உணவுடன் தட்டை நகர்த்தி வைத்து விட்டு அப்பாவை, ‘ஏன் ப்பா’ என்ற கேள்வியுடன் பார்த்தாள் அவள். காரணம் தெரிந்தும் கேட்கப்படும் கேள்வி. அவரும் பதில் சொல்லவில்லை.
“என்ன பார்வை ரெண்டு பேருக்கும்? அப்பாவும், பொண்ணும் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க? பதில் சொல்லுங்க. இப்போ ஒழுங்கா மாப்பிள்ளையை வீட்டுக்கு கூப்பிட்டு பேச போறீங்களா இல்லையா?”
பூர்ணிமா சத்தமாகக் கேட்க, மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“பூரணி, கொஞ்ச நாள் ஆகட்டும். நாமளே நந்துக்கு வேற நல்ல பையனா பார்ப்போம்”
“ஏன், ஏன்? அந்த நிரஞ்சனுக்கு என்ன குறை? கிரிக்கெட்ல தானே இருக்கார். இவளை நல்லா பார்த்து…”
“அதான் பிரச்சினையே பூரணி. அவரும் கிரிக்கெட்ல இருக்கார். இது சரி வராது. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?” என்று கத்திய கார்த்திகேயன், “என் பொண்ணு என்னைக்குமே அனலிஸ்ட் நந்தனாவா தான் இந்த உலகத்துக்குத் தெரியணும். நிரஞ்சன் மனைவி நந்தனாவா இல்ல” என்று சொல்லி முடிக்கும் முன்,
“ஓஹோ..” என்றார் பூர்ணிமா கோபமாக,
“பொண்டாட்டிக்கு ஒரு நியாயம். மகளுக்கு ஒரு நியாயமா? அதென்ன நான் மட்டும் இத்தனை வருஷமா கார்த்திகேயன் பொண்டாட்டி பூர்ணிமாவா தான் இருக்கேன். அதுல உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, மகளுக்குன்னு வரும் போது ரூல்ஸ் எல்லாம் தலைகீழா மாறுது” அவர் கையைக் கட்டிக் கொண்டு கேட்க, நந்தனா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, எழுந்து போய்க் கை கழுவி வந்தாள்.
“நானா உன்னை வேலைக்குப் போக வேணாம் சொன்னேன் பூரணி. நீயே தான்..”
“ஹான்.. எப்பவும் இதை மட்டும் சரியா சொல்லி சமாளிச்சிடுங்க. ஓவியம் போல ஒரு பொண்ணைப் பெத்து, அவளை ரசிச்சு என் ஆசைக்கு வளர்க்க முடிஞ்சுதா என்னால? எப்பவும் உங்க ராஜியம் தான்.” பூர்ணிமாக்குக் கண்கள் கலங்கியது.
“நந்து குழந்தையில் இருந்தே அப்பா, அப்பானு உங்க பின்னாடி தான் திரிஞ்சா, பொம்பளை பிள்ளைக்கு விளையாட பார்பி டால் வாங்கிக் கொடுக்காம, கிரிக்கெட் பேட், பால் வாங்கிக் கொடுத்தீங்க. வீட்டுக்குள்ள ரெண்டு பேரும் சேர்ந்து கிரிக்கெட் ஆடி எத்தனை பொருளை உடைச்சுருப்பீங்க. உங்க கூட உட்கார்ந்து அவளும் எந்நேரமும் கிரிக்கெட் பார்த்துட்டே இருந்தா. இந்த வீடு கிரிக்கெட் சத்தம் இல்லாம ஒரு நாளாவது அமைதியா இருந்திருக்குமா? நீங்க வீட்ல இருந்தாலும், இல்லனாலும் வீட்ல கிரிக்கெட் தான் ஓடிட்டு இருந்தது.
கடைசில என்னாச்சு? பத்து வயசுல ஷர்மா பவுலிங்கையும், சச்சின் பேட்டிங்கையும் பத்தி பேசினா உங்க பொண்ணு. அன்னைக்கு அவளை உச்சி முகர்ந்தீங்க. அவளுக்குப் பிடிச்ச விஷயத்துல உங்களை இன்னும் இம்ப்ரஸ் பண்ண, படிப்பை விடக் கிரிக்கெட்டை தான் அதிகம் படிச்சா அவ. தெரு பசங்க கூடப் போய்க் கிரிக்கெட் ஆடினதில தொடங்கி, உங்க ஸ்டூடண்ட்ஸ் கூடக் கிரிக்கெட் ஆடுறதுன்னு போய், கடைசியா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிச்சு, சிவராஜ் அண்ணா இன்ஸ்டியூட்ல அனலிஸ்ட் கோர்ஸ் முடிச்சு, ட்ரைனிங் எடுத்து.. இங்க வந்து நிக்கிறா. அதுல எனக்குச் சந்தோசம் தான், பெருமை தான். அதுனால தான், நான் உங்க ரெண்டு பேருக்கும் இடைல என்னைக்கும் வந்ததே கிடையாது”
“ஆனா, ஒரு சாதாரண அம்மாவா எனக்கும் என் பொண்ணைக் கல்யாணம், குழந்தை, குடும்பம்னு பார்க்க ஆசை இருக்காதாங்க? சொல்லுங்க. உங்களுக்கு மகன் இல்லைனு மகளை நீங்க உங்க ஆசைக்குக் கிரிக்கெட்குள்ள இழுத்துக்கிட்டீங்க..”
“மகன் வேணாம்னு நானா சொன்னேன் பூரணி. நந்துக்கு அடுத்து ஒரு மகன் பெத்துருக்கலாம் தான். நீ தான் விடல” கார்த்திகேயன் மனைவியின் பக்கம் சாய்ந்து முணுமுணுக்க, அந்த வயதிலும் அழகாக வெட்கப்பட்டார் பூர்ணிமா.
“பச், விவஸ்தை இல்லாம. அப்போ பால், பேட்டுன்னு சுத்திட்டு, பொண்டாட்டி பின்னாடி சுத்த உங்களுக்கு நேரமில்லை. இப்போ, பொண்ணு பக்கத்துல இருக்கும் போது பேச்சை பாரு.” என்று கணவரை முறைத்தவர், “பேச்சை மாத்தாதீங்க” என்றார் சத்தமாக.
நந்தனா கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்திருக்க, “நந்து, அப்பா சொல்றதை தான் எப்பவும் கேட்கணுமா? அம்மா சொல்றதையும் ஒரு முறை கேளு டா. அவரும் கிரிக்கெட்டில் தான் இருக்கார். அவரை விட உன்னோட வேலையை யாரால புரிஞ்சுக்க முடியும். சொல்லு? அப்பா பேச்சை கண்ணை மூடிட்டு கேட்காம, கொஞ்சம் என் பேச்சை கேட்டு..” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“வாயை மூடு பூரணி. என் மகளுக்கு நிரஞ்சன் வேண்டாம். சரி வராது” என்று கத்தினார் கார்த்திக்கேயன்.
“அதை நீங்க சொல்லாதீங்க, கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தப் போற அவ சொல்லட்டும்” என்று பதிலுக்குப் பூர்ணிமா குரலை உயர்த்த, நந்தனா பெற்றோரை பார்ப்பதை தவிர்த்தாள்.
“அவ தான் பதில் சொல்றாளே பூரணி. உனக்குத் தான் புரியல” என்ற கணவரை கொலை வெறியுடன் பார்த்தார் பூர்ணிமா.
“ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் வேண்டாம் வேற படின்னு சொன்னேன். கேட்டாளா உன் பொண்ணு? அன்னைக்கு அதான் படிப்பேன்னு என் கூட எவ்வளவு வாதாடியிருப்பா? இன்னைக்கு நிரஞ்சன் உனக்கு வேணாம்மான்னு சொல்றேன். அவ விரும்பியும் கூடக் காரணமே கேட்காம, அமைதியா என்னோட முடிவை ஏத்துக்கறா? ஏன்னு யோசிச்சியா பூரணி? மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திட்டுப் போனார். அதைப் பத்தி ஒரு வார்த்தை கேட்டு இருப்பாளா? அவளுக்கு என்னோட முடிவு சரின்னு படுது. அதான் அமைதியா அதை ஏத்துக்கறா..” கண் மூடி அமர்ந்திருந்த மகளை அவர் கைக்காட்டி சொல்ல, மகளை அதிர்ச்சியாய் பார்த்தார் பூர்ணிமா.
“நந்து” என்று அவர் அழைக்க,
“என் முடிவுல அவளுக்குக் கோபம்னா ஏன் இப்படி அமைதியா இருக்கப் போறா உன் பொண்ணு”
“எனக்குப் புரியல. மாப்பிள்ளை, அந்தப் பையன் நிரஞ்சன், நல்லவர் தானே? அப்புறம் ஏன் வேணாம் சொல்றீங்க? அவர், அவரைப் பத்தி தப்பான நியூஸ் எதுவும் கிடைச்சதா?” தாயாகப் பூர்ணிமா பதற,
“இல்ல பூரணி. அவர் ரொம்ப நல்ல பையன் தான். நான் ஏற்கனவே சொன்னது தான் காரணம். ரெண்டு பேரும் கிரிக்கெட்..” அவர் முடிக்கும் முன்பே, “ஐயோ.. இதையே சொல்லாதீங்க. எனக்கு மண்டை வெடிக்குது” என்று கத்தினார் பூர்ணிமா.
“நம்ம கேப்டன் யாரை கல்யாணம் பண்ணி இருக்கார் பூரணி?”
“நடிகையைத் தானே, அதுக்கு?”
“அந்த நடிகை மேட்ச் பார்க்க வந்தா என்ன நடக்கும் தெரியுமா? கேப்டனோட பர்பாமென்ஸ், சக்சஸ், ஃபெயிலியர் எல்லாத்துக்கும் அவரோட பொண்டாட்டியை தான் பேசினாங்க, விமர்சனம் பண்ணாங்க. இப்பவும் பண்றாங்க. அப்படியிருக்கும் போது, நாளைக்கு..” கணவரின் வார்த்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கினர் பூர்ணிமா. மேலே கணவர் சொன்னவற்றை அவரால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.
“நம்ம பொண்ணோட முடிவை தான் நிரஞ்சன்கிட்ட நான் சொன்னேன் பூரணி. அவ முடிவை மாத்தினா, நிரஞ்சனை நம்ம வீட்டு மாப்பிள்ளையாக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் கார்த்தியேன் முடிவாக.
இறுதியில் பூர்ணிமாவும் கணவரின் முடிவை தான் ஆதரிக்க வேண்டியிருந்தது.
மகளின் சோகமான முகத்தைக் காண்கையில் மனதை என்னவோ செய்ய அவளை நெருங்கி இறுக அணைத்துக் கொண்டார் அவர்.
“அந்த ஃபோட்டோ அவ்ளோ அழகா இருந்தது நந்து குட்டி. நீ அவரைத் தான் விரும்பறேன்னு ஏற்கனவே எனக்குத் தெரிஞ்சதால, அந்த ஃபோட்டோ பார்த்து எனக்கு வருத்தமே இல்ல டா.” என்ற அம்மாவின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள் நந்தனா.
“கல்யாணம் ஒரு நாள் கூத்து தான். ஆனா, அந்தப் பந்தம் ஆயுசு முழுக்க உன் கூடவே வரும். நீயே நல்லா யோசிச்சு முடிவெடு நந்து குட்டி. எங்களுக்கு உன் சந்தோசம் தான் முக்கியம். நீ நிம்மதியா இருந்தா தான் நாங்களும்..”
“அம்மா..” என்ற மகளின் அழைப்பு அவரை மேலே பேச விடவில்லை. அணைப்பின் வழியே அழுத்தமாக, அவளுக்குத் தேவையான ஆறுதலை தந்தார் அவர்.
நந்தனா தன் முடிவில் உறுதியாக நின்றாள். ஆனால், அவளும் தன் முடிவை மாற்றிக் கொள்ளும் நாளும் வரத் தான் செய்தது.
நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்க, நிரஞ்சனை கிரிக்கெட் ஆக்கிரமித்துக் கொண்டது. அவனது காயம் முழுவதும் குணமாகி, என்ஓசி (NOC) வாங்கி இருக்க, மீண்டும் இந்திய அணி ஆடிய அத்தனை சர்வதேச போட்டிகளிலும் இருந்தான் அவன்.
நந்தனா அவனை அடிக்கடி பார்க்க நேரிட்டாலும், பேச முடியவில்லை. நிரஞ்சன் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முற்றிலுமாகத் தவிர்த்தான் அவன். அது வலித்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவள்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்குத் தேவையான வீரர்களின் ஏலம் விரைவில் நடக்க இருந்ததால், அதற்கான வேலையில் மூழ்கியிருந்தாள் அவள்.
சென்னை அணியின் நிர்வாகத்தினருடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்தது அவர்கள் குழு. அவளுக்குக் கூடுதலாக அவளது வழக்கமான வேலைகளும் இருக்க, முடிந்த வரை தன்னை அதில் மூழ்கடித்துக் கொண்டாள்.
ஆனால், அது அத்தனை எளிதாக இல்லை.
ஒவ்வொரு காணொளியையும் ஓட விட்டு, குறிப்புகள் எடுக்கையில் திணறி போனாள் அவள்.
நிரஞ்சனின் பேட்டிங், பவுலிங் அதன் நிறை, குறைகள் எதுவும் அவளது கண்ணுக்கு புலப்படவில்லை. மாறாகத் திரை முழுவதும் தெரிந்த அவன் முகம் மட்டுமே அவளை வசீகரித்து நிறைத்தது.
அவளுக்கே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. முட்டாளை போலத் தோன்றினாள் அவள்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான அன்றைய போட்டியை முடித்து விட்டு, தனது காரை நோக்கி நடந்து கொண்டிருந்தான் நிரஞ்சன். அங்கே வழியில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாவின் முன் ஒரு நொடி நின்றவன், பேச்சுகள் இன்றி அவளது காஃபி கோப்பையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அவளின் மனசஞ்சலங்கள் அனைத்தும் விலகி, மனதார புன்னகைத்தாள் நந்தனா.
ஆனால், மறுநாள் அதைத் தடம் தெரியாமல் துடைத்து எறிந்தான் நிரஞ்சன்.
மறுநாள் மாலை நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்ய, இந்திய அணி வீரர்கள் வியர்வையில் நனைந்தபடி மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தனர்.
ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் எதிரணியின் வில்லியம் வீசப்பட்ட, பந்தை களத்தில் இறங்கி ஓங்கி அடிக்க, பந்து மிக உயரமாகச் சென்று கொண்டிருந்தது.
தன்னை நோக்கி வந்த பந்தை பிடித்து விடும் நோக்கில், பந்தின் மேல் பார்வையைப் பதித்துப் பின்னோக்கி நடந்தான் நிரஞ்சன்.
பந்து நேராக அவன் கைகளில் வந்து விழுந்தது. பின்னோக்கி ஓடி அதைப் பிடித்த வேகத்தில் நிலைத் தடுமாறி அப்படியே நிரஞ்சனும் விழுந்தான்.
“அவுட்…” என்ற ஆரவாரம் எழுந்து அடங்கிய பின்னும், தரையில் விழுந்த நிரஞ்சன் எழுந்திருக்கவில்லை.
கேமரா கண்களின் வழியே ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாவின் கண்கள் ஒரு கணம் அப்படியே நிலைக் குத்தி நின்று விட்டது. மறுகணமே சுதாரித்து, எழுந்து ஓடினாள் அவள்.
ஆட்டத்தைப் பத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தது. அத்தனையும் அப்போது நிரஞ்சனை தான் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த நிமிடம் எதுவுமே நந்தனாவிற்குப் பொருட்டாகப்படவில்லை. உலகம் மறைந்து நிரஞ்சன் மட்டுமே அவள் கண்களுக்குத் தெரிந்தான்.
கண் மண் தெரியாத வேகத்தில் மைதானத்திற்குள் நுழைந்தாள் அவள்.
அதற்குள் அவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டிருந்தது. மெல்ல எழுந்து இரண்டு அடிகள் கைத் தாங்கலாக நடந்து வந்த நிரஞ்சன், அப்படியே மயங்கி சரிந்தான்.
நந்தனாவின் விழிகளில் இருந்து கண்ணீர் தானாக வழிய, உறைந்து நின்றாள் அவள்.
ஆட்டம் தொடரும்…