இப்படிக்கு காதல் – 5

“ஹேய் விழி, மிஸ்டு மீ?” என்ற கணவனின் குரல் அவளை நினைவுகளில் இருந்து மீட்டு நிகழ்காலத்திற்கு இட்டு வந்தது.

பின்னிருந்து அவளது கழுத்தில் கரம் கோர்த்து, கன்னம் உரசியவன் அழுத்தமாய் நெற்றியில் முத்தமிட்டான்.

“ஐ மிஸ்டு யூ” என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக. மழையில் நனைத்திருந்த அவன் மேலிருந்து சிதறிய மழைத் துளிகள் அவளைத் தொட்டு, அவளில் கரைய, அவளுடல் சிலிர்த்து அடங்கியது.

மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தாள். ஈரம் சொட்டும் தலை முடியுடன் கவர்ச்சியாகத் தெரிந்தான். மழை தான் தொடும் அனைத்தையுமே அழகாக்கி விடுகிறது.

எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட போனாள், சன்ன சிரிப்புடன் கன்னம் திருப்பி இதழ்களைக் கொடுத்தான்.

மழைநாளின் முத்தங்கள் மட்டும், முத்தங்களாக முடிந்து விடுவதில்லை. அவளது இதழ்களில் சிரித்தபடி அவளை அப்படியே தூக்கினான். மிகக் கவனமாகக் கடிதத்தைக் கைப் பற்றியது அவளது கரங்கள்.

அவளை மொத்தமாய் மயக்கி, அவளிடம் இருந்து கடிதத்தைப் பிரித்துப் படுக்கையின் அருகில் இருந்த டேபிளில் வைத்தான்.

இப்போது வெளியில் மட்டுமல்ல, அவர்களுக்கு நடுவிலும் மழைப் பொழிய தொடங்கியது. காதல் மழை.

நன்றாக அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவளின் உச்சியில் மென்மையாய் இதழ் பதித்தான் கார்த்திக்.

காற்றில் படபடத்த கடிதத்தைக் கை நீட்டி எடுத்தான். மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை திட்டமிட்டபடி அவர்கள் மதுரை கிளம்பினார்கள்.

“உன்கிட்ட எத்தனை முறை சொல்றது விழி, அது.. எனக்கு.. என்னோட ப்ரெண்ட் கொடுத்தது. விளையாட்டுக்கு… கிண்டல் பண்ண கொடுத்தது. அதை ஏன் டா நீ இவ்வளவு சீரியஸா எடுத்துக்கற? என்னனு கேட்டுச் சண்டை போட்டா கூடப் பரவாயில்ல… ஆனா நீ… ஜஸ்ட் இக்னோர் விழி. பிளீஸ்.” அவள் கரத்தை எடுத்து, தன் கரத்தினுள் பொதிந்து கொண்டான்.

“காதல் ஒன்னும் தப்பில்ல கார்த்தி” என்றாள் நிதானமாக,

“ஆமா, தப்பில்லதான். ஆனா, நான் யாரையும் காதலிக்கல விழி. உன்னப் பார்த்ததும் உன்கிட்ட விழுந்தவன்தான். மத்தபடி..” என்று தோள் குலுக்கினான்.

அமைதியாய் அவன் தோள் சாய்ந்து கண்களை மூடினாள். விமானம் மெல்ல மேலெழும்பத் தொடங்கியது.

“உங்க அத்த பொண்ணு சாரா எப்படி இருக்காங்க?” என்று மெல்லக் கேட்டாள்.

“அவளுக்கு என்ன ரொம்ப நல்லா இருப்பா. புருஷன், புள்ள, குட்டின்னு..” என்று சொல்லிக் கொண்டே போனவன், சட்டென்று நிறுத்தி விட்டு அவள் முகம் பார்த்தான்.

“லூசு விழி. சாரா.. அந்தச் சாரா இல்ல. நீ வருத்தப்பட்டு மனசை போட்டு குழப்பிக்கற அளவுக்கு, அவ்வளவு முக்கியம் இல்லமா அந்த லெட்டர். பிளீஸ் லீவ் இட்” என்றான் இறுக்கத்துடன், “ம்ம்ம் ஓகே” என்றாள்.

“இன்னைக்கு, இந்த நிமிஷம் உன்ன மட்டும்தான் உயிரா நேசிக்கிறேன் விழி. இதுக்கு முன்னாடியும் என் வாழ்க்கையில், மனசில் யாருக்கும் இடம் கொடுத்தது இல்ல. அதுதான் நிஜம். ட்ரஸ்ட் மீ” என்றான் கெஞ்சல் குரலில்.

“எனக்குத் தெரியும்” லேசாக அவன் கன்னம் உரசி சிரித்தாள். அவள் உச்சியில் தலைப் பதித்து உறங்கத் தொடங்கினான் கார்த்திக்.

‘அப்படி முக்கியம் இல்லா கடிதத்தை, காதலை, ஏன் இப்படிப் பாதுகாத்து வைத்திருக்கிறான் கணவன்?’ என்ற கேள்வி அவள் மனதை குடைய, விழி மூடி உறங்க முயற்சித்தாள் மலர்விழி.

அவர்கள் மதுரையை அடையும் போது மாலையாகி இருந்தது.

கார்த்திக்கின் வீட்டில் தலைக் காட்டி விட்டு, அவள் வீட்டுக்குச் சென்றார்கள்.

“ஹேய் விழி, விழி தானே? சில்வண்டு”

அவள் வீட்டு வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்த அனைவரையும் தாண்டிக் கொண்டு முன்னே வந்தது கிருபா அண்ணாவின் குரல்.

“அண்ணா” என்றவள், மெலிதாக இதழ் பிரித்துப் புன்னகைத்தாள்.

“வாங்க மாப்பிள்ளை. நல்லா இருக்கீங்களா?” என்று கார்த்திக்கை நலம் விசாரிக்கத் தொடங்கினார் கிருபா அண்ணா.

அண்ணா கொஞ்சம் கூட மாறவில்லை. அப்படியேதான் இருந்தார். என்ன, கொஞ்சம் எடை கூடி, கம்பீரமாக, பார்க்க முன்பை காட்டிலும் நன்றாக இருந்தார்.

“அப்புறமா வீட்டுக்கு வாடா விழி” என்றார் சிரித்த முகமாக.

“சரிங்க அண்ணா” என்று மீண்டும் புன்னகைத்தாள் அவள்.

அவளின் கைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துப் போனான் கார்த்திக்.

*********

காலை பத்து மணியாகியும் கூட, படுக்கையை விட்டு எழுந்து கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் அருகில் அமர்ந்து, அவளை லேசாக எழுப்பி, “விழி, உங்க அண்ணா கூட ஹாஸ்பிட்டல் போறேன். இவெனிங் வந்துடுவேன். டேக் ரெஸ்ட். ஓகே?” என்றான்.

“ஹ்ம்ம், சாப்பிட்டீங்களா?” என்றாள்.

“ஆச்சு. நீயும் எழுந்து சாப்பிட்டு தூங்கு. வரேன் டா” அழுத்தமாய் அவள் உச்சியில் இதழ் பதித்து விட்டு விலகினான்.

சிறிது நேரம் படுக்கையில் புரண்டு விட்டு, மெல்ல எழுந்து குளித்து, காலை உணவை முடித்து விட்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றாள் மலர்.

கேட்டை திறக்கும் போதே, கிருபா அண்ணா ஓடி வருவது தெரிந்தது.

“வா விழி” என்று அழைத்தவனின் முகம் முழுவதும் மகிழ்ச்சியின் ரேகைகள்.

அதே மாறாத, வாஞ்சையான பிரத்யேக சிரிப்பொன்றை அவளுக்கென்று தந்தான்.

“மாப்பிள்ளை எங்க?” விசாரித்தான்.

“ஹாஸ்பிட்டல் போய் இருக்கார். வர லேட்டாகும். அதான், நான் மட்டும் வந்தேன்”

“ஓ. சரி, சரி. நீ உள்ள வா..” விலகி நின்று அவள் நடக்க வழி விட்டான்.

“எங்களை எல்லாம் மறந்துட்ட இல்ல சில்வண்டு? ஊருக்கு வர்றதே இல்ல நீ?” புருவம் சுருக்கி கேட்டவனின் குரலில் வலி மிகுந்திருந்தது.

‘யார், யாரை மறந்தது? அவள் வாழ்வில் கடந்து போன இத்தனை ஆண்டுகளில் என்றேனும் அவளால், இவர்களை மறக்க முடிந்திருக்கிறதா? நிச்சயம் இல்லை’

வாசலை நிறைத்துக் கோலம் போடுகையில், கோடுகளையும், பூக்களையும், வண்ணங்களையும் தாண்டி, கயல் அண்ணியின் முகம்தான் பல நாட்கள் தெரிந்திருக்கிறது.

பருப்புருண்டை குழம்பும், பைனாப்பிள் ரசமும் வைக்கையில் கயல் அண்ணியை நினைக்காத நாள் உண்டா?

பணியாரமும், ரவா லட்டும் கிருபா அண்ணாவை நினைக்காமல் உண்ண முடிந்திருக்கிறதா அவளால்? இல்லையே.

அயிரை மீன் குழம்பை முன்பு போல ரசித்து உண்ண முடிந்திருக்கிறதா? ம்ஹூம்.

“எப்படி, இவ்ளோ நல்லா வண்டி ஓட்டுற விழி?” என்று கார்த்திக் புருவம் உயர்த்தி வியப்புடன் கேட்கும் ஒவ்வொரு முறையும் கிருபா அண்ணா முகம் தானே முன்னே வந்து நிற்கும்.

மீனாட்சியம்மனை தரிசிக்கும் ஒவ்வொரு முறையும் கிருபா, கயல் இருவருக்காகத் தானே அதிக வேண்டுதல்களை வைத்திருக்கிறாள் அவள். கயலின் கைப் பிடித்து எத்தனை முறை மீனாட்சியைத் தரிசித்து இருப்பாள்.

ஒவ்வொரு சித்திரை திருவிழாவின் போதும் அவர்களைச் சுற்றிக் குமிந்திருக்கும் ஜனத் திரளில் எத்தனை பாதுகாப்பாக அழைத்துச் செல்வான் கிருபா அண்ணா. மேல மாசி வீதியும், வைகை ஆறும் எத்தனை நினைவுகளைச் சுமந்திருக்கின்றன.

அவள் மதுரைக்கு வராமல் இருப்பதே இந்த நினைவுகளில் இருந்து தப்பிக்கத் தானே.

ஆனால், இதையெல்லாம் அவனிடம் தற்போது சொல்ல வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அப்படிச் சொல்லித்தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா என்ன?

இல்லை, அதைச் சொல்லி அவனைக் காயப்படுத்துவானேன் என்ற எண்ணத்துடன் மௌனமாய் நடந்தாள்.

ஆனால், அதே நேரம் எதையும் நான் மறக்கவில்லை என்று சொல்லவும் நா எழவில்லை.

அமைதியாய் அவனை ஏறிட்டாள்.

“சாரி அண்ணா” என்றாள்.

“ச்சே, என்ன சில்வண்டு நீ, என்ன பேசுற? பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. பேசாம நட” என்றான்.

“ரம்யா, ரம்யா.. யார் வந்திருக்கா பாரு” உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.

இதற்கு முன் இந்த வீட்டிற்கு எத்தனையோ முறை வந்திருக்கிறாள். ஆனால், இன்று போலத் தயங்கியதில்லை.

ஹாலில் நின்று, கண்ணைச் சுழற்றி வீட்டை நோட்டம் விட்டாள் மலர்விழி. வீடும் சரி, கிருபா அண்ணாவும் சரி கொஞ்சம் கூட மாறவே இல்லை.

அழகாக ஃப்ரேம் செய்யப்பட்டுச் சுவரை நிறைத்திருந்த அவனது திருமணப் புகைப்படத்தைப் பார்த்தாள்.

“வாங்க” என்ற குரலில் பட்டென்று திரும்பினாள். புகைப்படத்தில் இருந்தவள் எதிரில் நின்றிருந்தாள்.

“அண்ணி..” மெல்லிய தடுமாற்றத்துடன் அழைத்தாள்.

“ஏன் நின்னுட்டே இருக்கீங்க? உட்காருங்க. மலர்விழி தானே? எப்படி இருக்கீங்க? உங்களைப் பத்தி இவர் நிறையச் சொல்லி இருக்கார்”

“விழின்னே கூப்பிடு ரம்யா. அவ சின்னப் பொண்ணு” என்றார் அண்ணா. அவர் சொன்னதை ஆமோதிக்க மெல்ல தலையசைத்தாள்.

“உட்காரு விழி. என்ன சாப்பிடுற?” என்று உபசரிப்பில் இறங்கினாள் ரம்யா அண்ணி.

“இப்பதான், வீட்ல சாப்பிட்டு வந்தேன் அண்ணி. தண்ணி கொடுங்க. போதும்” என்றாள்.

கிருபா அண்ணாவின் மனைவி ரம்யா அழகாக இருந்தாள். அதை விட அழகாகப் பேசினாள். அவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். இருவருக்கும் அம்மா வாங்கி வைத்திருந்த பொருட்களைக் கையோடு எடுத்து போய் இருந்தாள். அதை அவர்களிடம் நீட்டினாள். அழகாக வெட்கப்பட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டனர்.

கிருபா அண்ணாவிடம் மறந்தும் கயல் விழி அண்ணியின் பேச்சை எடுக்கவில்லை அவள். எடுக்கத் தோன்றவும் இல்லை.

அவளை “விழி” என்று அழைத்தது தவிர, முன்னொரு காலம் தான், அப்படி ஒரு பெயரில்.. அந்தப் பெயர் கொண்டவளின் மீது உயிராய் இருந்ததை அண்ணன் சுத்தமாய் மறந்து விட்டது போலிருந்தது. கயல் அண்ணியின் தடம் அந்த வீட்டில் எங்குமே இல்லை. கிருபா அண்ணாவின் வாழ்விலும் இல்லை.

மனைவி, குழந்தைகள் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.

மகிழ்ச்சியில் மனம் நிறைய அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் விடைபெறும் போது மெல்ல, “விழி” என்றழைத்தான் கிருபா அண்ணா.

“சாரி” என்றான் மன்னிப்பை வேண்டும் புன்னகையுடன், பதில் சொல்லாமல் தன் வீட்டை நோக்கி நடந்தாள் மலர்விழி.

error: Content is protected !!
Scroll to Top