இனியொரு பிரிவேது – 8 (1)

“என்னடா தம்பி பண்ணிட்டு வந்திருக்க? இது உனக்கே நல்லாயிருக்கா?”

அங்கலாய்த்தார் கிருஷ்ணகுமார். தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன் முன்னிருந்த பிரியாணியை ரசித்து உண்பதில் கவனம் செலுத்தினான் நிரஞ்சன்.

“ஏன்பா, இங்க நின்னுட்டு சாப்பிட்டுட்டு இருக்க. ஒழுங்கா ஒரு டேபிள்ல‌ போய் உட்கார்ந்து சாப்பிட்டா என்ன? நீ பண்ற எதுவும் சரியில்ல”

மதிய உணவை ஹோட்டலின் கிட்சனில் நின்று உண்டு கொண்டிருந்தான் நிரஞ்சன். சுவரில் சாய்ந்து நின்று கையில் தட்டை ஏந்திக் கொண்டு, உண்டவனைப் பார்க்க பெற்றவருக்குத் தாளவில்லை.

ஆனால், அவனோ,

“ஆமா ப்பா, நான் பண்ற எதுவுமே சரியில்ல தான். என்ன பண்ண சொல்றீங்க? வெளில போய் உட்கார்ந்து சாப்பிட்டா, கஸ்டமர் எல்லாம் என்னைச் சுத்தி தான் நிப்பாங்க. அப்புறம் அதுக்கும் கத்துவீங்க.” என்றவன்,

“வேற என்ன பண்ணிட்டேன்னு இப்போ கோபமா இருக்கீங்க?” வாயில் பிரியாணியைத் திணித்தபடியே அவன் கேட்க,

“சுகாஸ் கல்யாணத்துக்கு நீ போயிருக்க வேண்டாம். அங்க, மருமக..”

சட்டென நிரஞ்சன் அவரை முறைக்க,

“என்னை ஏன்டா முறைக்கற? அந்தப் பொண்ணைத் தனியா விட்டுட்டு வந்துட்ட நீ, மும்பையில் இருக்காங்க வேற. மீடியா தொல்லை அதிகமா இருக்கும். எப்படித் தனியா கேள்வியைச் சமாளிக்கும் மருமக?”

“முதல்ல மருமக, மருமகன்னு சொல்றதை நிறுத்துங்க ப்பா. அவளைப் பத்திரமா மும்பையில் விட்டுட்டு தான், நான் சென்னை ப்ளைட் ஏறினேன். அவ, அவங்க அப்பா கூடப் போய்ட்டா.” என்று கோபமாக ஆரம்பித்தவன்,

“அவ, அவ என்னை.. கல்யாணம் பண்ணிக்க முடியாது சொல்லிட்டா ப்பா” என்று குரல் உடைய சொல்ல,

“ஆமா. இப்ப தான் சொன்னாங்க பாரு. அதான், அவங்க அப்பா தெளிவா அன்னைக்கே சொல்லிட்டாரே” என்று அவர் முணுமுணுக்க, தந்தையை முறைத்து விட்டு,

“ரமேஷ் ண்ணா, கொஞ்சமா சோறும், மீன் குழம்பும் தாங்க ண்ணா” என்று நிரஞ்சன், கிட்சனிற்குள் தலை நீட்டி கத்த,

“அது வயிறா இல்ல வேற..” மகனின் முறைப்பில் தான் சொல்ல வந்ததை முடிக்கவில்லை கிருஷ்ணகுமார்.

“இருங்க ப்பா. அம்மாக்கு கால் பண்றேன். இப்போ நீங்க சொன்னதை அப்படியே சொல்றேன். பிள்ளை சாப்பிடுறதை பார்த்து கண்ணு வைக்கறீங்கன்னு உங்களை நல்லா கவனிப்பாங்க”

அவனுக்குப் பக்கத்தில் காலியான மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் பெப்பர் ஃப்ரை தட்டுகள் இருக்க, மேலும் சோறும், குழம்பும் கேட்கும் மகனை கரிசனத்துடன் பார்த்தார் அந்தத் தந்தை.

மனஅழுத்தம் அவனை இப்படி உண்ண வைக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.

“வீட்ல உங்கம்மா உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கா தம்பி. நீ இங்க உட்கார்ந்து சோறையே பார்க்காதவன் மாதிரி சாப்பிட்டுட்டு இருக்க. மருமக வீட்ல இன்னொரு முறை பேசிப் பார்ப்போமா தம்பி?” அந்தக் கேள்வியில் சாப்பிடுவதை நிறுத்திய நிரஞ்சன், பட்டென்று தட்டை மேடையில் வைக்க,

“இல்லப்பா, நான் வேணும்னா மருமக கிட்ட நேரா பேசி பார்க்கவா?”

அமைதியாய் சென்று கையைக் கழுவி விட்டு வந்தான் நிரஞ்சன்.

“இந்த மாதிரி ஒரு ஃபோட்டோ வர்ற அளவுக்கு.. தப்பு தம்பி. உனக்கு ஒன்னுமில்ல. நந்தனா..”

“அந்தப் பேரை சொல்லாதீங்க ப்பா. வேணாம். நீங்க எதுவும் பண்ண வேணாம். எனக்காக யாரும், எதுவும் பண்ண வேணாம்” தந்தையின் முகம் பார்க்காமல் சொன்னவன்,

“நான் பண்ணது தப்பு தான். சுகாஸ் கல்யாணத்துக்கு நான் போய் இருக்கக் கூடாது. சாரி ப்பா.” என்று சொல்ல, மகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் கிருஷ்ணகுமார்.

“நீ சின்னப் பையன் இல்ல நிரஞ்சன். உனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும், சரியான முடிவை எடு. இது உன் வாழ்க்கை” என்று அவர் சொல்லி விட்டு செல்ல, அவனது தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறி இறங்கியது.

உணவின் கலவையான மணங்கள், அவன் மனதின் கலவையான உணர்வுகளை ஒத்திருக்க, சூனியத்தை வெறித்தபடி அங்கேயே நின்றிந்தான் நிரஞ்சன்.

“அம்மா, அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசி பார்க்கலாம்னு சொல்றா தம்பி” சென்னையில் கிருஷ்ணகுமார் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்த அதே கேள்வியைத் தான், மும்பையிலும் கேட்டுக் கொண்டிருந்தார் கார்த்திகேயன்.

“அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசவா நந்து?” உணவை சுவாரசியமின்றி உண்டு கொண்டிருந்த மகளிடம் கார்த்திகேயன் கேட்க, மகளை முந்திக் கொண்டு பதில் சொன்னார் பூர்ணிமா.

“ஓ, இப்போ அவங்க வீட்டுக்குப் போகப் போறீங்களா? உங்களுக்குத் தேவை வரும் போது போவீங்க. போங்க, போங்க. உங்களுக்காகத் தான் ஆரத்தி தட்டோட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று அவர் நக்கலாகச் சொல்ல, மனைவியை முறைத்தார் கார்த்திகேயன்.

“பின்ன என்னங்க? வீடு தேடி வந்தவங்களை என்னெல்லாம் கேள்வி கேட்டீங்க நீங்க? பொண்ணு கொடுக்க முடியாதுன்னு அவ்ளோ கறாரா சொல்லி அனுப்பிட்டு, இப்போ போய் அவங்க வீட்டு வாசல்ல நிப்பீங்களா? உங்களுக்குக் காரியம் ஆகணும்னா போய்க் கால்ல விழுறேன்னு சொல்றீங்க. இதை அன்னைக்கு அவங்களை அவமானப்படுத்தி அனுப்பும் முன்ன யோசிச்சு இருக்கணும்”

“பூரணி..”

“என்ன பூரணி? உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் ஆளில்ல.” என்று கணவரை பார்த்து அசட்டையாய் சொன்னவர், மகளின் தட்டில் கொஞ்சம் சாதம் வைத்து, தயிர் ஊற்றி, சேனைக்கிழங்கு வறுவலை வைத்தார்.

இன்னும் குழம்பு சோற்றையே உண்டு முடிக்காமல் பிசைந்துக் கொண்டிருந்தாள் நந்தனா.

“சாப்பிடு நந்து” பூர்ணிமா அதட்ட, அம்மாவின் முகத்தைக் குற்ற உணர்வுடன் ஏறிட்ட நந்தனா, “சாரி ம்மா” என்றாள்.

“விடு, விடு. எத்தனை தடவை அதையே சொல்லுவ.” என்று மகளின் தலைக் கோதிக் கொடுத்தவர்,

“அந்த ஃபோட்டோவை நெட்ல இருந்து எடுக்கச் சொல்லி இருக்கலாம் இல்ல நந்து” என்று கேட்க, மௌனமாய் ஒரு நொடி தட்டை வெறித்தாள் நந்தனா.

“அந்த ஃபோட்டோவை ஏன் மா எடுக்கணும்? நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்? அப்படி அதுல என்ன தப்பாயிருக்கு? பார்க்கட்டுமே. உலகம் பார்க்கட்டுமே ம்மா. யாருக்கோ பயந்து, யாரோ தப்பா பேசுவாங்கன்னு பயந்து, நான் தப்பு பண்ணினதா ஏன் பயப்படணும் ம்மா?”

“உங்களுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும், என் பிரெண்ட்ஸ், எனக்கு நெருக்கமானவங்க எல்லோருக்கும் என்னைப் பத்தி தெரியும் மா. வேற யாருக்கு நான் என்னை நிரூபிக்கணும்? வேலை வெட்டி இல்லாம, எங்கேயோ ஜாலியா உட்கார்ந்துட்டு, மொபைல்ல காஸிப் படிக்கிற யாருக்கோ நான் ஏன் பயப்படணும் மா? அவங்க என்ன நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை”

“அவங்களுக்குப் பயந்து, இந்த ஃபோட்டோவை ரிமூவ் பண்ணுங்கன்னு நாலு பேரை வேலைக்கு உட்கார வச்சா, அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க மா?”

“இதெல்லாம் வக்கனையா பேசு. ஆனா, நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லாத, என்ன? ஊர், உலகத்தை விடு. அது என்னமோ பேசிட்டு போகட்டும். அதுக்குப் பயந்தா வீட்டை விட்டு வெளில போகவே முடியாது.” என்றவர்,

“மாப்பிள்ளையை ஏன் வேணாம் சொல்ற? உங்கப்பா ஏன் வேணாம் சொல்றார். நீயும் அவரை விரும்பும் போது..”

“ம்மா, அப்படியெல்லாம் ஒன்னும்…”

“இல்லன்னு சொல்லப் போறியா? எப்போல இருந்து போய்ச் சொல்ல கத்துக்கிட்ட நந்து? அதுவும் அம்மா கிட்ட?” பூர்ணிமா குரலை உயர்த்த, மனைவியின் அருகில் சென்று அமர்ந்தார் கார்த்திகேயன்.

நந்தனாவின் தலை தானாகத் தட்டை நோக்கி குனிந்தது.

“நான் நந்துவை வார்ன் பண்ணினேன் பூரணி. நிரஞ்சன்கிட்ட இருந்து விலகி இருக்கச் சொன்னேன். இந்தப் பொண்ணு கேட்டா தானே” மனைவியின் கரம் பற்றிக் கிசுகிசுத்தார் கார்த்திகேயன்.

அவ்வளவு தான், கண்ணை விரித்துக் கணவரை கொடூரமாக முறைத்த பூர்ணிமா,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? பொண்ணை உங்க கூடவே காலத்துக்கும் வச்சுக்கலாம்னா? அவளைக் கல்யாணம் பண்ணி கொடுக்கற ஐடியாவே உங்களுக்கு இல்லையா?”

“பூரணி..”

“பேசாதீங்க, சொல்லிட்டேன். மாப்பிள்ளை, இவளைப் போலவே கிரிக்கெட்டில் இருக்கார். தமிழ் பையன், அவ்வளவு நல்ல குடும்பம். எவ்வளவு முறையா வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாங்க. குணமா, தன்மையா பேசினவங்களை விரட்டி விட்டுட்டு இப்போ அவங்க வீட்ல போய்ப் பேசவா கேட்கறீங்களே? உங்களுக்கே ஓவரா தெரியல. ஆனா, ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன். நல்லா கேட்டுக்கோங்க. எவனாவது ஹிந்தி, மராத்தி, சிந்தி பேசறவனை மருமகன்னு கூட்டிட்டு வந்தீங்க. நான் பத்ரகாளி ஆயிடுவேன், சொல்லிட்டேன்”

“உங்க பொண்ணு பார்க்கற வேலைக்கு முதல்ல எவன் பையனை கொடுப்பான். என்ன கிரிக்கெட் வேலையா? டீம் கூடவே அலையணுமான்னு தான் முதல்ல கேட்பானுங்க. இதுல தங்கமா ஒருத்தன் வந்தா, அவனை அசிங்கப்படுத்தி…”

“அம்மா.. அவரை யாரும் அசிங்கப்படுத்தல” நந்தனா பட்டென்று சொல்ல,

“அப்படியா, நந்து? உனக்குத் தெரியுமா? அன்னைக்கு வீட்டுக்கு வந்தவர்கிட்ட உங்கப்பா என்ன கேள்வி கேட்டார்னு உனக்குத் தெரியுமா? உங்கப்பாவை கேளேன். அவர் பண்ண காரியத்தைப் பத்தி பெருமையா சொல்வார்” பூர்ணிமா கோபமாகச் சொல்ல, அப்பாவை திரும்பி பார்த்தாள் நந்தனா. மகளின் பார்வையை எதிர்கொண்ட கார்த்திகேயன் எதுவும் பேசவில்லை.

“நாளைக்கே கிரிக்கெட்டை விட்டா என்ன பண்ணுவீங்க நிரஞ்சன்னு கேட்டார்? மாப்பிள்ளை முகம் போன போக்கை நீ பார்த்து இருக்கணும். பையன் ஷாக்காகி, அப்படியே கண்ணைக் கூட அசைக்காம பார்த்துட்டே இருந்தார். ஆனாலும், அவ்வளவு பொறுமையா உங்கப்பாக்குப் பதில் சொன்னார். தெரியுமா?”

“அப்பாக்கு சொந்தமா ஹோட்டல் இருக்கு சார், ஸ்கூல் படிக்கும் போதிருந்தே நான் அங்க தான் எப்பவும் இருப்பேன். காலேஜ் முடிக்கும் முன்னாடியே, தொழில் அப்பாகிட்ட கத்துக்கிட்டேன் சார். இப்பவும் கிரிக்கெட் மேட்ச் இல்லாத நேரம் ஹோட்டல்ல தான் இருப்பேன். ஒருவேளை கிரிக்கெட் இல்லாம போனாலும் அங்க தான் இருப்பேன். என் கிரிக்கெட் கனவே அங்க இருந்து தான் சார் ஆரம்பிச்சது. அப்பா கஸ்டமருக்காக வச்சிருந்த டிவியில கிரிக்கெட் பார்த்து அதுக்குள்ள வந்தவன் சார் நான். கிரிக்கெட் இல்லனாலும், எங்கப்பவோட ஹோட்டல் சோறு போடும் சார் எனக்கு.”

“நானும் இப்போ சொந்தமா ரெண்டு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சு சக்சஸ்புல்லா நடத்திட்டு இருக்கேன். என் குடும்பத்தை என்னால காப்பாத்த முடியும் சார்.”

நிரஞ்சன் சொன்னதைப் பூர்ணிமா சொல்ல, நந்தனாவிற்கு அதற்கு மேல் ஒரு வாய் சோறு கூட உள்ளிறங்கும் என்று தோன்றவில்லை.

error: Content is protected !!
Scroll to Top