லை. பெரிதாக நட்பு கூட பாராட்டியதில்லை. நட்போ இல்லை அதைத் தாண்டிய ஈர்ப்போ இருந்திருந்தால் தனியாக சந்திப்பதை பற்றி யோசித்திருப்பார்கள். இதுவரை ஏற்படாத உணர்வு இனியும் வருமா என்ற சந்தேகத்துடன் அவனைப் பார்த்த ரோஜா, “ரகு..” என்று என்றாள். 

“ரோஜா ரிலாக்ஸ்.”

“இல்ல ரகு…”

“நோ சொல்லதான் நேரம் வேணும் ரோஜா. சம்மதம் சொல்ல நிறைய யோசிச்சாலும் பார்த்த உடனே பட்டுனு பதிலை சொல்லிடுவோம். நீ சொல்லாமலே உன் பதிலை என்னால கெஸ் பண்ண முடியுது” 

“சாரி ரகு. நான் ரொம்ப குழம்பிப் போய் இருக்கேன். அதான் சட்டுனு முடிவெடுக்க முடியல”

“ஹேய், இட்ஸ் ஓகே ரோஜா. எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற?”

“இப்போ கல்யாணம் வேணாம்னு தோணுது. ஏதாவது வேலைக்கு போகலாம்னு நினைக்கிறேன்.”

“இங்க பாரு ரோஜா. ஒரு விஷயத்தை நிராகரிக்க, இன்னொரு விஷயத்தை தேடி போகக் கூடாது. அது நிரந்தர தீர்வு கிடையாது. இது காலேஜ் படிக்கும் போது நீ சொன்னதுதான். அதையே திருப்பி இப்போ உனக்கு நான் சொல்றேன். கல்யாணத்தை மறுக்க வேலையை காரணம் சொல்லுற. நாளைக்கு வேலை கிடைச்சதும் என்ன பண்ணுவ? அந்நேரம் வேறவொரு காரணம் தேடணும், இல்லையா?”

“ஐயோ, நிஜமா வேலைக்குப் போக ஆசைப்பட்டேன் ரகு” ரோஜா மறுத்து விடும் வேகத்துடன் சொல்ல, சட்டென இருக்கையில் இருந்து முன்னே சாய்ந்து அவளின் வலக் கரம் பற்றினான். 

“நீ படிச்சுட்டு இருக்கும் போது வேலைக்குப் போக ஆசைப்பட்டன்னு எனக்குத் தெரியும் ரோஜா. நம்ம லைஃப் இப்படியே குடும்ப பிசினஸை பார்க்கறதிலேயே போய்டுமான்னு நீ புலம்பி ஃபீல் பண்ணது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா, இடையில ஏதோ ஒன்னு உன் முடிவை மாற்றியிருக்கணும். நீ வேலைக்கு போற ஆசையெல்லாம் விட்டுட்டு, உங்க கேன்டீன்ல, ஹாஸ்பிடல் வர்ற நோயாளிகளுக்கு ஹெல்தியா என்னென்ன புட் குடுக்கலாம்னு என்கிட்ட டிஸ்கஸ் பண்ணப்பவே, நீ முழுசா தொழிலில் இறங்கிட்டதை புரிஞ்சுக்கிட்டேன்”

“அது அப்படியில்ல ரகு. நம்ம கேன்டீன்ல நான் எப்பவும் மாற்றங்கள் சொல்லிட்டே இருந்திருக்கேன். எனக்கு சரின்னு பட்டது, நல்லதுன்னு நினைச்சது எப்பவும் செய்வேன்தான். அப்பா அதை ஆதரிக்கவும் செய்தார்” என்றவள் ஏற்கனவே பெற்றோரிடம் வேலைக்கு செல்ல அனுமதி வாங்கியதை சொல்லவில்லை. இன்னும் நான்கு நாட்களில் வேலைக்கான நேர்முக தேர்வு இருப்பதையும் சொல்லவில்லை. 

“ம்ம். விடு. நான் ஒன்னும் சொல்லல.உன் முடிவை நீயே சொல்லு. அதுக்கு முன்னாடி என் முடிவையும் நான் சொல்லிடுறேன். எனக்கு ரோஜா ஓகே. எங்க வீட்ல எனக்காகப் பார்த்தப் பொண்ணு. எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச பொண்ணு. அழகு, அறிவு, திறமைன்னு என்னை ஈர்க்க நிறைய காரணங்கள் கண்டுபிடிக்க முடிஞ்ச என்னால, மறுக்க முழுசா ஒரு காரணம் கூட இப்போ வரை தேட முடியலை. இப்போ உன் டர்ன்” பிடித்திருந்த அவள் கையை அழுத்திச் சொன்னான்.

“உன்னைப் பிடிக்கும் ரகு. பட்..”

சட்டென அவள் கையை விட்டான். 

“எக்ஸ்க்யூஸ் மீ, ரகு” என்ற குரலில் இருவரும் நிமிர்ந்து அமர்ந்தனர். 

“புட் எப்படி இருந்தது? சாரி இன்னைக்கு கொஞ்சம் அதிகமான கெஸ்ட்ஸ், உங்களை சரியா கவனிக்க முடியல. டேஸ்ட் எல்லாம் ஓகே தானே?” ராஜேஷ் கேட்க, “எல்லாமே பக்கா. குறையே கண்டுபிடிக்க தோணாத அளவுக்கு டேஸ்ட்டியான புஃட்” என்றான் ரகுவரன்.

“இன்ஃபேக்ட் நானும், ரோஜாவும் செஃப்பை பார்த்து புட் பத்தி பேசணும்னு கூட நினைச்சோம்” ரகு சொல்ல, கண்களை விரித்தாள் ரோஜா. 

“செஃப் யாருனு பார்த்து, பேசி நம்ம பக்கம் இழுப்போமா?” 

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப் ரகு. நம்ம பவனுக்கு எல்லாம் வேலைக்கு வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும் கொள்ள காசு சம்பளம் கேட்பாங்க. நமக்கு கட்டுப்படியாகாது.” இருவரும் சாப்பிடும் போது பேசிக் கொண்டது நினைவு வர அவளுக்குச் சிரிப்பு வந்தது. 

error: Content is protected !!
Scroll to Top