அவள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சொந்த ஊரான மதுரையில்தான். அப்போது பள்ளி இறுதி ஆண்டுகளில் இருந்தாள். தொண்ணூறுகளின் இறுதி அது.
பள்ளி முடித்து வந்து, பக்கத்துத் தெருவில் இருந்த கயல்விழி அண்ணியிடம்தான் மேத்ஸ் டியூசன் செல்வாள் அவள். மேத்ஸ் என்றில்லை, அனைத்து பாடங்களிலுமே சந்தேகங்களைக் கேட்டு கயல் விழி அண்ணியிடம் நிவிர்த்திச் செய்து கொள்ள முடியும்.
மற்ற மாணவ, மாணவிகள் “மிஸ்” என்று அழைக்கையில் இவள் ஒருத்தி மட்டுமே அண்ணி என்பாள். கயல்விழி அவளுக்குத் தூரத்துச் சொந்தம் என்பதினால் மட்டுமல்ல, கிருபா அண்ணனின் சித்தி மகள் மற்றும் அவனின் பக்கத்து வீடு என்பதாலும் அவளுக்கு அந்தக் கூடுதல் சலுகை வழங்கப்பட்டது என்பது அவளுக்குப் புரியவே பல வருடங்கள் தேவைப்பட்டது.
கயல் விழிக்கு அவளை மிகவும் பிடிக்கும். எப்போதும் சின்னவளை தன்னுருகிலேயே அமர்த்திக் கொள்வாள். அவள் செய்யும் வேலைகள் அனைத்தையும் இவளுக்கும் கற்றுத் தருவாள்.
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தது கயல் விழி அண்ணிதான். சைக்கிள் மட்டும் இன்றி அவள் அந்த வயதில் கற்றுக் கொண்ட அனைத்துமே கயல் விழியிடம் இருந்துதான்.
“மதுரையில் இருக்கோம், மல்லிப்பூ கட்டத் தெரியாதுன்னு சொன்னா, எவ்வளவு அசிங்கம். உட்காரு இப்படி. அண்ணி கட்டுறதை பாரு” என்று அவளை இழுத்து அருகில் அமர்த்திப் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பாள்.
நான்கு நாட்கள் பூக்களை அடையாளம் தெரியாத அளவுக்குக் கசக்கி விட்டு, ஐந்தாம் நாள் அவள் போராடி ஒரு முழம் கட்டியிருப்பதைப் பார்த்து, சற்று அதிகமாகவே வியப்பாள்.
“இந்தா பூ கட்டிட்ட இல்ல. அவ்வளவுதான். எவ்வளவு அழகா இருக்குப் பாரு. திரும்பு, தலையில் வச்சு விடுறேன்” பாராட்டோடு பூவும் அவள் தலையில் குடியேறி இருக்கும்.
“அப்படியே இந்தக் குட்டி கழுதைக்குக் கோலம் போட சொல்லி கொடு கயல்” என்று அவள் எட்டாம் வகுப்புப் படிக்கையில் அவள் அம்மாவே கயல் அண்ணியிடம் கோரிக்கை வைக்க, புள்ளி கோலம் எல்லாம் புறந்தள்ளி விட்டு, அழகாகப் பெரிதாக, வாசலை அடைத்துப் போடும் ரங்கோலி கோலங்களைக் கற்றுத் தந்தார் கயல் அண்ணி.
மூன்று விரல்களில் நேர்த்தியாகக் கோல மாவை எடுத்து, நுனி விரலால் பிசிறில்லா கோடுகள் இழுக்கக் கற்றுத் தந்தாள். பத்து நிமிடத்தில் வீட்டின் முன் வாசலில் பூத்திருக்கும் பெரிய பூவிற்குப் பொருத்தமான வண்ணங்கள் சேர்க்கவும் சொல்லித் தந்தாள்.
அவள் கோலத்தை முடிப்பதற்காகவே காத்திருந்தது போல, “அழகு. சொல்லித் தர்றது எவ்வளவு வேகமாகப் பிடிச்சுக்கற. கற்பூர புத்தி உனக்கு” கன்னம் வழித்து நெட்டி முறிப்பாள். பக்கத்து வீட்டுப் பெண்ணை விரட்டி, அடுத்தத் தெருவில் இருக்கும் அவள் அம்மாவை அழைத்து வர செய்வாள்.
இடுப்பில் கைப் பதித்து, வாய் பிளப்பார் தேவகி.
“என் செல்லக்குட்டி, நீயா தங்கம் இந்தக் கோலம் போட்ட? என் ராசாத்தி” என்று அவரும் தன் பங்குக்கு நெட்டி முறிப்பார். பெருமை பிடிபடாது அவருக்கு.
வீட்டில் அவள் மகா செல்லம். அம்மா வேலை ஏவினாலும், அப்பா செய்ய விட மாட்டார். இரண்டு மகன்களுக்குப் பின் பிறந்த ஒற்றைப் பெண் அவள். தந்தையின் செல்லப் பெண்.
“நாளைக்கு வர்றவன் அவளைத் திட்ட மாட்டான். எப்படி வளர்த்து வச்சுருக்காங்க பாருன்னு, நம்மைதான் திட்டுவான். பொண்ணைச் செல்லம் கொடுத்து கெடுக்காதீங்க” கத்துவார் தேவகி.
“உங்கம்மா, அவ அப்படிதான் டா, நீ கண்டுக்காத. நல்லா படி போதும். நான் உனக்கு மகா ராஜாவை தேடி பிடிப்பேன். அவன் உன்னை வேலை சொல்லாம ராணி மாதிரி பார்த்துப்பான்.” அவள் தலைக் கோதி சொல்வார் அப்பா தேவராஜன்.
மகளுக்காக மகாராஜனை தான் தேடிப் பிடித்தார். அவளுக்குப் பிடித்த கார்த்திக். ராணியைப் போலதான் கையில் வைத்துத் தாங்குகிறான்.
கார்த்திக் அவளுக்காகப் பெற்றோர் பார்த்த பையன்தான். இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. இவள் பார்த்தாள், பெற்றோர் திருமணத்தை நடத்தி முடித்தனர்.
இவளது இரண்டாம் அண்ணனின் ஹாஸ்பிட்டல் திறப்பு விழாவின் போதுதான் அவள் கார்த்திக்கை முதன்முதலாகச் சந்தித்தது.
“இவர் கார்த்திக். நம்ம..” ஏதோ சொல்லி அறிமுகப்படுத்தினான் அவளது அண்ணன். ஆனால், அவள் எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
ஒரு கணம் உறைந்து போனவளாகக் கார்த்திக்கின் முகம் பார்த்திருந்தாள்.
“தங்கப் புள்ள.. விழி மா..” என்ற தேவராஜனின் அழைப்பில், சுற்றுப்புறம் உணர்ந்து கார்த்திக்கிடம் இருந்து கண்களை அகற்றினாள்.
“என்னங்க ப்பா” என்றாள்.
“தம்பி கை நீட்டிட்டு இருக்காங்க பாரு” என்றார் கார்த்திக்கை காட்டி,
“ஹாய், சாரி…” மென்மையாய் அவள் கைப் பற்றிக் குலுக்கினான். அவள் என்ன செய்கிறாள், என்ன படித்தாள் என்று பொதுவாகதான் விசாரித்தான். அவளும் பொறுப்பாகப் பதில் சொன்னாள்.
அவ்வளவுதான் நடந்தது. தேவராஜனுக்கு அதுவே போதுமானதாக இருக்க, அடுத்த மூன்றாம் மாதம் கார்த்திக்கின் மனைவியாகி இருந்தாள் அவள். மிகவும் மகிழ்ச்சியாக.
ச்சே.. எங்கிருந்து எங்குத் தாவுகிறது இந்த மனது என்று தலையை உலுக்கி கொண்டாள்.
அந்த வயதில் அவள் செய்யும் சிறு சிறு செயல்கள் கூடத் தேவராஜனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விடும். மனைவியிடம் பெருமை பீற்றியே மாய்ந்து போவார்.
“என் பொண்ணைப் பார்த்தியா? எப்படிப் படிக்கறா பாரு. எவ்வளவு பொறுப்பா இருக்கா பாரு. என் பொண்ணு, என் பொண்ணு” அவரைக் கையில் பிடிக்க முடியாது. எல்லாச் சராசரி தந்தையைப் போலதான் அவரும்.
தேவராஜன் மகிழ்ச்சியில் பூரித்துப் போகும் அளவுக்கு ஒவ்வொரு வேலையையும் தெளிவாக, அழகாகக் கற்றுக் கொண்டாள் அவள்.
அப்போது ஒன்பது படித்தாளோ? நினைவில்லை. முதல் முறை சமையல் அறைக்குள் நுழைந்ததும் அப்போதுதான். டீ, காபி என்று தொடங்கி, சாம்பார், ரசம் என்று ஒவ்வொன்றையும் எளிதாக, அதன் அளவுகளுடன் சொல்லித் தந்தாள் கயல்.
மெல்ல முன்னேறி ஒரு நாள் கயல் அண்ணி சொல்லிக் கொடுத்தது போல, முதல் நாள் கயலின் வீட்டில் அவள் சொல்ல, சொல்ல இவள் செய்தது போல, மறுநாளே அவள் வீட்டில் அவள் சமைத்து வைத்த அயிரை மீன் குழம்பு துளி கூட மிச்சமில்லாமல் காலியானது.
“அப்படியே எங்க ஆத்தா கைப் பக்குவம். இந்த ருசியில சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சு. எங்க ஆத்தாவே உசுரோட வந்தது போலருக்கு” சாப்பிட்டு உலர்ந்த கையுடன் கண் கலங்கினார் தேவராஜன். மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள் அவள்.
அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களையும் சிரத்தை எடுத்து அவளுக்குச் சொல்லித் தந்த கயல் விழியிடம் இருந்து அவள் கற்றுக் கொள்ளாத ஒன்று உண்டென்றால் அது இந்தக் காதல் ஒன்று மட்டும்தான்.
பணியாரம் செய்வதற்குக் காட்டித் தருபவள், அவளுக்கென்று இரண்டு ஈட்டை டிஃபனில் கட்டியும் தருவாள்.
“இங்க பாரு, உங்க அம்மாகிட்ட மட்டும் கொடு. உங்க வீட்ல, அண்ணனுங்களுக்குக் கொடு. உங்க பக்கத்து வீட்ல ஒரு தடிமாடு இருக்கே, பேர் என்ன கிருபா? அதுக்குக் கொடுத்திட போற” என்று எச்சரிக்கை செய்தே அனுப்புவாள். ஆனால், அவள் வீட்டை அடையும் போது, எல்லோருக்கும் முன்பாகப் பக்கத்து வீட்டுக் கேட்டில் சாய்ந்தபடி, “ஓய் சில்வண்டு. எங்க போய்ட்டு வர்ற? கையில என்ன? இங்க கொண்டா?” என்று அவளை முதலில் அழைப்பது கிருபாகரன் அண்ணவாகதான் இருக்கும்.
மௌனமாய்ச் சென்று அண்ணன் முன் நிற்பாள். மூன்று, நான்கு பணியாரத்தைப் பொறுமையாய் உண்டு விட்டு, “வீட்டுக்குள்ள ஓடு, சித்தி தேடப் போறாங்க” என்று விரட்டுவான்.
“அடுத்த முறை ரவா லட்டுச் செய்யச் சொல்லு சில்வண்டு” என்ற கோரிக்கை நடப்பவளின் முன் வந்து விழும். சிரித்துக் கொள்வாள். ஆனாலும், மறக்காமல் மறுநாள் அதைக் கயல் விழியிடம் ஒப்பித்து விடுவாள்.
அன்றைய டியூசனில் பள்ளி பாடங்கள் முடிந்ததும், மற்ற மாணவர்களை அனுப்பி விட்டு அவளை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு, சிரத்தை எடுத்து மிகக் கவனமாய் ரவா லட்டு பிடிப்பாள் கயல்விழி. உருண்டை பிடிக்கையில் சூடு பொறுக்க முடியாமல் கையை அடிக்கடி ஊதிக் கொள்ளும் அவளைப் பாவமாய்ப் பார்ப்பாள் இவள்.
நிறைய முந்திரி, திராட்சை வைத்து அழுத்தி பிடிக்கப்பட்ட லட்டுகள் கிருபா அண்ணனுக்காகத் தனி டப்பாவில் போய் அமரும்.
“அசைக்காம கொண்டு போ என்ன? ஓடாம, ஆடாம மெல்ல நடந்து போ. அப்படியே இதை அந்தத் தடிமாடுகிட்ட கொடு. இதை அத்தைகிட்ட கொடு. என்ன?” என்று அவளுக்கும், கிருபா அண்ணனுக்கும் பங்கு பிரித்து அனுப்புவாள். அன்றைக்குப் பார்த்து வேண்டும் என்றே வெளியில் வர மாட்டார் கிருபா அண்ணா.
இவள் தன் வீட்டிற்குப் போனதும், ஒரு டப்பாவை அம்மாவிடம் கொடுத்து விட்டு, முகம் கழுவி, தலை வாரி, அடுத்த டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு ஓடுவாள்.
“பெரியம்மா, மா..” என்று அழைப்பவள் முன் வந்து நின்று, “என்ன விழி? சவுண்ட் பலமா இருக்கு? ஸ்கூல் விட்டு வந்ததும் என்னத்த முழுங்கின சில்வண்டு? உங்க அண்ணி என்ன சாப்பிட கொடுத்தா?” என்று, அந்த அண்ணியில் அழுத்தம் கொடுத்து கேட்பார் கிருபா அண்ணா.
“இந்தாங்க ண்ணா, நீங்க கேட்ட ரவா லட்டு” என்று அவன் கையில் டப்பாவை திணித்து விட்டு ஓட முற்படுபவளை தடுத்து நிறுத்தும் அவன் குரல்.
“ஒய் சில்வண்டு, உன்ன கத்துக்கச் சொன்னா? நான் கேட்டேனாம்ல? நல்லா சொல்றா பாரு.” என்று சலித்துக் கொள்பவன், “சரி சரி, நீ செஞ்சதுக்காகச் சாப்பிடுறேன்” என்று அலுத்துக் கொண்டு, ஒரு உருண்டையை எடுத்து வாயில் போடுவான்.
“சும்மா சொல்லக் கூடாது, இந்த விழி கை மணம் இருக்கே” என்று வியப்பான். இவளது முறைப்பு அவனை மேலே பேச விடாமல் தடுக்கும்.
“அட, விழின்னு தானே சொன்னேன்? மலர் விழி, உன்னைதான் சொன்னேன் சில்வண்டு. நல்லா செஞ்சுருக்க” என்று உண்மையான குரலில் பாராட்டுவான்.
“நான் சொன்னதை அந்த விழிகிட்ட சொல்லாத, என்ன?” என்றும் எச்சரிப்பான். அப்போதுதான் மறக்காமல் போய்க் கயல் அண்ணியிடம் சொல்வாள் இவள்.