இனியொரு பிரிவேது – 7 (1)

நேரம் அதிகாலை நாலு மணி என்றது அலைபேசி. இந்திய நேரத்தை கணக்கிட்டாள் நந்தனா. காலை 8.30 ஆகியிருக்கும். அப்பா இப்போது பயிற்சி மைதானத்தில் இருப்பார். அவரைச் செய்தி இன்னமும் சென்றடைந்திருக்காது என்பது அவளுக்கு அப்போதைக்கான ஆசுவாசத்தைத் தர, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கினாள் அவள்.

“நந்து…” என்று மெல்ல அழைத்துத் தான் அங்கிருப்பதை அவளுக்கு உணர்த்தினான் ‍நிரஞ்சன்.

“சாரி. இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கல.”

“நானும் உங்களை இங்க எதிர்ப்பார்க்கல. சுகாஸ் ‍எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை பார்க்கறான்னு எனக்குப் புரியல”

“நந்தனா…” நிரஞ்சனின் குரல் உயர, பதிலுக்கு அவனை முறைத்தாள் அவள்.

“சுகாஸ் கல்யாணத்தைப் பத்தி வெளில யாருக்குமே தெரியாது. ரொம்ப ரொம்ப நெருங்கினவங்களை மட்டும் தான் இன்வைட் பண்ணான். ஃபோட்டோ, வீடியோ எதுவும் ஷேர் பண்ணக் கூடாதுனு சொல்லி இருந்தான். அப்புறம் எப்படிப் போட்டோஸ் லீக்காகி இருக்கும்?” அவள் சத்தமாக யோசிக்க, அவன் பதட்டமாக அமர்ந்திருந்தான்.

“என் மேனேஜர் சேகர்கிட்ட பேசிட்டேன். அவன் பார்த்துப்பான். சோஷியல் மீடியா எல்லாத்துல இருந்தும் நம்ம ஃபோட்டோஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல காணாம போய்டும்.” அவன் சொல்ல, நக்கலாகச் சிரித்தாள் நந்தனா.

“என்ன?” என்றான் கோபமாக,

“நெட்ல இருந்து ஒரு விஷயத்தை நிரந்தரமா எடுக்கவே முடியாது நிரஞ்சன். போட்டோஸ் எத்தனை பேர் ஷேர் பண்ணி இருக்காங்க, பார்த்தீங்களா? நம்ம போட்டோ இப்போ அவங்கள்ள பாதில பேரோட மொபைல்ல இருக்கும். போதாததுக்கு அவங்க மைண்ட்ல நியூஸ் பதிஞ்சு இருக்கும். அதை எப்படி அழிக்க? நியூஸ் சேனல்ஸ் சுகாஸ் கல்யாணத்தோட சேர்த்து, நம்மையும் தலைப்பு செய்தி ஆக்கிட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு இது தான் ஒடும்.”

அவள் சொல்வதில் இருந்த நிதர்சனம் அவனை யோசிக்க வைத்தது.

“ஆனாலும், எனக்கு ஒரு விஷயம் புரியல நிரஞ்சன்” அறையை அளந்து கொண்டிருந்தவன் தனது நடையை நிறுத்தி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“நம்ம போட்டோ மட்டும் வைரலாகி இருந்தா ஓகே. ஆனா, கல்யாணம், காதலி அப்படினு எப்படி முடிவு பண்ணாங்க. எல்லாம் இவனுங்க விருப்பம் தானா? காதலியா தான் இருக்கணுமா? ஏன் வேற…”

“நந்தனா…” அந்தக் குரலிலும், பார்வையிலும் அவளுக்குக் கைகள் சில்லிட்டது. அவனது அலைபேசியைத் திறந்து, அதை அவள் கைகளில் திணித்தான் அவன்.

அதில் இருந்த புகைப்படத்தில் நிலைத்தது அவள் பார்வை.

இருவரும் அத்தனை நெருக்கமாக நின்றிருக்க, நிரஞ்சனின் பார்வையில் ஓராயிரம் உணர்வுகள். ஆனால், நந்தனாவின் விழிகளில் அப்பட்டமான காதலும், தவிப்பும் மட்டுமே தெரிந்தது.

அவள் சேலையிலும், அவன் ஷெர்வாணியிலும் இருக்க, பார்ப்பதற்கு அவர்களே புதுமணத் தம்பதிகள் போலத் தான் இருந்தனர்.

அவர்கள் இருவருமே இன்னும் மனம் விட்டு பேசிக் கொள்ளாத நிலையில், உலகம் அவர்களுக்கான முடிவை ஓரிரவில் எடுத்திருக்க, அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மூளை அவளின் சிந்தனையின் வேகத்திற்கு ஒத்துழைக்க மறுத்தது.

“என்ன செய்யப் போறேன் நான்?” மெல்ல முணுமுணுத்தாள் அவள். அந்நேரம் அவனது அலைபேசியில் குறுஞ்செய்தி வர, அலைபேசியை அவனை நோக்கி நீட்டினாள். ஆனால், அவளின் விரல் பட்டு அதில் வந்திருந்த காணொளி ஓட ஆரம்பித்தது.

“தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான கிரிக்கெட் வீரர் நிரஞ்சனுக்குத் திருமணமா? சென்னை ஐபிஎல் அணியின் வீடியோ அனலிஸ்ட்டான நந்தனாவை காதலித்துக் கரம் பிடிக்கிறாரா நிரஞ்சன்?”

“அவர் மணக்க இருப்பதாகச் சொல்லப்படும் நந்தனா யார்?”

“நந்தனா கார்த்திகேயன் கிரிக்கெட்டிற்குப் புதிதல்ல. நந்தனாவின் தந்தை கார்த்திகேயன் மும்பை டோமஸ்டிக் (Domestic) கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆவார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கார்த்திகேயன், தற்போது மும்பையில் வசிக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், மும்பை அணிக்காகப் பல ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்தியாவின் அண்டர் 19, மற்றும் டீம் ஏ‌‌ அணிகளுக்காக ஆடிய சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவரின் மகளான நந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் அனலிஸ்ட் சிவராஜின் முன்னாள் மாணவி என்பது கூடுதல் தகவல். மேலும்..”

செய்திகள் தமிழில் ஓடிக் கொண்டிருக்க, நந்தனாவிற்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

அவளைப் பற்றி ஒன்று விடாமல் விசாரித்து, விலாவரியாக அவர்கள் விளக்கி சொல்லிக் கொண்டிருக்க, கைக் கட்டி அதை வேடிக்கை பார்ப்பதை தவிர, அவளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தாள் அவள்.

“நந்து…” அழுத்தமாய் அவளின் தோளை பற்றினான் நிரஞ்சன்.

“எனக்குச் சுகாஸை பார்க்கணும். இப்பவே” நந்தனாவின் குரல் நடுங்க,

“அவன் தூங்கிட்டு இருப்பான். விடியட்டும், அப்புறம்…”

“அப்புறமா எல்லாம் முடியாது. இப்பவே எனக்கு அவனைப் பார்த்தாகணும். உடனே…” என்று அவள் கத்த,

“தூங்கிட்டு இருப்பான் நந்து”

“இங்க எனக்கு மண்டை வெடிக்குது. அவனுக்கு என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு. நான் போய் அவனை எழுப்பறேன்”

“நந்தனா” அவளின் தோளை பிடித்து உலுக்கி, ஒரு கையால் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான். அந்தக் கண்களில் தெரிந்த கலக்கம் அவனை இம்சிக்க,

“முதல்ல இப்படிப் பதட்டமாகாம இரு. என்ன பண்ணனும்னு சொல்லு. நான் பண்றேன் நந்து.” மென்மையாய் அவன் சொல்ல,

“சுகாஸ்…”

“நேத்து தான் அவனுக்குக் கல்யாணமாகி இருக்கு நந்து. இந்நேரம் போய்க் கதவை தட்ட சொல்றியா?”

அவன் கோபமாகக் கேட்க, தான் செய்ய இருந்த முட்டாள்தனத்தை உணர்ந்து, தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

“இங்க பாரு நந்து. இப்ப என்ன நடந்திடுச்சுன்னு இப்படி…” அவனைப் பேச விடவில்லை அவள்.

“என் மேல இருந்து கையை எடுங்க முதல்ல. கொஞ்சம் தள்ளி நில்லுங்க. எனக்கு யோசிக்கணும். இப்படி நின்னா என்னால…” அவளின் தடுமாற்றம் அவனுக்கு அந்தச் சூழலிலும் புன்னகையை வர வைத்தது. தான் அவளைப் பாதிக்கிறோம் என்பதைக் காண்கையில் அவனுக்கு மனதில் மெலிதான மழைச் சாரல் அடித்தது.

சரியாக அந்நேரம் அறையின் அழைப்பு மணியும் அடிக்க, கதவை திறக்க சென்றாள் நந்தனா. அவளை முந்திக் கொண்டு போய்க் கதவை திறந்து எச்சரிக்கையாக யாரென்று எட்டிப் பார்த்தான் நிரஞ்சன்.

மறுநிமிடம் அவன் கதவை திறக்க, புயலாய் அறைக்குள் நுழைந்தான் சுகாஸ், அவனோடு ரியாவும் வந்திருந்தாள்.

நிரஞ்சனை முறைத்து விட்டு நந்தனாவிடம் வந்தான் அவன்.

“சாரி..” இருவரும் ஒன்று போலச் சொல்லி கொண்டனர்.

நந்தனாவிற்குப் புது மாப்பிள்ளையைத் தொல்லை செய்கிறோமே எனும் சங்கடம்.

சுகாஸிற்குத் தன் திருமணத்திற்கு வந்ததினால் தான் அவளுக்கு இப்படி ஒரு இக்கட்டு என்ற வருத்தம்.

“நாங்க இன்னமும் கல்யாண ஃபோட்டோ எதுவும் ரிலீஸ் பண்ணல நந்து. இன்னைக்குத் தான் பண்றதா இருந்தோம். ஆனா, அதுக்கு முன்னாடி யாரோ.. ப்ச், இது எப்படி நடந்துச்சுன்னு விசாரிக்கச் சொல்லி இருக்கேன். மொபைல்ல எடுத்த ஃபோட்டோ மாதிரி தான் இருக்கு. யாரோ கெஸ்ட் தான் செய்திருக்கணும். டிவிட்டர்ல தான் முதல்ல போஸ்ட் பண்ணி இருக்காங்க. யார்னு பத்தே நிமிஷத்துல தெரிஞ்சுடும். நீ டென்ஷன் ஆகாத. நான் பார்த்துக்கறேன்” சுகாஸ் படபடவென்று பேச, உதடு கடித்துத் தலையசைத்தாள் நந்தனா.

அலைபேசியில் யாரிடமோ அவன் பேச ஆரம்பிக்க, நிமிர்ந்து நிரஞ்சனை பார்த்த நந்தனா நடந்ததை மீண்டும் ஒருமுறை தன் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள். சாதக, பாதகங்களை ஆராய ஆரம்பித்தாள். முடிவு தானாக முடிவானது.

“சீ திஸ்” சன்னச் சிரிப்புடன் ரியா அவளின் அலைபேசியை நீட்ட, அதைப் பார்த்ததும் நந்தனாவிற்கும் அந்நிலையிலும் சிரிப்பு வந்து விட்டது.

“இங்கு ஒரு ஒற்றுமையைக் கவனித்தீர்களா? அதிரடி ஆட்டக்காரர்கள் இருவரும் ஒரே அணிக்கு தான் ஆடுகிறார்கள் என்ற ஒற்றுமையைத் தாண்டி, இருவரின் மனைவியரும் பயிற்சியாளரின் மகள்கள்” என்று இருக்க,

“மை காட்..” என்று அலுத்துக் கொண்டாள் நந்தனா.

error: Content is protected !!
Scroll to Top