என் ஜீவனில் உறைந்திடு – 3 (1)

அம்மா, மகன் இருவரையும் மாறி மாறிப் பாத்தாள் ரோஜா. அவர்களுக்கு நடுவில் எதுவோ சரியில்லை என்று புரிந்தது. இளமாறன் இமைகள் மூடிக் கொண்டதில் அம்மாவை தவிர்க்க விரும்புவது தெளிவாகத் தெரிய, அவளால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.

மெல்ல விழி உயர்த்தியவள் மருத்துவர் சுகந்தியின் பார்வையில் குழம்பி, அவர் கண்கள் கூர்ந்த திசையில் பார்த்தாள். இளமாறனின் கரத்தை அவள் பற்றியிருக்க, அவனின் ஒற்றை விரல் அவள் கையை மென்மையாய் தொட்டுக் கொண்டிருந்தது. ரோஜா விதிர்த்து கையை விலக்கிக் கொண்டாள்.

முன்தின இரவு சுகந்தி அவளுக்கு அலைபேசியில் அழைத்து, கேள்விகளால் அவளைத் திணறடித்திருந்தார். எல்லாம் விபத்துக் குறித்த கேள்விகள்தான். அவள் ஏன் அந்நேரம் அங்கிருந்தாள் என்பது வரை கேட்டவருக்குப் பதில் சொல்லி முடிப்பதற்குள் மூச்சு முட்டியிருந்தது அவளுக்கு. அவர்களுக்கு இந்த மருத்துவனையில் உணவகம் இருப்பதால், பல வருடங்களாகச் சுகந்தியை பார்க்கிறாள் ரோஜா. அவர் மேல் எப்போதும் ஒருவித மரியாதை உண்டு. அதுபோகப் பயம் என்று சொல்லிட முடியாது, ஆனால், ஒருவித ஒதுக்கம் இருந்து கொண்டே தானிருக்கும்.

அவரின் பார்வையை உணர்ந்து, “நான் கேன்டீன் போகணும் டாக்டர்” என்று விட்டு எழுந்து கொள்ள, அவள் குரலுக்குக் கண் திறந்தான் இளமாறன்.

நள்ளிரவு மயக்கம் தெளிந்து விழித்தது, அவன் அப்பா கேட்ட கேள்விகளுக்கு உளறலாய் பதில் சொன்னது எதுவும் அவன் நினைவில் இல்லை.

அவன் தலையை உயர்த்திப் பிடித்து, மிரண்ட விழிகளில் இரக்கமும், பரிவும், பரிதவிப்புமாக அவள் பேசியது மட்டுமே அவனுக்கு நினைவில் இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு மீண்டும் திறக்கப்பட, அப்பா, அம்மம்மா, தாத்தா என வரிசையாய் உள்ளே வந்தார்கள்.

“மாறா, இப்போ எப்படி ஃபீல் பண்ற?” சங்கரன் கேட்டுக் கொண்டே உள்ளே வர, “பெட்டர்ப்பா. என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க?” இயல்பாய் கரகரத்த குரலில் அப்பாவிற்கு அவன் பதில் சொல்வதைக் கேட்டபடியே வெளியே நடந்தாள் ரோஜா.

“மாறா.. ராஜா..” என்ற முதிய குரல்களைக் கேட்டபடியே அறையின் கதவை மூடினாள். இளமாறனின் செவிலி அவசரமாக ஓடி வர, அவருக்குப் பின்னே சுகந்தி, சங்கரனின் மற்ற இரு பிள்ளைகளும் வந்து கொண்டிருந்தார்கள்.

மருத்துவர் வெண்பா, மருத்துவமனையை நிர்வகிக்கும் வினோத் இருவரும் அவளைப் பார்த்து கையசைத்து, “தேங்க்யூ” என்றனர்.

இத்தனை உறவுகள் இருக்கையில் இளமாறன் தனியாக அறையில் இருந்தது மனதை உறுத்த, அதை அலட்சியப்படுத்தித் தோளை குலுக்கிக் கொண்டு உணவகம் நோக்கி நடந்தாள் ரோஜா.

இளமாறனுக்கு உடலில் இருந்த காயங்கள் கூட அத்தனை வலியைத் தரவில்லை. உறவுகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே அவனைச் சோர்வாக்கியது. அதில் இருந்து தப்பிக்கக் கண்களை மூடிக் கொண்டான்.

சரியாக ஏழு மாதங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் அவனது அம்மம்மா அனுமதிக்கப்பட்டிருக்கையில் கோபப்பட்டுப் பேசியிருந்தான். காலம் இப்போது அவனை அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அன்றைக்கு வந்த நண்பன் சரத்தின் அழைப்பையும் அசைப் போட்டுக் கொண்டான் அவன். அதுவரை அவன் உழைத்து சேமித்த அனைத்தையும் போட்டு சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்திருந்த உணவகம் நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் மூட வேண்டிய நிலை வரும் என்று கேட்க நேரிடுவது கொடுமையன்றி வேறென்ன. எப்படியும் சமாளித்து மேலேறி விடலாம் என்றுதான் நினைத்திருந்தான் அவன். நண்பன் தொழிலில் இருந்து ஒட்டு மொத்தமாக விலகிப் போகும் வரை நஷ்டம் கொண்டு செல்லும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனுக்கு நடப்பது எதையும் நம்ப முடியவில்லை. எல்லாம் ஒரு கொடும் கனவு போலிருந்தது.

அவனது தாத்தா, அம்மம்மாவிற்கும் உணவு சார்ந்த தொழிலே. பண்டிகை மற்றும் விசேஷங்களுக்கு அழைப்பின் பேரில் விருந்து சமைத்துக் கொடுப்பதுதான் அவர்கள் வேலை. கல்யாண வீட்டுச் சமையல், வளைகாப்புச் சாதம், தீபாவளி பட்சணம் எனச் சிறிய அளவில் இருந்த அவர்களது தொழில் நாளடையில் கேட்டரிங் பிசினஸாக வளர்ந்து நின்றது.

அடையாரில் இருந்த அம்மம்மா, தாத்தா வீட்டின் பின்புறம் இதற்காகவே கட்டப்பட்ட விசாலமான சமையல் அறையில்தான் அவனது சிறுவயது பொழுதுகள் கழிந்திருக்கிறது.

பெரியவர்கள் பயபக்தியுடன் சமையலை கலையாக, நேர்த்தியாகச் செய்வதைப் பார்த்தே வளர்ந்திருந்தான் அவன். சமையல் அவனுள் வளர்ந்தது. பெரியவர்கள் சமைப்பதை பார்த்தான், படித்தான், பத்துப் படிக்கையில் தாத்தாவிற்கு ஒத்தாசையாக நின்று சமைக்கும் அளவு வளர்ந்திருந்தான்.

பள்ளி இறுதி ஆண்டில் முறையாகச் சமையல் கலையைக் கற்பது என்ற முடிவுக்கு வந்திருந்தான். இந்தியாவில் அப்போதுதான் சமையல் கலைக் குறித்தான படிப்பு வெளியில் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். சென்னையின் மிகப் பிரபலமான கல்லூரியில் அவனுக்குப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அவன் கல்லூரிப் படிப்பை முடிக்கையில் இந்தியாவின் பழமை வாய்ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணி செய்யும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது.

சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை எனப் பல மாநிலங்களுக்கு மாறி, கடைசியாய் ஹைதராபாத்தில் சூ செஃப்பாகப் பதவி உயர்வு பெற்று இரண்டு வருடங்கள் பணியாற்றி, தற்போது சென்னையில் உள்ள அதே ஹோட்டலின் மற்றொரு கிளைக்குக் கிட்டத்தட்ட கெஞ்சிக் கேட்டு, வேலையில் இருந்து விலகி விடுவேன் என மிரட்டி மாற்றலாகி வந்திருந்தான்.

அதுவும் அவனே எதிர்பாராத பதவி உயர்வுடன். “எக்ஸிகியூட்டிவ் செஃப் இளமாறன்’. எத்தனை பெரிய கனவு. பெருமையும், சற்றே கர்வமாகவும் கூட உணர்ந்தான். இந்தச் சிறிய வயதில் சாதித்து விட்டான் என்ற வாழ்த்துகளைக் கேட்கும் போதெல்லாம் மகிழ்ந்தான்.

அந்நேரம் வேலை நெருக்கடியில் சொந்த தொழிலை கை விட்டுட்டு விடலாம் என்று கூட நினைத்தான். ஏனோ, முடியவில்லை.

அவன் சென்னை வந்து ஒரு மாதம்தான் கடந்திருந்தது. இறங்கு முகமாகச் சென்று கொண்டிருந்த தொழிலில் இருந்து நண்பனுக்கு விடுதலை கொடுத்து தொழிலை முழுமையாகத் தன் வசமாக்கிக் கொண்டான் அவன்.

நண்பனின் பங்கு பணத்தைக் கொடுத்து முடிக்கும் போது அவன் வங்கிக் கணக்கு சொற்ப தொகைக்கு வந்து நின்றிருந்தது. அது நாள் வரை நண்பன் நிர்வகித்ததை, தன் கையில் எடுத்துக் கொண்டவனுக்கு உணவு தயாரிக்கும் அளவுக்கு நிர்வாகம் எளிதாக வரவில்லை.

கணக்கு, வழக்குகள் எண்ணெய்யும், தண்ணியும், உப்பும், சக்கரையும் கொட்டி கவிழ்த்தது போலக் கலந்து அவனைத் குழப்பியது.

முதலில் எதுவும் விளங்காமல் தடுமாறி பின்னர் ஓரளவு சரி செய்திருந்தான். போதுமான பணியாளர்களை உள்ளே கொண்டு வந்து, பொறுப்பான நிர்வாகியை, அனுபவம் வாய்ந்த செஃப்பை வேலைக்கு அமர்த்தினான்.

ஆனால், எதுவும் சரியாகவில்லை. ஆமை வேக முன்னேற்றம் அவனைக் கவலைக் கொள்ளச் செய்தது. வேலை, தொழில் என இரண்டையும் சமாளிக்க முடியாமல் திணறிப் போனான் அவன்.

இரட்டை குதிரை சவாரி சரி வராது. வேலையை விட்டுவிட்டுத் தொழிலில் முழுவதுமாக இறங்கி விடலாம் என்றால், தயக்கம் வந்து அவனை நிறைத்துக் கொண்டது. அவனால் இதைப் பற்றி யாரிடமும் பேச, கலந்தாலோசிக்க முடியவில்லை. அதுவே அவனுக்கு இன்னும் அழுத்தத்தைக் கொடுத்தது. அப்படியொரு குழப்பமான மனநிலையில் அவன் வண்டியோட்டும் போதுதான் விபத்தில் சிக்கியது.

இப்போது உறவுகளிடம் சிக்கி அவதிப்படுவதாக மனதில் அலுத்துக் கொண்டு கண்களை மூடியே இருந்தான் அவன்.

ரோஜா மெலிதாகப் பாடலை முணுமுணுத்துக் கொண்டு மதிய உணவிற்கான சமையலை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

“ரோஜா…”

“சொல்லுங்கப்பா” வாயிலில் நின்றிருந்த அப்பாவின் முன் சென்று நின்றாள்.

“அம்மா எப்படியிருக்கா? அவளுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே? காலைல அவசரமா கிளம்பி வந்ததுல கேட்க மறந்துட்டேன்.”

“கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தாங்கப்பா. ஹெல்த் எல்லாம் ஓகேதான். நீங்க கால் பண்ணி பேசியிருக்கலாம் இல்லப்பா? நான் கால் பண்ணித் தரவா?” உடைக்கு மேலே அணிந்திருந்த ஏப்ரனில் இருந்து அலைபேசியை அவள் எடுக்க, “வேணாம் மா. நான் இப்போதான் பேசினேன். அவ குரலே சரியில்லாத மாதிரி இருந்தது. அதான், கேட்டேன். நீ வேலையைப் பாரு” என்று புன்னகைத்துச் சொன்னார் சிவஹரி.

“ம்ம். அம்மாகிட்ட நானும் பேசறேன்ப்பா. நாம ஈவ்னிங் வீட்டுக்குப் போகும் போது நார்மலா இருப்பாங்க, பாருங்க.”

“சரி. நீ வேலையைப் பாருமா.”

“லஞ்ச்க்கு வீட்டுக்கு போயிட்டு வாங்களேன்ப்பா. நான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.” இரண்டு அடிகள் எடுத்து வைத்திருந்தவர், அப்படியே திரும்பி மகளைப் பார்த்தார்.

“இன்னைக்கு நம்ம திநகர் கேன்டீன் போகணும் நான். மறந்துட்டியா மா?” என்றதோடு அவர் வெளியேற, ரோஜாவின் மனத்தில் அம்மா சோகமாகப் புன்னகைத்தார்.

error: Content is protected !!
Scroll to Top