இனியொரு பிரிவேது – 25 (3)

அவன் கண்கள் அனிச்சையாய் திரும்ப மைதானத்தில் இருந்த பெரிய திரையில் மனைவியின் முகம் ஒளிபரப்பப்பட்டது. சட்டென இறுக்கம் தளர்ந்து இயல்பானான் அவன். ரியா, கேப்டனின் மனைவி மற்றும் நந்தனா மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அதைத் தான் திரையில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

எலுமிச்சை மஞ்சள் நிற நீண்ட கவுனில், மேடிட்ட வயிற்றுடன் அத்துணை அழகாக இருந்தாள் நந்தனா.

இயல்பு போல அவனருகில் ஓடி வந்து, “நிரஞ் சைட் அடிக்காம. ஃபோகஸ் ஆன் மேட்ச்” என்றான் சுகாஸ். வெட்கச் சிரிப்புடன் அடுத்த ஓவரை அவனே வீசினான். இரண்டாவது பந்திலேயே, கொல்கத்தாவின் முதல் விக்கெட் விழுந்தது. அதுவரை அவனைச் சந்தேகமாகப் பார்த்த மஞ்சள் ரசிகர்கள் இப்போது ஆரவாரித்து அவன் பெயரை மந்திரமாய் உச்சரித்தனர்.

அது தான் தொடக்கம், அதன் பின்னே சீட்டுக் கட்டை போல மளமளவென்று சரியத் தொடங்கியது கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள். சென்னை அணியின் பந்து வீச்சு அன்று மிகத் துல்லியமாக இருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டம்பிங் செய்தே இருவரை வெளியேற்றினார். நிரஞ்சன் மொத்தம் நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தான்.

20 ஆம் ஒவரின் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 160 ரன்கள் மட்டுமே எடுத்திருக்க, சென்னை அணி வெற்றியை மீண்டும் ஒருமுறை தங்கள் வசமாக்கி இருந்தது.

“சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது” வர்ணனையாளர் சத்தமாக மைதானம் முழுவதும் எதிரொலிக்கும் வண்ணம் அறிவிக்க, மஞ்சள் கூட்டம் ஆர்ப்பரித்து வெற்றியை கொண்டாடியது.

சுகாஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து நண்பனை தூக்கி சுழற்றி, இறக்கி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“நாம ஜெய்ச்சுட்டோம் நிரஞ். கங்கிராட்ஸ் டு அஸ்” நண்பனை அணைத்துச் சொன்னான் சுகாஸ்.

முன்னாள் கேப்டன், நிரஞ்சனின் தோளில் தட்டிக் கொடுத்து, “வெல் டன் நிரஞ்” என்று அவர் பாணியில் அமைதியாகப் பாராட்டினார். ஒட்டு மொத்த சென்னை அணியும், அந்த நிமிடமே மைதானத்தில் வெற்றியை கொண்டாட தொடங்கியிருந்தது.

அத்தனையையும் மீறி அவன் கண்கள் அனிச்சையாய் திரைக்குத் தான் சென்றது. அங்கே புன்னகையும் கண்ணீருமாக நின்றிருந்தாள் நிரஞ்சனின் நந்தனா. சென்னை அணியின் வீடியோ அனலிஸ்ட்.

அவளைச் சுற்றி மற்ற வீரர்களின் மனைவிகள் அனைவரும் குதித்துக் கொண்டாடிக் கொண்டிருக்க, நடுவில் நின்று கைத் தட்டிக் கொண்டிருந்தாள் நந்தனா.

அந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வெற்றிகரமாக, நான்காவது முறையாக வென்றது சென்னை அணி. அதைத் தலைமை தாங்கியவன் நிரஞ்சன் கிருஷ்ணகுமார்.

அதன் பின்னர்க் கண்ணை மறைக்கும் பாராட்டும், பரிசுகளும், விருதுகளும், கொண்டாட்டங்களும் சென்னை அணியைச் சூழ்ந்து கொண்டது. வீரர்கள் அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள்.

அணி நிர்வாகம், சென்னை அணி ஊழியர்கள் அனைவரையும் அழைத்துப் பாராட்ட மறக்கவில்லை. அதில் சிவராஜ், நந்தனா போன்றோர் முதன்மையில் இருந்தார்கள்.

“நிரஞ்சன் கிருஷ்ணகுமார் தலைமையிலான சென்னை அணி இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்றது”

“சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தந்தார் நிரஞ்சன் கிருஷ்ணகுமார்” எங்குத் திரும்பினாலும் நிரஞ்சனுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணமிருந்தது.

“இது அணியின் வெற்றி. சென்னை அணியின் கேப்டன், எப்போதும் தலைவன் ஒருவனே” என்று நிரஞ்சன் பேட்டி கொடுத்தும் கூட, அவனையே கொண்டாடியது உலகம்.

மனைவியை ஒரு கையில் அணைத்தபடி, மறு கையில் வெற்றி கோப்பையைப் பிடித்து முகம் நிறைத்த புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான் நிரஞ்சன்.

இங்குத் தான் அவனுக்கு எல்லாமே கிடைத்தது. சென்னை அணி அவனுக்குப் பேரையும், புகழையும், பணத்தையும் மட்டும் தரவில்லை. அவனது பொக்கிஷமான மனைவியையும் இங்குத் தான் சந்தித்தான் அவன்.

“நன்றி சென்னை. யூ கேவ் மீ எவ்ரிதிங்க்” (You gave me everything) என்று மகிழ்ச்சி பெருக்கில், மனைவியுடன் வெற்றிக் கோப்பையை ஏந்தி நிற்கும் புகைப்படத்தைப் பதிந்து, ட்டுவிட் செய்தான் அவன்.

சுகாஸ் குடும்பத்துடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

“டார்லிங்…” வார்த்தைகள் வராமல், நந்தனாவின் தோள் பற்றினான் சுகாஸ். மெல்ல அவளின் தலையில் கை வைத்து கோதி கொடுத்தான். ஆசிர்வதிப்பது போன்ற அந்தச் செய்கையில் அவளுக்குக் கண் கலங்கியது.

ரியா அவளை இறுக அணைத்து, “நாம சாதிச்சுட்டோம் நந்து” என்றாள் சத்தமாகக் கத்தி. சட்டெனச் சிரித்தனர் நால்வரும். அதை அப்படியே புகைப்படமாக எடுத்திருந்தது அவர்களை ஃபோகஸ் செய்திருந்த கேமரா.

சென்னை அணி வீரர்களின் புகைப்படங்கள் தான் அன்று இணைய உலகத்தை நிறைத்திருந்தது.

வெற்றிக் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்து, மறுநாள் அதிகாலையில் தான் வீடு திரும்பினார்கள் அவர்கள்.

வீடு அவர்களைப் பெருமையுடன் பார்த்தது. கொண்டாடி மகிழ்ந்தது. வீடும், குடும்பமும் தரும் பாராட்டும், அங்கீகாரமும் எப்போதும் அலாதி தானே? அதற்குத் தனி மதிப்பு தானே? நிரஞ்சன், நந்தனா இருவரின் முகத்திலும் நிரந்தரமாக வந்து அமர்ந்து கொண்டது அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி மற்றும் அதையொத்த அனைத்தும்.

அறைக்குள் நுழைந்ததும் மனைவியை இறுக அணைத்து, “கங்கிராட்ஸ் பொண்டாட்டி” என்றான் நிரஞ்சன்.

“தாங்க்ஸ் கேப்டன்” என்றாள் கண் சிமிட்டி. வெடித்துச் சிரித்தான் நிரஞ்சன். அச்சிரிப்பு அறையெங்கும் சிதறி, அவர்களின் வாழ்வை நிறைத்தது.

அடுத்த வாரமே நந்தனாவிற்கு ஒன்பதாம் மாதம் தொடங்க, மனைவியின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு மும்பையிலேயே வளைக்காப்பை நடத்தி விடுங்கள் என்று கூறி விட்டான் நிரஞ்சன்.

அவன் வார்த்தையை மீற வீட்டு பெரியவர்களும் விரும்பவில்லை.

நந்தனாவின் வீட்டில் வைத்தே மிக எளிமையாக, ஆனால் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது வளைகாப்பு நிகழ்ச்சி. அன்றைக்கு மட்டும் பெற்றோருடன் சென்னை சென்று, அங்கு அவர்களின் ஹோட்டலுக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, அவர்கள் இருவருக்கும் தேவையான பொருட்களுடன் மும்பை வந்து விட்டான் நிரஞ்சன்.

அடுத்த ஒரு வருடம் அவனது விலாசம் மாமனாரின் வீடு என்றானது.

சென்னை அணிக்கு கோப்பையைப் பெற்று தந்ததில் இருந்து கிரிக்கெட் உலகில் அவனது மதிப்பு இன்னும் உயர்ந்திருந்தது. அடுத்து வரும் ஒரு நாள் போட்டிக்கு அவனைக் கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சு உயர்மட்டத்தில் அடிப்பட்டது. சிவராஜ் அதைப் பெருமையுடன் நந்தனாவிடம் பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்ட அன்று கண் கலங்க கணவனை அணைத்து முத்தமிட்டாள் அவள்.

“என்ன, என் பொண்டாட்டிக்கு காதல் பொங்குது?” என்று கட்டிக் கொண்டவனிடம், எதையும் சொல்லிக் கொள்ளவில்லை அவள்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை எதுவும் நிரந்தரம் கிடையாது. பதவி உறுதியான பின்னர், நிர்வாகமே அவனிடம் தெரிவிக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டாள் நந்தனா. அவள் இப்போது வீட்டில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு, உங்க மேல இதுவரை காதல் பொங்கவே இல்லையா?” என்று கணவனிடம் சடைத்துக் கொண்டாள் அவள்.

“ஓய் பொண்டாட்டி, இதுவரை நீ ஒரு ஐ லவ் யூ கூடச் சொன்னதில்லை. தெரியுமா?” என்று அவளின் கன்னம் பற்றிக் கொஞ்சினான் நிரஞ்சன்.

“நிறைய முறை சொல்லி இருக்கேன். மயக்கத்தில உங்களுக்குக் கேட்டிருக்காது” நாக்கை துருத்தி, கண்ணடித்து அவள் சொல்ல, அவனுக்குக் கன்னம் சிவந்தது. கலகலவென்று சிரித்தாள் நந்தனா.

அதை மயக்கத்துடன் பார்த்தான். அவன் உதடுகள் தானாக,

“ஐ லவ் யூ நந்து. என் செல்ல பொண்டாட்டி” என்று மென்மையாக உச்சரித்தது. ஒரு கரம் அவளின் கழுத்து டாட்டூவை வருடிக் கொண்டிருக்க, அவள் காதில் அதைக் காதலுடன் சொன்னான் நிரஞ்சன். அவன் கழுத்தில் கரம் கோர்த்து இறுக்கமாக அணைத்து கொண்டாள் நந்தனா.

இருவருக்கும் இடையே, “நான் இருக்கிறேன்” என்று அசைந்து, உதைத்து உறுதியாகச் சொன்னது அவர்களின் சின்னஞ்சிறு உலகம்.

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடிய ஒரு நாள் போட்டி தொடருக்குத் தலைமை தாங்கி, தொடரை வென்று அன்று காலை தான் வீடு திரும்பியிருந்தான் நிரஞ்சன்.

மனைவி இருக்கும் நிலையில் அவளைப் பிரியவே மனமில்லை அவனுக்கு. ஆனாலும், தலைமை பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாதென்று குடும்பம் வற்புறுத்தியதால், மேலும் நந்தனாவே சொன்னதால் மட்டுமே அந்தப் போட்டியை விளையாட சென்றான் அவன். வெற்றியுடன் திரும்பியும் இருந்தான்.

அது பின் மாலை பொழுது, நிரஞ்சன் மதிய உணவிற்குப் பின்னர் மனைவியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா. அவன் பேச்சை கேட்டபடியே அப்படியே உறங்கியும் இருந்தாள் அவள்.

அவளுக்குத் திடீரென்று ஆழ்ந்த உறக்கத்திலும் அவஸ்தையாய் ஒரு உணர்வு.

அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருந்த வலையில் கார்த்திகேயன் பந்து வீச, பேட் செய்து கொண்டிருந்தான் நிரஞ்சன்.

“நந்து மா, மாடிப்படி ஏறாத டா” பூர்ணிமா மகளைக் கரிசனத்துடன் கண்டிக்கும் குரல் மெலிதாகக் கேட்டது.

அடுத்தப் பந்தை வீச தயாரான கார்த்திகேயன், ஓடி வந்து அப்படியே நின்றார். அவரைத் தாண்டிக் கொண்டு நடந்தாள் நந்தனா. அவள் நேராகக் கணவன் முன் போய் நிற்க, “என்ன நந்து? என்னடா?” என்றான் நிரஞ்சன் பதட்டமாக.

அவர்களுக்குப் பின்னால், “நந்து மா? என்னாச்சு?” என்று தந்தையாய் பதறிக் கொண்டிருந்தார் கார்த்திகேயன்.

நந்தனா மெல்ல அடிகள் வைத்து, மூச்சு வாங்க கணவனின் கைப் பிடித்தாள். அவனது விரல்கள் முறிந்து விடும் அளவு இறுக்கமாக அவன் கைப் பற்றி இருந்தாள். நிரஞ்சனின் முகம் வலியில் சுருங்கியது. அப்போது தான் மனைவியின் முகத்தைப் பார்த்தான் அவன். அதில் அதீத வலியின் சாயல்.

“வலிக்குது நிரஞ்..” அதை முழுதாகச் சொல்லி முடிக்கக் கூட அவளால் முடியவில்லை. ஒரு நொடி திகைத்து உறைந்த நிரஞ்சன், மறு நொடியே அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான். மிகக் கவனமாகப் படிகளில் இறங்கி காரை அடைந்தான்.

error: Content is protected !!
Scroll to Top