ஒரு கணம் தயங்கி பின் கண்கள் மலர, “ஹாய் செஃப்” என்றாள் ரோஜா.
“அக்கா, அப்புறம் பேசுறேன்.” என்று சட்டென அழைப்பை துண்டித்தாள்.
இளமாறனின் காயங்கள் குணமாகி இருந்தது. நான்கு நாட்கள் தாத்தா, அம்மம்மாவின் வற்புறுத்தலால் மருத்துவமனையில் இருந்து, பின்னர் வீடு திரும்பியிருந்தான். அதன் பிறகும் தையல் பிரிக்க, கட்டு மாற்ற என அனைத்திற்கும் அங்குதான் வந்தான். கடந்த பத்து நாட்களில் அவளைப் பார்க்க வேண்டும், நன்றி சொல்ல வேண்டும் எனப் பல முறை விரும்பினான். ஆனாலும், அதற்கான நேரம் அமையவில்லை.
அவனது தாத்தா, அம்மம்மா அவளைச் சந்தித்து நன்றி சொன்னதையும் அவன் அறிவான். ஆனாலும், அவன் நேரடியாகச் சொல்வது போல வராதே.
இன்றைக்கு அவளைப் பார்க்கவென்றே நேரம் ஒதுக்கி மெனக்கெட்டு இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேலாக அவள் பேசுவதைக் கேட்டபடியே தயக்கத்துடன் நின்றிருந்தான் அவன். ஆனால், அவனைப் பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்து, “உட்காருங்க செஃப். எப்படி இருக்கீங்க? தலைக் காயம் எல்லாம் சரியாகிடுச்சா?” என்று அவள் கேட்டதும், அவனுக்கு அத்தனை ஆசுவாசமாக இருந்தது.
அவள் கைக் காட்டிய இருக்கையின் மேல் சாய்ந்து நின்றான்.
“காஃபி சாப்பிடுறீங்களா செஃப்? உட்காருங்களேன், நான் போய் எடுத்துட்டு வர்றேன்” அவன் பதிலை எதிர்பாராமல் அவள் பேசிக் கொண்டேயிருக்க மனதிற்குள் சிரித்துக் கொண்டான் இளமாறன்.
அவன் அப்படியே நிற்க, ரோஜா அவனுக்கான காஃபியுடன் வந்தாள்.
“ஜஸ்ட் அ நார்மல் ஃபில்டர் காஃபி. உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்” என்றபடி அவன் புறமாக ஒரு கோப்பையை நகர்த்தி விட்டு, தானும் ஒரு கோப்பையுடன் அவள் அமர, எதிரில் அமர்ந்து மௌனமாய்க் காஃபியை கையில் எடுத்தான் அவன்.
அந்நேரம் ரோஜாவின் அலைபேசி ஒலியெழுப்பியது.
“ஐயோ, அம்மா, மறந்துட்டேன்” மெல்ல புலம்பலாக முணுமுணுத்தாள்.
“சாரி. ஏதாவது முக்கியமான விஷயம் பேசணுமா செஃப்? வந்ததில் இருந்து ஒன்னுமே சொல்லலை நீங்க.” அவள் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தான். ஏனோ எப்படி நன்றி சொல்வது, என்ன சொல்லி நன்றி சொல்வது என அவனுக்குத் தெரியவேயில்லை. வார்த்தைகள் வசப்படாத நிலையில் இருந்தான்.
“இன்னைக்கு அம்மா கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாங்க. அதான் மொபைல்ல ரிமைண்டர் செட் பண்ணியிருந்தேன். ஐ ஹவ் டு கோ.” என்றவள், “நீங்க நல்லாருக்கீங்க தானே?”என்று மீண்டும் கேட்க, “ரொம்ப நல்லாருக்கேன்” என்றவன், அவள் முகம் பார்த்து, இதழ் பிரித்து முழுமையான புன்னகையைக் கொடுத்தான்.
“ஓகே செஃப். ஹேப்பி டு ஹியர் தட்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “மாறா” என்ற மருத்துவர் சுகந்தியின் குரல் கேட்டது.
இளமாறன் பதறி எழ, அவன் அமர்ந்திருந்த மேஜைக்கு அடியில் அடிப்பட்டிருந்த அவன் கால் சிக்கிக் கொள்ள, நிலைதடுமாறி ஒரு புறமாகச் சரிந்தான் அவன்.
“கேர்ஃபுல் செஃப்” இப்பொழுதும் விரைந்து வந்து, அவன் விழுந்து விடாமல் தடுத்துப் பிடித்திருந்தாள் ரோஜா. அவளைப் பார்த்த இளமாறனின் கண்களில் இருந்த உணர்வை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“பார்த்து மாறா” என்று மற்றொரு பக்கம் சுகந்தி அவன் கைப் பிடிக்க, அவரின் கையை மென்மையாய் விலக்கி விட்டான். மேஜையைப் பற்றி நேராக நின்று, ரோஜாவை பார்த்து தலையசைத்து விட்டு, வாயிலை நோக்கி நடந்தான். அவன் பின்னேயே சென்ற சுகந்தியை பார்த்துக் கொண்டே தானும் வீடு செல்லத் தயாராகினாள் ரோஜா.
“எனக்கு வேலையிருக்கு.” சுகந்தி தொடுத்த அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றைப் பதிலைக் கொடுத்து விட்டு வெளியேறினான் இளமாறன். மகனின் முதுகை வெறித்துப் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தார் அவர்.
“அம்மா, எங்க இருக்கீங்க?. நான் வந்துட்டேன். கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். அதுக்குச் சாரிம்மா. சாரி” என்று கத்திக் கொண்டே அம்மாவின் அறைக்குள் நுழைந்தாள் ரோஜா.
அங்கே வெளியில் செல்வதற்குத் தயாராகி, அதே கோலத்தில் படுக்கையில் பட்டுப் புடவையுடன் சுருண்டு படுத்திருந்த அம்மாவை பார்க்கையில் ரோஜாவுக்கு ஐயோ என்றிருந்தது.
“என்னம்மா இப்படிப் படுத்திருக்கீங்க. எழுந்திருங்க மா. என்னைச் சீக்கிரம் வரச் சொல்லிட்டு, நீங்க படுத்து தூங்கறீங்க?” அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
“அப்பாவை போல நீயும் அடிக்கடி இப்படித் தானே பண்ணுவ? சீக்கிரம் வர்றேன் சொல்லிட்டு வராம இருக்கறது? இன்னைக்கும் நீ சொன்ன நேரத்துக்கு வரல. நானும் சரினு வெயிட் பண்ணேன். இதுக்கு மேல வேலை முடிஞ்சுதான் வருவன்னு இப்போதான் ரூமுக்கு வந்து படுத்தேன்” அவர் இயல்பாகச் சொன்னதில் இருந்த புகாரில் குற்ற உணர்ச்சி கொண்டாள் ரோஜா.
“நான் வேணும்னு லேட் பண்ணல மா. எனக்கு வேலையிருந்தது” அம்மாவின் பார்வையில் அப்படியே வார்த்தைகளை முழுங்கி, அரை மணி நேரம் செலவழித்து, அவரைச் சமாதானப்படுத்தி, வெளியில் அழைத்துச் சென்றாள்.
இருவரும் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கோவிலுக்குச் சென்றார்கள். கூட்டம் அதிகம் இல்லாதிருந்த கோவிலில் நிறைவான சாமி தரிசனம் பெற்று, காருக்கு வருகையில் அவள் மனம் நிர்மலமாக இருந்தது. அம்மாவின் முகத்தில் தெளிவையும், புன்னகையையும் பார்த்ததும் ஒருவித ஆழ்ந்த அமைதியை உணர்ந்தாள் ரோஜா.
“அப்புறம் மா? அடுத்து எங்க போகலாம்? ஷாப்பிங்? உங்களுக்கு ஏதாவது வாங்குவோமா?”
“வேணாம் ரோஜா. வீட்டுக்குப் போகலாம். அப்பா வருவாங்க. அவருக்கு டீ, ஸ்நாக்ஸ் கொடுக்கணும். நாம வீட்ல இல்லன்னா அதுவும் சாப்பிடாம நேரா ஹாஸ்பிடல் போய்டுவார். அங்க போயும் ஒன்னும் சாப்பிட மாட்டார். அப்புறம் நைட் சாப்பாடு பத்து மணிக்கு மேல வந்து சாப்பிட்டு, வயிறு சரியில்ல, நெஞ்செரிச்சல், முடியலன்னு சொல்வார்” அம்மாவின் எண்ணங்கள் எப்போதும் வீட்டின் சமையல் அறையிலேயேதான் இருக்கும் போலும், என்று நினைத்த நொடி, தான் இப்படி நினைப்பதே தவறு என்று மனதில் உணர்ந்தாள் ரோஜா. வீட்டினர் உடல் நலத்தின் மீதான அம்மாவின் அக்கறை அது, என்றைக்கும் மாறாது. அம்மாவிற்கு மறக்கவும் மறக்காது என்பதுதான் நிதர்சனம் என்பது உறைக்க, காரை மெல்ல நகர்த்தினாள்.
“ரோஜா, அப்பா நேத்து கூட உன் கல்யாணம் பத்தி பேசிட்டுருந்தார். நீயும், ரகுவும் பதில் சொல்லாம பெரியவங்களை அவமதிக்கறீங்க தெரியுமா?”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லம்மா. ஒரு வாரமா அது பத்தி வீட்ல யாரும் பேசலை. அதான் நானும் அமைதியா இருந்துட்டேன்.”
“ரகு என்ன சொல்றான்?”
“நாங்க பெர்சனலா பேசிக்கல மா. அவன் பிஸியா இருக்கான். இந்த வீக்கெண்ட் மீட் பண்ணலாம்னு சொன்னான். ஆனா, அன்னைக்கு அவனுக்கு மெனு டேஸ்ட்டிங் (Menu tasting) இருந்தது.” சித்ரா திரும்பி மகளை அழுத்தமாகப் பார்க்க, “இந்த வீக் பார்க்கலாம்னு சொன்னார் மா.” ஓரப் பார்வையில் அவரைப் பார்த்து சொல்லி விட்டு சாலைக்குக் கவனத்தைத் திருப்பினாள்.
“நீங்க மீட் பண்றது இருக்கட்டும். முதல்ல நீயென்ன முடிவெடுத்திருக்க? நீங்க கடைசியா பார்த்து பேசி பத்து நாளாச்சு. உன்னை விட, உங்க கல்யாண முடிவை விட ரகுக்கு அவங்க ஹோட்டல் மெனுதான் முக்கியமா இருக்கு, இல்ல?. மெனு டேஸ்ட்டிங் பார்க்க அவரேதான் போகணுமா?” படபடவெனச் சித்ரா கேட்க, பதிலின்றி அமைதியாய் காரை செலுத்தினாள் ரோஜா.
“ம்ம்.” ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தார் சித்ரா.
அந்நேரம் ரோஜாவின் அலைப்பேசி அதிர, திரையில் ஒளிர்ந்தது ரகுவரனின் பெயர்.
அவனது அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள். கார் முழுவதும், “ஹாய் ரோஜா” என்ற ரகுவரனின் குரல் எதிரொலித்தது.
“நெக்ஸ்ட் வீக் நீ ஃப்ரீயா? லஞ்ச் போகலாமா? உனக்கு ஓகே தானே?”
அம்மாவை திரும்பிப் பார்த்து விட்டு, “டபுள் ஓகே” என்றாள் ரோஜா.