இப்படிக்கு காதல் – 8

மொட்டை மாடியின் விளிம்பில் நின்று மாலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். காற்று அவன் தலைமுடியை கலைத்து விளையாடிக் கொண்டிருக்க, அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், கைகள் இரண்டையும் பாக்கெட்டுக்குள் விட்டு எதையோ தீவிரமாக யோசித்தபடி நின்றிருந்தான்.

சத்தம் எழுப்பாமல் பூனை நடை நடந்து அவன் அருகில் சென்று நெருங்கி நின்றாள்.

“ஹாய் டாக்டர்” என்றாள்.

“ஹாய் டாக்டரம்மா” என்றான் வசீகரப் புன்னகையுடன்.

“ஐ மிஸ்டு யூ” என்று நெருங்கி அவன் மார்பில் சாய்ந்து, இரு புறமும் கைக் கோர்த்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“ஹேய், சாரி விழி. வேலையில் கொஞ்சம் பிஸியாகிட்டேன் மா. பெங்களூர் போனதும், நான் உனக்கே உனக்கு மட்டும்தான்” என்றான் அவள் வயிற்றில் கை வைத்து, வருடிக் கொடுத்தபடி.

“ஹ்ம்ம், வேலை முடிஞ்சதா?”

“முடிஞ்சது மா.” என்றான்.

“ம்ம்ம்”

“என்ன ஆச்சு விழி? ஏன் ஒரு மாதிரி இருக்க? அம்மா வீட்ல இருந்து இங்க வர்ற? இங்க இருந்து அங்க ஓடுற? வாட்ஸ் ராங்?” ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தி, அவள் விழிகளில் தன் விழிகளைப் பதித்துக் கேள்வியாகப் புருவம் உயர்த்தினான்.

“சாரா… சாரா டாக்டர்னு நீங்க சொல்லவே இல்ல கார்த்தி” பெரும் தயக்கத்துடன்தான் கேட்டாள். ஆனால், அவன் முகம் நிர்மலமாக இருந்தது.

“நீ தான் சரா படத்துக்குப் பூ போட்டியா?”

வார்த்தைகள் அவளைக் கை விட, மௌனமாய்த் தலையசைத்தாள்.

அவளுக்குத்தான் காலையில் இருந்து எத்தனை அதிர்ச்சிகள். முதல் அதிர்ச்சி சாரா உயிரோடு இல்லை என்பது, தன் கணவனுக்கு உருகி உருகி அன்பை வெளிப்படுத்திக் கடிதம் எழுதிய சாரா இப்போது உயிரோடு இல்லை என்பதை இந்த நிமிடம் கூட அவளால் நம்பவே முடியவில்லை.

அந்த அறையின் ஒருபக்க சுவரை நிறைத்த எத்தனை விதமான புகைப்படங்கள். அத்தனையிலும் முகம் மலர சிரித்து மட்டுமே கொண்டிருந்த சாரா. ஒரு காலத்தில் கணவனுக்கு எல்லாமுமாக இருந்த சாரா… இன்றைக்கு இல்லை. கார்த்திக் ஏன் இன்னும் அந்தக் கடிதத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறான் என்று அந்நொடியே அவளுக்குப் புரிந்து விட்டது.

கிருபா அண்ணாவை மறக்கவில்லை என்றாலும் கூட, ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று நினைத்துப் போன இடத்தில், கயல் விழியை என்ன கோலத்தில் கண்டாள். அடுத்த அதிர்ச்சி அது. மனம் கண்ணாடி பாத்திரம் போல எப்படிச் சுக்கு நூறாக உடைந்து சிதறியது.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கயல் அண்ணி. துறுதுறுவெனச் சுற்றும் கயல் அண்ணி. அனைவரிடமும் அன்பாக இருக்கும் கயல் அண்ணி. அதிர்ந்து கூடப் பேசாத கயல் அண்ணிக்கு என்ன மாதிரியான வாழ்வு கிடைத்திருக்கிறது. இந்தக் காலமும், விதியும் இத்தனை இரக்கமற்றதாக இருந்திருக்க வேண்டாம்.

ஏற்கனவே சந்தித்த அதிர்ச்சிகள் போதாதென்று கிருபா அண்ணா தன் பங்கிற்கு வைத்திருந்தானே பெரிதாக இன்னொன்றை.

அழகான பட்டாம் பூச்சி போலிருக்கும் மகளுக்கு நேத்ரா என்று பெயரிட்டு நித்தமும் அழைப்பவன், தன் வெறுப்பை ரவா லட்டின் மேல் காட்டுவது விசித்திரம்தான்.

“சந்தன முல்லை பூ போட்டு இருந்தது. அதான் கேட்டேன்” என்று கார்த்திக் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, கயலுக்காக அந்தப் பூவை ஆசை ஆசையாய்க் கொண்டு போனது நினைவில் வந்தது.

எவ்வளவு ஆசை ஆசையாக அதை எடுத்துக் கொண்டு போனாள், கயலுக்குக் கொடுக்க முடியாததைத் தன் தலையிலும் சூட அவளுக்கு மனம் வரவில்லை. அதனால்தான் சாராவின் படத்திற்குப் போட்டாள் அதை.

அன்புக்குரியவர்களுக்குக் கொடுப்பது என்று முடிவான பின், அது யாராக இருந்தால் என்ன? அவளது பிரியத்திற்கு உரியவராகதான் இருக்க வேண்டுமா என்ன? கார்த்திக்கு ஸ்பெஷல் என்றால், அவளுக்கும் தானே, என்றுதான் அந்தப் பூவை சாராவின் படத்திற்கு இட்டாள் அவள்.

“சாரா, சாராக்கு என்னாச்சு? எப்படிக் கார்த்திக்? பிளீஸ் சொல்லுங்க. யூ வில் ஃபீல் பெட்டர்” என்றாள், தனது அணைப்பை விலக்காமல்.

“ஆக்குபேஷனல் ஹசார்ட் (Occupational hazard)” என்று மெலிதான நடுங்கும் குரலில் முணுமுணுத்தான்.

“புரியலை கார்த்திக்”

“நோயாளிகளின் நோயை குணப்படுத்துற டாக்டர்ஸ், சில நேரம் அவங்ககிட்ட இருந்து தேவையில்லாத, எதிர்பார்க்காத நோயையும் வாங்கி, நோயாளி ஆகிடுறாங்க”

“என்ன சொல்றீங்க கார்த்திக்?” என்றாள் அதிர்ச்சியுடன்,

“ம்ம்ம். நாங்க எம்பிபிஎஸ் முடிச்சுட்டு இன்டர்ன்ஷிப் பண்ணிட்டு இருந்த நேரம்… ஒரு பேஷண்ட் பார்க்கும் போது… அவங்ககிட்ட இருந்து…”

“இட்ஸ் ஓகே கார்த்திக். சொல்ல வேண்டாம்” என்றாள், அவன் முதுகை மெல்ல நீவி.

அவள் பேசாதது போலப் பாவித்து, மேலே சொல்ல ஆரம்பித்தான் அவன்.

“அவங்க கிட்ட இருந்து அந்த டிஸீஸ்.. ஆனா, பெருசா ஒன்னும் பாதிப்பு இல்ல. எல்லாம் நல்லாதான் போச்சு”

கண்களைக் கசக்கி விட்டுத் தொடர்ந்தான்.

சாராவை தாக்கிய நோய் என்னவென்று கார்த்திக் சொல்ல விரும்பாத போது, அவளுக்கும் தோண்டி, துருவி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. சொல்ல முடிந்தால்தான் அவனே சொல்லி இருப்பானே என்ற எண்ணத்தில் கேள்விகள் கேட்கவில்லை அவள்.

“ஒரு சின்ன ரோட் ஆக்சிடென்ட். ரொம்பத் தேவைப்பட்ட நேரம் யாரும் சராவை தொட்டு தூக்க கூட இல்ல. பெரிய நியாயவாதி போல, “நான் டாக்டர். எனக்கு இந்த நோய் இருக்குன்னு” சொல்லி… யாரும் ஹெல்ப் பண்ணாம. நான்.. நாங்க ப்ரெண்ட்ஸ் போகுற வரை இரத்த வெள்ளத்தில் கிடந்து… சுத்தி இருந்த ஜனங்க எல்லாம் வேடிக்கை மட்டும்தான் பார்த்தாங்க. நாங்க உடனே தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் ஓடினோம். ஆனா, போற வழியிலேயே.. எங்களை விட்டுட்டு…” தொண்டை அடைக்க மேலே தொடர முடியாமல் நிறுத்தினான்.

ஆனால், அவளால் அவனைப் போலத் திடமாக இருக்க முடியவில்லை.

அதுவரை மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தைக் கண்ணீராக வழிய விட்டாள். சத்தமாகத் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“ஷ்ஷ், விழி. இட்ஸ் ஓகே. இதுதான் நடக்கணும்னு இருந்தா, நடந்து தானே ஆகும். அழாத மா” என்று அவளைத் தேற்றத் தொடங்கினான்.

“ஐ அம் சாரி” என்றாள்.

“விழி பிளீஸ். சராவை பத்தின நல்ல நினைவுகளை மட்டும்தான் மனதில் சேர்த்து வச்சுருக்கேன். என் மனசில் அது மட்டும்தான் எப்பவும் இருக்கும்” என்றான் அழுத்தமாக.

அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தான். அவள் குடித்து முடித்ததும் வாங்கி ஓரமாக வைத்து விட்டு, அவளை மெல்ல நடத்திக் கொண்டு போய், அந்த மாடியின் மற்றொரு மூலையில் மல்லிகைப் பந்தலின் கீழிருந்த இருக்கையில் அமர வைத்தான். தானும் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான்.

“சாரா பத்தி சொல்லுங்க” என்றாள்.

“சரா.. சாரா இல்ல” என்றான் சத்தமாகச் சிரித்து, சட்டென்று மாறிய அவனது மனநிலையை நினைத்து நிம்மதி அடைந்தவளாக அவன் முகம் பார்த்தாள்.

“சரி சரா” என்றாள் அவளும்.

“அப்போ நாங்க எம்பிபிஎஸ் ரெண்டாவது வருஷம். எனக்குச் சரா தான் க்ளோஸ் ப்ரெண்ட். நாங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னாதான் சுத்துவோம். அந்த நேரம் மத்த பசங்க எல்லாம்.. எல்லோரும்னா எல்லோரும் இல்ல. ஆனா, ஒரு சிலர் ஜோடி ஜோடியாக இருப்பாங்க. இல்லனா அட்லீஸ்ட் என் ஆளு, உன் ஆளுன்னு யாரையாவது லவ்வாவது பண்ணிட்டு இருந்தாங்க. நானும், சராவும் மட்டும்தான் ஒத்த கொரங்கா சுத்தினோம்”

கேட்டுக் கொண்டிருந்தவள் மெல்ல புன்னகைத்தாள்.

“அதையெல்லாம் பார்த்து கடுப்பான சரா ஒரு நாள், நமக்கும் லவ் லெட்டர் வரும் பாருன்னு சொல்லி.. எனக்கு அவனே எழுதி கொடுத்ததுதான் அந்த லெட்டர். சரண் தான் சாராவா ஆனது. நாங்க அவனைச் சரானு கூப்பிடுவோம். அதையே கொஞ்சம் நீட்டி சாரான்னு ஆக்கிட்டான்.” என்றான் சிரித்துக் கொண்டே.

இப்போது கடிதத்தில் இருந்த வரிகளின் அர்த்தம் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“நல்லா யோசிச்சு பாரு. என் பைக்கில் உன்னை உட்கார வச்சுன்னு உளறி, சாரி கிறுக்கி வச்சிருப்பான். பொண்ணு எழுதி இருந்தா, உன் பைக்கில் நான் உட்கார்ந்து வரணும்னு ஆசைப்படுறேன்னு தானே சொல்லி இருப்பா?” என்று அவன் புருவம் உயர்த்த, சிரித்தாள் அவள்.

“அவன் லெட்டரை கொடுத்ததும், எனக்குச் சிரிப்பு தாங்க முடியல. சட்டுனு எனக்குப் பக்கத்தில இருந்தவன் பிடுங்கி சத்தமா வாசிக்க, மொத்த கிளாஸிம் சிரிச்சு.. அவனை, எங்களை ஓட்டி தள்ளிட்டாங்க. எம்பிபிஎஸ் முடிக்கற வரைக்கும் எங்களை விடல. அவ்ளோ கேலி, கிண்டல். ஆனா, சரா.. அவன் என் மேல ரொம்பவே பாசமா இருப்பான்.” கடந்த காலம் மனதில் காட்சிகளாக ஓட, வெட்ட வெளியை வெறித்தபடி சிரித்துக் கொண்டே சொன்னான் கார்த்திக்.

கடிதத்தின் இறுதியில் காதலுடன்.. என்று தொடங்கி விட்டு… இல்ல அன்புடன்.. என்று மாற்றி எழுதி இருந்தது அவளுக்கு நினைவில் வந்தது.

“என்னோட உயிர் நண்பன் அவன். சரண். சரா. நாங்க அவ்வளவு க்ளோஸ். நல்லா படிச்சு டாக்டர் ஆகனும்னு கனவோட வந்த ஒருத்தன், அந்த டாக்டர் ஆக ஆசைப்பட்டதாலேயே இறந்தும் போனான். காலக் கொடுமை” கசிந்த கண்களைத் துடைத்துக் கொண்டான் கார்த்திக்.

அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல், மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டு அமைதியாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள் மலர்விழி. அவனுக்கு அதுவே ஆறுதலாக இருந்ததை அவள் அறியவில்லை.

“ஐ மிஸ் ஹிம் விழி. மிஸ் ஹிம் வெரி வெரி மச்.” என்றான் குரல் உடைய, அவளுக்குப் புரிந்தது.

இன்றைக்கும் அவள் கயலை எவ்வளவு மிஸ் செய்கிறாள். அவளுக்குப் புரியாதா அவனது உணர்வுகள். மெல்ல அவனது மடியில் தலை வைத்து படுத்தாள்.

“ஏன் இந்தக் காதல், அன்பு எல்லாம் இவ்வளவு காம்ப்ளிகேட்டடா (complicated) இருக்கு கார்த்திக்?”

“ஏன்னா, இட்ஸ் லவ். அது என்னவேனா செய்யும்.” (Because, it’s love. It can do anything).

மாலை காற்றும், மலர்ந்து மணம் பரப்பிய மல்லிகையும் அவள் மனதை குளிர செய்ய, கணவனின் மடியில் தலை சாய்த்திருந்தவள் அப்படியே விழி மூடி ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்திருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top