அந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்திருக்க, சென்னை அணி வெற்றிகரமான தொடக்கத்துடன், தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது.
அதற்கு முந்தைய இரு ஆண்டுகள் சென்னை அணி மிக மோசமான தோல்விகளைத் தழுவி இருந்ததால், இந்த முறை நிச்சயமாக மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
அதிலும் முந்தைய ஆண்டுப் பிளே ஆஃப் (Play off) தகுதிச் சுற்றுக்கே சென்னை அணி முன்னேறவில்லை என்பது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது.
அதற்காக ஒட்டு மொத்த அணியும், வீரர்களும், அணி நிர்வாகமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பத்திரிக்கைகள், இணையம் என எல்லாப் பக்கமும் அவர்களுக்குப் பலத்த அடி.
ஆனால், அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் நடப்புத் தொடரின் முதல் போட்டியிலேயே ஐபிஎலில் பரம எதிரிகள் என்று அழைக்கப்படும் சென்னை அணியும், மும்பை அணியும் மோத, சென்னை அணி மிகச் சிறப்பாக ஆடி, அதிக ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதற்கடுத்து வந்த போட்டிகளிலும் தேவையான வெற்றிகளைக் குவித்து, தவிர்க்க முடியாத தோல்விகளையும் சமாளித்துப் பட்டியலில் முதல் இடத்தில் நின்றது.
சென்னை அணிக்கு நிகராக வெற்றிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் அவர்களுக்கு அடுத்து நின்றது ஹைதராபாத் அணி.
பல வருட பயிற்சி மற்றும் அனுபவம் காரணமாகப் புதிய அணியில் விளையாடுவது நிரஞ்சனிற்கு எளிதாகவே இருந்தது. அணியினர் அனைவரும் தோழமையுடன் பழக, அவனுக்குப் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.
இந்தத் தொடரில் இதுவரையிலும் அவனது ஆட்டம் நேர்மறை விமர்சனங்களை அதிகமாகப் பெற்றுச் சிறப்பானதாக இருந்து விட, பயிற்சியாளரும், அணி நிர்வாகமும் அவனைப் பாராட்டி தட்டிக் கொடுக்கத் தவறவில்லை.
கொல்கத்தா அணியில் இருந்தவரை அவனுக்கென்று ஒரு தனிப் பெயர் இருந்தது. அந்த அணிக்கு பெரும் வெற்றிகளை, இரு முறை ஐபிஎல் கோப்பையை, சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்தவர்களில் அவனும் ஒருவன்.
நிரஞ்சன் அந்த அணியில் இருந்து விலக நேர்ந்தது, மிகத் துரதிஷ்டவசமானது. அவனால் தவிர்க்க முடியாமல் நேர்ந்த ஒன்று அது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சியாகத் தானிருந்தது. ஆனால், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத இடத்தில் அவனால் தான் தொடர்ந்து இருக்க முடியவில்லை. அமைதியாக அங்கிருந்து வெளியேறி விட்டான். எந்தவித சமரசங்களுக்கும் அவன் இடம் கொடுக்கவில்லை.
விளையாட்டில், விளையாட்டாகக் கூடத் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க அவன் தயாராகவில்லை. விளைவு, கொல்கத்தா அணியில் இருந்து அவன் விலக, சென்னை அணி அவனுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றதில் அவனுக்குப் பெருமகிழ்ச்சியே.
நிரஞ்சனது ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அவனது சாதனை பட்டியல் மிக நீளமானது. அவன் சறுக்கிய வருடங்களும் உண்டென்றாலும், சாதித்த வருடங்கள் அவனுக்காக நின்று பேசியது.
மிகக் குறைந்த ஓவர்கள் (overs) என்பதால், பொதுவாகவே ஐபிஎலில் விளையாடும் ஒவ்வொரு வீரனும் துணிந்து, இறங்கி நன்றாக அடித்து ஆடவே செய்வார்கள்.
இங்கே அவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் தான் மேலே முன்னேற அவர்களுக்குத் துருப்புச் சீட்டு எனும் போது கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அடித்து ஆடி அதிசயங்களை நிகழ்த்துபவர்களே இங்கு அதிகம். ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த பல வீரர்கள், நேரடியாக அடுத்து இந்திய அணிக்கு தேர்வாக, அதைப் பார்த்த இளம் வீரர்கள் ஐபிஎலை தங்களின் முன்னேற்றத்திற்கான முதல் படியாக நினைத்து உயிரை கொடுத்து ஆடினார்கள். அதற்குப் பலன் இருக்கவும் செய்தது.
ஆனால், நிரஞ்சனிற்கு அப்படி எந்தவொரு அழுத்தமும் இல்லை. ஏனென்றால், ஐபிஎல் என்ற ஒன்று அறிமுகமாகும் போதே அவன் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரனாக இருந்தான்.
அதற்கும் முன்னமே தன்னைக் கிரிக்கெட் உலகிற்கு நிரூபித்தும் இருந்தான் அவன்.
முதலில் தமிழக ரஞ்சி கோப்பை அணிக்கு விளையாடி, அதன் மூலம் 19 வயதிற்குட்பட்டோருக்கான (Under 19) இந்திய அணியில் இடம் பிடித்தான் நிரஞ்சன். வாய்ப்புகள் அப்படியொன்றும் எளிதாக வாய்த்து விடவில்லை அவனுக்கு.
பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் தனது திறமையைக் கடுமையாக விளையாடி நிரூபித்துத் தான், இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடித்தான் அவன்.
பொதுவாக வீரர்கள் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சாதிப்பது அபூர்வம். பெரும்பாலும் எதையாவது ஒன்றை தான் தேர்ந்தெடுப்பார்கள். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்தவர்கள் அரிது. அவர்களே ஆல் ரவுண்டர் என்று அழைக்கப்படுவார்கள். மிகக் குறுகிய காலத்தில் நிரஞ்சன் ஆல் ரவுண்டர் ஆக மாறியிருந்தான்.
அவனது அந்தத் திறமையால் தான் 19 வயதிற்குட்பட்டோருக்கான
உலகக் கோப்பை இந்திய அணியில் அவனுக்கு இடம் கிடைத்தது, அன்றைக்குக் கதறி அழுதே விட்டான் நிரஞ்சன்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆடுவது அவனுக்கு வாழ்நாள் கனவு. அதிலும் அந்த இளம் வயதிலேயே அவனது கனவு நிறைவேறுவதற்கான முதல் படி கிடைக்க, அதில் ஓரடி எடுத்து வைக்கும் முன்னே உணர்ச்சி வசப்பட்டுப் போனான் அவன். இந்திய அணியில் இடம் பிடித்த செய்தி கேட்ட அன்று, குளியலறை கதவடைத்து, கொட்டும் தண்ணீருக்கு அடியில் நின்று கதறி அழுததை அவன் என்றைக்கும் மறக்கவே மாட்டான்.
இந்திய இளம் அணி அந்த வருடம் உலகக் கோப்பையை வெல்ல, உலக வழக்கம் போல் வெற்றி பெற்றவர்களைத் தூக்கிக் வைத்துக் கொண்டாடியது.
நிரஞ்சன் அத்தொடரில் அடித்த இரண்டு சதங்களும் (century), அவன் எடுத்த பத்து விக்கெட்களும் அவனது சாதனைப் பட்டியலில் முதல் இடத்தை மட்டுமல்ல, நிரந்தர இடத்தையும் பிடித்துக் கொண்டது.
அங்கிருந்து நேரடியாக இந்திய அணிக்கு தேர்வாகி விட்டான் நிரஞ்சன்.
சாதனைகள் மட்டுமல்ல, இடையிடையே பல சோதனைகளும் வரத் தான் செய்தது. போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, தேர்வு அரசியல் (Selection politics) என்று அத்தனையும் சகித்துத் தான் சாதிக்க வேண்டியிருந்தது.
தற்போது புதிதாக அவன் இணைந்திருந்த சென்னை அணியிலும் அவன் தன்னை நிரூபித்து விட, விளையாட்டை வாழ்க்கையாகத் தேர்வு செய்ததற்குத் தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான் நிரஞ்சன்.
அவனுக்கு வெற்றிகள் மகிழ்ச்சியை அளித்தாலும், மனதின் ஓரத்தில் மெல்லிய முணுமுணுப்பு அவனைத் தொல்லை செய்து கொண்டேயிருந்தது.
இதுவரை கலந்து கொண்ட எந்தவொரு போட்டியிலும் அவன் நந்தனாவை காணவேயில்லை. அவனையும் அறியாமல் எப்போதும் அவன் கண்கள் அவளைத் தேடிக் கொண்டே தானிருந்தது. ஆனால், மீண்டும் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு அமையவேயில்லை.
வீர்களின் பயிற்சி மைதானத்திற்கும் அவள் வந்தது போலத் தெரியவில்லை.
தொடர்ந்து போட்டிகளுக்காக அவர்கள் பல மாநிலங்களுக்குப் பயணிக்க, அந்த நேரமும் வீரர்களுடன் பயணிக்கவில்லை அவள்.
அவளைக் காண வேண்டும் என்ற ஆவலும், அவளைக் காண காத்திருந்த பொறுமையும் மெல்ல மெல்ல அவனுக்குக் கரைந்து கொண்டிருந்தது.
எந்த ஊருக்கு சென்றாலும், அணியினர் அனைவருக்கும் ஒரே ஹோட்டலில் தான் அறைகள் எடுக்கப்படும். தனக்கு மிக அருகில் தான் அவளும் இருக்கிறாள் என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியா அவன் நிலை அவனுக்கு அப்படியொரு எரிச்சலை உண்டாக்கியது.
அவளைச் சந்தித்த முதல் நாளே அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள, சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்குள் நுழைந்தான் நிரஞ்சன்.
ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா என்று எங்குமே அவளில்லை.
அவளைக் குறித்து வேறு யாரிடமும் அவனுக்கு விசாரிக்க மனம் வரவில்லை.
அவன் நினைத்தால் ஒரே நிமிடத்தில் அவளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து விடலாம் தான். ஆனால், பதில்கள் வரும் முன் ஏன், எதற்கு என்ற கேள்விகள் முளைக்கும். அந்தக் கேள்விகள் மெல்ல வளர்ந்து இருவரையும் இணைத்துப் பேசும் என்பது புரிந்து தான் அவளைக் குறித்த விசாரணையில் இறங்கவில்லை அவன்.