சுகாஸ் பட்டேல் பல வருடங்களாகச் சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். சென்னை அணியின் நிரந்தர வீரன் அவன். அது மட்டுமா, உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அவனும் இருந்தானே. இன்றைக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரன் அவன். நெருங்குவதற்கு எளிதானவன், பழகுவதற்கு மிக இனிமையானவன் என்பதை அவன் நன்கு அறிவான்.
ஆனால், அவனுக்கு ஒரு சிறு பெண் பயிற்சி அளிப்பதை, தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்துவதை, அதை அவன் இயல்பாக ஏற்றுக்கொள்வதைக் காண்கையில் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
“ஹேய், நிரஞ்சன். எப்போ வந்த? வெல்கம் டூ அவர் சென்னை டீம் மேன்” நிரஞ்சன் அங்கு நிற்பதை கவனித்து விட்டு, நெருங்கி வந்து அவனை வரவேற்றான் சுகாஸ்.
“தேங்க்ஸ்” என்று புன்னகைத்த நிரஞ்சனின் பார்வை தன் மேல் இல்லை என்பதை உணர்ந்த சுகாஸ், மெல்லத் திரும்பி தனக்குப் பின்னால் பார்த்து விட்டு, “அது நந்தனா. நம்ம டீமோட வீடியோ அனலிஸ்ட் (Video Analyst)” என்று அறிமுகப்படுத்த,
“வாவ்” அவனையும் அறியாமல் சத்தமாகச் சொல்லி விட்டிருந்தான் நிரஞ்சன். அவனுக்கு அப்படியொரு அதிர்ச்சி, அதனோடு பலத்த ஆச்சரியமும் கூட.
இந்த நவீன காலத்திலும் பெண்கள் கிரிக்கெட் உலகத்தில் நுழைவதே குதிரைக்கொம்பு, அதிலும் ஆண்கள் கிரிக்கெட் உலகில் ஒரு பெண் வேலை செய்கிறாள். அதுவும் அனலிஸ்ட்டாக எனும் போது சட்டென்று அவள் மீது ஒரு பிரம்மிப்பு வந்திருந்தது.
ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். இத்தனை சிறு வயதில், இந்த இடத்திற்கு இவளால் எப்படி வர முடிந்தது?
சென்னை அணியின் அனலிஸ்ட் சிவராஜை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவர் தான் இந்திய அணிக்கும் அனலிஸ்ட்டாக இருக்கிறார். அவருக்குக் கீழே ஒரு குழு இயங்கும், அதில் நந்தனாவும் வீடியோ அனலிஸ்ட்டாக இடம் பிடித்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
ஒரு அணியில் இருக்கும் மொத்த வீரர்களின் கிரிக்கெட் விவரங்களும், ஹிஸ்டரியும் அனலிஸ்ட்களுக்கு அத்துபடி. அதை ஆராய்வதற்கு என்றே நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
ஒரு வீரனின் பலத்தையும், பலவீனத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் அவர்கள். சில நேரங்களில் அணியில் ஒரு வீரனின் இடத்தை முடிவு செய்வதே அவர்களின் அறிக்கை தான்.
அவர்கள் தரும் அறிக்கையைக் கொண்டு தான், அணியின் தலைமை பயிற்சியாளரே வீரர்களுக்குச் சரியான பயிற்சியை அளிப்பார்.
அப்படிப்பட்ட பணியில் இருக்கும் நந்தனாவின் முகத்தில் இருந்து பார்வையை அவனால் அகற்ற முடியவில்லை.
அதிலும் நந்தனா, மிஸ்டர் ஐபிஎல் சுகாஸிற்குப் பேட்டிங்கில் திருத்தம் சொல்லும் அளவுக்கு வந்திருக்கிறாள் என்றால், திறமையான பெண் தான். சுகாஸும் எவ்வித புகாரும் இன்றி அவளது அறிவுரையை ஏற்றுப் பின்பற்றுவதைப் பார்க்கையில் அவனுக்கு வாயடைத்துப் போனது.
“அஹெம்” என்றான் சுகாஸ் கிண்டலாக,
“ஹாய், நான் நந்தனா” என்று அவனை நோக்கி புன்னகையுடன் தன் வலக்கரம் நீட்டினாள் நந்தனா.
அவளின் கரத்தை அழுத்தமாய்ப் பற்றி, “நிரஞ்சன் கிருஷ்ணகுமார்” என்று பதிலுக்கு அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,
“ஷோ ஆஃப். இந்த உலகத்துக்கே உன்னை நல்லா தெரியும் மேன்” என்று ஆங்கிலத்தில் நக்கலாகச் சொன்னான் சுகாஸ்.
அவனின் நக்கல் நிரஞ்சனை பாதிக்கவேயில்லை.
ஜீன்ஸ், டீ-சர்ட்டும், உச்சியில் உயர்த்திக் கட்டிய கூந்தலுமாக, இன்னும் கல்லூரி மாணவியைப் போலிருந்த நந்தனாவை முதல் முறை எங்குப் பார்த்தான் என்பது அப்போது தான் அவனுக்கு மின்னல் வெட்டியது போல நினைவிற்கு வந்தது.
“ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ?” என்று அவள் அபிநயம் பிடித்த அன்றைய தினம் அவனது மனக்கண்ணில் வந்து படக்கென்று அமர்ந்து கொண்டது.
லாவண்டர் நிற பட்டுப்புடவை அவளின் மாநிறத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தி இருக்க, அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் ஆடியது, அவள் காதில் இருந்த நீளமான கற்கள் பதித்த தோடு. கூடவே
தலை நிறைத்த மல்லிகைப்பூவும், முதுகில் படர்ந்திருந்த கூந்தலும், மிதமான அலங்காரமும் அவளைக் காண்போரை மென்னகையுடன் ரசிக்க வைத்தது. ஆனால், அன்றைக்கு அவளைப் பார்த்து உறைந்து நின்றது நிரஞ்சன் மட்டுமே.
அவளிடம் பேசுவதற்காக அவளை நெருங்கியது கூட அவனுக்கு நினைவில் இருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக அன்றைக்கு அவனால் அவளோடு பேச முடியாமலேயே போனது. நண்பன் ஒருவன் அவனது நண்பர்களை அறிமுகப்படுத்த நிரஞ்சனை இழுத்துக் கொண்டு போய் விட, நந்தனாவை பார்த்து, கண்கள் சுருக்கி மன்னிப்பை கோரும் பார்வையுடன் தான் விலகிச் சென்றான் அவன்.
முகம் நிறைத்த புன்னகையுடன் நந்தனா அப்படியே நிற்க, அந்த நிமிடம் அவளிடம் பேச முடியாமல் போன வருத்தம் நிச்சயம் அவனுக்கிருந்தது.
ஆனால், அவர்கள் சென்னையின் மொட்டை வெயிலில், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் நடுவில், இப்படித்தான் சந்திந்து கொள்ள வேண்டும் என்று இருக்கையில் விதியை யாரால் மாற்ற முடியும்?
அன்றைக்கு மும்பையில் புடவையில் மனதை கவர்ந்தவளும், இன்று ஜீன்ஸ் அணிந்து, ஓடி வந்து பந்து வீசிய பெண்ணும் ஒருவரே என்பதை நம்புவது சற்றே அவனுக்குக் கடினமாகத் தானிருந்தது.
அவனது அமைதியைப் பார்த்து விட்டு, “சீ யூ நிரஞ்சன்” என்று நந்தனா விடை பெற,
“ஓ, எஸ்” தடுமாறினான் நிரஞ்சன்.
இப்போது பின் மாலை பொழுதாகி இருக்க, மைதானம் முழுக்கச் சென்னை ஐபிஎல் அணியின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.
தலைமை பயிற்சியாளரிடம் பேசி விட்டு, மைதானத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தாள் நந்தனா.
“வெல்கம் டூ த டீம் நிரஞ்சன்” என்ற குரல்கள் வலுக்க, திரும்பி அணியினருடன் இணைந்தான் நிரஞ்சன். ஆனால், பயிற்சியில் கவனம் செலுத்த முடியாத அளவு அவன் கண்களில் வந்து நின்றாள் நந்தனா.
அவனை நோக்கி வந்த பல பந்துகளை அடிக்காமலேயே தவற விட்டான் அவன். ஏனோ, அவன் மனம் சிதறிக் கொண்டேயிருந்தது. அதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தவித்தான் அவன்.
“ஹே, நிரஞ்சன்” பக்கத்து வலையில், வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகாஸ் அவனைச் சத்தமாக அழைக்க, அவனுக்கு அருகில் சென்றான் நிரஞ்சன்.
“என்னாச்சு உனக்கு? ஃபோகஸ் ஆன் த பால் மேன்” என்று சிரித்துக் கொண்டே தோழமையுடன் அவன் சொல்ல,
“எனக்கு, நான்…” என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினான் நிரஞ்சன்.
“உனக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும், இருந்தாலும் சொல்றேன். சென்னை டீம் பெர்பார்மன்ஸ் விஷயத்துல உனக்கு எப்பவுமே பிரஸர் கொடுக்காது. நீ நல்லா ஆடிக்கலைனாலும் உனக்கான இடம் டீம்ல இருந்துட்டே தான் இருக்கும். ஒரு டைம், ரெண்டு டைம் இல்ல, கணக்கே இல்லாம உனக்கு வாய்ப்பு கொடுத்துட்டே இருப்பாங்க. உன்னை நீ நிரூபிக்கத் தவறினா மட்டும் தான் டீமிலிருந்து தூக்குவாங்க. ஓகே?” என்ற சுகாஸ்,
“ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தியே நந்தனா, அவ சும்மாவே இருக்க மாட்டா. உன் பேட் தொடுற ஒவ்வொரு பாலையும் அக்குவேர் ஆணிவேரா பிரிச்சு மேஞ்சுடுவா. யூ சீ, அவளோட வேலையே அது தானே?” என்றவன்,
“எந்த இடத்துல நாம சொதப்புறோமோ, அதைச் சரி பண்றவரை நம்மள ஃப்ரீயா விடவே மாட்டா. கோச்சை விடப் பெரிய தலைவலி அவ தான்.” சிரித்துக் கொண்டே சொன்னான் சுகாஸ்.
நந்தனாவின் மீதான மதிப்பும், பிரியமும் அந்தக் குரலில் வழிய, மனதில் புதிதாகத் துளிர் விட்ட இனம் புரியா உணர்வுடன் அவனைப் பார்த்தான் நிரஞ்சன்.
“கமான், லெட்ஸ் ப்ளே” சுகாஸ் சொல்ல, தலையசைத்து நகரப் போன நிரஞ்சனை நிறுத்தியது சுகாஸ் அடுத்துச் சொன்ன வார்த்தைகள்.
“உன் பேரை சென்னை அணிக்கு ரெகமெண்ட் பண்ணதே அவ தான். அவளை டிஸப்பாய்ண்ட் பண்ணிடாத மேன்” அவனுக்கு மட்டும் கேட்கும்படி தான் சொன்னான் சுகாஸ். ஆனால், அவ்வளவு சத்தமாக நிரஞ்சனின் செவியில் விழுந்தது அந்த வார்த்தைகள். அதிர்ந்து, உறைந்து போய் நின்றான் அவன்.
சுகாஸ் தன் போக்கில் பயிற்சியைத் தொடர, நிரஞ்சன் மௌனமாக நகர்ந்து பந்தை எதிர்கொள்ளத் தாயாராகப் பேட்டை பிடித்துக் கொண்டு நின்றான்.
இம்முறை பந்தை சரியாக எதிர்கொண்டு அடித்து ஆடினான்.
ஆனால், அவன் மனமோ கேள்விகளால் அடித்துக் ஆடிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு அணிக்கும் தேவையான வீரர்களைத் தேர்வு செய்வது அந்தந்த அணியின் அணி நிர்வாகம் தான். ஆனால், அதற்கு உதவியாக இருப்பது பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் அனலிஸ்ட்கள்.
சென்னை அணி நிர்வாகம் அந்த வருட ஏலத்தில் கடுமையாகப் போட்டி போட்டு அவனை அணிக்குத் தேர்ந்தெடுத்தது என்றே அவன் நினைத்திருந்தான். அணி நிர்வாகம், பயிற்சியாளர் தான் அவனைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பது தான் அவனது அனுமானமாக இருந்தது.
அந்த வருட ஐபிஎல் ஏலத்தில், சென்னை, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் தொடர்ந்து அவனது ஏலத் தொகையை உயர்த்திக் கொண்டே சென்றது அவன் கண் முன் வந்து போனது. ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி விலக, பஞ்சாப் அணி நிர்வாகம் அவனுக்காகத் தொகையை 9, 10 கோடிகள் என்று உயர்த்திக் கொண்டே சென்றது. ஆனால், இறுதியில் 12 கோடிக்குச் சென்னை அணி நிரஞ்சனை கொத்தாக அள்ளிக் கொண்டது. 12 கோடி மிகப் பெரிய தொகை. அந்த ஆண்டு அதிகமான தொகை கொடுத்து எடுக்கப்பட்ட வீரனும் அவனே.
ஆனால், அத்தனைக்கும் பின்னே இருந்தது, “நந்தனா” மென்மையாய் அவள் பெயரை உச்சரித்து, பந்தை ஓங்கி அடித்தான் நிரஞ்சன்.
“த கேம் இஸ் கெட்டிங் பெட்டர் அண்ட் இன்ட்ரஸ்டிங்” மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.
ஆட்டம் தொடரும்…