இல்ல. நித்திகிட்ட இந்தக் கல்யாணம் வேணாம்னு ரெண்டு நாள் முன்னாடி நீ பேசுறதை கேட்டேன். அப்பலருந்து இதே யோசனைதான்”
“சாரி மா. அப்பவே உங்ககிட்ட பேசியிருக்கணும் நான்” அம்மாவின் இடையை கட்டிக் கொண்டு அவள் சொல்ல, “சித்ரா” என்று உரக்க அழைத்தப்படி அறைக்குள் நுழைந்தார் சிவஹரி.
“அப்பா” என்று பதறி எழப் போன மகளை அழுத்தி மடியில் படுக்க வைத்தார் சித்ரா.
“இன்னைக்கு உன் பொண்ணு என்ன பண்ணா தெரியுமா?” அவர் புகார் வாசிக்கத் தொடங்க, அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார் சித்ரா.
ஐந்து நிமிடங்கள் கழித்து, “சரி, வா. எனக்கு டிஃபன் எடுத்து வை” அவர் சொல்ல, சித்ரா அசையாமல் அமர்ந்திருக்க, ரோஜாதான் எழுந்து சென்றாள்.
அன்றிரவு அம்மாவின் அறையிலேயே படுத்துக் கொண்டாள் ரோஜா.
“நீ போம்மா, அப்பா பார்த்துக்கறேன்” என்ற அப்பாவின் குரலுக்கு அவள் கட்டுப்படவேயில்லை. அம்மாவையும், மகளையும் மாறி மாறிப் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிவஹரி.
மறுநாள் காலை விரைவாக அப்பாவுடன் கிளம்பி மருத்துவமனை சென்றாள் ரோஜா.
காலை உணவுக்கான ஆயத்தங்களை மேற்பார்வையிட சிவஹரி நேராக உணவகம் நோக்கி செல்ல, ரோஜா அவரைத் தயக்கத்துடன் பார்த்தாள்.
“டாக்டர் என்னை மீட் பண்ணனும்னு சொன்னாங்கப்பா. போய் பார்த்திட்டு வந்துடவா?” அவரோடு நடந்துக் கொண்டே அவள் கேட்க, “ம்ம். சீக்கிரம் வாம்மா” என்று விலகி நடந்தார் அவர்.
அவசரமாய் ஒரு வட்டமடித்து திரும்பி நடந்தாள் ரோஜா. அங்கிருந்த செவிலியர்களிடம் விசாரித்து இளமாறனின் அறை நோக்கி நடந்தாள். முறையாக அனுமதி பெற்று அவள் உள்ளே சென்றதும், விழிகள் அனிச்சையாய் இளமாறனை தேடித் தொட்டது.
அவனுக்கு முன் நெற்றி, தலையின் பின்புறம் கட்டுப் போடப்பட்டிருக்க, அவளுக்கு தன்னிச்சையாக இரக்கம் சுரந்தது.
“சிஸ்டர்..” அவள் அழைக்க, “வாம்மா நம்ம இளவரசனை காப்பாற்றின ராஜகுமாரி.” என்று சிரிப்புடன் அவர் வரவேற்க, “தூங்கறாரா சிஸ்டர்? நைட் கண் முழிச்சாரா, இல்லையா? தலைல இவ்வளவு பெரிய கட்டுப் போட்டிருக்கீங்க? ஆனா, நேத்து பெரிய அடியில்லைன்னு சொன்னாங்க?” குரலை தழைத்து உண்மையான கரிசனத்துடன் கேட்டாள் ரோஜா.
“அப்படித்தான் சொல்லுவாங்க. உண்மையை சொல்லி பயமுறுத்த முடியுமா?” என்று மெலிதான புன்னகையுடன் சொன்னவர், “நைட் கண் முழிச்சுப் பேசினார். தூக்கத்துக்கு, வலிக்கு மருந்து கொடுத்திருக்கு. அதான் இப்போ தூங்கறார். அவருக்கு தலைல காயம் கொஞ்சம் பெருசுதான். ஆனா, ஸ்கேன்ல எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதுனால ஒரு மாசத்துல நார்மல் ஆகிடுவார்”
“அவருக்கு கால்ல அடிபட்டு இரத்தம் வந்ததே. அது?”
“அவரோட வண்டில, இல்லனா தரையில் இருந்த ஏதோ ஷார்ப்பான பொருள் குத்தியிருக்கணும். அதான் அவ்வளவு பிளட் லாஸ். சரியாகிடும்” அவளின் தோளில் தட்டிச் சொன்னார். புன்னகைத்தாள் ரோஜா.
“அப்போ நான் வர்றேன் சிஸ்டர்.” ரோஜா நகரப் போக, “கேன்டீன் தானே போகப் போற? உனக்கு வேற முக்கியமான வேலை எதுவும் இல்லை தானே? எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் இங்க உட்கார முடியுமா பிளீஸ்?. மார்னிங் ஷிஃப்ட் வர வேண்டிய ஆள் இன்னும் வரல. நான் பாத்ரூம் போய்ட்டு ஃப்ரெஷ்ஷாகி ஓடி வந்துடுறேன்” என்று கண் சுருக்கி அவர் கேட்க, “வெளில ரம்யா கா இருந்தாங்க. அவங்களை அனுப்பி விடுங்களேன். அதுவரைக்கும்” என்றாள் ரோஜா.
“நான் சீனியர். அது, இதுன்னு ரூல்ஸ் பேசும் அந்த ரம்யா சிஸ்டர். ஒரு ரெண்டு நிமிஷம் இங்க இரேன். நான் அதுக்குள்ள வந்துடுவேன். இவர் உயிரையே காப்பாத்தியிருக்க. இப்போ ஒத்த நிமிஷம் பார்த்துக்க மாட்டியா?” என்று கை விரித்து அவர் கேட்க, சிரிப்புடன், “நான் இருக்கேன். போய்ட்டு வாங்க” என்றாள் ரோஜா.
அவனின் படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். நேற்று அந்த விபத்தின் போதும், அதற்கு முன் அவனைப் பார்த்த இரு முறையும் அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டைக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தது தற்போது அவன் அணிந்திருந்த மருத்துவமனை உடை. நீலம் அவன் நிறமல்ல என்று நினைத்தபடி அவனைப் பார்த்திருந்தாள்.
இரவெல்லாம் சித்ரா சரியான உறக்கமின்றி புலம்பி புரண்டு கொண்டேயிருக்க, ரோஜா அவரிடம் பேசி, சமாதானப்படுத்தி, சாந்தப்படுத்தி இருவரும் உறங்க ஆரம்பிக்கையில் விடிந்திருந்தது.
அந்த அறையின் அமைதியும், குளுமையும், இப்பொழுது அவளின் கண்களையும், மனத்தையும் அமைதிப்படுத்த இருக்கையில் சாய்ந்து கண் மூடினாள்.
“ம்க்கும்..ம்ம்..” என்ற ஒலியில் அவள் பட்டென கண் விழிக்க, இளமாறன் கண் திறவாமல் படுக்கையில் வலி தந்த வேதனையுடன் அனத்த, எட்டி அவன் கைப் பிடித்தாள் ரோஜா.
“இட்ஸ் ஓகே. உங்களுக்கு ஒன்னுமில்ல. தூங்குங்க”
இளமாறன் அந்தக் குரலுக்கு கண் திறக்க விரும்பினான். அந்தக் குரல்தான் அவனின் கடைசி நினைவு. அதன் பின் நினைவு தப்பியிருந்தது. இப்போதும் அதே குரல் கேட்க, இமைகளை சிரமப்பட்டு பிரித்தான்.
அச்சமயம் கதவு திறக்க, “மாறா…” என்றபடி அறைக்குள் வந்தார் மருத்துவர் சுகந்தி.
ரோஜா அவரைத் திரும்பிப் பார்த்து எழுந்து கொள்வதற்குள் அவளை நெருங்கியிருந்தார் அவர்.
“என்னடா ஆச்சு? எப்படிடா ஆக்சிடென்ட் பண்ண? வண்டியை பார்த்து, கவனமா ஓட்ட மாட்டியா டா?” கண்ணீருடன் கடிந்துக் கொண்டார்.
இளமாறன் மிக நிதானமாக ரோஜாவைப் பார்த்தான். அவளிடம் இருந்து மிகச் சிரமப்பட்டு விழிகளை பிரித்து அவரைப் பார்த்து, “இப்பதான் வர்றீங்களா டாக்டர்?” என்று கரகரத்த குரலில் கேட்டான்.
“அம்மா திருச்சியில் இருந்தேன் மாறா. அப்பா போன் பண்ணும் போது ஒரு ஆபரேஷனில் இருந்தேன். உடனே கிளம்ப முடியல”
“அதே பழைய கதை” மெல்ல அவன் முணுமுணுக்க, ரோஜாவின் காதில் அது தெளிவாக விழுந்தது. அவளின் தோளில் இருந்த சுகந்தியின் கை இறுகுவதை அவளால் உணர முடிந்தது.
இளமாறன் இறுக்கத்துடன் கண் மூடிக் கொள்ள, மருத்துவர் சுகந்தி ரோஜாவை பார்த்தார். பின் இணைந்திருந்த இருவரின் கைகளில் கூர்மையாய் படிந்தது அவர் பார்வை.