“இந்தியன் டீம்குள்ள வந்தது தான் அன்னைக்கு எனக்குப் பெரிய சாதனையா தெரிஞ்சது நந்து. என் கனவு அது. வேர்ல்ட் கப் விளையாடினது எல்லாம்.. என்ன சொல்ல.. கனவா, நிஜமான்னு குழம்பிப் போய் இருக்கேன். அப்போ அதைத் தவிர வேற எதையுமே நான் யோசிச்சதில்ல நந்து. அந்த நிமிஷத்துல வாழ்ந்தேன். என்னைப் பத்தி கமென்ட்ஸ் வந்தா, சரின்னு பட்டா எடுத்துப்பேன். வேணும்னு குறை சொல்லியிருந்தா, அதை மதிச்சதே இல்லை நான்”
“ம்ம்”
“இந்தியன் டீம்குள்ள வந்ததுக்கு அப்புறம் கிரிக்கெட்டை சீரியஸா எடுத்துட்டு ஆட ஆரம்பிச்சேன். ஆனா, அப்பவும் அதே ஆட்டிட்யூட் தான் மெயின்டேன் பண்ணேன் நந்து. மீடியா என்னைத் தேவையில்லாம தொல்லை பண்ணதும் கிடையாது. ஏன்னா…”
“ஏன்னா.. நீங்க எந்தப் பொண்ணு பின்னாடியும் சுத்தினது கிடையாது” கிண்டலாகச் சிரித்தபடியே சொன்னாள் நந்தனா.
அவனும் சிரித்தபடி, “நான் உண்டு, என் வேலை உண்டுனு இருந்தேன் நந்து. நாளைக்கு எனக்கு ஒரு குடும்பம் வந்தா என்னாகும்? என் ஃபேமிலி இந்த மீடியாவை எப்படிச் சமாளிக்கப் போறாங்க? நான் ஒருநாளும் யோசிச்சதே கிடையாது நந்து. உன்னைப் பார்க்கும் வரை நான் எதையுமே சீரியஸா திங்க் பண்ணதில்ல பொண்டாட்டி”
“தமிழ்நாட்ல இப்பவும் நிறையப் பொது இடங்கள்ல என் ஃபோட்டோவை பார்க்கலாம். எத்தனையோ கடை வாசல்ல நான் நின்னுட்டு இருப்பேன். இன்டர்நெட் முழுக்க என் ஃபோட்டோஸ், வீடியோஸ் இருக்கு. நிறையப் பேரோட ஃபேஸ்புக் ப்ரொபைல் பிக்சரா நான் இருக்கலாம். ஆனா,…” அவன் தயங்க,
“என்னடா?” என்றாள், அவன் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்து, “நந்து..” என்றான் இடக்கரத்தால் மனைவியின் கன்னம் பற்றி, “நாளைக்கு உன்னோட ஃபோட்டோவும் நெட்ல இருக்கும். ப்ச், ஏற்கனவே நிறைய இருக்கு தான்.” என்றவன்,
“நான் சொல்றது அதிகப்படியா தெரியலாம். ஆனா, கொஞ்சம் உண்மையும் இருக்கு தானே நந்து? நாளைக்குப் பிறக்கப் போற நம்மளோட பொண்ணோ, பையனோ, அவங்க ஃபோட்டோ கூட நம்ம பெர்மிஷன் இல்லாமயே நெட்ல சுத்த தான் போகுது. உங்களைப் பத்தி ஏதாவது எழுதிட்டே இருக்கத் தான் போறாங்க. என்னால…”
“நிரஞ்சன், எதுக்கு இதையெல்லாம் இப்போ யோசிச்சு குழப்பிட்டு இருக்கீங்க? நான் கிரிக்கெட்டர் கார்த்திகேயன் பொண்ணு. உலகத்து கண்ல இருந்து மறைஞ்சு சாதாரணமா தான் வளர்ந்தேன்”
“அதான் நந்து சொல்ல வர்றேன். நாளைக்கு நீயும், நம்ம பிள்ளைகளும் சுதந்திரமா உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ முடியாதா? இல்ல, நீ சொல்ற மாதிரி, நீ வளர்ந்த மாதிரி மறைஞ்சு தான் வாழனுமா நந்து? எனக்குத் தெரியல பொண்டாட்டி. அதுவும் இந்த மீடியா யுகத்துல, எல்லோர் கைலயும் மொபைல் கேமரா இருக்கற காலத்துல, எப்படி உங்களுக்குப் பிரைவசி கிடைக்கும்?”
“இது தேவையில்லாத கவலை நிரஞ்சன்”
“இருக்கலாம். ஆனா, ஐ பிராமிஸ் யூ நந்து. நாளைக்கு என்ன நடந்தாலும், எவன் என்ன பேசினாலும் நான் உன் கூடவே இருப்பேன். கேமராவும், மீடியாவும் கையில இருக்கறதால மட்டும் எவனும் நம்ம வாழ்கையை மாத்திட முடியாது. மாத்த விடவும் மாட்டேன் நான். நம்மை எப்படி வேணாலும் ஃபோட்டோ எடுக்கட்டும். என்னைப் பத்தி, என் விளையாட்டுப் பர்பாமென்ஸ் பத்தி, நம்மைப் பத்தி.. நாளைக்கு நம்ம குழந்தைங்க பத்தி என்ன வேணாலும் எழுதிட்டு போகட்டும் நந்து. அதைப் பார்க்கும் போது சாதாரண மனுஷனா எனக்கும் கோபம் வரும். உன்கிட்ட கோபப்படலாம். கத்தலாம். சண்டை போடலாம். நாம ஹர்ட் ஆகலாம். ஆனா, நம்ம லைஃப்ல மோசமா எதுவும் நடக்காம பார்த்துப்பேன் நந்து. நம்ம குழந்தைகளுக்கு அமைதியான, நிம்மதியான லைஃப் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. ஐ பிராமிஸ் யூ தட்.” அவளின் கண்களை ஆழமாய்ப் பார்த்து, கைகளை அழுத்தி, குரலில் தன் ஒட்டு மொத்த அன்பையும் தேக்கி வைத்துச் சொன்னான் நிரஞ்சன்.
அனிச்சையாய் அவளின் கண்கள் கலங்க, “நான் உங்களை நம்பாம, யாரை நம்பப் போறேன் நிரஞ்சன்? வாழ்கையில் என்ன நடந்தாலும் சரி. பார்த்துக்கலாம். நீங்க என் கூட இருந்தா போதும். வேறெதுவும் எனக்கு வேணாம். இது புரிய எனக்கு இத்தனை வருஷமாகி இருக்கு” இருக்கையை மேலும் அவனுக்கு நெருக்கமாக இழுத்துப் போட்டு அவன் தோளில் தலை சாய்த்து சொன்னாள் நந்தனா.
“உங்க திறமை எனக்கு நல்லா தெரியும். உங்க கிரிக்கெட் லைஃப் எப்படி இருந்தாலும், உங்க கூடவே சப்போர்ட்டா நான் இருப்பேன். நல்லதோ, கெட்டதோ சேர்ந்தே பார்த்துக்கலாம். என்ன நடந்தாலும் உங்களை விட்டுப் பிரிய மாட்டேன் நிரஞ்சன். ஐ பிராமிஸ் யூ தட்” மனைவியை இழுத்து அணைத்தான் நிரஞ்சன். உணர்ச்சி மிகுதியில் வார்த்தைகளுக்குப் பஞ்சமாகி போக, அழுத்தமாய் அவள் உச்சியில் இதழ் பதித்தான்.
அந்தக் கணத்தை, அதன் கனத்தை ஆழ்ந்து உள்வாங்கியபடி, அணைத்தபடியே அமர்ந்திருந்தனர்.
எத்தனை நேரம் கடந்ததோ நிரஞ்சன் தான், “வா, கையைக் கழுவிட்டு வரலாம்” என்று மனைவியின் கைப் பிடித்து எழுப்பிக் கூட்டிக் கொண்டு போனான்.
மறுபடியும் அதே இடத்தில் வந்து அமர்ந்தனர். கேக்கை ஸ்பூனில் எடுத்து மனைவிக்கு ஊட்டி, தானும் உண்டான் நிரஞ்சன். மனம் முழுவதும் ஒருவித அலாதி அமைதி பரவியிருக்க, அவன் முகம் முழுவதும் மகிழ்ச்சியின் ரேகைகள். எதிரில் உணவை, அதுவும் இனிப்பை கண்டதும் தாமாகவே அதை நோக்கி நகர்ந்தது அவன் கரம்.
“போதும் நிரஞ்சன்.” சிரித்தபடி கேக்கை மறுத்தாள் நந்தனா.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வானம் பார்த்த நிரஞ்சன், அப்படியே அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“நீ ரிசைன் பண்ணதை சென்னை டீம் அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்க தானே?” அவன் கேட்க, “ஆம்” என்று தலையசைத்தாள் நந்தனா.
“அப்படியா?” என்றவன், “உனக்குச் செட்டில்மெண்ட் கொடுத்திருப்பாங்க இல்லையா?” குனிந்து, அவள் நெற்றியில் புரண்ட முடியை ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டபடி அவன் கேட்க, எத்தனை முயன்றும் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை அவளால் மறைக்க முடியவில்லை.
அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் தவித்து, தவிர்த்தாள்.
“சிவராஜ் சார் ரெண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட வந்து ஒரு கொஸ்டின் கேட்டார். என்னனு உன்னால கெஸ் பண்ண முடியுதா நந்து?” முதலில் அதிர்ந்தவள், பின்னர்ச் சிரிப்புடன் அவனை முறைத்தாள்.
அவளின் முறைப்பை கண்டுக்கொள்ளாது, அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
“சரி, அதை விடு நந்து. என்னோட பர்த் டேக்கு நீ ஒரு விஷ் கொடுத்த பொண்டாட்டி. தமிழ்ல எப்படிச் சொல்ல? வரம்? ஞாபகமிருக்கா?” அத்தனை நேரம் மறந்திருந்த ஒன்றை திடீரென்று அவன் கேட்கவும், சட்டெனத் திரும்பி அவன் கண்களுக்குள் பார்த்தாள் நந்தனா.
கண்ணைச் சிமிட்டி, “ஓ, ஞாபகம் இருக்கே” என்றாள் குறும்பாக. அந்தக் குரலில், அதன் தொனியில் சந்தேகமாகக் கண்ணைச் சுருக்கினான் நிரஞ்சன்.
அங்கே ஓரமாக இருந்த அவளின் அலைபேசியைத் தேடி எடுத்தாள். அதைத் திறந்து, சில பக்கங்களைப் புரட்டி, புன்னகையுடன் அவன் முன் நீட்டினாள்.
“ஐ ஆம் கிவிங் யூ அ விஷ் நிரஞ்சன். சர்ப்ரைஸ்” அவனைப் போலவே ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்துச் சொன்னாள்.
நிரஞ்சன் பட்டென்று அலைபேசியைக் கைப் பற்றினான். படபடப்புடன், பரபரப்பாக அதைப் பார்த்தான், படித்தான். அவன் கண்களில் வந்து போன கலவையான உணர்வுகளைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தனா.
“இது, இது, உண்மையா நந்து? எப்போ?” என்றவனின் குரல் கரகரத்து நடுங்க, பதில் சொல்லாமல் அவன் மார்பில் முகம் புதைத்தாள் நந்தனா.
ஆட்டம் தொடரும்…