என் ஜீவனில் உறைந்திடு – 3 (2)

ரோஜா காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் இருந்தாள்.

“ரோஜா, இன்னைக்கு ஈவ்னிங் வீட்டுக்குக் கொஞ்சம் சீக்கிரமா வர முடியுமா?” கேள்வியுடன் வந்து நின்ற அம்மாவைப் பார்த்து புன்னகைத்து, “டிரை பண்றேன்மா” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே சித்ராவின் முகம் மாறியிருந்தது.

“அதெப்படி உங்கப்பா மாதிரியே பதில் சொல்ற?”

“உங்ககிட்ட வர்றேன் சொல்லிட்டு, வர முடியாம போனா எனக்குக் கில்டியா ஃபீல் ஆகும் மா. அதான். உங்களுக்குத் தெரியாதா?” அம்மாவின் கைப் பிடித்துச் சொன்னவள், “சரி சொல்லுங்க. எத்தனை மணிக்கு வரணும். எங்க போகணும்?” என்று கேட்க, “நீ முதல்ல வா. அப்புறம் பிளானை சொல்றேன்” என்றார் சித்ரா.

இதற்கு முன்னர் எத்தனையோ முறை அம்மா அழைத்து வர முடியாமல் போய் இருக்கிறது. அந்த அவநம்பிக்கையில்தான் அவர் பேசுகிறார் என்பது புரிந்த கணம், குற்றவுணர்வு மெல்ல தலைத் தூக்கியது.

“நான் நாலு மணிக்கு வீட்ல இருப்பேன்மா. நீங்க ரெடியா இருங்க. ஓகே?”

“ம்ம்” அவள் கையிலிருந்த காலி காஃபி கோப்பையை வாங்கியபடி உள்ளே நடந்தார் சித்ரா.

“போகலாமா ரோஜா?” என்றபடி அப்பா வர, அவரோடு நடந்தாள் அவள்.

அவர்கள் மருத்துவமனை சென்றடைந்து, உணவகத்திற்குள் காலெடுத்து வைத்ததும் வேலை அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அன்றைக்கு நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருந்தாள் அவள். அப்பா மற்றொரு கிளைக்குச் சென்று விட, அவள்தான் முன்னின்று அங்கு அனைத்தையும் மேற்பார்வையிட வேண்டியிருந்தது.

மதியம் மூன்று மணிக்கு மேல்தான் உணவகத்தில் சற்றே கூட்டம் குறைந்தது. அவளுக்குப் பசி மரத்திருந்தது. ஒரு குவளை தண்ணீரை பருகியபடி அவள் நிற்க, அலைபேசியில் அக்கா நித்யா அழைத்தாள்.

“நீதான் என்னைப் பார்க்க வர்ற ஆளா நித்திக்கா?” பொய்யான கோபத்துடன் அவள் கேட்க, “நான் எப்போ பார்க்க வர்றேன்னு சொன்னேன்? நீதான் என்னை மிரட்டி வரச் சொன்ன?” சிரிப்புடன் சொன்னாள் நித்யா.

“ஆமா, மிரட்டினேன். நீ அப்படியே அதுக்குப் பயந்து வந்துட்ட பாரு..”

“மாமாக்கு லீவ் கிடைக்கணும் ரோஜா”

“எப்பவும் இதையே சொல்லாத கா. லீவ் போட்டு வாங்க. இல்லையா தம்பியை கூட்டிட்டு நீ மட்டும் வா”

“ஐயோ, அதெல்லாம் முடியாது. உங்க மாமாவை தனியா விட்டுட்டு எல்லாம் என்னால வர முடியாது. என்னை இங்க நிம்மதியா நாலு நாள் கூட இருக்க விட மாட்டார். எப்போ வர்ற? கிளம்பிட்டியா? டிக்கெட் போடவான்னு தொல்லை பண்ணுவார். அதுக்கு அவரையும் இழுத்துட்டு வந்தா, ரெண்டு நாள் நிம்மதியா உங்க கூட இருந்துட்டு போவேன்”

“ம்ம். லாஸ்ட் டைம் நேர்ல வந்து உன்னைக் கூட்டிட்டு போனாரே. அப்பா கூடக் கோவிச்சுக்கிட்டாங்க” ரோஜா சொல்ல, சத்தமாகச் சிரித்து ஆமோதித்தாள் நித்யா.

“அப்புறம் சொல்லு. நேத்து நைட் ஏதோ பேசணும்னு மெசேஜ் பண்ண? என்ன விஷயம்? குழந்தை தூங்கிட்டான். நான் இப்போ ஃப்ரீயா இருக்கேன். அதான் பேசலாம்னு கூப்பிட்டேன். சொல்லு ரோஜா”

“நான் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன் நித்திக்கா”

“இப்போ பார்க்கறது என்னவாம்?” கிண்டலாகக் கேட்டாள் நித்யா.

“ப்ச். இது நம்ம கேன்டீன் கா. சின்ன வயசில் இருந்தே நாம இங்க வேலை பார்த்திருக்கோம். நான் சொல்றது வெளில ஏதாவது ஹோட்டல், ஹாஸ்பிடல், ஏர்லைன்ஸ் இது போல வேலை கா. படிச்ச படிப்பை உப்பு போட்டு ஊறுகாய் போடுறதுக்கு முன்னாடி, அதைக் காட்டி கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் வாங்கிக்கலாம் இல்ல கா?”

“நீ சீரியஸா சொல்றியா ரோஜா? என்ன திடீர்னு? அப்பா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டார் ரோசு.”

“தெரியும் கா. பட்..”

“இவ்வளவு நாள் அப்பா கூட நம்ம கேன்டீன்ல தானே இருக்க? அதுவும் நல்ல வேலை தானே ரோஜா? ஏன் திடீர்னு உனக்கு இப்படி விபரீத ஆசை எல்லாம்?”

“நான் எம்பிஏ முடிக்கும் போதே சொன்னேன். அப்போ நீங்க யாரும் அதைக் காதுல வாங்கவேயில்ல. ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் படிச்சுட்டு…”

“ஹாஸ்பிடல்ல கேன்டீன் மேனேஜ் பண்ற. பொருத்தமான வேலைதான் ரோசு.”

பல்லைக் கடித்துக்கொண்டு, “நித்திக்கா” என்றாள் ரோஜா.

“எனக்கு முதல்ல இதுக்குப் பதில் சொல்லு. அப்பா உனக்குக் கல்யாணம் பேசிட்டு இருக்கார். ரகு வீட்ல உங்க ரெண்டு பேர் பதிலையும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. இப்போ போய் நீ புதுப் பூதத்தைக் கிளப்பி விடுற. நம்ம ரெண்டு கேன்டீன் பார்க்க, சலிச்சுக்கற நீ, நாளைக்கு ரகுவை கல்யாணம் பண்ணா, அவங்களோட ஏழு ரெஸ்டாரன்ட்டையும் பார்க்கணும். உன் படிப்புக்கு அதை அவங்க எதிர்பார்ப்பாங்க ரோஸ்குட்டி. இட்ஸ் நார்மல்” நித்யா சொல்ல, ரோஜாவிற்கு அசரீரியாக அம்மாவின் குரல் காதில் எதிரொலித்தது.

“நான்தான் கல்யாணம் வேணாம்னு அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன் இல்ல கா?”

“என்கிட்ட சொன்ன சரி. ஆனா ரகுகிட்ட இன்னும் சொல்லலை தானே?”

“சொல்லலதான். என்ன இப்போ அதுக்கு?”

“அதைச் செய் முதல்ல.”

“முடியாது போ. நீயெல்லாம் அக்காவா? எனக்குச் சப்போர்ட் பண்ணாம…”

“லூசு ரோசு. அக்கா இருக்கப் பயமேன். உனக்கு வேலைக்குப் போகணும் அவ்ளோதானே?”

“ஆமா. ஒரு ரெண்டு வருஷம் வேலைக்குப் போய்ட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன் கா. அப்பாகிட்ட நீ பேசேன் பிளீஸ்.”

“ரெண்டு வருஷமா? அதுவரைக்கும் உனக்குக் கல்யாண பேச்செடுக்காம இருக்க மாட்டாங்க. வேலைக்குப் போற உன் ஆசையை இப்போதைக்குச் சாதிக்க ஒரே வழி அம்மாகிட்ட பேசுறதுதான்.” தீர்க்கமாகச் சொன்னாள் நித்யா.

“அம்மாவா?”

“ம்ம். அம்மாவேதான். அம்மா சொன்னா, அப்பா கேட்பாங்க.”

“இல்லையே. ரகுவை வேணாம்னு அம்மா சொல்லியும், அப்பா கேட்கலை தானே கா?”

“ரோஜா, அது உன் கல்யாணம். ரெண்டு குடும்ப நட்பு. அப்பாவோட முன்னாள் முதலாளி. அவரோட பேரன் ரகுவரன். நம்ம கேன்டீன், இப்படி நிறைய விஷயம் அதுல இருக்கு. ஆனா, நீ வேலைக்குப் போறது அப்படியில்ல. அம்மா கேட்டா, அப்பா மறுக்க மாட்டார்”

“சத்தியமா எனக்குப் புரியல கா. இவங்க டைனமிக்ஸ் எனக்கு எப்பவும் கன்பியூசிங்தான்”

“அது புரியணும்னா, உனக்குக் கல்யாணமாகி இருக்கணும் ரோசு.”

“இல்ல, வேணாம். அது எனக்குப் புரியாததாவே இருக்கட்டும்” பட்டெனச் சொன்னாள் ரோஜா. சத்தமாகச் சிரித்தாள் நித்யா.

“ஓகே. அப்போ நான் இன்னைக்கு அம்மாகிட்ட பேசுறேன்கா. அம்மா என்ன சொன்னாங்கன்னு…” தங்கையின் பேச்சில் நுழைந்து, “அதை நாளைக்கு நான் அம்மாகிட்ட கேட்டுக்கறேன்” என்றாள்.

“ஓகே. அப்போ நான் வேலைக்குப் போகப் போறேனா? வாவ். முதல் மாசம் சம்பளம் முழுசும் உணக்குத்தான் நித்திக்கா” உற்சாகத்துடன் அவள் சொல்ல, “ஆஹா. இது நல்லாருக்கே. இதுக்கே உனக்காக அம்மாகிட்ட பரிந்து பேசலாம் போலவே.” என்று அந்தப் பக்கம் நித்யா கத்த, சிரிக்க ஆரம்பித்தாள் ரோஜா.

முகம் நிறைத்த புன்னகையுடன் அவள் திரும்ப, “ரோஜா, சார் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்” என்றபடி கேன்டீன் மேனஜர் வந்து நிற்க, அவருக்குப் பின்னே மேஜையில் சாய்ந்து நின்றிருந்தான் இளமாறன்.

error: Content is protected !!
Scroll to Top