இப்படிக்கு காதல் – 6

“எத்தனையோ வருஷம் கழிச்சு, நீ இப்பதான் ஊருக்கு வந்திருக்க . நீ வர்றது தெரிஞ்சதோ, என்னவோ.. அதிசயமா கயலும் வந்திருக்காளாம். இதுவரை அம்மா வீட்ல ரெண்டு நாளைக்கு மேல அவ தங்கினது இல்ல. ஒரு எட்டுப் போய்ப் பார்த்திட்டு வருவோம். இப்ப கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு” என்றார் அம்மா.

“நான் இப்பவே போய்ப் பார்த்திட்டு வரேன் மா” என்றாள் அவள் பிடிவாதமாக,

“முன்ன உங்கப்பா, இப்ப மாப்பிள்ளை.. எல்லாம் உன்ன செல்லம் கொடுத்தே கெடுத்து வைக்கறாங்க” அலுத்துக் கொண்டே அனுமதி வழங்கினார்.

“சீக்கிரம் வந்திடு மலரு” கத்தினார். புன்னகையில் இதழ்கள் மலர, பக்கத்து தெருவை நோக்கி நடந்தாள் மலர்.

கயல்விழி அண்ணி, கிருபா அண்ணாவை அன்பெனும் பெயரில் அநியாயமாக ஏமாற்றி விட்டார் என்ற கோபத்தைப் பல வருடங்களாகச் சுமந்து கொண்டிருந்தவள், கயலுக்கும் ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளப் பல வருடங்கள் ஆனது.

இன்று அண்ணாவை மனைவி, குழந்தைகள் எனக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பார்க்கையில் கயல் அண்ணியின் மேலிருந்த துளிக் கோபமும் காணாமல் போக, அவள் வீடு நோக்கி நடந்தாள் மலர்விழி.

“கயலு… கயலு..” அவளைத் தெருவில் பார்த்ததும், வீட்டினுள் பார்த்து கத்தினார் அத்தை.

அந்த அழைப்பில் அவசர அவசரமாக வாசலுக்கு வந்த கயல் அண்ணி, ஒரு நொடி திகைத்து அப்படியே நின்று விட்டாள்.

கண்களைச் சிமிட்டி அவளைக் கூர்ந்து பார்த்தவள், “விழி, மலர் விழி தானே?” கண்கள் கலங்க கேட்டாள்.

“நான்தான் அண்ணி” என்றாள் மெல்ல,

“உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. எப்படி வளர்ந்திட்ட. ஆளே அடையாளம் தெரியல எனக்கு. வீட்டுக்குள்ள வா டா” மூச்சு வாங்க பேசினாள். அவளின் கைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.

“உட்காரு டா, இதோ வரேன்” என்று விட்டு அடுப்படிக்குள் மறைந்து போனாள்.

சோஃபாவில் அமர்ந்து வீட்டை பார்வையில் சுற்றினாள் மலர். அவளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீடு முழுவதும் கிருபா அண்ணாவின் தடங்கள்.

ஷோ கேஸ் முழுவதும், ஜோடி புறாக்கள், கண்ணாடி இதயம், தாஜ்மகால் என வரிசையாகக் கிருபா அண்ணா கொடுத்த பரிசுகள்.

சுவரில் அண்ணனுக்குப் பிடித்த புத்தரின் ஓவியம். அலமாரியில் அண்ணன் விரும்பி வாசிக்கும், அண்ணிக்கு கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத பாலகுமாரன் நிறைந்திருந்தார்.

பூஜை அறையின் மூலையில் மயில் பீலி. கற்றைக் கற்றையாய்… ஒரு மயிலே எதிரில் நிற்பது போன்ற தோற்றத்தில் அதன் தோகை சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. எத்தனை முறை கயல் அண்ணிக்கு அவளிடம் கொடுத்து, கொடுக்கச் சொல்லி இருப்பான் கிருபா அண்ணா.

ஆனால், இன்று அவளே இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாளே.

“கயலு, இங்க.. ஊருக்கு எப்பவாவதுதான் வருவா” என்ற அம்மாவின் குரல், அவசியம் இல்லாமல் இப்போது காதில் எதிரொலித்தது.

எப்பொழுதாவது வந்து தங்கப் போகும் வீட்டில் கூட, ஏன் கிருபா அண்ணாவின் நினைவுகளால் நிரப்புகிறாள் இவள்? கேள்விகள் முளைத்து, சஞ்சலத்தைக் கொடுத்தது.

மெல்ல நிமிர்ந்து கயலைப் பார்த்தாள். அடுப்படியில் இருந்து காப்பிக் கோப்பையுடன் வந்து கொண்டிருந்தாள். ஒரு கையில் காபி, மறுகையில் இருந்த தட்டில் பணியாரமும், ரவா லட்டும்.. பெரிதும் அதிர்ந்தவளாகக் கயலின் முகம் பார்த்தாள்.

லேசாகப் புன்னகைத்து, “எடுத்துக்கோ விழி” என்றாள் அவள்.

கயல்விழி தன் வாழ்க்கையை வாழவே இல்லையோ? இன்னும் கிருபா அண்ணாவுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறாளா?

கிருபா அண்ணாவின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாளா?

இன்றும் யாருக்காகப் பணியாரமும், ரவா லட்டும் செய்கிறாள் இவள்?

அவளை அதிர்ச்சியில் விக்கித்துப் போய்ப் பார்த்தாள் மலர்விழி.

“அவரும், பசங்களும் வெளில போய் இருக்காங்க. இப்ப வந்துடுவாங்க. நீ சாப்பிடு விழி” என்றாள்.

அதே குரல், ஆனால் குரல் மட்டும்தான் மாறவில்லை. மற்றபடி அண்ணி நிறைய மாறி இருந்தாள். அவளின் ஆளை அசரடிக்கும் அழகு காணாமல் போய் இருந்தது. இடை தொடும் கூந்தல், இப்போது தோளில் புரண்டு கொண்டிருந்தது. கயல் விழியின், விழியில் வெளிச்சமே இல்லை. ஒளி மங்கிய ஓவியமாக மாறி இருந்தாள் கயல் விழி.

“மாப்பிள்ளை எப்படி இருக்கார், நாளைக்கு அவரையும் கூட்டிட்டு வாயேன். நல்லா இருக்கத் தானே?” என்றாள் மெல்ல,

“ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணி” என்றவள், அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து கொண்டாள்.

“சாரி விழி, எங்க ஆட்டத்தில… உன்னை ரொம்பக் காயப்படுத்திட்டோம். காயப்படுத்திட்டேன் இல்ல? உன்ன மட்டுமில்ல… எல்லோரையும் காயப்படுத்திட்டேன் இல்ல?” என்றாள் கண்களில் கண்ணீருடன்,

“இல்லண்ணி. அப்படிலாம் ஒன்னும் இல்ல.” என்றாள் வேகமாக,

“எனக்குத் தெரியும் விழி. அப்போ அதுதான் சரின்னு பட்டது. ஆனா, இப்போ…” குரல் உடைய மேல பேச முடியாமல் நிறுத்தினாள்.

மலருக்கு இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.

“நான் வரேன் அண்ணி” அவளைத் திரும்பியும் பாராமல் எழுந்து வாசலுக்கு நகர்ந்தாள்.

காபியும், பணியாரமும், லட்டும் அவள் விரல் படாமல் தட்டிலேயே இருந்தது.

மெதுவாக நடந்து வெளியில் வந்தாள். பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது வாசலில் இருந்த குண்டு மல்லிப் பூக்கள். ஆனால், உள்ளே இருந்தவளின் வாழ்வு? யோசனையுடன் வீடு நோக்கி நடந்தாள் மலர்விழி.

அடுத்த ஐந்தாம் நிமிடம் வீடு நுழைந்தவள், நேராகச் சென்று அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்து விட்டாள்.

“என்ன குட்டி?” என்று தலை கோதினார் அவர்.

“எங்க வீட்டுக்கு போறேன் மா. அவருக்குப் போன் பண்ணி நேரா அங்க வந்திட சொல்லிடுறேன். ஒரு ரெண்டு நாள் கழிச்சு இங்க வரேன். இல்லனா, நீங்க எல்லாம் அங்க வாங்க” என்றாள் மெல்லிய குரலில்,

அவளின், “எங்க வீட்டுக்கு” என்பதில் புன்னகைத்தவர், “அண்ணா வந்ததும் போடா” என்றார்.

“இல்ல, அவரோட கார் இருக்கு இல்லம்மா. அதை எடுத்திட்டு போறேன். அவருக்கு நாளைக்குத் தேவைப்படும்”

“சரி பார்த்து போ. வண்டியை மெதுவா ஓட்டு. மாப்பிள்ளைக்கு வர்றதை போன் பண்ணி சொல்லிட்டு போ. அங்க போய்ட்டு அம்மாக்கு கால் பண்ணு”

“சரிங்கம்மா”

ஏனோ அங்கிருந்து கிளம்பியதும்தான், அவள் மனம் ஒரு நிலைக்கு வந்தது. அவளால் அப்போதுதான் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது.

முன்னர்க் கிருபா அண்ணா, இப்போது கயல் அண்ணி.. அவளைப் பெரிதும் கலங்கச் செய்தனர். அந்த வயதில் புரியாதது, இப்போது நன்றாகப் புரிந்தது.

முதல் காதலை அழகாகக் கடந்து, கல்யாண வாழ்வில் காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கிருபா அண்ணாவிடம் போய்க் கயல் அண்ணியைப் பற்றிக் கேட்கவே அவளுக்கு மனம் வரவில்லை.

இன்னும் கிருபா அண்ணாவின் காதலை பற்றிக் கொண்டு வாழும் கயல் அண்ணியின் முகம் பார்த்து பேசவே அவளால் முடியவில்லை. என்ன வாழ்க்கை இது? இந்தக் காதலை போலப் பைத்தியக்காரத் தனம் இந்த உலகில் வேறேதும் உண்டா?

அவளுக்கு மனம் கனத்துப் போனது.

error: Content is protected !!
Scroll to Top