என் ஜீவனில் உறைந்திடு – 2 (2)

ரகுவரனின் கார் அவர்கள் வீட்டைக் கடந்ததும் ரோஜாவின் கண்கள் அம்மா சித்ராவை தேடியது. 

“ம்மா..” அழைத்தபடியே அவரின் அறைக்குள் நுழைந்தாள். அறையின் ஃப்ரெஞ்ச் விண்டோவைத் திறந்து தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். 

“ரோஜா, அங்க பாரு. கார்டன்ல நிறைய ரோஜா பூ மலர்ந்திருக்குல்ல. அந்த பன்னீர் ரோஜாவை எல்லாம் பறிச்சு நிழல்ல உலர்த்தி வை. உங்கக்கா நித்யா வரும் போது பொடி அரைச்சு கொடுத்து விடலாம். குழந்தைக்கு பூசி, குளிக்க வைப்பா” ரோஜா அருகில் சென்று நின்றதும் தன் போக்கில் பேசிக் கொண்டு போனார். 

“அம்மா, உங்ககிட்ட சொல்லிட்டு தானே ரிசப்ஷன் போனேன். அங்க ரகுவும் வந்திருந்தான். அப்பா எங்களை தனியா பேச சொன்னார். பட்டேல் அங்கிள் பையனுக்கு கல்யாணம். ஞாபகம் இருக்கில்ல? அவங்க ரிசப்ஷன்தான் போனோம். அப்போ..”

“ரகுவரன். உங்கப்பாகிட்ட அவனை பிடிக்கல. இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிடு ரோஜா” திரும்பி மகளின் முகம் பார்த்துச் சொன்னார் சித்ரா. 

“ம்மா?”

“ரோஜா, நான் ஏற்கனவே வேணாம்னு சொல்லிட்டேன். அந்த குடும்பமே வேணாம். அவங்க சங்காத்தமே வேணாம் சொல்லிட்டேன். ஆனா, உங்கப்பா என்னைக்கு என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துருக்கார். அவர் நினைச்சதுதான் நடக்கணும். நாம எல்லாம் அவருக்கு கருவேப்பிலை கொத்து போலதான். அவருக்கு தேவைன்னா யூஸ் பண்ணிட்டு, வேலை முடிஞ்சதும் தூக்கி ஓரமா வீசிடுவார்” 

“ஏன்மா, இப்படி பேசுறீங்க. உங்களுக்கு ரகுவை பிடிக்கும் தானே? அது போலதான் அப்பாவுக்கும். அதுனால சரின்னு சொல்லியிருப்பார்.”

“ரகுவை மட்டுமில்ல, அவங்க குடும்பத்தையும் பிடிக்கும். ஆனா, என் மகளை அவங்களுக்கு கொடுக்குற அளவுக்கு.. ப்ச். அது முடியாது. உனக்கு காரணம் சொன்னாலும் புரியாது. புரிஞ்சுக்கவும் மாட்ட.” அலுப்புடன் சொன்னார். 

“இதுக்காக டென்ஷன் ஆகாதீங்க மா. அப்பாகிட்ட சண்டை போடாதீங்க. பிளீஸ்” திரும்பி மகளை முறைத்த தாயின் கண்கள் தளும்பி நின்றது. 

பட்டென மகளிடம் இருந்து விலகி, தோட்டத்துக்குள் இறங்கினார் அவர். 

ரோஜாவுக்கு ஆயாசமாக வந்தது. ஒரு விபத்தை நேரில் கண்ட பதட்டமும், பதைபதைப்பும் இன்னும் அவள் உடலில் மிச்சமிருக்க, சோர்வாக உணர்ந்தாள் அவள். ஆனாலும், தாயை தனியாக விட மனமின்றி அவரின் அருகில் சென்று நெருக்கமாக நின்றாள். 

“அக்காக்கு கால் பண்ணவாம்மா? அவகிட்ட பேசுறீங்களா?” 

“ஏன் அவ வந்து எதையும் இங்க மாத்திட போறாளா? அவ கல்யாணமே உங்கப்பா முடிவு பண்ணிதான் நடந்தது.”

“ம்மா. மாமா நல்லவர் மா” கோபம் துளிர்க்கச் சொன்னாள் ரோஜா. 

“உனக்கும் அப்படியொரு நல்லவனை பார்க்கச் சொல்லு. அம்மா சந்தோஷமா சரினு சொல்றேன்” 

“ரகு நல்லவன்…” மகளை மேலே பேச விடவில்லை சித்ரா. 

“நல்லவனை வச்சு குடும்பம் நடத்த முடியாது பொண்ணே. ஊருக்கே நல்லவனா இருப்பாங்க. ஆனா, கட்டின பொண்டாட்டிக்கு? அவளை மனுஷியா கூட மதிக்க மாட்டாங்க”

“இல்லம்மா. அப்பா…”

“நான் உன் அப்பாவை பத்தி பேசல ரோஜா. என் புருஷனை பத்தி பேசுறேன். ரெண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நித்யாக்கு இப்போ அது புரியுது. உனக்கு புரிஞ்சாலும், இப்போ இதெல்லாம் ஒரு விஷயமான்னு தோணும். ஆனா, எதுவுமே அனுபவிக்கிறவங்களுக்குதான் வலி. வேடிக்கைப் பார்க்கறவங்களுக்கு ஒரு கசப்பான அனுபவம் மட்டும்தான்” மகள் முகத்தில் விழுந்த குழப்ப ரேகைகளைப் பார்த்ததும் அதிகம் பேசி விட்டோம் என்பது புரிய, அவளின் கைப் பிடித்து அறைக்குள் நுழைந்தார் சித்ரா. 

“எனக்கு ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வர்றியா ரோஜா? சமையல்காரம்மா போடறது வேண்டாம். நீயே கலந்து எடுத்துட்டு வா” கெஞ்சலாக அவர் கேட்க, அம்மாவை சோஃபாவில் அமர வைத்து விட்டு சமையல் அறையை நோக்கி நடந்தாள் ரோஜா. 

அடுப்பில் இருந்த பாலை போலவே அவள் மனமும் பொங்கி, அடங்கிக் கொதித்துக் கொண்டிருந்தது. 

அம்மாவுக்கு பிடித்தது போல சக்கரை குறைவாக, டிக்காசன் அதிகமாக சேர்த்து காஃபி கலந்து எடுத்தவள், அவரின் அறையை நோக்கி நடந்தாள். 

“குடிங்க மா” 

மகளின் கைப் பிடித்து காஃபியை வாங்கி, அவளை இழுத்துப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் சித்ரா. ஒவ்வொரு மிடறையும் ரசித்து அவர் பருக, புன்னகையுடன் அம்மாவை பார்த்தாள் ரோஜா. 

ரோஜாவின் குழந்தைப் பருவத்தில் அம்மா என்றால் அழகும், அன்பும் மட்டுமே. எப்போதும் பளிச்சென உடுத்தி, தலை நிறைய பூவுடன், மலர்ந்த சிரிப்புடன் அம்மாவை பார்க்கவே அவளுக்கு அத்தனைப் பிடிக்கும். அம்மாவின் முந்தானை பிடித்து நடப்பதும், அதில் மறைந்து நின்று அப்பாவிடம் கண்ணாமூச்சி ஆடுவதும் அவளுக்கு மிகப் பிடித்தமான தினசரி வாடிக்கை. 

அம்மா, நித்யா அக்கா, ரோஜா என பெண்கள் கூட்டணிக்கு அப்பாவின் மேல் கொள்ளைப் பிரியம். ஆனால், ஒரு நாளின் பெரும் பொழுதை அம்மாவுடன் கழிப்பதால், ரோஜா அம்மாவை பூனைக் குட்டியாய் உரசிக் கொண்டே திரிவாள். அவள் வளர்க்கும் பூனைக் குட்டிகள் கூட அவளை அப்படி உரசியது கிடையாது. 

அவளின் சிறகுகள் விரிந்து அக்காவுடன் பள்ளி செல்லத் தொடங்கிய பின்புதான் பெற்றோரின் சண்டையை முதல் முறையாக பார்த்தாள். அதுவரை நேரடியாக அவர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டது கிடையாது. 

அப்பா வீடு வந்ததும் நிற்க வைத்து கேள்வி கேட்கும் அம்மாவை மிரண்டு போய் பார்த்திருக்கிறாள் ரோஜா. 

“அம்மா ஏன் கத்துறாங்க நித்தி கா?”

“ஷ்ஷ்ஷ். பேசாத ரோஜா” தங்கையை தன்னிடம் இழுத்துக் கொள்வாள் நித்யா. 

“நம்மளாலதான் சண்டை” உதடு பிதுக்கி சொல்வாள் நித்யா. இருவரும் கண்ணீருடன் பாவமாய் அப்பாவை பார்ப்பார்கள். 

அத்தகைய பொழுதுகளில் அம்மாவின் மேல் கோபமும், அவள் நிதானமாய் வீட்டுப் பாடம் சொல்லிக் தந்து, வற்புறுத்தி சோறூட்டி வயிறை நிறைத்து, பாசமாய் முத்தமிட்டு தூங்க வைக்கும் போது அம்மாவின் மேல் அன்பும் வளர்த்துக் கொண்டார்கள் சகோதரிகள். ஆனால், அப்பாவின் மேல் எப்போதும் அன்பு, பிரமிப்புதான். 

வீட்டில் என்ன நடந்தாலும் அதில் மாற்றம் வந்ததில்லை. அதை மாற்ற முனைந்ததும் இல்லை சித்ரா. 

ஒரு கட்டத்துக்கு மேல் பிள்ளைகளின் முன்பு சண்டையை கூட நிறுத்தி இருந்தார்கள். ஆனாலும், எரிமலையின் உள்ளே எந்நேரமும் வெடிக்கத் தயாராக நெருப்பு குழம்பு காத்திருக்கும் என வீட்டில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அம்மாவின் புன்னகையில் மாற்று குறைந்ததை மகள்கள் பயத்துடன் கவனித்திருந்தனர். 

அவர்கள் அதற்கு காரணமாய் ஒருநாளும் அப்பாவை கைக் காட்டியது கிடையாது. 

அவர்களைப் பொறுத்தவரை அப்பா என்றும் பரிசுத்தர்தான். எந்த அளவிற்கு என்றால், ஒரு பள்ளி நாளின் நண்பகல் பொழுதில் படுக்கையில் மயங்கி கிடந்த அம்மாவை பதறி மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்த போது கூட யாரும் அப்பாவை சாதாரண சந்தேகக் கேள்வி கேட்காத அளவிற்கு, அப்படியொரு பலமான நம்பிக்கைக் கோட்டை கட்டியிருந்தார்கள். கட்டுவது எல்லாம் உடைவதற்கு தானோ?

“ரோஜா..” அம்மாவின் அழைப்பில் தலையை உலுக்கி நிகழ் காலத்திற்கு வந்தாள் ரோஜா. 

“என்னம்மா, சொல்லுங்க”

“ரகு ஏதோ ஆக்சிடென்ட் அப்படினு சொன்னான். யாருக்கு, என்னாச்சு?”

“என் கண்ணு முன்னால ஒரு கார், பைக்ல போய்ட்டு இருந்தவரை இடிச்சு தள்ளிட்டு போய்டுச்சு மா. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, அப்படியே விட்டுட்டு போய்ட்டான் மா. அவர், நம்ம சுகந்தி டாக்டர் பையன். அவங்க ஃபர்ஸ்ட் பையன். எங்க காலேஜிக்கு கேம்பஸ் இன்டர்வியூ அப்போ வந்திருந்தார் மா. செஃப் இளமாறன். இப்போதான் ஞாபகம் வருது.” கண்களை விரித்துச் சொன்னவள், அம்மாவின் கண்களில் இருந்த கேள்வி புரிந்து, “நான் பார்க்கும் போது நெத்தில தையல் போட க்ளீன் பண்ணிட்டு இருந்தாங்க. பெருசா ஒன்னுமில்ல சொன்னாங்க மா. சரியாகிடுவார்” திடமான குரலில் சொன்னாள் ரோஜா. 

“ம்ம். நாம செய்ற நல்லது எப்பவும் வீணா போகாது ரோஜா.” அவர் சொல்ல, புன்னகைத்து அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்தாள் ரோஜா.

“ரகுகிட்ட நான் பேசுறேன். நீ அவனுக்கு ஓகே சொல்லலையே?”

“இன்னும் இல்ல மா. ஆனா, ஏன்மா வேணாம் சொல்றீங்க. அப்பா எப்படி ரகு வீட்ல இதைச் சொல்லுவாங்க? தாத்தா, மாமா எல்லாம் கோவிச்சுக்கப் போறாங்க.” தன் மனதை மறைத்து, அம்மாவின் மனதை அறிய முயன்றாள். 

“சில விஷயங்கள் முளையிலேயே கிள்ளிடணும் ரோஜா. வளர்ந்த பிறகு வெட்டுறது ரொம்ப கஷ்டம்.” சித்ரா புதிராக பேச, மடியில் இருந்தபடியே கண்களை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள் ரோஜா. 

“ரகு வீட்டைப் பொறுத்தவரை உன்னை மருமகளாக்க ஆசைப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனா, என் கண்ணுக்கு தெரியறது எல்லாம் அதுக்குப் பின்னாடி இருக்க பிசினஸ் பாய்ண்ட் ஆஃப் வியூ மட்டும்தான்.”

“ச்சே. அந்த தாத்தா, மாமா எல்லாம் அப்படி யோசிக்கிற ஆட்கள் கிடையாது மா”

“உங்கப்பா?”

“அப்பாவும்தான்” பட்டென பதில் சொன்னாள் ரோஜா. சித்ராவின் உதடுகள் விரக்தியாக வளைந்தது. 

“ரகு ஃபேமிலிக்கு சொந்தமான ஹோட்டல்ஸ் ஆறேழு இருக்குமா?”

“ம்ம். கூடவே இருக்கும் மா” 

“அவங்க தாத்தா, அப்பா, சித்தப்பா, ரகு, அமிர்தா வீட்டுக்காரர்னு அங்க குடும்பத்துல அத்தனை பேர் பிசினஸ் கவனிக்க இருக்காங்க. ஆனாலும், புதுசா வீட்டுக்கு வரப் போற மருமக ரோஜா ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிச்சவளா இருக்கறது அவங்களுக்கும், பிசினஸிக்கும் பெனிஃபிட் தானே?” சித்ரா கேட்க, அதில் தவறொன்றும் இல்லையே என்றுதான் யோசித்தாள் ரோஜா. 

“உங்கப்பாக்கு நீங்க ரெண்டு பேரும் பொண்ணுங்களா போய்ட்டீங்க. நித்யா வீட்டுக்காரர் என்ஜினியர். அவருக்கு நம்ம கேன்டீன் மேல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லைனு ரொம்ப தெளிவா சொல்லிட்டார். இனி, உனக்கு வரப் போறவன்தான் உங்கப்பாக்கு அப்புறம் எல்லாத்தையும் கவனிக்கணும். அந்த மாப்பிள்ளை, அவர் தூக்கி, அவர் கண் முன்னால வளர்ந்த ரகுவரனா இருந்தா வேணாம்னு சொல்லுவாரா என்ன? குடும்பத் தொழிலோடு சேர்த்து, நம்ம கேன்டீனையும் உனக்காக ரகு பார்க்க மாட்டானா, என்ன?” அம்மாவின் வார்த்தைகள் மெல்ல அதன் அர்த்தத்தை அவளுள் ஆழமாய் பதிக்க, அவரை ஏறிட்டுப் பார்த்தாள் ரோஜா. 

“நீங்க இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம். இல்லம்மா?”

“உங்கப்பாகிட்ட, வேண்டாம் விடு. அப்போ சரி வரும்னு பட்டது. ஆனா, இப்போ என் பொண்ணு வாழ்க்கையும் என்னைப் போலவே..” சட்டென அவர் அமைதியாக, “திடீர்னு ஏன்மா, இப்படி சொல்றீங்க? நானும், ரகுவும் வெளில போய்ட்டு வந்ததுனாலயா?” சந்தேகம் கேட்டாள் ரோஜா. 

error: Content is protected !!
Scroll to Top