இப்படிக்கு காதல் – 3

இவள் மலர் விழி. அவள் அப்பா தேவராஜனுக்கு அடுத்து அவளை விழி என அழைப்பது இருவர்தான். கிருபா அண்ணா, கயல் விழி அண்ணி.

கயல் விழியை, விழி என அழைப்பது கிருபா அண்ணா மட்டும்தான். அவளுக்காகவே மலர் விழியும், விழியாகி போனாள் கிருபா அண்ணாவிற்கு.

ஒருநாள், “வா, என்னோட சைக்கிளை ரிப்பேர் பார்த்து வச்சுருக்கேன். ஒட்டிப் பழகு” என்றாள் கயல் அண்ணி.

அவளும் தன்னாலான வரை முயன்றாள்தான். ஆனால், பயத்தில் கீழே விழுந்து வாரிக் கொண்டே இருந்தாள்.

“இப்படி நீ விழுந்து வாரிக்கிட்டே இருந்தா, உங்கப்பா என்னை அடி வெளுத்துடுவார்.” என்று புலம்பிய கயல்விழி, அவர்களின் சைக்கிள் புராஜக்ட்டை அப்போதைக்குத் தள்ளி வைத்தாள்.

ஆனால், திடீரென்று ஒரு நாள்,

“அந்தத் தாடிமாடு சும்மா தானே இருக்கான். உனக்குச் சைக்கிள் ஓட்ட சொல்லி கொடுக்கச் சொல்லு” என்று கயல் அண்ணி புருவம் உயர்த்திச் சொல்ல, மறு வாரமே கிருபா அண்ணனிடம் அவளுக்குச் சைக்கிள் ஒட்டும் பயிற்சி ஆரம்பம் ஆனது.

அவர்களின் தெருவில்தான் ஓட்ட வைப்பான். அந்த முனையில் இருந்து இந்த முனைக்கு வருவதற்குள் கத்தி தீர்த்து விடுவாள் மலர்விழி.

“ஒழுங்கா பிடிங்க அண்ணா, பயமா இருக்கு. விழுந்திட போறேன்” என்பவளின் தலையில் செல்லமாகத் தட்டி,

“முதல்ல பயப்படாம ஒட்டு. அண்ணா உன்ன அப்படி எல்லாம் கீழ விழ விட மாட்டேன். உன்ன கீழ விழ தட்டிட்டு நான் இந்தத் தெருவுல உசுரோட நடமாட முடியும்னு நினைக்கிற? உங்கப்பா என்னைப் பொளந்து கட்டிடுவார். அதனால் நீ என்ன பண்ற? நேரா ரோட்டை பார்த்து ஓட்டுற? என்ன? பயப்படாத? நான் தான் பின்னாடி பிடிச்சு இருக்கேன் இல்ல?” என்பான்.

இவர்களின் வார்த்தையாடலை சன்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார் அவளின் அம்மா தேவகி.

“பாப்பா பத்திரம் டா. டேய், ஒழுங்கா பிடி டா கிருபா” என்று கத்துவார் பெரியம்மா, அதாவது கிருபா அண்ணாவின் அம்மா.

“யாரு இவ பாப்பா? வந்து சைக்கிளை பிடிச்சு பாரு மா. பீப்பா இது” என்று கிண்டல் அடிப்பான்.

“அவ கூடப் பிறந்த ரெண்டு அண்ணனுக இருக்கானுங்கன்னு தான் பேரு. ஆனா, தங்கச்சியைத் திரும்பி கூடப் பார்க்கறது கிடையாது. நம்ம கிருபா மட்டும்தான் மலர் மேல அக்கறையா இருக்கான். நீ சொல்லி கொடு ராஜா” என்பார் தேவகி.

“மெல்ல மெல்ல, அப்படித்தான். நல்லா பெடல் பண்ணு” என்று அவள் பின்னோடு ஓடி வருவான்.

“அண்ணா, ஒழுங்கா பிடி. பின்னாடி இருக்கத் தானே? சரியா ஓட்டுறனா?” எனும் அவளின் கேள்விக்குப் பதில் வராது, அந்தப் பதட்டத்தில் இரு கால்களையும் தரையில் ஊன்றி, சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்பி பார்ப்பாள். தெருவின் மறு கொடியில் பெரிய புன்னகையுடன் நிற்பார் கிருபா அண்ணா.

“சூப்பரா ஓட்டிட்ட பாரு சில்வண்டு. இப்ப அப்படியே திரும்பி வா, பார்ப்போம்” என்பான். பயத்தில் நகர மாட்டாள் அவள்.

அங்கிருந்து ஓடி வந்து மீண்டும் அவளுக்காகச் சைக்கிளை பிடிப்பான். அதே வேகத்தில் காணாமலும் போவான். முழுதாகப் பதினைந்து நாட்கள் ஆனது அவள் நன்றாகச் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள, அத்துணைப் பொறுமையாக அவளுக்குச் சொல்லி கொடுத்தான் கிருபா அண்ணா.

“பரவாயில்ல, உருப்படியா ஒருவேளை.. இப்பதான் பார்த்திருக்கு” அவள் சைக்கிள் ஓட்டுவது பார்த்தபடி சொல்வாள் கயல் அண்ணி.

“நான் சொன்னதைப் போய் உங்க நொண்ணாகிட்ட சொல்லிடாத, என்ன?” என்பாள், பயந்தது போல. ஆனால், மறக்காமல் அதைப் போய்க் கிருபா அண்ணாவிடம் சொல்வாள் மலர்.

முகம் நிறைத்த புன்னகையுடன், “அவளுக்கு இருக்கு ஒருநாள், ஓவர் லந்து கொடுக்கறா” என்று கோபம் போலச் சொல்ல முயற்சித்துத் தோற்பான்.

“கோபப்பட்டானா?” என்று மெல்ல விசாரிப்பாள் கயல் அண்ணி.

“ஆமா. ஆனா, சிரிச்சிக்கிட்டே தான் கோபப்பட்டாங்க” என்று விஷயம் புரியாமல், குழம்பிப் போய்ச் சொல்வாள் மலர். அது புரியாத வயது. ஆனால், இன்றைக்கு அனைத்துமே புரிகிறது.

கோலம், சமையலை அடுத்து உடைகளை நேர்த்தியாக உடுத்த கற்றுக் கொடுத்ததும் கயல் அண்ணி தான். தாவணி, சேலை இரண்டுமே அவளுக்குக் கட்ட பழக்கி விட்டதும் அவள்தான்.

அன்றைக்கே அழகாக ஐந்து மடிப்பு எடுத்து மார்பில் இட்டு, தோளில் குத்தி இருப்பது தெரியாமல் பின் செய்வாள் அண்ணி. தழைய, தழைய சேலை கட்டி விடுவாள். ஆனால், இடுப்பு பகுதி கீற்றாக மட்டுமே வெளியில் தெரியும். புடவை, பூ என்று புதிதாய் நிற்பவளை விழிகள் விரிய பார்ப்பாள். கொஞ்சம் கூட யோசிக்காமல், மயில் பதக்கம் பதித்த அவளது தங்க சங்கிலி இவள் கழுத்துக்கு இடம் மாறும்.

முதல் முறை சேலை கட்டிய இவளை கயல் அண்ணி அறையை விட்டு வெளியே அழைத்து வர, அடுப்பில் வேலையாய் இருந்த தேவகி அப்படியே கரண்டியுடன் ஹாலிற்கு வந்தார்.

“தங்கமே” என்று நிமிர்ந்து இவளைப் பார்த்தவர், மடிந்து தரையில் அமர்ந்து அழத் தொடங்கினார்.

“என்ன கயலு, இவ இப்படி வளர்ந்திட்டா? புள்ள சீக்கிரம் வேற வீட்டுக்கு போய்டும் போல. அவங்க அப்பா வர்றதுக்கு முன்னாடி சேலையை மாத்தி விடு” என்று குரல் நடுங்க சொன்னது, இன்றும் பசுமையாய் அவளின் மனதில் இருக்கிறது.

சேலையை மாற்றி, ஒரு பழைய சுடிதார் அணிந்து வந்து அம்மாவின் அருகில் அமர்ந்தாள் அவள். கையில் காப்பியை திணித்தார். இருவருக்கும் சூடாகக் கீரை வடையும், தேங்காய் சட்டினியும் சாப்பிட கொடுத்தார். வடையைச் சாப்பிட்டுக் கொண்டே எத்தனை தெளிவாகப் பேசினாள் கயல் அண்ணி.

“இங்க பாருங்க அத்தை. பத்தாப்பு ஃபேர்வெல் வருது அவங்க ஸ்கூல்ல. அதுக்குத்தான் அவளைச் சேலை கட்ட பழக்கி விட்டேன்” என்றவர், திரும்பி அவளைப் பார்த்து, “நீ பாவாடை தாவணி போட்டுட்டு போ, என்ன விழி?” என்றாள். சம்மதமாய் ஆடியது அவள் தலை.

“மலரோட படிப்புதான் முக்கியம் அத்தை. மத்த பேச்சு எல்லாம் இப்ப வேணாம். அவ நல்லா படிக்கற புள்ள. உங்களுக்கு என்ன வசதிக்கா கொறவு. நல்லா படிக்க வைங்க. பெரிய படிப்பு படிச்சு, அவ தன் கால்ல நின்னதும், பெரிய இடம் எல்லாம் தானே தேடி வரும். சரியா அத்த?” என்று கண்டிப்புடன் சொன்ன கயல் அண்ணியின் வார்த்தைகள் இன்றும் காதில் எதிரொலிக்கிறது.

“சின்னப் பிள்ளை முன்னாடி இன்னொரு முற கல்யாண பேச்சு எடுக்காதீங்க” குரலை உயர்த்தி விட்டு போனாள்.

அவளுக்காகவே வாசலில் காத்திருந்த கிருபா அண்ணாவை பார்த்து, தாடையில் இடித்து, முறைத்து விட்டு சென்றாள் கயல்விழி.

“என்னாச்சு சில்வண்டு?” என்றான் அவன், “தெரியல” என்றாள் இவள்.

“இந்தா உனக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன், சாப்பிடு. ஓடிப் போய் அவளுக்குக் கொடுக்காத. என்கிட்டயே மூஞ்சி காட்டிட்டு போறா” என்று புலம்பிக் கொண்டே, கையில் இருக்கும் கருப்பட்டி ஜீரணியை நீட்டுவான்.

சைக்கிளை எடுத்து சிட்டாகப் பறந்து போய்க் கயலிடம் சேர்ப்பாள் அதை.

“அவனுக்குதான் வேலை இல்லனா? நீ ஏன் இதை எல்லாம் செய்யற?” முதல் முறையாகக் கோப முகம் காட்டினாள் அண்ணி. கண் கலங்க வீடு வந்தாள் மலர்.

மறுநாளே அவளைத் தேடி வந்து சமாதானப்படுத்தினாள் அண்ணி.

“சாரி டா. வா, சைக்கிளில் ஒரு ரவுண்ட் போவோம்” என்று அழைத்துக் கொண்டு போனாள்.

அண்ணியுடன் போட்டி போட்டுக் கொண்டு சைக்கிள் ஓட்டும் ஆனந்தமே தனிதான். அந்தத் தெருவும், ஊரும் அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல, சைக்கிளை ப்ளைட்டாக நினைத்து பறக்க விட்ட நாட்கள் அவை.

நாட்களும் இறக்கை முளைத்தது போலப் பறந்திறந்தது.

இப்போது எல்லாம் அவள் அடிக்கடி, புறாவாக மாற வேண்டியிருந்தது. இரு பக்கமும் செய்திகளைக் கொண்டு போய்ச் சேர்த்தே ஓய்ந்து போனாள்.

ஆனால், எதுவோ சரியில்லை என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. நிச்சயம் தவறு கிருபா அண்ணன் மேல்தான் என்று தோன்றியது. ஏனென்றால், அவள் அறிந்த கயல் அண்ணி காரணம் இல்லாமல் கோபப்பட மாட்டாள். அத்தனை எளிதாக அவளுக்குக் கோபமும் வராது.

மறுநாள் அவளுக்குப் பனிரெண்டாம் வகுப்பு ஃபேர்வெல். எந்தப் புடவையை அணிவது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள்.

“ஐயோ என்னால முடியல பாப்பா. கயல கூப்பிட்டு எத கட்டுறதுன்னு கேட்டுக்கோ. அவ சரியா சொல்லுவா” என்று தேவகி சொல்ல, ஓடிப் போய் அண்ணியை அழைத்து வந்தாள் மலர்.

“கயலு, இடியாப்ப மாவு அரைக்கக் கொடுத்திருக்கேன். ஓடிப் போய் வாங்கிட்டு வந்திடுறேன். அது வரைக்கும் பாப்பாக்கு துணையா வீட்ல இரு. அவங்க அப்பா, அண்ணனுங்க வர நேரமாகும். நான் இப்ப வந்திடுவேன்” என்று விட்டு வெளியில் போனார் தேவகி.

மறுநிமிடமே புயலென வீட்டுக்குள் நுழைந்தான் கிருபா அண்ணா.

“ஏய், உன் மனசுல என்ன தாண்டி நினைச்சிட்டு இருக்க? என்னைய லூசு பயலா ஆக்கணும்னு பிளான் போடுறியா?” கத்தினான். கயல் விழி அசரவேயில்லை.

பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய்ப் பீரோவை பார்த்து நின்றாள். அவளின் கைப் பிடித்து வீட்டின் பின் பக்கம் இழுத்துக் கொண்டு போனான் கிருபா.

“என்னனு சொல்லு விழி. இப்படிப் பேசாம இருந்தா என்ன பண்ண? என்னனு நான் புரிஞ்சுக்க?” அங்கலாய்த்தான்.

“வீட்ல மாப்பிள்ள பார்க்கறாங்க கிருபா.” அழுகுரலில் சொன்னாள் கயல்.

“இப்ப தானே காலேஜ் முடிச்ச? அதுக்குள்ள பொண்ணைத் துரத்தி விட, என்ன அவசரம் வந்தது உங்கப்பனுக்கு?” பல்லைக் கடித்தபடி அடிக் குரலில் சீறினான்.

“நான் காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு கிருபா. அடுத்துத் தங்கச்சி வேற இருக்கா, இல்ல?” பாவம் போலச் சொன்னாள் கயல்.

“என்னை என்னதான் செய்யச் சொல்ற? படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சா தானே? வெளியூரு, வெளிநாடு போகக் கூடாதுன்னு வீட்ல சொல்றாங்க. உள்ளூர்ல ஒரு நாய் வேல கொடுக்க மாட்டேன்றான். படிச்ச என்ஜினியர் படிப்பை குப்பையில்தான் போடணும் போல”

கிருபா அண்ணனின் குரலில் தான் எத்தனை விரக்தி.

“கொஞ்ச நாளைக்கு எப்படியாவது சமாளி விழி. பிளீஸ்.” என்று கெஞ்சியவன்,

“அடுத்த ஒரு மாசத்துல எந்த வேலை கிடைச்சாலும் சேர்ந்திடுறேன். அப்புறம் உங்க வீட்ல பேசுவோம்” என்று அவளைச் சமாதானப்படுத்தினான். ஆனாலும், கலங்கிய கண்களுடன்தான் வீட்டிற்குச் சென்றாள் கயல் விழி. அடுத்தடுத்து வந்த நாட்களில், இல்லை மாதங்களில் இதுவே தொடர்கதை ஆனது.

கயல் விழியைச் சமாதானப்படுத்தியே ஒரு வழியானான் கிருபா அண்ணா. அவனுக்கு வேலை இன்னும் கிடைக்கவில்லை எனும் கவலையே கயல் அண்ணியை மெலிய வைத்தது.

“ஏய் சில்வண்டு, உங்க அண்ணியைப் போய்க் கூட்டிட்டு வா.. ஹ்ம்ம் உங்க வீட்டு மொட்டை மாடிக்கு அவளைக் கூட்டிட்டு போ. நான் கொஞ்ச நேரத்தில வர்றேன்” திடீரென்று ஒருநாள் குரலில் மகிழ்ச்சி துள்ள வந்து நின்று சொன்னான் கிருபா அண்ணா.

அவனது மகிழ்ச்சி அவளையும் தொற்றிக் கொள்ள, சிட்டாகப் பறந்து போய்க் கயல் அண்ணியை அழைத்து வந்தாள்.

இருவரும் மொட்டை மாடியின் ஓரம் நின்று பேசிக் கொண்டார்கள். இருவருக்கும் நடுவில் எப்போதும் போலப் பெரிய இடைவெளி இருந்தது.

“அழாத டி. விழி, அழாத சொல்றேன் இல்ல. பிளீஸ். இந்தா இருக்கச் சென்னை தானே? அடுத்த லீவுக்குக் கண்டிப்பா வந்துடுவேன். உங்க வீட்டுக்கு எங்க அம்மா, அப்பாவோட வந்து உன்னைப் பொண்ணு கேட்கறேன். வெயிட் பண்ணு. எனக்காக வெயிட் பண்ணு. காத்திருப்ப இல்ல?” அவன் எத்தனை சமாதானம் செய்தும் கயலின் அழுகை நிற்கவேயில்லை.

“வந்துடுவேன் விழி. உனக்காக… சீக்கிரமே…” என்று விட்டு படியிறங்கி போனான் கிருபா அண்ணா.

அதுவரை விசும்பிய கயல் வெடித்துச் சத்தமாக அழுதாள். அமைதியாய் போய் அவள் அருகில் நின்றாள் மலர்விழி.

சிறிது நேரத்தில் அழுகை குறைந்து, எழுந்து நின்றாள். மாடியின் ஓரத்தில் இருந்த பைப்பில் முகம் கழுவி விட்டு வந்தாள் கயல்விழி.

“அண்ணா வந்துடுவாங்க அண்ணி” என்றாள் மலர்விழி. பதிலுக்குச் சோகமாகப் புன்னகைத்தாள் கயல் விழி.

மறுநாள் ஊருக்குச் செல்லும் முன் தைரியமாகக் கயலின் வீட்டிற்குள் நுழைந்து அவள் முன் வந்து நின்றான் கிருபா அண்ணா. நல்ல வேளையாக அன்றைக்கு டியூசன் இல்லை. சனிக்கிழமை என்பதால் அண்ணி வீட்டு ஆட்களும் வீட்டில் இல்லை. ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தார்கள். அது அவனுக்கு வசதியாய்ப் போனது.

அடுப்படிக்கும், பின் வாசலுக்குமான இடைவெளியில் கயலை நிறுத்தி கெஞ்சிக் கொண்டிருந்தான் அண்ணா.

ஹாலில் நின்று கையைப் பிசைந்து கொண்டிருந்தாள் மலர்விழி. வீட்டிற்குள் யார் நுழைந்தாலும் கண்ணில் பட்டு விடும் இடத்தில் நின்றிருந்தனர் இருவரும்.

“பிளீஸ், ஒரே ஒரு தடவை உன்னைக் கட்டிக்கறேன் விழி, பிளீஸ்.”

“ம்ஹூம்”

“லேசா கட்டிப் பிடிச்சு, சின்னதா கன்னத்தில ஒரே ஒரு உம்மா. பிளீஸ்” அவன் குரலை குறைத்திருந்தாலும் மலருக்கு தெளிவாகவே கேட்டது.

“கல்யாணத்துக்கு அப்புறம்…” திக்கினாள் கயல்விழி.

“கல்யாணத்துக்கு அப்புறம், எவன் உன்கிட்ட இப்படிக் கெஞ்சிட்டு இருக்கப் போறான்? இப்ப கொடு டி. பிளீஸ். உன்ன அடுத்து எப்ப பார்ப்பேனோ, தெரியலையே”

“கிருபா, உங்களுக்குப் பஸ்க்கு லேட் ஆகல?”

“ஆகல….” என்றவன், அவள் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தான். வெட்கத்தில் சிவக்க நின்றவளை கடந்து மலரின் அருகில் வந்தான்.

அவளின் தலையை மெதுவாகக் கோதி விட்டான்.

“பிளஸ் டூ நல்ல மார்க் வரும். அண்ணிகிட்ட கேட்டு நல்ல படிப்புல சேரு. என்ன? அண்ணா அடுத்து வரும் போது காலேஜ்ல இருப்பியா சில்வண்டு. நல்லா படிக்கணும். அண்ணியைப் பார்த்துக்கோ” என்றவன், திரும்பி கயலை பார்த்து, “ஷ்ஷ்ஷ் ஆழாத விழி. வந்துடுவேன்” என்றான்.

வாசல் வரை சென்றவன் சட்டென்று திரும்பி, “காத்திருப்ப இல்ல?” சிரித்துக் கொண்டே கேட்டான்.

கண்ணீரும், புன்னகையுமாகத் தலையசைத்தாள் கயல்விழி.

இருவரையும் பார்த்துக் கையாட்டி விட்டுப் போனான் கிருபா அண்ணா.

error: Content is protected !!
Scroll to Top