இனியொரு பிரிவேது – 25 (2)

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம் அந்த முன்னிரவிலும் பகலைப் போல ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.

அன்றைய மிக முக்கியமான ஆட்டத்தைக் காண பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் இரண்டு அணியையும் ஆதரித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். போட்டி கொல்கத்தாவில் நடந்தாலும் சென்னையின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அரங்கம் நிறைத்த மஞ்சள் வண்ணம் கண்ணைப் பறித்தது.

“சென்னை, சென்னை” என்று ஒலித்த கோஷம், அதனைத் தொடர்ந்து, “நிரஞ்” என்று ஆரவாரிக்க, கேமராக்கள் தன்னிச்சையாக நந்தனாவின் பக்கம் திரும்பியது. அதை எதிர்பார்த்திருந்த அவளும், முகத்தில் பளிச்சென்று புன்னகையைப் பூசிக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.

அன்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் நிரஞ்சன் கிருஷ்ணகுமார்.

சென்னை ரசிகர்களுக்குச் சின்னதாக ஏமாற்றம் இருந்தாலும் கூட, தமிழக வீரன் ஒருவன் சென்னை அணிக்குத் தலைமை தாங்குவதைச் சிறிய முணுமுணுப்புடன் ஏற்றுக் கொண்டனர். அப்போதே சில விமர்சனங்கள் எழத் தான் செய்தது. ஆனால், சென்னை அணி நிர்வாகம் அனைத்திற்கும் தயாராகவே இருந்தது.

அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, சென்னை அணியின் மூத்த வீரர்களான சுகாஸ், ஷான், ரவி எனப் பலர் இருக்க, அந்த வருடத்தின் சிறப்பான ஆட்டத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிரஞ்சனை அந்தப் போட்டிக்கு தலைவனாக அறிவித்திருந்தது சென்னை அணி. அதற்குக் கேப்டனின் பலமான சிபாரிசு வேறு.

சென்னை அணியைப் பொறுத்தவரை கேப்டன் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார். ஆக, அவரது இடத்தை நிரப்ப திறமையான அதே நேரம் அவரைப் போலப் புகழ் பெற்ற முகத்தைத் தேடியது நிர்வாகம். நிரஞ்சன் அந்தச் சட்டதிற்குள் சரியாகப் பொருந்தினான்.

இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருந்து அவனைத் தலைவனாக அறிவிப்பதை விட, சிறந்த தலைவனின் முன்பு, அவன் கோப்பையை வென்று காண்பித்தால் அது தனிச் சிறப்புத் தானே? அது தான் சென்னை அணியின் நோக்கமாக இருந்தது.

இல்லையென்றால் சிறிய கணுக்கால் காயத்திற்கு எல்லாம், சிறந்த தலைவனை அணிக்குள் வைத்துக் கொண்டு நிரஞ்சனை தலைவனாக அறிவிப்பார்களா என்ன?

போட்டிக்கு முந்தைய நாள் இரவு தான் நிரஞ்சனிடம் தகவலை சொன்னது அணி நிர்வாகம். நந்தனாவிற்கு முன்னரே தெரியும் என்றாலும் கூட, கடமையின் கண்ணியத்தைக் காக்க கணவனிடம் அது குறித்து மூச்சு கூட விடவில்லை அவள்.

செய்தி கேட்டு அப்படியே அதிர்ந்து நின்றான் நிரஞ்சன். இன்ப அதிர்ச்சி. இதயம் படபடத்து இஷ்டத்திற்குத் துடிக்க ஆரம்பித்தது.

“தலைவன் இருக்கும் போது, நான் எதற்கு? என்னால் முடியாது” என்று மறுக்கவே விரும்பினான் அவன். ஆனால், நம் முன் வைக்கப்படும் வாய்ப்புகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்ற தந்தையின் அறிவுரை நினைவில் வர, திரும்பி தலைவனைப் பார்த்தான் அவன்.

ஒற்றைப் புருவம் உயர்த்தி, புன்னகைத்து, “யூ கேன் டூ இட் நிரஞ்” என்றார் அவர். அவன் மீது முழு நம்பிக்கை வைத்து.

பேச்சு வராமல் மலைத்து நின்றவனை, பேசி பேசியே சம்மதிக்க வைத்திருந்தது சென்னை அணி நிர்வாகம்.

அவனது கிரிக்கெட் வாழ்வில் தலைவன் பதவி புதிதல்ல. தமிழக அணியைச் சில முறை கேப்டனாகத் தலைமை தாங்கி இருக்கிறான் அவன். அப்போட்டிகளில் சிலதை வென்றும் இருந்தது தமிழக அணி.

ஆனால், இம்முறை கிடைத்திருப்பது சென்னை அணியின் தலைவன் பதவி. மிகப் பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பை, பதவியைத் தரவில்லை என்ற காரணத்தினால் தான் அவன் கொல்கத்தா அணியில் இருந்தே விலகியது. ஆனால், இன்று அத்தனை பதட்டமாக இருந்தான் அவன். உள்ளங்கைகள் கூட வியர்த்து வழிந்தது.

போட்டி ஆரம்பிக்கும் முன் கணவனைத் தனியாக, தனிமை தேடி அலுவலக அறைகளுக்குள் அழைத்துக் கொண்டு போனாள் நந்தனா. அவனை இறுக அணைத்து முத்தமிட்டாள். வேறொன்றும் சொல்லவில்லை அவள். அவனுக்கும் தேவையாக இருக்கவில்லை. மனைவியின் கண்களில் தெரிந்த அந்த ஆழ்ந்த நம்பிக்கையும், உறுதியும் அவனுக்குள்ளும் பரவ, புன்னகைத்து விடைப் பெற்றான்.

அன்றைய போட்டியை காண இருவரின் குடும்பமும் அங்கிருந்தது. ஆனால், யாரும் அவனுக்கு எவ்விதத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை.

போட்டி தொடங்குவதற்குச் சில நிமிடங்களே இருக்க, இரு அணியின் கேப்டன்களும் டாஸ் போட அழைக்கப்பட்டனர்.

நந்தனா அலுவலக அறைகளின் முன் அமர்ந்து தன் வேலையில், கணினியில் மூழ்கி இருந்தாள். அவளிடம் ஓடி வந்த ரியா, போட்டியை காண அவளை அழைக்க, மறுத்து விட்டாள் அவள்.

“நான் இங்க இருந்தே லைவ் பார்க்கறேன் ரியா” என்றாள் அவள். அந்நேரம் அவர்களைக் கடந்த கேப்டன் மற்றும் சிவராஜ் அவர்களை நெருங்கிட, “கமான் நந்து. ஆல்ரெடி எல்லாத்தையும் பிளான் பண்ணியாச்சு. லாஸ்ட் மினிட்ஸ் டெசிஷன்ஸ் எடுக்கும் போது பார்த்துக்கலாம். நீ போய் டென்ஷன் இல்லாத நிரஞ் மேட்ச் வின் பண்றதை பாரு” என்று கேப்டன் சிரிப்புடன் சொல்ல,

“இங்க தான் எல்லோரும் இருக்கப் போறோம். ஏதாவது சந்தேகம் இருந்தா நானே கூப்டுறேன் நந்து. நவ் கோ அண்ட் என்ஜாய்” என்றார் சிவராஜ். அவளுக்குத் தேவையான உத்திரவாதத்தை அளித்து.

புன்னகையுடன் அதன் பின்னே அங்கிருந்து எழுந்து ரியாவுடன் நடந்தாள் நந்தனா.

எல்லாப் பக்கமும் இருந்து கேமராக்கள் சுற்றி வளைக்க, மைதானத்தின் நடுவில் நின்றிருந்த நிரஞ்சனின் உடல் முழுக்கப் பதட்டம் நிரம்பி வழிந்தது.

கொல்கத்தா அணியின் கேப்டன் திவ்யேஷ் டாஸ் போடுவதற்குத் தயாராக நிற்க, அவர் முன்பு போய் நின்றான் அவன்.

இதே கொல்கத்தா அணிக்காக அவன் விளையாடி இருக்கிறான். அதுவும் இதே திவ்யேஷ் தலைமையில். கொல்கத்தா அணியின் செல்ல பிள்ளை என்றே ரசிகர்கள் அவனை அழைத்தனர். கொண்டாடினர்.

கொல்கத்தா நிர்வாகம் திவ்யேஷை தலைமை பதிவியில் இருந்து விலக்கிய நேரம், அதை எதிர்பார்த்த நிரஞ்சனுக்கு அந்தப் பதவி கொடுக்கப்படவில்லை. மாறாக வெளிநாட்டு வீரன், அதுவும் அவன் அளவிற்கு அனுபவம் இல்லாத வீரன் ஒருவனுக்குத் தலைமை பொறுப்பைத் தூக்கிக் கொடுத்து அவனை அவமதித்தது கொல்கத்தா அணி நிர்வாகம். அதனால் தான் அங்கிருந்து வெளியேறினான் அவன்.

வெளிநாட்டு வீரன் பெரிதாகச் சோபிக்கவில்லை. மீண்டும் தலைமை பொறுப்புத் திவ்யேஷ் வசமாகி இருந்தது.

நிரஞ்சன் தமிழக அணிக்கு விளையாடிய பொழுது, ஏன் இப்போதும் கூடத் தமிழக அணியின் கேப்டன் திவ்யேஷ் தான். அவனுக்கு ஆசிரியரை எதிர்த்து ஆட நிற்பது போலிருந்தது. விளையாட்டில் சவால்கள் இல்லை என்றால் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது?

இரு அணியின் தலைவர்களும் நட்பாகப் புன்னகைத்து, வாழ்த்தி கைக்குலுக்கி கொண்டார்கள்.

டாஸ் போடப்பட, கொல்கத்தா வென்றது. நிரஞ்சன் அதை முதல் தோல்வியாகப் பார்த்தாலும் துவண்டு விடவில்லை.

கொல்கத்தா முதலில் பவுல் செய்வது என்று தீர்மானித்தது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராஜ் மற்றும் ஷான் கோப்பையைக் கைப் பற்றி விடும் உத்வேகத்துடன் களத்தில் இறங்கினார்கள்.

பவர் ப்ளேயில் இரண்டே இரண்டு வீரர்கள் மட்டுமே மைதானத்தின் வெளி வட்டத்தில் இருப்பார்கள். மற்ற அனைவரும் உள்ளே இருப்பர். அதைப் பயன்படுத்தி முதல் ஆறு ஓவர்களைச் சிறப்பான ஆடினார்கள் சென்னை வீரர்கள் இருவரும். அவர்கள் சந்தித்த பாதிப் பந்துகள் எல்லைக் கோட்டை தொட்டு ஃபோர் மற்றும் சிக்ஸாக மாறி இருந்தது. ஆறு ஓவரின் முடிவில் 55 ரன்களைச் சேர்த்திருந்தார்கள்.

ஏழாம் ஓவரில் ஷான் வெளியேற சுகாஸ் இறங்கினான். பந்துகளைப் பக்கம் பார்க்காமல் பறக்க விட்டான் அவன்.

அவன் அதிரடி காட்டும் போதெல்லாம் ராஜ் நிதானமாக ஆடினான். இறுதியில் 185 ரன்களைச் சேர்த்திருந்தார்கள் அவர்கள். மிகச் சிறப்பான ஆட்டம். இறுதி போட்டியில் கடினமான இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்து இருந்தனர் சென்னை அணியினர்.

கொல்கத்தா அணி பதட்டம் இல்லாது தான் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி காட்ட, மிரண்டு போனான் நிரஞ்சன். அதிலும் அந்நேரம் அவன் உதவிக்காகக் கேப்டனை பார்க்க, எந்த உதவியும் செய்ய அவர் தயாராக இல்லை.

“டிரஸ்ட் யுவர் இன்ஸ்ட்டிங்ட் நிரஞ், உனக்குச் சரின்னு தோன்றதை செய். எல்லாமே சரியா வரும்” ஏற்கனவே அவர் சொன்ன அறிவுரை அவன் மனதில் வந்து போனது. கண்ணை மூடி தன்னை முழுதாக நம்பினான் நிரஞ்சன்.

error: Content is protected !!
Scroll to Top