“லெட்ஸ் செலிபிரேட் திஸ் பொண்டாட்டி” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னவன், இந்த முறை தேடியது கேக்கை அல்ல.
நள்ளிரவு இரண்டு மணி போல, மாமனாருக்கு இன்ப அதிர்ச்சியைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டே உறங்கப் போனான் நிரஞ்சன்.
மறுநாள் விடியலில் உடற்பயிற்சி செய்ய வெளியில் வந்த மருமகனை முதல் முறையாக, முறைப் பார்க்காமல், கூச்சப்படாமல் இழுத்து அணைத்துக் கொண்டார் கார்த்திகேயன். அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. அவரின் ஏறியிறங்கிய தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டிருந்த வார்த்தைகளைச் சரியாய் படித்தான் நிரஞ்சன்.
அவன் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு விலகினார் அவர். அங்கே வார்த்தைகளுக்குத் தேவையில்லாது போக, ஒருவரையொருவர் பார்த்து மலர்ந்து புன்னகைத்துக் கொண்டனர்.
எட்டு மணி போல உறக்கம் கலைந்து எழுந்த நந்தனாவின் முன் மந்தகாச புன்னகையுடன் நின்றிருந்தான் நிரஞ்சன். உறக்கம் சுமந்த விழிகளில் அவனை நிரப்பிப் புன்னகைத்தாள். அவளின் அலைபேசியை நீட்டினான் நிரஞ்சன்.
“பாரு” என்றான், கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு.
கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு வாசித்தாள். “இந்த வருடத்தின் ஐபிஎல் வெற்றி கோப்பையைத் தூக்கி உயர்த்திப் பிடிக்க, ஒரு கை குறைவாக இருக்கிறது. சீக்கிரம் வந்து கைக் கொடு நந்தனா” என்ற பதிலை மெயிலில் அனுப்பி அவளை நெகிழ வைத்திருந்தனர் சென்னை அணி நிர்வாகத்தினர்.
“நாளைக்கு இவ்னிங் நாலு மணிக்கு வான்கடே ஸ்டேடியத்தில் பார்க்கலாம் நந்து. மும்பையை இந்த முறை ஜெயிச்சே ஆகணும். அதுக்குத் தயாராக வரவும்.” என்று பதில் அனுப்பியிருந்தார் சிவராஜ்.
அன்றைய நாளின் விடியல் அவர்களுக்கு அற்புதமாக, அர்த்தமுள்ளதாக மாறியிருந்தது.
“தூங்கினது போதும் எழுந்திரு, எழுந்திரு. வேலை இருக்கு” என்று அவளைக் கைகளில் அள்ளி, குளியல் அறையில் கொண்டு விட்டான் நிரஞ்சன். அதன் பின்னான பொழுது அவர்கள் வசம் இல்லாமல் போனது.
பூர்ணிமா செய்தியை கேட்டதும் விருந்தே சமைத்து விட்டார். இனிப்புடன் தடபுடல் பட்டது உணவு.
மாலை இருவரும் ஒன்றாகப் பயிற்சி மைதானத்திற்குக் கிளம்பினார்கள்.
காரில் இருந்து இறங்கியவளுக்குக் கடந்த சில வருடங்களில் நடந்த அனைத்துமே கனவு போலத் தான் இருந்தது. இனி வரப் போகும் காலங்களை மிகுந்த முதிர்ச்சியுடன் எதிர் கொள்ள வேண்டும், பிரச்சனைகளைச் சரியாகக் கையாள வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஸ்டேடியத்தின் படிகளில் கால் வைத்தாள் நந்தனா.
வெகு இயல்பாக அவள் கைப் பிடித்து அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனான் நிரஞ்சன். அந்நேரம் அவனது அருகாமை அவளுக்குத் தேவையாகவும் இருந்தது.
இரண்டே நிமிடங்களில், அமைதியாய் சிவராஜ் முன் போய் நின்றாள். கணினியில் இருந்து முகத்தை நிமிர்த்தி அவளைப் பார்த்து, புன்னகைத்து, “வா, வா, நந்து. இந்த வீடியோவை கொஞ்சம் பாரு. இவன் போடுற இந்த மிஸ்டரி பாலை (Mystery ball) கொஞ்சம் அனலைஸ் பண்ணி சொல்லு.” எடுத்ததும் வேலையைத் தான் கொடுத்தார் அவர். அன்பும், நல விசாரிப்பும் பின்னர்த் தான் நடந்தது. எவ்வித சங்கடமும் இல்லாமல் மீண்டும் தன் வேலையை முழு மனதுடன் பார்க்கத் தொடங்கினாள் நந்தனா.
சென்னை அணியின் பயிற்சியாளர்கள், கேப்டன் என்று ஒவ்வொருவராக வந்து அவளைப் பார்த்து செல்ல, நந்தனாவின் இதயத்தில் இதமான உணர்வு. அவளுக்கு இன்றியமையாததைத் திருப்பிக் கொடுத்த கணவனை நினைக்கையில் இதழ்களும், இதயமும் விரிந்து கொடுத்தது.
வெகு நேரமாக வீடியோ பார்த்துக் குறிப்புகள் எடுத்தவள், சிறிய இடைவெளி வேண்டி வெளியில் வந்தாள். மைதானத்தில் ஒரு ஓரத்தில், பார்வையாளர்கள் அரங்கை விட்டுத் தூரமாக இருந்தது அலுவலக அறைகள். அங்கிருந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தாள். அதுவரை பயிற்சியில் இருந்த நிரஞ்சன், சொல்லி வைத்தது போல அந்நேரம் அவளிடம் வந்தான்.
அவளுக்காகக் கொண்டு வந்திருந்த பழச் சாறை நீட்டினான். வியர்வையில் மின்னிக் கொண்டிருந்தது அவன் முகம். அதில் மின்னலாய் புன்னகை.
அப்பொழுது இடியாய் ஒரு கை நிரஞ்சனின் தோளில் இறங்கி, அவனைப் பின்னுக்கு இழுத்து தள்ளியது.
“டார்லிங்…” என்ற கூவலுடன் நந்தனாவை இழுத்து தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான் சுகாஸ்.
“அப் இஸ்ஸே துஜே ஹோய் அலக் நஹி கர் சக்தா. (Ab iss se tuje koi alag nahi kar saktha – Nobody can separate you from this now)” (உன்னை யாரும் இனி இதில் இருந்து..(கிரிக்கெட்டில் இருந்து) பிரிக்க முடியாது) என்று ஹீரோ போல ஹிந்தியில் கத்தினான் சுகாஸ். சத்தமில்லாமல் சிரித்தாள் நந்தனா.
சுகாஸின் பார்வை நிரஞ்சனின் மேல் நக்கலாக நிலைத்திருக்க, அவன் கைகளில் இருந்து மனைவியைப் பிரித்த நிரஞ்சன், “எஸ். இனியொரு பிரிவில்லை” என்றான் அழுத்தமாகத் தமிழில்.
மெல்ல முகம் திருப்பி, மனைவியின் உச்சியில் மென்மையாக இதழ் பதித்தான் நிரஞ்சன்.
“ஷோ ஆஃப், அவளை விடுடா. இங்க அவ அனலிஸ்ட் நந்தனா. என்னோட டார்லிங்” என்று நிரஞ்சனின் வயிற்றில் குத்தினான் சுகாஸ். சட்டெனப் பரவியது அங்கே ஒரு சிரிப்பலை.
சென்னை – மும்பை போட்டி நாளும் வந்தது. மும்பையிடம் பழக்க தோஷத்தில், வழக்கம் போல இந்த முறையும் தோல்வியையே தழுவியது சென்னை அணி. அன்று நிரஞ்சன் ஒற்றை ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி (Duck out) இருந்தான்.
சுகாஸ், ரவி, கேப்டன் போன்றோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனாலும், வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் தான்.
சென்னை அணி நிர்வாகம் முறையாக அலுவல் ரீதியான கடிதங்களில், கோப்புகளில் நந்தனாவிடம் கையெழுத்து வாங்கி அவள் மீண்டும் வேலையில் சேர்ந்ததை உறுதிப்படுத்திக் கொண்டது.
அன்றைய தோல்வி அதிசயமாக அவளைப் பாதிக்கவேயில்லை. அடுத்து வரும் போட்டிகளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் தான் அவள் இருந்தாள்.
ஒட்டு மொத்த சென்னை அணியும் அதே மன நிலையில் தான் இருந்தது.
அடுத்தடுத்து வந்த போட்டிகளில் சென்னை அணி வெற்றியை மட்டுமே சுவைத்தது. தொடர் வெற்றிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் நின்றது.
அன்று சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி. பெங்களூருவின் ஹோம் கிரவுண்ட்டான சின்னஸ்வாமி மைதானத்தில் போட்டி நடைபெற இருந்தது.
பெங்களூருவின் சிவப்பு ரசிகர்களும், சென்னையின் மஞ்சள் ரசிகர்களும் பார்வையாளர் அரங்கத்தைக் கலந்து கட்டி நிறைத்திருந்தனர்.
சென்னை அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்திருந்தது.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணியினர் சென்னை அணியின் பந்துகளைச் சிதறடித்தனர்.
வெற்றி பெற 181 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி.
எப்போதும் போல ராஜ் மற்றும் ஷான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.
நந்தனா வீரர்கள் விளையாடும் பகுதியில் இருந்து விலகி, தூரமாக அமர்ந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீரர்கள் அடிக்கும் பந்து சமயங்களில் எல்லாப் பக்கமும் பறக்கும் அபாயம் இருந்ததால், எச்சரிக்கையாக அவளைப் பாதுகாப்பான இடத்தில் அமர வைத்திருந்தனர்.
சென்னை அணியின் பேட்டிங் தொடங்கும் முன்பு, சுகாஸிடம் நின்று பேசிக் கொண்டிருந்தாள் நந்தனா.
மிகக் கடுமையாக எதையோ சொல்லி அவனை எச்சரித்துக் கொண்டிருந்தது அவளது உடல் மொழியிலேயே தெரிந்தது. ஆனால், சுகாஸ் அசட்டையாக, வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான்.
“வேணாம் சுகாஸ். அப்புறம் அவனுக்கும், உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகுது. நீயே சொல்லு? டோண்ட் டூ இட்” குரல் உயர்த்தினாள்.
“ஓகே டார்லிங். யூ டோண்ட் வொர்ரி. நான் பார்த்துக்கறேன்” என்றான் சுகாஸ், அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக.
“ரன் அவுட் ஆகாத. ஷார்ட் பாலை தொடாத. கிரவுண்ட்ல இருக்கும் போது உன் கவனம் அங்க மட்டும் தான் இருக்கணும். காட் இட்?” அச்சமயம் அவர்களைக் கடந்த நிரஞ்சன், மனைவியைப் போலவே பேசிக் காட்ட, பக்கென்று சிரித்து விட்டான் சுகாஸ்.
அது நந்தனா எப்போதும் அவனுக்கு வழங்கும் அறிவுரை என்பதால் அவளுக்குமே சிரிப்பு வந்து விட்டது. ஆனால், அதை மறைத்து கணவனை முறைத்தாள் அவள்.
“என்ன?” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி. “ஒன்னுமில்ல” என்று தலையை அசைத்து விட்டுப் போனாள் அவன் மனைவி.
இப்போது லைவ் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தவள் ஏதோ தோன்ற கண்களை நிமிர்த்தினாள். அங்கே நிரஞ்சன் அடுத்ததாகக் களத்தில் இறங்க, பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் அணிந்து தயாராக நின்றிருந்தான்.
மூன்றாம் ஓவரில் ஷான் அவுட்டாகி இருக்க, சுகாஸ் தற்போது ராஜூடன் களத்தில் இருந்தான். அடுத்ததாகச் சாம் இறங்க வேண்டும். கணவன் ஏன் தயாராக நிற்கிறான் என்று கண்களைச் சுருக்கினாள் அவள்.
அவளது பார்வையை உணர்ந்து அவளிடம் வந்தான் நிரஞ்சன்.
அவளுக்குக் கணவனை வேட்டி சட்டையில் பார்க்க மிகவும் பிடிக்கும். சாதாரண வீட்டு உடைகளில் மிகவும் நெருக்கமாக உணர்வாள். ஆனால், இந்தச் சென்னை அணியின் மஞ்சள் வர்ணத்தில் எப்போதும் அவளின் மனதை மயக்குவான் அவன்.
மெல்ல மெல்ல அவனைக் கண்களில் நிறைத்தாள். மஞ்சள் ஜெர்சியில் நிரஞ்சன் வசீகரன் ஆகியிருந்தான்.
“கண்ணாலயே காதல் பண்ணாதடி” அவளைச் சரசமாக உரசியபடி சொன்னான். அனிச்சையாய் அவன் கரம் உயர்ந்து அவளது கழுத்து டாட்டூவை வருடியது.
“நிரஞ்சன்.. கேமரா..” எச்சரித்து, அவன் கையைப் பட்டெனத் தட்டி விட்டாள்.
“ப்ச், இங்க கவர் ஆகாது நந்து.” என்றவன், “உன்னை இங்க பார்க்க எப்படியிருக்குத் தெரியுமா பொண்டாட்டி? எனக்குக் கிரவுண்ட்குள்ள இறங்காமலே அட்ரலின் தாறுமாறா பம்ப் ஆகுது” என்றான் கண் சிமிட்டி.
நாக்கை மடித்துக் கடித்து, “கொன்றுவேன்” என்று செய்கை காட்டினாள் நந்தனா.
“ஆமா, நீங்க ஏன் ரெடியா இருக்கீங்க? அடுத்துச் சாம் தானே இறங்கனும்? அவனுக்கு அடுத்து ரவி இல்லனா கேப்டன். அதானே கேம் பிளான்..” அவள் முடிக்கும் முன்பே,
“கேம் பிளான் ஒரு பக்கம் இருக்கட்டும். லாஸ்ட் மினிட் டெசிஷன் எப்பவும் கேப்டன் தானே எடுப்பார் அனலிஸ்ட் நந்தனா?” என்று கேட்டவனைக் கண்களால் எரித்து, எச்சரித்து, “வேண்டாம் நிரஞ்சன்” என்றாள் நந்தனா.
“ஓ நோ..” மஞ்சள் ரசிகர்கள் கத்த, நிரஞ்சன் அவளின் கன்னத்தைத் தட்டி விட்டு, மைதானத்தை நோக்கி பேட்டை சுழற்றிய படி ஓடினான்.
“வேண்டாம்” என்பதாகத் தலையை அசைத்து கொண்டேயிருந்தாள் நந்தனா.
சுகாஸ், நிரஞ்சன் இருவரையும் ஒன்றாகக் களத்தில் பார்ப்பது முதல் முறையாக அவளுக்குக் கலவரத்தை கொடுத்தது.
“கடவுளே, அடக்கி வாசிங்க டா” என்று இங்கிருந்தே முணுமுணுத்தாள் அவள்.
ஆனால், அத்தனை முறை எடுத்துச் சொல்லியும் அன்று அவள் பேச்சை அவர்கள் கேட்பதாகவே இல்லை.
இருவரின் கூட்டணியும் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்தது. அவர்கள் பாணியில் ஒருவர் அதிரடி காட்டும் போது, மற்றவர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திச் சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
அணியின் ஸ்கோர் 102 என்றது திரை. அந்நிலையில் பதிமூன்றாம் ஓவரை வீச வந்தான் எதிரணியின் பவுலர் ஸ்வரூப்.
“உன்னை யாரு தெய்வமே இப்போ பவுல் பண்ண விட்டது?” என்று நந்தனா தலையில் கை வைக்க, அவன் வீசிய முதல் பந்தை அடித்த சுகாஸ், ரன் எடுக்கும் வேகத்தில் அவனை விபத்து போல இடித்துத் தள்ளி விட்டு ஓடினான். கீழே விழுந்த ஸ்வரூப்பின் முகம் தரையைத் தொட்டிருந்தது.
அவள் இதற்குத் தான் எச்சரித்தது. ஆனாலும், சுகாஸ் கேட்டதால் தானே? நிரஞ்சனை கடந்த வருடம் அவன் பேச்சால் காயப்படுத்தியது, அதுவும் நந்தனாவை வைத்து, என்பது மட்டுமே சுகாஸின் மனதில் இருந்தது.
கிரிக்கெட்டில் ஜென்டில்மேன் என்று பெயர் வாங்கியவன். அமைதிக்கும், நட்புக்கும் பெயர் போனவன். அன்று நட்புக்காக முதல் முறையாகத் தன் கொள்கைகளைத் தூக்கி தூர போட்டிருந்தான். அது நந்தனாவிற்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவனைப் போலவே தாங்களும் நிலை இறங்கி போக வேண்டுமா? என்ற ஆதங்கம் தான் அவளுக்கு.
சுகாஸை பொறுத்தவரை விளையாட்டில் நேர்மை இருக்க வேண்டும். ஒரு வீரனின் மனைவியை இழுத்து கேலி பேசியது, நிச்சயம் கேலியாக அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அதிலும் அவனின் நெருங்கிய தோழி நந்தனாவை வைத்து, அவளின் கணவனைச் சீண்டி சினமூட்டியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவனுக்குப் பழி வாங்கும் வெறியெல்லாம் இல்லை. ஆனால், திருப்பிக் கொடுக்கும் வேகம் நிச்சயம் இருந்தது. அப்போது அதைத் தான் செய்து கொண்டிருந்தான் அவன்.
ஒன்றுமே நடவாதது போல ஓடிப் போய், “சாரி ப்ரோ” என்று அவனுக்குக் கைக் கொடுத்து தூக்கி விட்டான் சுகாஸ்.
அதைப் பார்த்த நந்தனாவிற்குக் கண்ணை மறைக்கும் கோபத்திலும் சிரிப்பு வந்து விட்டது.
ஸ்வரூப் வீசிய அடுத்தப் பந்தை நிரஞ்சன் சிக்ஸராகப் பறக்க விட, அவசியமில்லாமல் ரன் எடுக்க ஓடி, மீண்டும் அவனை இடித்து நிலை குலைய செய்தான் சுகாஸ்.
“ஓ, சாரி. சாரி” ஆத்மார்த்தமாக உணர்ந்து மன்னிப்பு வேறு கேட்டு வைத்தான். அத்தனை இயல்பான நடிப்பு.
அடுத்தடுத்த பந்துகளை நிரஞ்சன் அதிரடியாக அடிக்க, அவன் சந்தித்த ஐந்து பந்துகளில், ஐந்து சிக்ஸ்கள்.
அந்த ஓவரில் மட்டுமே 31 ரன்கள் சேர்த்திருந்தார்கள். நிரஞ்சன் ஐம்பதை தொட்டிருந்தான்.
அன்றை போலவே, இன்றும் ஸ்வரூப்பிற்கு அது மிக மோசமான ஓவராக அமைந்தது.
சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் அவனுக்குப் பதிலடி கொடுத்த திருப்தியுடன், நண்பன் அரைச் சதம் அடித்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, ஓடி வந்து நிரஞ்சனை அணைத்து, அப்படியே தூக்கி சுற்றினான் சுகாஸ்.
நிரஞ்சன் சிரித்துக் கொண்டே, “இறக்கி விடு சுகாஸ்” என்று கத்திக் கொண்டிருந்தான்.
நந்தனாவின் கண்ணோரம் கண்ணீர் துளிர்த்து நின்றது. புன்னகையுடன் அதைத் துடைத்துக் கொண்டாள் அவள்.
ஸ்வரூப் அவர்களிடம் ஓடி வந்து கைக் கொடுத்துப் பாராட்டினான்.
“சாரி நிரஞ்” என்றான் இப்போதும். புன்னகையைத் தவிர வேறெந்த பதிலையும் அவனுக்குக் கொடுக்கவில்லை நிரஞ்சன்.
நண்பர்களே ஆனாலும், அவர்கள் தெரிந்தே, உணர்ந்தே செய்யும் சில தவறுகளை மன்னிக்கவே முடியாது என்றே அவனுக்குத் தோன்றியது.
அன்றைய ஆட்டத்தை அதன் பின் சென்னை அணி முழுவதுமாகத் தங்கள் வசமாக்கி இருந்தது. 19வது ஓவரிலேயே வெற்றி பெற்றிருந்தனர்.
எதிரணியின் கேப்டன் ஓடி வந்து சுகாஸின் கழுத்தை விளையாட்டாக நெரித்தார். “உன்ன அடுத்தக் கேமில் பார்த்துக்கறேன்” என்று மிரட்டியவரின் குரலில் சிரிப்பிருந்தது.
போட்டி முடிந்ததும் இடுப்பில் வை வைத்து நின்றபடி இருவரையும் முறைத்தாள் நந்தனா.
“டார்லிங், நான் சத்தியமா அவனைத் தெரியாமா தான் இடிச்சேன்” என்று சுகாஸ் சமாளிக்க,
“அவன் பால் போட்டான். நான் சிக்ஸ் அடிச்சேன். அவ்ளோ தானே?” என்றான் நிரஞ்சன் சிரித்தபடி. இருவரையும் வலிக்காமல் அடித்தாள் நந்தனா. மூவரும் சிரித்தபடியே உடை மாற்றும் அறையை நோக்கி நடந்தனர்.
சென்னை அணி அந்த ஆண்டுத் தொடர் வெற்றிகள், தொட்டதெல்லாம் வெற்றிகள் என்றில்லாமல், சில மோசமான தோல்விகளையும், பல வெற்றிகளையும் சந்தித்துப் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
அங்கு முதல் போட்டியில் மும்பையை அணியைப் பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெருமையோடு நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் அவர்களுடன் மோத காத்திருந்தது நிரஞ்சனின் முன்னாள் அணியான கொல்கத்தா.
அன்று சென்னை அணியின் கேப்டனுக்குக் கணுக்காலில் சிறிய காயம். முன்தினம் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம். அன்று போட்டியில் இருந்து விலகி ஓய்வில் இருக்கவே விரும்பினார் அவர். ஆனால், ஐபிஎல்லின் இறுதிப் போட்டி என்பதால் சக வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுக்க விரும்பாமல் அவரும் அணியில் இருந்தார். ஆம், அணியில் இருந்தார். அவ்வளவே.
அன்று சென்னை அணியின் கேப்டன், நிரஞ்சன் கிருஷ்ணகுமார்.
சென்னை அணி இறுதிப் போட்டியை வென்று கோப்பையைக் கைப்பற்றினால் நிரஞ்சனை கொண்டாடுவார்கள். ஆனால், ஒருவேளை.. ஒருவேளை தோல்வியுற்றால் அது அவனது கிரிக்கெட் வாழ்வில் மிகப் பெரிய அடியாக அல்லவா இருக்கும்?
“நந்து, இட்ஸ் ஃபைனல்ஸ். இப்பவும் இங்க உட்கார்ந்து வேலை பார்க்காம, வா, என் கூட வந்து நின்னு மேட்ச் பாரு” என்று நந்தனாவை தன்னோடு இழுத்துக் கொண்டு போனாள் ரியா.
மூன்று மாத ஐபிஎல் முடிவில் நந்தனா எட்டு மாத கர்ப்பம், வயிறு இப்போது பளிச்சென்று வெளியே தெரிந்தது. மெதுவாக நடந்து விஐபி கேலரியில் போய் நின்றாள் நந்தனா. அவள் கண்கள் கணவனையே வட்டமிட்டது.
கேமராக்கள் அவனையே சுற்றி வளைக்க, மைதானத்தின் நடுவில் நின்றிருந்த நிரஞ்சனின் உடல் முழுக்கப் பதட்டம் நிரம்பி வழிந்தது.
கொல்கத்தா அணியின் கேப்டன் திவ்யேஷ் டாஸ் போடுவதற்குத் தயாராக நிற்க, அவர் முன்பு போய் நின்றான் நிரஞ்சன்.
ஆட்டம் தொடரும்…