என் ஜீவனில் உறைந்திடு – 1 (2)

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருந்த, கடலைப் பார்த்திருந்த அந்த ரிசார்ட் திருமணக் கோலம் பூண்டிருந்தது.

அன்று அங்கிருந்த திறந்தவெளி அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

பாட்டும், பேச்சும், சிரிப்பும், விருந்துமாக அந்த இடமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க, அந்தச் சத்தம் தன்னைப் பாதிக்காத வகையில் விழா நடக்கும் இடத்தில் இருந்து சற்றே விலகி நின்றிருந்தாள் அவள்.

அவளுக்கு எதிரே கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்து விரிந்திருந்தது செவ்வானம். அதன் முடிவாய் நீண்ட கம்பளம் விரித்திருந்தது நீலக் கடல். அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் குழப்ப கடல் சீற்றமாய்ச் சீறிக் கொண்டிருந்தது. ஆனால், அவளுக்கு எதிரே விரிந்திருந்த கடல் மிகச் சாந்தமாய் மிதமான அலைகளுடன் காட்சியளித்தது.

உப்புக் காற்றில் பிசுபிசுத்த அவளின் கையில் இருந்த அலைபேசி அதிர, அதைக் காதிற்குக் கொடுத்தாள்.

“நித்தி கா, இங்க என் கூட நீயும் இருந்திருக்கலாம். நீ எப்போ சென்னை வர்ற?” அழைப்பை ஏற்றதும் அந்தக் கேள்வியைதான் கேட்டாள்.

“ரோஜா, நான் நெக்ஸ்ட் வீக் வர்றேன்னு ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன் தானே?”

“சொன்னதான். ஆனா, நீ பொறுப்பா இப்பவே கிளம்பி வந்திருக்கணும் கா” தங்கையின் அந்தக் குரலில் சிரித்தாள் நித்யகல்யாணி.

“ரகுவரன்கிட்ட பேசிட்டியா? என்ன சொன்னான்?” ரகசியம் போலக் குரலை தழைத்து அக்கா கேட்க, “இன்னும் இல்ல. ரகு, அங்க மாப்பிள்ளை கூடப் பிஸியா இருந்தார். நான் டிஸ்டர்ப் பண்ணல. இங்கருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவோம். அதுக்குள்ள பேசணும் கா” அதே ரகசிய குரலில் பதில் சொன்னாள் தங்கை.

“ஓகே. நீ என்ன முடிவெடுத்திருக்க? அவனுக்கு ஓகே சொல்லப் போறியா?” நித்யா கேட்க, “இப்போ கல்யாணம் வேணாம்னு தோணுது கா. ஆனா, வீட்டை நினைச்சு நோ சொல்லவும் பயமாருக்கு” என்று பதில் சொன்ன ரோஜாவின் குரலில் குழப்பம் கொட்டிக் கிடந்தது.

“முதல்ல ஏன் நோ சொல்லணும்னு நினைக்கிற ரோஜா?”

“எஸ் சொல்ல தோணல கா, அதான். சின்ன வயசில் ரகு கையைப் பிடிச்சு நடந்திருக்கேன் கா நான். ரெண்டு பேரும் ஒண்ணா தானே வளர்ந்தோம். இத்தனை வருஷம் அவன் மேல வராத ஈர்ப்பு, இப்போ மட்டும் எப்படி வரும்?”

“ஹேய் ரோஜா. அது அப்படியில்ல. இத்தனை வருஷம் சுதாகர் மாமா பையனா மட்டும் பார்த்திருப்போம். ஆனா, இனிமே வீட்ல உனக்குப் பார்த்த பையனா நினைச்சுப் பாரேன்.”

“பார்த்துட்டேன். ம்ஹூம், எதுவுமே நடக்கல.”

“ஓ, சரி விடு. என்ன நடக்கணும்னு எதிர்பார்க்கிற?”

“நித்தி கா, மாமாவை முதல் தடவை பார்த்ததும் நீ எப்படி ஃபீல் பண்ண? அதைச் சொல்லேன்?” ரோஜா சிரிப்புடன் கேட்க,

“இதையே எத்தனை தடவை கேட்ப?” சலித்துக் கொண்டே சிரித்தாள் நித்யா.

“அட ஆள் பார்க்க நல்லா இருக்காரே தோணுச்சு. மத்தபடி நீ எதிர்பார்க்கிற மாதிரி, மணி அடிக்கல, பல்ப் எரியல. படபடன்னு வரல, பட்டாம்பூச்சி பறக்கல.. “ நித்யா அடுக்கிக் கொண்டே போக, “இரு மாமாகிட்ட சொல்றேன்” என்றாள் ரோஜா விளையாட்டாக.

“சொல்லேன். எனக்கு என்ன பயமா? சின்னப் பிள்ளையை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டார். உனக்கென்ன? 24 வயசுல கல்யாணம் பேசும் போதே இவ்ளோ அலப்பறை பண்ற”

“நான் எம்பிஏ படிக்கப் போய்த் தப்பிச்சேன். இல்லன்னா எனக்கும் 21ல கால் கட்டு போட்டுருப்பார் அப்பா” கோபமாகச் சொன்னாள் ரோஜா.

“ரோஜா, அதை விடு. இப்போ என்ன சொல்லப் போற? ரகுகிட்ட என்ன பேசப் போற?”

“கல்யாணம் வேணாம் சொல்லணும். ஆனா, காரணம் என்ன சொல்ல கா? நீ ரகுகிட்ட பேசேன் நித்தி கா, பிளீஸ்.” அவள் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே பின்னிருந்து, “ரகுகிட்ட என்ன பேசணும்?” எனக் கேட்டுக் கொண்டே வந்து அவள் முன் நின்றான் ரகுவரன்.

“அப்புறம் பேசுறேன் கா” என அதிவேகமாக அழைப்பை துண்டித்தாள் ரோஜா.

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு மந்தகாசப் புன்னகையுடன் புருவம் உயர்த்தினான் ரகுவரன்.

“டைமாச்சு. வீட்டுக்கு போகலாமா? கார்ல போகும் போது பேசலாம்.”

ரோஜா சொல்ல, “ம்ம். ஓகே” என்று கார் பார்க்கிங்கை நோக்கி கைக் காட்டினான் அவன்.

அது ரோஜா, ரகுவரன் இருவரின் அப்பாக்களுக்கும் பழக்கமான தொழில் முறை நண்பர் ஒருவரின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

ரோஜாவின் அப்பா சிவஹரி, ரகுவரனின் தாத்தா வைத்தியலிங்கத்திடம் வேலை பார்த்தவர். வைத்தியலிங்கம் 40 வருடங்களுக்கு முன்பு மாம்பலத்தில் சிறியதாக மெஸ் ஒன்று நடத்தினார். அது பின்னர்ச் சிறிய உணவகமாக மாறியது. தற்போது சென்னையில் பல கிளைகள் கொண்ட உணவகமாக வளர்ந்து நிற்கிறது.

அவரிடம் முப்பது வருடங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த இளைஞன் சிவஹரி, தன் கடின உழைப்பால், நேர்மையான, ஒழுக்கமான குணத்தால் விரைவில் வைத்தியலிங்கத்தின் மனத்தில் இடம் பிடித்தார்.

அவருக்குப் பதவியும், ஊதியமும் மட்டும் உயர்த்திக் கொடுக்கவில்லை வைத்தியலிங்கம். வாழ்க்கை தரத்தையும் பல படிகள் உயர்த்திக் கொடுத்தார். அவருக்கு வந்த நல்லதொரு தொழில் வாய்ப்பை சிவஹரியின் பக்கம் திருப்பி, அவருக்கு ஊக்கம் கொடுத்து சொந்த தொழிலில் காலூன்ற செய்தது அவர்தான்.

ஒரு தனியார் மருத்துவமனையில் கேன்டீன் வைக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்பை தனது பிரியமான சிவஹரிக்கு கொடுத்தவர், அத்தோடு நின்று விடாமல் அவர் வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் துணையாக, ஆசானாக உடன் நின்று அவரை வழி நடத்தியிருக்கிறார்.

அவர் மகன் சுதாகரும், சிவஹரியும் நெருங்கிய நண்பர்கள். பொருளாதர ஏற்றத் தாழ்வுகளைக் கடந்த நட்பு அவர்களது.

நித்யகல்யாணி, ரோஜா எனச் சிவஹரிக்கு இரு மகள்கள் என்றால், சுதாகருக்கு அமிர்தவர்ஷினி, ரகுவரன் என இரு பிள்ளைகள். இருவரின் மூத்த மகள்களுக்கும் பொருத்தமான இடத்தில் சிறப்பாகத் திருமணம் நடத்தி முடித்திருந்தார்கள். இப்போது ரகுவரனின் திருமணப் பேச்சு எழுகையில் ரோஜாவின் பெயரை சொன்னது பெரியவர் வைத்தியலிங்கம்தான்.

சிவஹரி இப்போது கிட்டத்தட்ட அவர்களது அந்தஸ்திற்கு நிகராக வளர்ந்து நின்றார். ஆனால், சம்மந்தம் பேச அது மட்டும் காரணமல்ல. பெரியவருக்குச் சிவஹரியை மட்டுமல்ல, அவரின் மகள்களையும் மிகவும் பிடிக்கும். அவர் பார்க்க வளர்ந்த பிள்ளைகள், அவரின் சீடனின் பிள்ளைகள் என்று தனிப் பாசம் அவருக்கு. அது

இன்று அவரின் மகன் வழி பேரனுக்கு ரோஜாவை மணமுடிக்கும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. சிவஹரியின் மேலிருந்த பிரியம் அவர்களின் உறவுக்கு முறையான பெயர் தேடி சம்மந்த கலப்பு வரை வந்திருந்தது.

இந்தத் திருமணப் பேச்சு வார்த்தை பெரியவர்கள் ஆரம்பித்து வைத்தது. அதில் சம்மந்தப்பட்ட இருவரும் இன்னும் சம்மதம் சொல்லாமல் யோசிக்க, இருவரையும் பேச வைக்க வேண்டியே இந்தத் திருமண வரவேற்பிற்கு இரு குடும்பமும் அவர்களை அனுப்பியிருந்தது.

அவர்களின் கார் மெல்ல வழுக்கிக் கொண்டு ஈசிஆர் சாலையில் விரைய, ரோஜா கார் கண்ணாடியில் முகம் பதித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரோஜா” அழுத்தமாய் அழைத்தான் ரகுவரன்.

“தூங்கிட்டியா என்ன?” அவன் கிண்டலாய் கேட்க, வேகமாகக் கண்களை மூடினாள் ரோஜா. சட்டெனச் சத்தமாகச் சிரித்து, காரின் வேகத்தைக் குறைத்தான் அவன்.

“ரோஜா..”

“சொல்லு ரகு.” என்றவள், நாக்கை கடித்து, “சொல்லுங்க ரகு” என்றாள்.

அதற்குச் சிரித்தவன், “இப்படியொரு நாள் வரும்னு நான் நினைச்சதே இல்ல ரோஜா. நீயும், நானும். ம்ம், நான் எதிர்ப்பார்க்கவேயில்ல. அதுக்காக உன்னைப் பிடிக்காதுனு இல்ல. உன்னை ரொம்பப் பிடிக்கும். ரோஜாவா பிடிக்கும். பட், அதையும் தாண்டி யோசிச்சதில்ல. இனிமேல் யோசிக்கணும். இந்தக் கல்யாணம் எனக்கு ஓகேன்னு தோணுது.”

அவள் அமைதியாய் அவன் பேச்சைக் கேட்டிருக்க,

“அதுவும் உன்னை இப்படிப் பக்கத்தில பார்க்கும் போது..” வாக்கியத்தை முடிக்காமல் சன்னமாய் விசிலடித்தான்.

“சரி. நீ சொல்லு ரோஜா. ஏன் இப்படி எதுவும் பேசாம அமைதியா வர்ற? இந்தக் கல்யாணம் வேணாம்னு தோனுதா?” மறுப்பைத் தெரிவிக்கத் தலையை எல்லாப் பக்கமும் அசைத்தாள் ரோஜா.

“இப்படித் தலையை ஆட்டினா? என்ன நினைக்க?” என்று அலுத்தவன்,

“உனக்கு ஓகே தானே?” என்று நேரடியாகக் கேட்க, “ஆம்” என்று தலையசைத்தாள். அவள் மனம் இந்தத் திருமணத்தை மறுக்கச் சொல்லி முரண்டி கொண்டிருந்தது.

“என்ன நீ இதுக்கும் பதில் சொல்லாம தலையாட்டிட்டு இருக்க? வாயை திறந்து பதில் சொல்லு ரோஜா” அவன் கண்டிப்புடன் அவளைப் பார்த்து கேட்க, “ரகு ஆக்சிடென்ட்” என்ற அவளின் அலறலில் அவன் பிரேக்கை அவசரமாக மிதித்தான்.

அவர்களின் கண் எதிரே அதிவேகத்தில் விரைந்து கொண்டிருந்த கார் அதற்கு முன்னே மிதவேகத்தில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை இடித்துத் தள்ளியிருந்தது. இரு சக்கர வாகனத்தோடு சாலையோரம் விழுந்தவன் வண்டியை விலக்கி எழ முயற்சித்து, முடியாமல் சாலையில் சரிய, காரை நிறுத்தி அவனை நோக்கி ஓடினார்கள் ரோஜாவும், ரகுவரனும்.

“ரோஜா, ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணு” கத்தினான் ரகுவரன். அவன் வேகவேகமாக அடிபட்டிருந்த இளைஞனுக்கு உதவ, வலியில் கண்களைத் திறக்க முடியாமல், வேதனையுடன் முனகினான் அவன்.

“நம்ம ஹாஸ்பிடல் பக்கத்தில தானே இருக்கு? நம்ம கார்ல கூட்டிட்டுப் போய்டலாம் ரகு”

“இல்ல. அது ரிஸ்க் ரோஜா” மறுத்த ரகுவரனுக்கு மெல்ல மயங்கிக் கொண்டிருந்தவனை வைத்துக் கொண்டு இங்கே ஆம்புலன்ஸ்காகக் காத்திருப்பதும் ரிஸ்க் என்று புரிய, ஒரு நொடி தயங்கினான்.

“சார்.. சார்.” மெல்ல குனிந்து அடிப்பட்டவனின் கன்னத்தில் தட்டி, அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ரோஜா. அப்படியொன்றும் பெரிதான அடி போலத் தெரியவில்லை. நெற்றியில், பின் மண்டையில், காலில் என மூன்று இடங்களில் லேசான இரத்தக் கசிவு தெரிந்தது.

“கொஞ்சம் தண்ணி குடிங்க.” அவன் தலையை உயர்த்திப் பிடித்து அவள் சொல்ல, கண்களை மிகச் சிரமப்பட்டுத் திறந்து அவளைப் பார்த்தான் அவன்.

“ஆம்புலன்ஸ் வந்துட்டே இருக்கு, இப்போ ஹாஸ்பிடல் போய்டலாம். உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ஓகே?” மென்மையாய் அவள் சொல்ல, அதற்குக் கண்களை மூடித் திறந்தவனின் கண்கள் மறுநொடி அப்படியே மயங்கியது.

“ரோஜா ஆம்புலன்ஸ் வர டைமாகும் போல.” அலைபேசியில் பேசிக் கொண்டே பதட்டமாக அவளைப் பார்த்தான் ரகுவரன்.

அந்த இளைஞனின் வெள்ளை சட்டை மெல்ல சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியது, மயங்கியிருந்தான் அவன்.

அவர்களைக் கடந்த வாகனங்கள் பலவும், சற்றே வேகம் குறைத்து வேடிக்கைப் பார்த்து விட்டு கடக்க, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மட்டும் அவர்களுக்கு உதவ முன் வந்தனர்.

“பெருசா அடியில்ல. ஆனா, பிளட் லாஸ் ரொம்ப இருக்கு. சீக்கிரம் ஹாஸ்பிடல் போறதுதான் நல்லது. பக்கத்தில ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல் இருக்கு. அஞ்சு நிமிஷம்தான் ஆகும். ஆம்புலன்ஸிக்கு வெயிட் பண்ற நேரத்தில அங்க ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க” அதுவரை இரு மனதாக நின்ற ரகுவரன், சட்டென முடிவெடுத்து அவர்கள் உதவியுடன் செயலில் இறங்கினான்.

எட்டே நிமிடங்களில் கார் அந்தத் தனியார் மருத்துவமனையை அடைந்தது. அந்த மருத்துவமனையில்தான் உணவகம் வைத்திருக்கிறார் சிவஹரி.

“ஏதாவது போலீஸ், கேஸ், அது, இதுன்னு பிரச்சனை ஆச்சுன்னா மாமா பார்த்துப்பாங்க. நீ பயப்படாத ரோஜா. நாம நல்லதுதான் பண்றோம்” ரகுவரன் அவளிடம் கனிவாகச் சொல்ல, கலவரத்துடன் தலையசைத்தாள் ரோஜா.

காரில் அங்கு வரும் போதே மருத்துவமனைக்குத் தகவல் சொல்லியிருக்க, மருத்துவமனை ஊழியர்கள் தயாராக நின்றிருந்தார்கள். ஐந்தாம் நிமிடம் அவனுக்குச் சிகிச்சை தொடங்கியிருந்தது.

இரவு மெல்ல கவிழத் தொடங்கியிருந்தது. “அப்பா, மாமா எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணனும். மாமா இங்க இருந்தா, அவரைப் பார்த்திட்டு அப்புறமா வீட்டுக்குப் போகலாம். ஓகே?” அவளோடு பேசிக் கொண்டே நடந்தான் ரகு.

“இவரை நான் எங்கயோ பார்த்திருக்கேன். எனக்கு இவரைத் தெரியும்” உள்ளே சிகிச்சையில் இருந்தவனைக் குறிப்பிட்டு யோசனையுடன் சொன்னாள் ரோஜா.

“யாரை?” ரகுவரன் புருவங்களைக் கேள்வியாக உயர்த்திப் பின், “ஓ, அந்த அந்த ஆக்ஸிடென்ட்…” என்ன சொல்வதென்று தெரியா தடுமாற்றத்துடன் நிறுத்தியவன், “என்கிட்ட அவரோட மொபைல் அண்ட் வாலெட் இருக்கு. மொபைல் டிஸ்ப்ளே போச்சு. வாலெட்டில் ஏதாவது டீட்டெய்ல் இருக்கானு பார்ப்போம்” என்று அதைத் திறந்தவனின் கண்களில் ஓட்டுநர் உரிமம் சிக்கியது.

“ரோஜா, ரோஜா தானே உங்க பேர்? இப்போ அட்மிட்டான ஆக்ஸிடென்ட் கேஸ் டீட்டெய்ல்ஸ் வேணும். உங்களுக்குத் தெரிஞ்சுதைச் சொல்லுங்க” ரோஜாவின் அருகில் வந்து செவிலி ஒருவர் விசாரிக்க, “இளமாறன்” என்று சத்தமாக வாசித்தான் ரகுவரன்.

சில நிமிடங்களுக்கு முன் தன் மடியில் இருந்த இரத்தம் தோய்ந்த முகத்தையும், “இளமாறன்” என்ற பெயரையும் தொடர்புபடுத்த முயன்றாள் ரோஜா.

error: Content is protected !!
Scroll to Top