நான்கு வருடங்கள் கழித்து,
மொட்டை மாடி பயிற்சி வலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார் கார்த்திகேயன். இம்முறை பேட் செய்து கொண்டிருந்தது அவரது நான்கு வயது பேரன்.
“ஸ்லோ பால் போடாத தாத்தா” என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்தான் நிரஞ்சனின் புதல்வன். இல்லை, நந்தனாவின் பிள்ளை என்று சொல்ல வேண்டுமோ?
அவன் செய்யும் சேட்டைகளை, ரகளைகளை ரசித்து அதை வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தாள் நந்தனா.
“சரிங்க செல்லக் குட்டி. இந்தப் பாலை அடிங்க பார்ப்போம்” என்று அடுத்தப் பந்தை வீசினார் கார்த்திகேயன். தந்தையைப் போல ஸ்டைலாக நின்ற வாக்கில் அதை ஓங்கி அடித்தான் அவன்.
“ஷோ ஆஃப்” என்று முணுமுணுத்தாள் நந்தனா. அவளுக்குத் தெரியும், சுகாஸ் இந்த வீடியோவைப் பார்த்தால், இப்படித் தான் சொல்வான் என்று.
அடுத்தப் பந்தை சுகாஸை போல இரண்டு அடிகள் முன்னே இறங்கி அவன் அடிக்க, அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவள் சத்தமாகச் சிரிக்க, பேரனை கைகளில் அள்ளி கொஞ்சிய கார்த்திகேயனும் கூடச் சிரிக்கத் தொடங்கியிருந்தார்.
பத்து நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்து அனைத்தையும் கவனித்த நிரஞ்சனும் அச்சிரிப்பில் இணைந்து கொண்டான்.
இரண்டே எட்டில் மனைவியை நெருங்கி, “ஐ மிஸ்டு யூ” என்று அவளின் உச்சியில் உதடுகளை ஒற்றியெடுத்தான்.
“என்ன சொல்றா, என் பொண்ணு? என் பாப்பூ” மனைவியின் மேடிட்ட வயிறை மென்மையாக வருடியபடி கேட்டான்.
“போன முறையும் பொண்ணு தான் சொன்னீங்க” நந்தனா குறும்பாகக் கேட்க, “பொண்ணு பொறக்கர வரை டிரை பண்ணுவோம் பொண்டாட்டி” என்றான் கண்ணடித்து.
“இந்த முறை கண்டிப்பா பொண்ணு பொறக்கும்” என்று அவனே ஆருடம் சொன்னான். அப்படியே திரும்பி மாமனாரின் கைகளில் இருந்த மகனைப் பார்த்தான்.
அவன் உதடுகள் தானாகப் புன்னகையில் பிரிந்தது.
“இந்தச் சுகாஸ் கூட இவனைச் சேர விடக் கூடாது நந்து. அவனோட அகாடெமி போய்த் தானே இப்படி அடிக்கக் கத்துக்கறான் இவன்?” என்று அவன் போலியாய் சுகாஸின் மேல் கோபிக்க, சிரித்தாள் நந்தனா.
“கிரிக்கெட் அவனோட ரத்தத்துல இருக்கும் நிரஞ்சன்” என்றாள். அதில் உண்மை இருக்க, அவனால் மறுக்க முடியவில்லை.
“நிரு” என்று அழைத்தான். மான் குட்டியாய் துள்ளி ஓடி வந்து தந்தையிடம் தாவினான் நிரூபன் நிரஞ்சன்.
“அப்பா….” என்றான் நல்ல பிள்ளையாக.
“நீ பேட் பண்ணது போதும். இனி மேல் பால் போட கத்துக்கோ. ஓகே?” என்றான் நிரஞ்சன்.
“இல்லப்பா. எனக்குப் பேட்டிங் தான் நல்லா வருதாம். சுகா மாமா சொன்னார்.” என்றான் பிள்ளை பொறுப்பாக.
“டேய் சுகாஸ். அடாவடி” என்று மனதில் நண்பனை தாளித்தான் நிரஞ்சன்.
“சரி, தங்கம். ஓகே. சுகா மாமா சொன்னா சரியா தான் இருக்கும்” என்றவன், “ஆனா, அப்பா மாதிரி அடிக்க, உங்களுக்கு யார் சொல்லி தந்தா?” என்று அவன் விசாரிக்க, “நீங்க தான் ப்பா” என்று பொறுப்பாகப் பதில் சொன்னான் நிரஞ்சனின் புதல்வன்.
“டிவியில பார்த்தேன் ப்பா. அப்புறம் அம்மா, உங்க பேட்டிங் வீடியோ பார்த்தாங்களா? அதுல பார்த்தேன். நீங்க சிக்ஸ் அடிச்சிங்க” என்று அம்மாவையும் சேர்த்தே கோர்த்து விட்டான் குட்டி.
“நிரு” என்று அவன் காதை செல்லமாகத் திருகினாள் நந்தனா.
“முதல்ல இவன் பேரை மாத்தணும் நந்து. நீ யாரை கூப்பிடுறன்னே எனக்குத் தெரியல” நிரஞ்சன் புலம்ப, சிரித்தாள் நந்தனா.
பேரனை கைகளில் வாங்கிக் கொண்டு, கீழிறங்கிப் போனார் கார்த்திகேயன்.
“பாட்டி…” என்று பூர்ணிமாவிடம், அவன் கதை பேச தொடங்கியது, மாடி வரை கேட்டது.
நிரூபன் இரண்டு குடும்பங்களுக்கும் செல்ல பிள்ளை. இருவரின் பெற்றோரையும் தன் இனிமையான குணத்தால், மழலை பேச்சால் கட்டிப் போட்டிருந்தான் அவன்.
தனிமை கிடைத்ததும், மனைவியை மென்மையாக அணைத்துக் கொண்டான் நிரஞ்சன்.
“கண்ணை மூடி, கை நீட்டு நந்து” கிசுகிசுத்தான்.
“நிரஞ்சன்..” என்றவளை விலக விடாமல் இறுக அணைத்து தான் சொன்னபடி செய்ய வைத்தான்.
கண் மூடி, கை நீட்டினாள். அவளின் உள்ளங்கையில் வழுவழுப்பான எதுவோ வைக்கப்பட, “நிரஞ்சன்.. இது என்னது?” குழப்பத்துடன் கேட்டாள்.
“சர்ப்ரைஸ் பொண்டாட்டி. நீ கேட்ட விஷ்” என்றான் நிரஞ்சன் சத்தமாக.
பட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் கையில் ரோஜா நிறத்தில் கோப்பு ஒன்று அமர்ந்திருந்தது. அங்கிருந்த நாற்காலியில் நிரஞ்சன் அமர்ந்து, அவளை மடியில் அமர வைத்துக் கொண்டான். அவன் கரம் பாதுகாப்பாய் மனைவியின் வயிறை சுற்றியிருந்தது.
“ஓபன் பண்ணி பாரு நந்து” என்று அவன் சொல்ல, மெல்லப் பிரித்தாள். விழிகள் வியப்பில் விரிய, அவளுக்குப் பேச்சு மறந்து போனது. மூச்சில் வேகம் கூடியது.
“நந்து..” அவளின் வயிறை வருடினான் நிரஞ்சன். பட்டென்று திரும்பி அவனை அழுத்தமாக முத்தமிட்டாள் நந்தனா.
“தாங்க்ஸ் அ லாட்” என்றாள் மகிழ்ச்சி பொங்க.
சில வருடங்களுக்கு முன்பு, அவளின் பிறந்த நாளுக்கு அவள் விளையாட்டாகக் கேட்ட விஷ்ஷை, இன்று உண்மையாக்கி கொடுத்திருந்தான் அவளின் விளையாட்டு வீரன்.
தமிழ்நாட்டில் ஒரு கிரிக்கெட் அகாடெமி. அதுவும் அனைவருக்குமான ஒன்றாக அது இருக்க வேண்டும். இலவசங்களுக்கு உலகில் எப்போதும் மதிப்பிருந்தது கிடையாது என்பதால், குறைந்த கட்டணத்தில் ஒரு முழுமையான பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கும் அவளின் கனவை நனவாக்குவதற்கான முதல் படியை இன்று எடுத்து வைத்திருந்தான் அவள் கணவன்.
சென்னையில் ஏற்கனவே கேப்டன் ஒரு கிரிக்கெட் அகாடெமி நடத்தி கொண்டிருந்தார். கொண்டிருக்கிறார். சென்னை அணியும் நடத்திக் கொண்டிருக்கிறது. திருச்சி, கோயம்பத்தூர் போன்ற பெரு நகரங்களில் சில பயிற்சி மையங்கள் ஏற்கனவே இருக்க, மதுரையைத் தேர்ந்தெடுத்து, இடம் பார்த்து, பிளான் வடிவமைத்துக் கடைசியாக அரசிடம் முறையாக அனுமதி பெற்று, இன்று அதற்கு உரிமையும் வாங்கி வந்திருந்தான் அவன்.
அத்தனையும் அவளுக்குத் தெரியாமல் அப்பா மற்றும் மாமனார் உதவியுடன் ரகசியமாக நிறைவேற்றி இருந்தான் நிரஞ்சன். அவனுக்கு இதில் தொடக்கத்தில் இருந்து, இறுதி வரை உதவி செய்து, கைக் கொடுத்தது, ஏற்கனவே கிரிக்கெட் அகாடெமி நடத்திக் கொண்டிருக்கும், அவர்களின் உயிர் நண்பன் சுகாஸ் பட்டேல்.
நந்தனா உணர்ச்சி மிகுதியில் அவன் புறமாகத் திரும்பி, இறுக அணைத்து முத்தமிட்டாள்.
“எனக்கு வார்த்தையே வரல நிரஞ்சன். எவ்ளோ செலவாகி இருக்கும்.? எவ்ளோ உழைப்புத் தேவைப்பட்டிருக்கும். ஏன், என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல” அவள் கோபிக்க,
“இது சர்ப்ரைஸ் பொண்டாட்டி. இப்போ உன் முகம் பார்க்க எப்படியிருக்கு தெரியுமா?” என்று கொஞ்சியவன், “எனக்குச் சுகாஸ் ஹெல்ப் பண்ணான். நான் தனியா எதுவும் செய்யலை” என்று புன்னகையுடன் சொன்னான்.
சுகாஸ் பட்டேல் தானொரு சிறந்த நண்பன் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்தான்.
“அப்புறம், எவ்ளோ செலவாச்சுன்னு பார்க்கற விஷயமா இது நந்து? நம்மகிட்ட கொட்டி கிடக்கற கோடிகள் எல்லாமே இங்க சம்பாதிச்சது நந்து. அதை இவங்களுக்குத் திருப்பிக் கொடுக்காட்டி எப்படி?” நிரஞ்சன் சொல்ல, கணவனைப் பெருமையுடன் பார்த்தாள் நந்தனா.
“யூ ஆர் த பெஸ்ட் நிரஞ்சன். இன் எவ்ரிதிங்க்” என்றாள், கைகளை விரித்து. சிரிப்புடன் அவளின் மலர் கரங்களைப் பற்றி, தன்னைச் சுற்றிப் படற விட்டான் நிரஞ்சன்.
“நீயில்லாம, உன் துணையில்லாம என் லைஃப்ல எதுவுமே சாத்தியமில்ல நந்து. சாத்தியமாகி இருக்கவும் இருக்காது. நீ தான் என் சப்போர்ட் சிஸ்டம்” காதலுடன் சொன்னான். அந்தக் குரலில் மென்மையும், உண்மையும் இருந்தது.
மனைவியின் கைப் பிடித்துக் கீழே அழைத்துப் போனான்.
“லெட்ஸ் செலிபிரேட் திஸ் பொண்டாட்டி” என்றவன், அவர்கள் வாழ்வின் புதியதொரு தொடக்கத்தின் கொண்டாட்டத்தை எப்போதும் போல மனைவியிடம் இருந்தே தொடங்கினான்.
“நந்து” அவன் கெஞ்ச, அவள் மிஞ்சினாள். சரசமாகக் கொஞ்சினான். சிரித்தாள், சிரித்தான். நெருங்கினர், அணைத்தனர், மயங்கினர்.
அறையை நிறைத்துக் கொண்டிருந்தது அவர்களின் காதல். அது அவர்களின் வாழ்வையும் நிறைக்கும்!.
ஆட்டம் நிறைவுற்றது!!!
சுபம்!!!