“விழி… விழி”
“ஹ்ம்ம் கார்த்தி, தூக்கம் வருது” என்று புரண்டு படுத்தவள். அப்போதுதான் படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள். மாடியில் தானே இருந்தோம் எப்போது, அறைக்கு வந்தோம். எப்படி வந்தோம்? என்று கேள்வியுடன் கண்ணைக் கசக்கிக் கொண்டு கணவனைப் பார்த்தாள்.
“எழுந்து முகம் கழுவிட்டு வா, சாப்பிடுவ. அப்புறம் மிட்நைட்டில் பசிக்கும்” என்றான் அவள் தலைக் கோதி, அவன் கரம் பற்றி மெதுவாக எழுந்து சென்று முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்தாள்.
“மதிய சாப்பாடு இருந்தது, நான் அம்மா, அப்பா கூடச் சாப்பிட்டுட்டேன். நீ சாப்பிடு” என்றவன், கையில் எடுத்து வந்திருந்த இடியாப்பத்தைக் கோழி குழம்பு தொட்டு ஊட்டி விடத் தொடங்கினான்.
அவள் உணவை முடித்ததும் பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டனர் இருவரும்.
அவர்களுக்கு இடையில் கனமான மௌனம். அவரவர் சிந்தனையில் மூழ்கி இருந்தனர். இருவருமே அடுத்தவரை கலைக்க விரும்பவில்லை.
ஓராயிரம் நட்சத்திரங்களையும், ஒற்றை நிலவையும் மாற்றி மாற்றிப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மலர்விழி.
காதலைப் பற்றி முன்னொரு முறை கணவனிடம் பேசியது திடீரென்று மனக் கண்ணில் வந்து நின்றது.
“கார்த்திக், ஐ திங்க்… ஐ திங்க் ஐ அம் பிரக்னென்ட்” மல்லாந்து படுத்திருந்தவன், அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தான்.
“ஹேய் விழி. என்ன சொல்ற?” படபடத்தான்.
“ம்ம்ம், சந்தேகமா இருந்தது. ஹோம் டெஸ்ட் பண்ணேன்” முதுகுக்குப் பின்னால் இருந்த கையை மெல்ல அவன் முன் நீட்டினாள். இரண்டு கோடுகளைக் கண்டதும், ஒரே குதியில் கட்டிலில் இருந்து கீழிறங்கி, அப்படியே அவளைத் தூக்கி சுற்றினான்.
“கார்த்திக் கீழ விடுங்க. இறக்கி விடுங்க” மூச்சு வாங்க, சிரித்துக் கொண்டே கத்தினாள்.
“தேங்க்ஸ் பொண்டாட்டி. ஐ லவ் யூ” அவளை இறுக்கி அணைத்து, நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டுச் சொன்னான்.
“ம்ம்ம்” என்றாள்.
“லவ் யூ சொன்னா, பதிலுக்கு ம்ம்ம் சொல்றா? அதுக்கு அதுவா பதில்?” புருவம் சுருக்கினான்.
“எனக்கு அதுதான் சொல்லத் தோணுச்சு” உதடு பிதுக்கினாள்.
“யூ டோண்ட் லவ் மீ விழி? உனக்கு என்ன..”
“உங்களை ரொம்பப் பிடிக்கும்..” அவனது கேள்விக்கான பதிலை பட்டென்று சொன்னாள்.
“உங்களை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் கார்த்திக். ஆனா, லவ்? தெரியல?” என்றாள் குழப்பத்துடன்.
அவனும் குழப்பமாக அவள் முகம் பார்க்க, “லவ் இஸ் ஓவர்ரேட்டட்” (Love is overrated) என்று அசட்டையாகத் தோள் குலுக்கி சொன்னாள் அவள்.
சட்டென்று உரக்க சிரித்து விட்டான் அவன்.
“ஓவர் ரேட்டட்? இருந்துட்டு போகட்டும். பட், ஐ லவ் யூ பொண்டாட்டி. லவ் யூ சோ சோ சோ மச்” என்றவன், மீண்டும் அவளை அருகில் இழுத்து இறுக்கி அணைத்து அழுத்தமாய் முத்தமிட்டான்.
நினைவுகள் தந்த தித்திப்பில் இதழ் தானாகப் பிரிய, புன்னகைத்துக் கொண்டே கணவனைத் திரும்பி பார்த்தாள். அவனும் அப்போது அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
பரபரவென்று வீசிய காற்று, மழைக்கான அறிகுறியை தந்து விட்டுச் சென்றது.
அவளின் தோள் பற்றித் திருப்பி, “விழி, மழை வரும் போல இருக்கு. வா, வீட்டுக்குள்ள போகலாம்” என்றான்.
அவனைப் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள். படுக்கை விரிப்பை சரி செய்து, தலையணையை நேராக்கி வைத்து, படுக்கும்படி கண் காட்டினான்.
மெதுவாகப் படுக்கையில் அமர்ந்து கால்களை நீட்டினாள். அவளுக்கு இடை வரை போர்வையை இழுத்து விட்டவன், சுற்றி வந்து மறுபக்க படுக்கையை ஆக்கிரமித்தான்.
“குட் நைட் விழி” அழுத்தமாய் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். அவன் புறமாக நன்றாகத் திரும்பி படுத்து, இரு கரங்களிலும் அவன் முகத்தைப் பற்றி அருகில் இழுத்து, அவன் கண்களை நேராகப் பார்த்து, “ஐ லவ் யூ கார்த்தி” என்றாள்.
அவன் மென்னகையும், அதிர்ச்சியுமாய் அவள் விழிகளை நோக்க, குனிந்து அவன் இதழ்களில் மென்மையாய் முத்தமிட்டு, “லவ் யூ சோ மச் கார்த்திக்” என்றாள் மீண்டும் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து.
சில வினாடிகள் அவளை இமைக்காமல் பார்த்தான். பின், ஒரு கரத்தில் அவளது இடையை வளைத்து, மறுகரத்தில் அவள் முகம் பற்றி அவளிதழ்களில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
அவளது இதழ்களுக்கு இடையில் சிரித்தபடி, “லவ் யூ டூ விழி… லவ் யூ பொண்டாட்டி” தனது ஒட்டு மொத்த அன்பையும், காதலையும் குரலில் தேக்கி முணுமுணுத்தான் கார்த்திக்.
“இது காதல் ஆரம்பம்… புதுக் காதல் ஆரம்பம்” கிசுகிசுப்பான குரலில் அவள் காதில் பாடினான்.
மலர்விழி கிளுக்கி சிரிக்க, அச்சிரிப்பு கார்த்திக்கையும் தொற்றியது.
மனம் மகிழ்ந்து, மலர்ந்து சிரிக்கத் தொடங்கி இருந்தனர் இருவரும்.
வாழ்தல் இனிது…!
நானிருக்கையில்…
சாதல் இனிது…!
நானில்லாது போகையில்…
உன் வாழ்வின் ஒவ்வொரு
படிநிலையிலும் பரிணாமத்திலும்
புதைந்தழிந்து புத்துயிர் பெற்றிருப்பேன்!
உன்னையே உனக்குக் காட்டுவேன்
உயிருக்குள் கண்ணாமூச்சி ஆடுவேன்!
நிஜத்திற்கும் நிழலிற்குமான மாய
உலகினுள் நிறுத்தி சதிராடுவேன்!
நினைத்த மாத்திரத்தில் வருவேன்
நீ நினைத்தால் போய் விடுவேனோ?
நான்…
கை தொடும் வானம்
நான்…
கண் காணா கடல்
நான்…
வானவில்லின் எட்டாவது வண்ணம்
நான்…
மீட்டாத ஸ்வரங்களின் இசை
இன்னமுமா நான் யாரென்று
அறியவில்லை நீ…!
தெரியும் பொழுதுகளில்…
பித்தனாய் பிடிமானத்திற்கு
எனையே தேடியலைவாய்…!
உன் தேடல்களின் முடிவில்
எஞ்சி இருப்பது நான் மட்டுமே…
நினைவில் கொள்…
எப்பொழுதும் எந்நிலையிலும் உன்
வாழ்வில் – நான் மட்டுமே!
இப்படிக்கு…
காதல்
கவிதை – நன்றி : எழுத்தாளர் துமி
சுபம்