ஓராண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில் சேர்ந்த நந்தனாவிற்கு இம்முறை அவளின் வேலை அத்தனை சுலபமாக இல்லை. பல சங்கடங்களை அவள் தொடக்கத்தில் சந்திக்க நேர்ந்தது. காரணம் அவளது உடல்நிலை. பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வீடியோ பார்த்துக் குறிப்புகள் எடுக்க வேண்டிய வேலை அவளது. கர்ப்பத்தின் காரணமாகத் தொடர்ந்து ஒரே இருக்கையில் மணிக் கணக்காக அவளால் அமர முடியவில்லை. கூடுதலாக வாந்தி, உடல் சோர்வு என்று வைத்து செய்தது அவளது வயிற்று சிசு.
ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை அணி நிர்வாகம். அவளை எப்போதும் போல இயல்பாக நடத்தியது.
அவளுக்குத் தேவையான மாற்றங்களை, வசதிகளை அலட்டிக் கொள்ளாமல் அவளே அதை உணராத விதமாகச் செய்து தந்தனர்.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை போட்டிகள் ஒரே இடத்தில் நடக்காது. ஒவ்வொரு அணிக்கும் ஒரு ஹோம் கிரவுண்ட் (Home Ground) இருக்கும். உதாரணமாக, சென்னைக்குச் சென்னை எம்.ஏ சிதம்பரம் – சேப்பாக்கம் மைதானம், மும்பைக்கு மும்பை வான்கடே மைதானம். சென்னை – மும்பை இடையே ஒரு போட்டி மும்பையில் நடந்தால், மறுமுறை போட்டி சென்னையில் நடைபெறும். மற்ற அணிகளுக்கும் இதுவே பொருந்தும்.
ஆக, அணிகள் ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு மாநிலங்களுக்குப் பயணிக்க வேண்டியிருந்தது. இந்தியாவின் பல முக்கிய மாநிலங்களின் மைதானங்களில் விளையாட வேண்டியிருந்தது. காலநிலை, உணவு என்று பல்வேறு மாற்றங்களை, சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு அது ஒரு விஷயமே இல்லை.
உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகள் பலவும் பயணித்து விளையாடும் அவர்களுக்குப் பல வித்தியாசமான சீதோஷ்ண நிலைகளைக் கையாளும் திறமை இருந்தது. உணவை பொறுத்தவரை அவர்களுக்குப் பிரச்சனையில்லை. சத்துள்ள சிறப்பான உணவே வழங்கப்படும். அப்படி இல்லையென்றாலும், கிடைப்பதை உண்ண பழகி இருந்தனர். இத்தாலியில் பீட்ஸாவிற்குப் பதில் சப்பாத்தி கேட்பது தானே முட்டாள் தனம்?
நந்தனா அணியினரோடு ஒவ்வொரு போட்டிக்கு நடுவிலும் பயணித்தாள். விமானப் பயணங்கள் என்பதால் அது அப்படியொன்றும் சிரமமாக இல்லை. அலைச்சலை, அலுப்பை புலம்பாமல் சமாளித்தாள் அவள்.
அவளுக்கு என்னவோ எல்லாமே லகுவாகத் தான் இருந்தது. ஆனால், அவர்கள் இருவரின் குடும்பமும், பெற்றோர்களும் தான் அதிகமாக அவளுக்காகப் பதைத்தனர். அவளது உடல்நிலை குறித்துப் பயந்தனர். அதற்கு அவசியமில்லை என்று நிரஞ்சன் எடுத்துச் சொல்லிக் கொண்டே தானிருந்தான். அவர்கள் கேட்டபதாக இல்லை.
நிரஞ்சன் அம்மா புவனாவிற்கு மருமகளுக்கு வளைகாப்புச் செய்ய வேண்டும் என்ற கூடுதல் கவலையும் வேறு சேர்ந்து கொண்டது.
ஆனால், நந்தனாவின் கவனம் எல்லாம் வேலையில் இருக்க, நிரஞ்சனின் கண்கள் எப்போதும் மனைவி மேலேயே இருந்தது. எங்குப் போட்டி நடந்தாலும் மறவாமல், தவறாமல் அவளை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்றான் அவன்.
ஸ்கேனில் குழந்தையின் இதயத் துடிப்பையும், அசைவையும் பார்த்துப் பூரித்துப் போனான். மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கவில்லை என்றாலும், உள்ளார்ந்த அன்புடன் பார்த்துக் கொண்டான். அவளுக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக நின்றான். அவள் உடல், மன அளவில் சோர்வுறும் நேரங்களில் எல்லாம் அவள் சாயத் தோளோடு, அன்பையும், அரவணைப்பையும் சேர்த்தே கொடுத்தான்.
வேளாவேளைக்கு அவளை உண்ண வைத்து, உணவோடு அவளின் மருந்துகளை விழுங்க வைத்தான். கண்டிப்பு காட்டி நேரத்திற்கு உறங்க வைத்தான். கூடுதல் அக்கறையுடன் அவளைக் கவனித்துக் கொண்டான் அவன்.
நந்தனாவிற்குப் போதுமான ஓய்வு கிடைக்க, தெளிவான மனதுடன், ஆரோக்கியமான உடலுடன் அவளால் வேலையில் அதிகக் கவனம் செலுத்த முடிந்தது.
நிரஞ்சனை மிஞ்சிய அன்பை அவள் மேல் செலுத்தியது சுகாஸ் குடும்பம். ஒரு வயது கூட நிரம்பாத கைக் குழந்தையைக் கையில் வைத்திருந்தாள் ரியா. ஆனாலும், தோழிக்காகப் போட்டி நடைபெறும் எல்லா ஊர்களுக்கும் நந்தனாவிற்குத் துணையாக வந்தாள் அவள். அன்பானவர்கள் அனைவரின் துணையுடன் கர்ப்பத்தை, குழந்தையின் வளர்ச்சியை ரசித்து அனுபவித்தாள் நந்தனா. மேலும், அவளுக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டிருந்ததில் உலகமே வண்ண மயமாகத் தான் அவளுக்குத் தெரிந்தது.
அவர்களின் உலகம் அப்படியொன்றும் பெரிதாக மாறி விடவில்லை. மீடியாக்கள், விமர்சகர்கள், இணையவாசிகள் எப்போதும் போலத் தங்களின் வேலையைச் செவ்வனே செய்து கொண்டு தான் இருந்தார்கள்.
நிரஞ்சனை பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் அவ்வப்போது அவன் மனைவியையும் இழுக்கவே செய்தார்கள். அதைக் கண்டும் காணாதது போல இருக்கப் பழகிக் கொண்டனர் இருவரும். தேவையில்லாத விமர்சனங்களை, வசைகளை, கேலி, கிண்டல் மீம்களை அவர்களுக்குள் நக்கலடித்துச் சிரிக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தார்கள். சில முகம் சுளிக்க வைக்கும் விமர்சனங்களைக் கோபத்துடன் கொந்தளித்துக் கடந்தார்கள்.
நந்தனா கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை உலக அதிசயம் போல, அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினார்கள் மீடியாக்கள். ஒரு கட்டத்தில் ஓடி ஒளிவது அவளுக்கு அலுப்பூட்ட, அவளே புகைப்படங்களுக்கு நின்று போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தான் வாழ்க்கை என்றான பின், ஓடி ஒளிவதை விட, நேருக்கு நேராக நின்று சந்தித்து விடுவது உத்தமம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள் நந்தனா. நிரஞ்சனுக்கு எந்தப் புகாரும் இல்லை. அழகாய், பெருமையாய் மனைவியைச் சுற்றி கரம் கோர்த்துப் புகைப்படங்களுக்கு நின்றான் அவன். சமயங்களில் வேண்டும் என்றே அவனின் என்.என் (NN) என்ற டாட்டூவை உலகிற்குக் காட்டினான்.
அச்சமயங்களில், “ஷோ ஆஃப்” என்று அவனை வம்பிழுக்க மறக்கவில்லை சுகாஸ்.
நிரஞ்சனின் பயிற்சி ஆட்டங்களை, சில நொடி வீடியோக்களாக அவனது டிவிட்டர் பக்கத்தில் அவனே பகிரத் தொடங்கி இருந்தான்.
வாழ்க்கை சீராகச் செல்லத் தொடங்கிய நேரத்தில், அவர்களே எதிர்பாராத விதமாக மீண்டும் சமூக வலைத் தளங்களில் ட்ரெண்ட் ஆனார்கள் அவர்கள். அதிலும் குறிப்பாக நந்தனா. முன்பு போல இல்லாமல், இம்முறை அவளைப் புகழ்ந்து கொண்டாடியது இணைய உலகம்.
வேறொன்றுமில்லை. கேப்டனின் மனைவி பகிர்ந்த ஒரு வீடியோ பல மில்லியன் பார்வைகளைக் கடந்து, இணையத்தில் பிரபலமாகி, செய்திகள் வரை சென்றிருந்தது.
அரை நிமிடத்திற்கும் குறைவான அந்தக் காணொளியில் நந்தனா கேப்டனுக்குப் பந்து வீசிக் கொண்டிருந்தாள். அத்தோடு கணவன் நிரஞ்சனுக்கும் அவள் பந்து வீச, அது சிக்ஸாகப் பறந்து கொண்டிருந்தது.
“சிங்கங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது…” என்ற தலைப்புடன் அந்தக் காணொளியை பதிந்திருந்தார் கேப்டனின் மனைவி.
இணைய உலகம், அவளை வியந்து புகழ்ந்து பாராட்டியது. பெண்கள் சாதிக்க எதுவுமே தடையில்லை என்று முழங்கியது. அது தானே உலக வழக்கம். மனைவியின் வளர்ச்சியைத் தடுக்காத நிரஞ்சனை அதிசயப் பிறவி போலப் பார்த்தது. புகழ்ந்தது, கொண்டாடியது இணைய உலகம். அதில் சந்தேகமேயில்லை தான் என்றாலும் கூட, அவனுக்கு அது அதிகப்படியாகத் தான் தோன்றியது. ஒரு தோள் குலுக்களுடன் நகர்ந்து விட்டான் நிரஞ்சன்.
நந்தனா கண்ணை உருட்டி சலிப்பான உடல் மொழியை வெளிப்படுத்தி விட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். அவ்வளவு தான். அதற்கு அவள் காண்பித்த ரியாக்க்ஷன்.
“ஷோ ஆஃப். நீ ட்ரெண்ட்டாக என் டார்லிங்கை யூஸ் பண்ணாத நிரஞ்” எப்போதும் போல முறைத்துக் கடித்தான் சுகாஸ்.
அந்தக் காணொளி எடுக்கப்பட்டதும் அவர்களுக்குத் தெரியாது, டிவிட்டரில் பதியப்பட்டதும் அவர்களுக்குத் தெரியாது. இணையத்தில் வைரலான பின்னே அவர்களது பார்வைக்கு வந்தது.
அவர்களுக்கு மிக நெருக்கமான ஒருவர் பகிர்ந்த காணொளி என்பதால் இருவரும் கோபித்துக் கொள்ளும் நிலையிலும் இல்லை. அப்படியிருக்க என்ன பதில் சொல்வான் நிரஞ்சன்? வழக்கம் போல் சுகாஸை பதிலுக்கு முறைத்தான் அவன்.
இவ்வாறாக இம்முறை மீடியா வெளிச்சத்தை ஓரளவு சரியாகக் கையாள பழகி இருந்தாள் நந்தனா. நிரஞ்சன் அவளை விடவும் நன்றாகத் தேறியிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.