இனியொரு பிரிவேது – 9 (1)

காத்திருப்பு எத்தனை கொடுமையானது என்பதை அக்கணம் பூரணமாக உணர்ந்தாள் நந்தனா.

அவளின் ஒற்றைப் பதிலுக்காக எத்தனை மாதங்களாக நிரஞ்சனை காக்க வைத்திருப்பாள் அவள். இன்று அதே நிரஞ்சனுக்காக‌ அவள் காத்திருக்கிறாள். ஆனால், அவளின் பதிலை கேட்க அவன் கண் விழிக்க வேண்டுமே?

அவளும் மருத்துவமனை வந்து பல மணி நேரங்கள் ஆகிறது. நிரஞ்சனை பல்வேறு பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்றார்களே ஒழிய, யாரும் அவளுக்கான பதிலை தரத் தயாராக இல்லை.

அவளைக் கடந்து யார், யாரோ வருவதும், போவதுமாக இருந்தார்கள். அவள் அப்படியே சிலைப் போல அமர்ந்திருந்தாள்.

அவளுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் யுகங்களாகக் கழிந்தது.

அந்நேரமும் அவளின் அனலிஸ்ட் மூளை சும்மா இருக்காமல் மீண்டும் மீண்டும் அவனது வீடியோவை ஓட விட்டு, நடந்ததை ஆராய முயன்றது.

நிரஞ்சன் பந்தை பிடிக்கப் பின்னால் நகர்ந்தான், பந்து அவன் கையில் வர, பிடித்த வேகத்தில் நிலைத் தடுமாறிப் பின்னால் சரிந்தான் அவன்.

அதே பந்தை பிடிக்கப் பார்வையை மேலே பதித்து முன்னோக்கி வந்து கொண்டிருந்தார் ரெட்டி. அவர் வந்த வேகத்தில் நிரஞ்சனின் மேல் பலமாக மோதி இருந்தார். தவிர்க்கவே முடியாத மோசமான விபத்து. இது விளையாட்டில் அடிக்கடி நிகழும் ஒன்றும் கூட.

நிரஞ்சனின் பின்னந்தலை, ரெட்டியின் கால் முட்டியில் மோதிய நிமிடம், வலி தாளாமல் முகத்தைச் சுளித்தான் நிரஞ்சன்.

நந்தனாவிற்கு அவனது வலியை முழுவதுமாக உணர முடிந்தது.

தரையில் மல்லாக்க கிடந்த நிரஞ்சன் கண்களை மூடி மூடித் திறந்தான். உடலை அசைத்து எழுந்திருக்க முயன்றான். ஆனால், அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை.

சக வீரர்கள் ஓடி வந்து தரையில் கிடந்த இருவரையும் தூக்கி விட, கை, கால் உதறிச் சகஜமாக நடக்கத் தொடங்கினார் ரெட்டி. ஆனால், இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்த நிரஞ்சன், “ஐ டோண்ட் ஃபீல் குட்” என்றான். அவ்வளவு தான், மயங்கி சரிந்திருந்தான்.

கால் முட்டியில் பின்னந்தலை மோதியது தான் காரணம் என அவளுக்குப் புரிந்தது. அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் என்பதும் அவளுக்குப் புரியத்தான் செய்தது.

கிரிக்கெட்டில் இது போன்ற எத்தனை விபத்துகளை அவள் பார்த்திருப்பாள்? ஆனால், அது நிரஞ்சனுக்கு என்று வரும் போது அவள் மனம் பதறியது.

அவனுக்குப் பெரிதாக ஒன்றும் இருக்கக் கூடாது. சாதாரண அடியாகத் தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் தனக்குத் தெரிந்த அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி அமர்ந்திருந்தாள் அவள்.

“நந்து” என்ற அழைப்பில் அவள் தலை தானாக நிமிர, அங்கே சுகாஸ் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் கண்கள் கலங்க எழுந்து நின்றாள் நந்தனா.

“நிரஞ்சன்.. நிரஞ்சன்.. அவருக்கு என்னாச்சுன்னு தெரியல சுகாஸ். டெஸ்ட்ஸ் எடுக்கக் கூட்டிட்டு போனாங்க. ஒன்னுமே சொல்லல. யார்கிட்டயும் போய்க் கேட்க பயமா இருக்கு. ரிசல்ட்ஸ் இந்நேரம் வந்திருக்கும் இல்ல? நீ கேட்டு சொல்றியா?” படபடவென்று பதறினாள் அவள்.

“நான் முன்னாடியே அவருக்கு ஓகே சொல்லி இருக்கணும் இல்ல? அவர் சொன்னது போல டூ லேட் ஆகிடுமா சுகாஸ்?”

“லூசு மாதிரி பேசாத நந்து. அவனுக்கு ஒன்னுமில்ல. இதைப் பாரு” என்று அவனது அலைபேசியை அவளிடம் நீட்டினான் அவன்.

அதிலிருந்த தகவலை வாசிக்க வாசிக்க அவளின் விழிகள் பயத்திலும், அதிர்ச்சியிலும் விரிந்து கொண்டே போனது. அழுது விடாமலிருக்க, உதட்டை அழுத்தமாய்க் கடித்தாள் அவள்.

நிரஞ்சனின் டிவிட்டர் பக்கம் திறந்திருக்க, அதில் பத்து நிமிடங்களுக்கு முன் தான் ஒரு டுவீட் போடப்பட்டிருந்தது.

“நலமாக இருக்கிறேன். உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. கன்கஷன் மற்றும் நினைவாற்றல் இழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். (Concussion with memory loss). ஆனால், விரைவில் நலமாக ஆடுகளத்தில் இருப்பேன் என்று நம்புகிறேன். அனைவருக்கும் அன்பு” என்று இருக்க, அலைபேசியை இறுகப் பற்றினாள் நந்தனா.

“அவனோட மேனஜர் டுவீட் பண்ணியிருக்கணும். மேட்ச் இப்ப தான் முடிஞ்சது, நான் வெளில வரும் போது கோச் நியூஸ் சொன்னார். அதான் நேரா இங்க வந்தேன். நீ ஓகே தானே?” சுகாஸ் பேசும் மொழியே புரியாதது போல அவனை மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள் நந்தனா.

“மெமரி லாஸ்?” அவளால் நம்பவே முடியவில்லை. எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருப்பான்? எனை நினைவிருக்குமா?

‘எங்களுக்கு இது நடந்திருக்க வேண்டாம்’ என்று அடித்துக் கொண்டது அவள் மனம்.

“ஜஸ்ட் டெம்ப்ரவரி மெமரி லாஸா இருக்கும் நந்து. பயப்படுற அளவுக்கு இருக்காது. இந்த மாதிரி இதுக்கு முன்னாடி எத்தனை தடவை நடந்திருக்கு. உனக்கும் தெரியும் தானே?”

“ஆனா, நிரஞ்சனுக்கு நடந்தது இல்லையே?” என்றவளின் விழிகளில் இருந்த கலக்கம் அவனைக் கரைக்க, அவளின் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான் சுகாஸ்.

அப்படியே அவளை நிரஞ்சனை பார்க்க அழைத்துச் சென்றான் அவன்.

“சுகாஸ், எனக்கு..”

“நார்மலா இரு நந்து.” அதட்டினான். அங்கிருந்த செவியலர்களிடம் பேசி விட்டு அவளை முதலில் உள்ளே செல்லுமாறு கைக் காட்டினான்.

“நீயும் வா” என்றாள், அவள். சிறுபிள்ளையைப் போல. அவளின் இதயம் இலக்கில்லாமல் துடித்துக் கொண்டிருந்தது.

நிரஞ்சனை படுக்கையில், நோயாளியாகக் காண தன்னால் நிச்சயமாக முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.

“போ, நந்து. போய்ப் பார். அவன்கிட்ட பேசு.” அறைக் கதவை லேசாகத் திறந்து அவளை உள்ளே தள்ளி விட்டான் சுகாஸ்.

அறைக்குள் நுழைந்தவளின் பார்வை கண் மூடி படுத்திருந்த நிரஞ்சனின் மேல் விழுந்தது. அவனிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை. முகம், தலை, உடல் முழுவதும் பார்வையை ஓட்டினாள். இரத்தம், கட்டுகள் என எதுவுமில்லை.

அவளையும் அறியாமல் அனிச்சையாய் பெருமூச்சு ஒன்று பெரிதாக வெளிவந்தது.

அறைக்குள் இருந்த மருத்துவக் குழு, அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, “ரொம்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவருக்கு ரெஸ்ட் தேவை” என்று சொல்லி விட்டு செல்ல, அவளின் தலை தானாக ஆடியது.

மெல்ல எட்டுகள் எடுத்து வைத்து அவன் அருகில் சென்றாள். அவன் உறக்கத்தில் இருப்பது போலிருக்க, அவனது படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையை அவனுக்கு நெருக்கமாக இழுத்துப் போட்டு அமர்ந்தாள் நந்தனா.

அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். ஐந்து நட்சத்திர விடுதி அறையைப் போலிருந்தது. மருத்துவ உபகரணங்கள் மட்டுமே அது மருத்துவமனை அறை என்று நம்ப வைக்கும் படியாக இருக்க, அவளுக்கு அவஸ்தையான உணர்வு.

அறையை நிறைத்திருந்தது விசித்திரமான அமைதி, அவளுக்கு அதில் நீரை வாரி இறைத்து அந்த அமைதியை கலைக்க வேண்டும் போலிருந்தது.

“டாக்டர்” என்ற நிரஞ்சனின் மெல்லிய அழைப்பு, அவளைத் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வைத்தது.

அவளையா மருத்துவர் என்று அழைத்தான்? அதிர்ந்துப் போனாள் அவள்.

“நிரஞ்சன்..”

“உங்களைப் பார்க்க டாக்டர் மாதிரி இல்லையே?” என்றான் கரகரத்த குரலில், அந்தக் குரல் அவளை என்னவோ செய்தது. அதைக் காட்டிலும் அவளை, அவனுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது அவளது மனதை சுக்கு நூறாக உடைத்துப் போட்டது.

“தண்ணி வேணும்” என்றான் அவள் முகத்தில் இருந்து பார்வையை அகற்றாமல்,

“ஒரு நிமிஷம்..” அப்படியொரு ஒரு வேகம் அவளிடம் அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாள். மின்னல் வேகத்தில் வெளியில் சென்று செவிலியிடம் அவனுக்குத் தண்ணீர் கொடுக்கலாமா என்று விசாரித்து, கையோடு குளிர்ந்த நீரும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் அவள்.

“குடிங்க” என்று நீட்ட, ‘எப்படி?’ என்பது போலப் புருவம் உயர்த்தினான் நிரஞ்சன்.

மெதுவாக அவனுக்குக் கைக் கொடுத்து, அவன் படுக்கையில் சாய்ந்து அமர உதவினாள் அவள்.

“நீங்க?…” அவன் இதழ்களும், கண்களும் ஒரே கேள்வியைக் கேட்க, என்ன பதில் சொல்வாள் அவள்?

‘நீ மணக்க விரும்பிய பெண் நான்? உன்னை மணக்க மறுத்த பெண் நான்?’ பதிலை யோசிக்கும் போதே நெஞ்சை அடைக்க, மேலே அவனைப் பேச விடாமல், தண்ணீர் நிறைந்த கோப்பையை அவன் உதட்டில் வைத்து அழுத்தினாள் நந்தனா.

“போதும்” என்று அவன் கைக் காட்ட, எட்டி கோப்பையைப் படுக்கைக்குப் பக்கத்திலிருந்த மேஜையில் வைத்தாள் நந்தனா, லேசாகத் தொண்டையைச் செருமினான் நிரஞ்சன்.

“எங்க வீட்டுக்கு…”

“சொல்லியாச்சு. உங்க அப்பா வந்துட்டே இருக்காங்க. என்.. என்னோட அப்பாவும் வர்றார்” என்றாள் மெலிதான தயக்கத்துடன்,

“எங்க அப்பாவை உங்களுக்குத் தெரியுமா? முதல்ல என்னை எப்படித் தெரியும்? நீங்க எனக்கு என்ன வேணும்? யார் நீங்க?” அவன் கேட்க, கேட்க, அவனையே இமைக்காமல் பார்த்தாள் நந்தனா.

அவளது மூளை அதிர்ச்சியில் வேலை நிறுத்தம் செய்திருந்தது.

‘உண்மையாகவே இவன் என்னை மறந்து விட்டானா? என்ன சொல்லி என்னைப் புரிய வைப்பேன் நான்?’ உள்ளுக்குள் உடைந்துக் கொண்டிருந்தாள் அவள்.

“அழுதீங்களா?”

“இல்லை” என்று வேகமாகத் தலையசைத்தவள்,

“நான்.. நான், நந்தனா. உங்க.. நமக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு” அவனது கண்களை நேராகச் சந்திக்காமல், தடுமாற்றத்துடன் அவள் சொல்ல,

“அப்படியா? உங்க கைல மோதிரம் இல்லையே? என் கைலயும் ரிங் எதுவும் இல்ல? அப்புறம் எப்படி? நம்ம எங்கேஜ்மென்ட் ஃபோட்டோ இருக்கா? காட்டுங்க பார்ப்போம்?”

விழிகளில் கூர்மையுடன் அவன் கேட்க, திணறினாள் நந்தனா.

அவளின் அலைபேசியை எடுத்து மிகுந்த தயக்கத்துடன் அந்தப் புகைப்படத்தை அவனிடம் காட்டினாள் அவள். ஒரு கணம் அவன் விழிகள் பளிச்சிட்டதோ?

அவனைக் கண்களைச் சுருக்கி யோசனையுடன் பார்த்தாள் அவள். உணர்ச்சிகளற்ற கண்களுடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

சுகாஸின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம். இருவரும் அணைத்தபடி நின்ற தெளிவான புகைப்படம்.

“வேற? இந்த ஒரு ஃபோட்டோ தான் இருக்கா? நாம செல்ஃபி எதுவும் எடுக்கல? அப்புறம், இது நம்ம எங்கேஜ்மென்ட் மாதிரி இல்லையே?” அவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அவளுக்குத் தலை வலித்தது.

அலைபேசியை அவன் கைகளில் இருந்து வாங்கி, வேறொரு புகைப்படத்தை வைத்துக் கொடுத்தாள்.

“ஹேய், இது சுகாஸ். அவனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?” என்று அவன் உற்சாகமாகக் கேட்க,

“அவனை ஞாபகம் இருக்கா, உங்களுக்கு?” அதிர்ச்சியுடன் கேட்டாள் நந்தனா.

‘என்னை மட்டும் தான் தெரியலையா இவனுக்கு? வேணும்னு பண்றானா?’ அவளின் ஆராய்ச்சி மூளை அப்போதும் தன் வேலையைக் காட்ட, கண்களைச் சுருக்கி அவனைச் சந்தேகத்துடன் பார்த்தாள் நந்தனா.

“எஸ். என்னோட டீம் மேட். நாங்க அண்டர் – 19 வேர்ல்ட் கப் வின் பண்ணோம்”

“ரொம்ப முக்கியம்” என்று முணுமுணுத்தாள் அவள்.

“என்ன சொன்ன?”

“இதைப் பாருங்க” என்று மீண்டும் அவள் அலைபேசியை நீட்ட, அதில் அவர்களின் திருமணம் குறித்த செய்தி வெளியாகியிருந்த பக்கம் திறந்திருந்தது.

“ஓ…” என்றான் நிரஞ்சன், கண்களில் குழப்பத்துடன்.

அவளுக்கு அந்தச் சூழலே குழப்பமாகத் தான் இருந்தது, மிக மோசமான கனவு போலிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top