இனியொரு பிரிவேது – 7 (2)

சுகாஸினது காதல் திருமணம். ரியாவின் தந்தையிடம் தான் கிரிக்கெட் பயின்றான் சுகாஸ். ஏற்கனவே உலகமறிந்த செய்தியை இப்போது இவர்களோடு தொடர்புப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தது இணைய உலகம்.

பயிற்சியாளர் மகளாகத் தான் ரியா அவளுக்குத் தோழியானதும் கூட.

அலைபேசி பேச்சை முடித்துக் கொண்டு அங்கு வந்த சுகாஸ்,

“என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று இருவரையும் பார்த்து கேட்க,

“போட்டோஸ் எல்லாத்தையும் நெட்ல இருந்து ரிமூவ் பண்ண சொல்லு சுகாஸ். நானும் என் மேனேஜர்கிட்ட சொல்லி இருக்கேன். உன் பக்கம் யார் பண்ணானு கண்டுபிடிக்கச் சொல்லு. யார்னு தெரியட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு..” நிரஞ்சன் கோபமாகச் சொல்ல,

“அதுக்கு அவசியமில்லை. ஃபோட்டோ, நியூஸ் எல்லாம் அப்படியே இருக்கட்டும்” அவள் தமிழில் சொல்ல, சுகாஸ் புரியாமல் விழிக்க, நிரஞ்சன் புரிந்ததால் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“எனக்கு யார் பண்ணாணு தெரிஞ்சா போதும் சுகாஸ்” என்றாள் ஆங்கிலத்தில்,

“ஓகே. பட் தெரிஞ்சு என்ன பண்ண போற?”

“எதுவும் பண்ண போறதில்ல” என்றாள் நந்தனா முடிவாக.

“இவங்களுக்குப் பரபரப்பு செய்தி வேணும். பிரபலங்கள் பத்தின காஸிப் வேணும். அதுக்கு நாம பலியா? இவனுங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பேசிட்டு போகட்டும். ஐ டோண்ட் கேர். இவங்க சொல்றதால எதுவும் இங்க உண்மையாகிட போறதில்ல. அதனால, யார் கல்யாணமும் நடக்கப் போறதும் இல்ல” நந்தனாவின் வார்த்தைகள் நிரஞ்சனை இறுகிப் போகச் செய்தது.

அவன் அங்கிருக்கையில் சுகாஸிடம் அவள் போய் நிற்பது அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அமைதியாய் சென்று ஓரமாக அமர்ந்தான் அவன்.

“என்ன பேசற நந்து?” குரலை தழைத்து அவளைக் கடிந்து கொண்டான் சுகாஸ்.

“நிரஞ்சன் லவ்ஸ் யூ. உனக்கும் அவனைப் பிடிக்கும்னு, உன் பார்வையே சொல்லுது. அப்புறம் கல்யாணத்துல என்ன பிரச்சினை?”

“பிடிக்கும் தான். அதுக்காக? கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?” அவளின் கேள்வியில் கடுப்பான சுகாஸ்,

“உனக்குத் தெரியுமா? நான் நிறைய டைம் இவனை ரோபோன்னு நினைச்சிருக்கேன். லவ் லைஃப், டேட்டிங், டின்னர் எதுவும் கிடையாது. இதுவரை ஒரு பொண்ணோட சேர்த்து இவனை நான் பார்த்ததே கிடையாது. நடிகை, மாடல்னு யார் கூடவாவது இவன் சுத்தி பார்த்திருக்கியா நீ? சான்ஸே இல்ல. இவன் கன்னி கழியவே இல்லையோன்னு கூட நினைச்சு…”

“ஷட் அப், இடியட்” என்று ஓங்கி அவனின் தோளில் அடித்தாள் நந்தனா. அதற்கு ரியா கிளுக்கி சிரிக்க, சட்டென்று திரும்பி நிரஞ்சனை பார்த்தாள் நந்தனா.

அவளின் தலையணையை மடியில் வைத்து, கண்களை மூடி தலை சாய்ந்திருந்தான் அவன்.

அலைபேசியைப் பார்த்து விட்டு, “அச்சோ, ஐ ஆம் சோ சாரி” ரியா திடீரென்று சத்தமாக அலற, அனைவரின் பார்வையும் அவள் மீது விழுந்தது.

“என்னாச்சு?” சுகாஸ் மனைவியிடம் கேட்க, “என்னோட கசின் தான் ஃபோட்டோ லீக் பண்ணி இருக்கா.” என்று அவளின் அலைபேசியை நீட்ட, அதில் இருபது வயது கூட நிரம்பாத இளம் பெண் ஒருத்தியின் டிவிட்டர் பக்கம் வந்து நின்றது.

கிட்டத்தட்ட பத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் பகிரப்பட்டிருக்க, அதில் நிரஞ்சன் – நந்தனா புகைப்படமும் இருந்தது. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் விதவிதமான தலைப்புகள் கொடுத்திருந்தாள் அப்பெண்.

நிரஞ்சன், நந்தனாவிற்கு, “அடுத்தப் பொண்ணு, மாப்பிள்ளை ரெடி” என்று தலைப்புக் கொடுத்திருக்க, மீடியாக்கள் ஏன் அவர்களுக்குத் திருமணம் என்று செய்தி ஒளிபரப்பியது என்பது அப்போது தான் அவளுக்குப் புரிந்தது.

“நான் தான் உங்க ரெண்டு பேரை பத்தியும் சுகாஸ் கிட்ட கேட்டுட்டே இருந்தேன். எப்போ கல்யாணம்னு கூடக் கேட்டேன். அதை என் கசின் கேட்டிருக்கலாம். என் தப்பு தான்.” ரியா குற்ற உணர்வுடன் சொல்ல,

“இட்ஸ் ஓகே ரியா” என்றாள் நந்தனா. வேறு என்ன செய்து விட முடியும்.

அதுவும் செய்தது ரியாவின் தங்கை என்று தெரிந்த பின் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ஒரு நிமிடம் பேச்சுக்கள் நின்று அப்படியே அமர்ந்திருந்தனர் நால்வரும்.

“ரெண்டு நாளைக்கு இதைப் பத்தி பேசுவாங்க. அப்புறம் இது பழைய நியூஸ் ஆகிடும் சுகாஸ். நீ உன்னோட கல்யாண போட்டோஸ் ஆபீஸியலா ரிலீஸ் பண்ணு. மக்கள் அதுல பிஸியாகட்டும்.” நந்தனா சொல்ல,

“உங்க ஃபோட்டோஸ் நெட்ல இருந்து எடுத்திடலாம் நந்து” என்றான் சுகாஸ் யோசனையுடன்,

“வேணாம். நாங்க இதை ஃபேஸ் பண்ண ரெடியா தான் இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் இதைப் பத்தி யோசிக்காம, என்ஜாய் யுவர் ஹனிமூன்”

சுகாஸ் எத்தனையோ சொல்லிப் பார்த்தும், நந்தனா தன் முடிவை மாற்றவேயில்லை. அவளுக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லைதான், முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள்தான். ஆனால், சிறிது நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். என்ன நடந்தாலும், பார்த்துக் கொள்ளலாம் என்ற தெளிவிற்கு வந்திருந்தாள்.

சுகாஸ், ரியா இருவரும் அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டு விடைப் பெற, நிரஞ்சன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எல்லாமே உன் முடிவு தானா? என்கிட்ட எதையும் பேசி முடிவெடுக்க மாட்டியா?” நிரஞ்சன் அழுத்தமாகக் கேட்க, அதிர்ந்து அவனைப் பார்த்தாள் நந்தனா.

“இதுல நீ மட்டுமில்ல. நானும் சம்பந்தப்பட்டு இருக்கேன் நந்தனா. உன்னை விட, எனக்குத் தான் இதுல பாதிப்பு அதிகம். இனி நான் எங்க போனாலும், என்னைக் கேள்வி கேட்டு கொல்லுவானுங்க. நெட்ல இருந்து ஃபோட்டோஸை எடுத்துட்டு, நாலு நியூஸ் சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பினா தான் அடங்கி இருப்பாங்க. இல்லனா, அவங்க இஷ்டத்துக்கு இது போலத் தொடர்ந்து எதையாவது நியூஸ் போட்டுட்டே இருப்பாங்க. ஒவ்வொரு முறையும் நமக்குத் தான் மன உளைச்சல்”

நிரஞ்சன் சொல்வது அவளுக்குச் சரியென்று தான் பட்டது. ஆனாலும், அதைச் செய்ய விடாமல் எதுவோ ஒன்று தடுக்க அமைதியாய் நின்றாள் நந்தனா.

“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் நந்தனா. பதில் சொல்லு”

“போட்டோஸ் எடுத்துட்டா? நடந்ததை மாத்திட முடியுமா நிரஞ்சன்? எதுவும் மாறப் போறதில்ல. நானும் மாறப் போறதில்ல. என்கிட்ட கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன். உங்ககிட்ட கேட்டா, நீங்க பதில் சொல்லிக்கோங்க” அவளின் அந்த அசட்டையான பதில், அவனின் கோபத்தை மேலும் தூண்டி விட,

“அப்போ, அவ்ளோ தானா நந்து? நான் உனக்கு ஒன்னுமே இல்லையா? அப்படியே நான் என்ன பதில் சொல்லணும்? அதையும் சேர்த்து சொல்லு? நீ, என்னை வேணாம்னு சொல்லிட்டன்னு, சொல்லவா?” என்றவனின் குரல் கரகரக்க, அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள் நந்தனா.

“எனக்கு இந்தக் காதல், கத்திரிக்கா, கண்றாவி இதெல்லாம் ஒன்னும் தெரியாது நந்தனா. ஆனா, கல்யாணம், குழந்தை இந்த ஆசையெல்லாம் இருக்கற சராசரி மனுஷன் நான். வாழ்க்கையில் இதுவரை யாரையும் பார்த்து இவங்க எப்பவும் நம்ம கூடவே இருக்கக் கூடாதான்னு ஆசைப்பட்டது கிடையாது”

“ஒருத்தரை பார்த்துட்டே இருக்கணும், பேசிட்டே இருக்கணும், ரசிக்கணும், அணைக்கணும், கிஸ் பண்ணனும்னு..”

நந்தனாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, முகம் சிவக்க துவங்கியது.

“உன்னைப் பார்த்தா மட்டும் தான் ஏதேதோ தோணுது. ஆனா, நேரா உன்கிட்ட வந்து வாழ்க்கையைப் பத்தி தான் பேசினேன். உன் அப்பா வரைக்கும் கூடக் கல்யாணம் பத்தி தான்… வேணாம் விடு. அதைப் பத்தி பேச வேணாம்” என்றவன், அவளுக்கு மிக அருகில் வந்து நின்றான்.

அவளின் கண்களைப் பார்த்து, “முழுசா 24 மணி நேரம் எடுத்துக்கோ நந்தனா. நல்லா யோசிச்சு எனக்கான பதிலை சொல்லு. உன் முடிவு எதுவா இருந்தாலும் அதை நான் மதிக்கறேன். ஆனா, நல்லா யோசிச்சு, முடிவை நாளைக்குச் சொல்லு. ஓகே?” என்று நிரஞ்சன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கேட்க, அவளுக்கு மனதை என்னவோ செய்தது.

அவளின் முடிவு மாறவே போவதில்லை என்று அவனிடம் சொல்ல முடியாமல் அவளுக்குத் தொண்டையடைத்தது. கண்களில் நிரம்பிய கண்ணீருடன் அவனைப் பார்த்து தலையசைத்தாள் நந்தனா.

சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்திருந்து விட்டு, “நியூஸ் பார்க்காத. மொபைலை தொடாத. உங்கப்பா…” என்றவனை இடைமறித்து, “நான் பார்த்துக்கறேன்” என்றாள் நந்தனா.

அவளைத் தனியாக விட்டுச் செல்ல மனமின்றி அவளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி அறை வாயிலை நோக்கி நடந்தான் நிரஞ்சன்.

அவன் சென்றதும் படுக்கையில் பொத்தென்று அமர்ந்த நந்தனா, பத்து நிமிடங்கள் கண்களை மூடி படுத்திருந்து விட்டு, அப்பாவிற்கு அழைத்தாள்.

“என்னடா சுகாஸ் கல்யாணம் நல்லபடியா நடந்ததா? என்ஜாய் பண்ணியா?” என்று அவர் உற்சாகக் குரலில் கேட்க,

“அப்பா…” என்றாள் நந்தனா.

பல வருடங்களாகக் கிரிக்கெட் வீரர்களை நெருக்கமாகப் பார்க்கிறார். இது போன்ற பல செய்திகளைக் கடந்து வந்தவர் தான் கார்த்திகேயன். ஆனால், சொந்த மகள் என்று வரும் போது அவருக்கு நெஞ்சு பதறியது.

புகைப்படத்தையும், செய்தியையும் பார்க்கையில் அதிர்ச்சியும், அனைவரையும் அடித்து நொறுக்கும் ஆத்திரமும், ஆவேசமும் வந்தது. ஆனால், மகளின் எதிர்காலம் குறித்த கவலை அவரின் கையைக் கட்டிப் போட்டது.

மும்பையின் மைதானத்தில் அமர்ந்திருந்தவரின் மனது முழுவதும், பாரிசில் இருந்த மகளிடம் தான் இருந்தது. காலையில் இருந்து அவளது அழைப்பிற்காகத் தான் அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் அவர்.

மற்றவருக்கு எப்படியோ, மகளின் குரலில் இருந்தே அவளின் மனக் கலக்கத்தை உணர்ந்தவர், “என்ன நந்து குரலே சரியில்ல? நியூஸ் பார்த்து பயந்துட்டியா என்ன? வாய்ப்பில்லையே” சிரிப்பும், கரிசனமுமாக அவர் கேட்க,

“பயமா? இல்லப்பா. ஆனா, எதிர்ப்பார்க்கலை ப்பா. கல்யாணம்னு அவங்களா முடிவு… ஐ ஆம் சாரி ப்பா. உங்களுக்குக் கோபம் இருக்கும்.. அம்மா..”

மகளின் மன்னிப்பை கண்டுகொள்ளாது, “பிரபலம்னா ப்ராப்ளம் தான்டா. நிரஞ்சனுக்கு இதெல்லாம் புதுசில்ல. ஆனா, உனக்கு?” என்று அவர் கேட்க,

“நானும் பழகிக்கறேன் ப்பா” என்றாள் மெலிதான சிரிப்புடன்.

“பழகத் தேவையில்லா டா. ஆனா, இதுக்கெல்லாம் மிரண்டு, அறிக்கை கொடுத்தா, நம்மை நிம்மதியா இருக்க விடாம தொரத்திட்டே இருப்பாங்க. ஆனா, இன்னொரு முறை ஏதாவது ஏடாகூடமா நியூஸ் வந்தா கண்டிப்பா ஆக்சன் எடுக்கறோம். ஓகே?”

“ம்ம். ஓகே ப்பா”

“எப்போ ப்ளைட்?”

“இன்னைக்கு இவெனிங், நாளைக்குக் காலைல அங்க இருப்பேன் ப்பா.”

“சரி, பார்த்து கவனமா வா. நானும், அம்மாவும் உன்கிட்ட பேசணும்”

“ஓகே ப்பா” அலைபேசியை அணைத்து ஓரமாக வைத்துப் படுக்கையில் சரிந்தாள்.

‘பெற்றோர் என்ன பேச போகிறார்கள்?’ உலகமே அவள் கண்களில் இருந்த காதலைப் பார்த்து விட்டது. அவன் தோளிலும், மார்பிலும் கரம் பதித்து, அவனை இறுக அணைத்து, அவளே உள்ளதை உள்ளபடியே பறை சாற்றி விட்டாள்.

ஆனால், பெற்றவர்களிடம் ஒரு மகளாக என்ன விளக்கம் கொடுக்க முடியும் அவளால்? அதுவும் அப்படியொரு புகைப்படத்திற்கு?

’24 மணி நேரம் கழித்து நிரஞ்சனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் நான்?’

பல விதமான கேள்விகளுடன் மனதிற்குள் மல்லுக்கட்டி, அது தந்த அழுத்தத்தில் அப்படியே உறங்கி விட்டாள் நந்தனா.

பின் மதிய நேரம் நல்ல உறக்கத்திற்குப் பின் எழுந்து, குளித்து, அறைக்கே உணவை வரவழைத்து உண்டாள்.

அதன் பின் இந்தியா திரும்புவதற்குப் பெட்டியை அடுக்க, அறைக் கதவு தட்டப்பட்டது.

ரியாவின் தங்கை தான் வெளியில் நின்றிருந்தாள்.

“உள்ள வரலாமா?” என்று அவள் அழுகுரலில் கேட்க, அவளுக்கு ஒதுங்கி வழி விட்டாள் நந்தனா.

“சாரி, சாரி, சாரி தீதி(அக்கா)” என்று மன்னிப்புடன் நந்தனாவின் கைகளைப் பிடித்தவள்,

“எப்பவும் டிவிட்டர்ல ஃபோட்டோ போடுற பழக்கத்தில…” என்று அவள் ஆரம்பிக்க,

“அடிக்சன்” என்று முணுமுணுத்தாள் நந்தனா.

“எஸ். சோஷியல் மீடியா அடிக்சன் தான். எவ்வளவோ டிரை பண்றேன். ஆனா, ஃபேஸ்புக், டிவிட்டர் யூஸ் பண்ணாம இருக்க முடியல. நேத்து.. நேத்து.. தெரியாம பண்ணிட்டேன் தீதி. வேற யாரும் ஃபோட்டோ போடுறதுக்கு முன்னாடி, நான் தான் ஃபர்ஸ்ட் போடணும்னு நினைச்சு அப்படிப் பண்ணிட்டேன் போல. காலைல எழுந்து தான் நான் பண்ணது தப்புனு ரியலைஸ் பண்ணேன். அதுக்குள்ள என்னன்னமோ நடந்து போச்சு. ஆனா, நான் போட்டோ டெலீட் பண்ணிட்டேன் தீதி. சாரி, தீதி”

‘நீ ஒருத்தி டெலீட் செய்தால் போதுமா?’ மனதில் தொக்கி நின்ற கேள்வியுடன் அவளைப் பார்த்தாள் நந்தனா.

“இட்ஸ் ஓகே. வீ வில் ஹாண்டில் இட்.” என்று நந்தனா புன்னகைக்க, கண்ணிற்கு எட்டாத அந்தப் புன்னகையைப் பார்த்து, மீண்டும், “சாரி” என்றாள் அந்தப் பெண்.

“இட்ஸ் ஓகே” என்று அழுத்தமாய்ச் சொல்லி அவளை அனுப்பி வைத்தாள் நந்தனா.

சுகாஸ் மற்றும் ரியாவிடம் விடைபெற்று ரிசார்ட்டை விட்டு வெளியில் வந்தவளின் மனது அவளை அறியாமலேயே நிரஞ்சனை தேடியது.

அவளுக்கான வாடகை கார் அங்குக் காத்திருக்க, அதன் மேல் சாய்ந்து நின்றிருந்தவனைப் பார்த்தவளின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

“நானும் மும்பை தான் வர்றேன் நந்தனா. ரெண்டு பேரும் ஒரே ப்ளைட்டில் தான் போறோம். சோ, ஏர்போர்ட் போக ஒரே கார், ஓகே தானே?” அவன் நிதானமாகக் கேட்க, அவள் மனம் இந்தப் பயணம் அவர்களின் நடுவே ஏற்படுத்த போகும் மாற்றங்களைக் குறித்துப் பயங்கொள்ள ஆரம்பித்தது.

“ம்ம், போகலாம்” என்றாள் வெளியில் திடமாகக் காட்டிக் கொண்டு.

ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் விமான நிலையத்தில் இருந்தார்கள்.

பாரிஸ் விமான நிலையத்தில் ஒன்றிரண்டு தலைகள் இவர்களைத் திரும்பிப் பார்த்தாலும், யாரும் பக்கத்தில் வரவில்லை.

விமானத்திற்குக் காத்திருக்கையில் நிரஞ்சனின் ரசிகர்கள் சிலர் அவனோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மிகக் கவனமாக அவர்களிடம் இருந்து ஒதுங்கி நின்றாள் நந்தனா.

சில மணி நேர பயணத்திற்குப் பின் விமானம் அபுதாபியை அடைய, அங்கிருந்து மும்பை செல்லும் விமானத்திற்கு மாறினர் இருவரும்.

அபுதாபி செல்லும் வரை, அவளுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தும் எதுவுமே பேசவில்லை நிரஞ்சன்.

இருவருமே அடுத்தவரின் அருகாமையை உணர்ந்தபடி, உறக்கத்தில் அமிழ்ந்தனர். ஆனால், மும்பை செல்லும் விமானத்திற்காக அவர்கள் காத்திருந்த நேரம், அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான் நிரஞ்சன்.

“என்ன முடிவு பண்ண நந்தனா?” பதிலே சொல்லவில்லை அவள்.

அவள் மௌனமாக எழுந்து செல்ல, அவனின் பொறுமை கரைந்திருந்தது.

“நந்து…”

பட்டென்று அவளின் கைப்பிடித்து இழுத்து அவனுக்குப் பக்கத்தில் அமர வைத்தான் அவன்.

“என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு? பார்வையில் ஓராயிரம் வார்த்தைகள் பேசு. உணர்ச்சிகளைக் காட்டு. ஆனா, வாயத் தொறந்து சொல்லிடாத என்ன?”

“ஒரு டைம், ரெண்டு டைம் இல்ல. எப்பவும் இப்படித் தான் பண்ற. வாழ்க்கையைப் பத்தி பேசுறேன், அன்னைக்கு என் முகத்திலேயே கதவை அறைஞ்சு மூடுற. உன் வீடு வரை வந்தேன். ஒரு வார்த்தை அதைப் பத்தி பேசி இருப்பியா நீ? என்னன்னு கேட்டிருப்பியா? என் ஃபீலிங்ஸ் பத்தி உனக்கு ஒரு கவலையும் இல்ல. அப்படித் தானே?”

“அதை விடு. இவ்வளவு நடந்திடுச்சு. இப்பவும் பதில் சொல்லாம பிரிஞ்சு போற. சேருறதுக்கு முன்னாடியே பல தடவை பிரிஞ்சது நாமளா தான் இருப்போம். என்னோட மனசுக்கு மதிப்பு கொடுக்கவே மாட்டியா நீ?” கோபத்துடன் படபடவென்று அவன் பேச, அமைதியாய் அவனைப் பார்த்திருந்தாள் நந்தனா.

“உன் முடிவு என்னனு உன் மௌனத்திலயே தெரியுது. என் முடிவையும் கேட்டுக்கோ நந்தனா.” என்றவன், அவள் கண்களை ஆழமாகப் பார்த்து,

“இனி உன்னை நான் எந்த விதத்திலும் தொல்லை பண்ண மாட்டேன். உன்னைப் பார்க்க, பேச எதுக்கும் டிரை பண்ண மாட்டேன். ஆனா, உனக்காக வெயிட் பண்ணிட்டு தான் இருப்பேன். என்னைத் தேடி ஒரு நாள் நீயா வருவ நந்தனா. அந்த நாள் வராமலே போய்ட..” அவள் அதிர்ந்து விழி விரிக்க,

“அந்த நாள் கண்டிப்பா வரும் நந்தனா. ஆனா, அப்போ டூ லேட் ஆகிட கூடாதுனு நான் வேண்டிக்கறேன்” என்றவன், அவளின் முகத்தைப் பார்வையால் வருடி விட்டு எழுந்து போனான்.

மும்பை விமானத்தில் பக்கத்து பக்கத்து இருக்கையில் பிரிந்தே அமர்ந்திருந்தனர் இருவரும்.

சில மணி நேர பயணத்திற்குப் பின் விமானம் மும்பையை அடைய, அவளைத் திரும்பியும் பாராமல் பிரிந்து போனான் நிரஞ்சன்.

நந்தனா தனக்காகக் காத்திருந்த தந்தையுடன் காரில் ஏறினாள்.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top