இனியொரு பிரிவேது – 23 (2)

அவனையே பார்த்தது பார்த்தபடி இருந்தாள் நந்தனா. அவளுக்குப் பேச்சு மறந்த நிலை. மனதில் இருந்ததை வார்த்தைகளாகக் கோர்க்க முடியவில்லை அவளால். தொண்டையடைக்கும் உணர்வில் கண்கள் கலங்கியது.

“நான்.. நான்.. என்ன பண்ணட்டும் நிரஞ்சன்?”

“என்ன பண்றதா? எழுந்து, குளிச்சு, சாப்பிடு. எங்கயாவது வெளில போகலாம். எனக்கு ஈவ்னிங் தான் பிராக்டீஸ். அதுவரை நான் ஃப்ரீ” கேள்வி புரியாதது போல அவன் பேச, முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நந்தனா.

“ஓய், நந்து. என்ன?” என்றான் அவளின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி.

“நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன பதில் சொல்றீங்க?” அவள் சடைத்துக் கொள்ள, இறங்கி வந்தான் நிரஞ்சன்.

“நீ என்ன பண்ணனும்னு நினைக்கிற நந்து? அதைச் சொல்லு முதல்ல”

“நைட் சொல்லவா?” என்றாள் தயக்கத்துடன்.

“ஓகே. பொறுமையா சொல்லு” என்றபடி எழுந்து கொண்டான் நிரஞ்சன்.

இருவரும் குளித்துத் தயாராகி, காலை உணவருந்தி விட்டு பூர்ணிமாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“வாங்க. நீங்க தூங்குங்க. டையர்டா இருப்பீங்க” என்று அவனை உள்ளே தள்ளிக் கொண்டு போனாள் நந்தனா.

அசதியில் அவன் படுத்ததும் உறங்கி விட, நேற்றைய சென்னை போட்டியின் முக்கிய நிகழ்வுகளை (Highlights) தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

நேரம் இறக்கை இல்லாமல் பறக்க, மாலை கார்த்திகேயன் வீடு வர, நிரஞ்சன் அப்போது தான் எழுந்து, மதிய உணவை முடித்து, பயிற்சிக்கு கிளம்பிச் சென்றான்.

கணவன் அருகில் இல்லாத பொழுதுகள் சுவாரசியமற்று போக, அறைக்குள் சென்று படுத்து விட்டாள் நந்தனா. உறக்கம் உற்சாகமாய் அவளைத் தழுவி கொண்டது.

இரவு நிரஞ்சன் வந்து தான் அவளை எழுப்பினான்.

“இந்த நேரத்தில் என்ன தூக்கம் நந்து? எழுந்திரு. ஹீட்டர் ஆன் பண்ணி இருக்கேன். குளிச்சுட்டு வா. டின்னர் சாப்பிடலாம்” அவளின் தலை வீக்கத்தைச் சோதித்தபடி எழுப்பினான் நிரஞ்சன். வீக்கம் நன்றாகக் குறைந்திருந்தது. வலியில் முகம் சுருக்கவிலை அவள்.

அரை மணி நேரம் கழித்து அவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். அங்கே சிறிய மேஜையும், இரண்டு நாற்காலிகளும் இருக்க, மேஜையை நிறைத்திருந்த உணவுக்கு மத்தியில் அமர்ந்திருந்தது மெழுகுவர்த்தி.

“வாவ், கேண்டில் லைட் டின்னரா?” குழந்தையாய் குதுகளித்தாள் நந்தனா.

“அம்மா, அப்பா..?”

“ஷ்ஷப்பா, உன்னால கேள்வி கேட்காம இருக்க முடியாதா?” என்று சலித்தவன்,

அவள் முறைக்கவும்,

“எல்லாம் உங்கம்மா சமைச்சது தான். நீங்க மாடில போய்ச் சாப்பிடுங்க மாப்பிள்ளைன்னு ஐடியா கொடுத்தது உங்கப்பா தான்” என்றான் நிரஞ்சன்.

அவன் கைக் கோர்த்துச் சமாதானமாகப் புன்னகைத்தாள் நந்தனா.

இருவரும் எதிரெதிரே இருந்த இருக்கையை நிறைத்தனர்.

வானில் தேய்பிறை நிலா ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இருவர் முகமும் ஒளிர, மிகவும் நெருக்கமாக உணர்ந்தனர். அந்த அமைப்பே அவர்களை நெருக்கமாக உணர வைத்தது.

சந்தன நிற நீண்ட கவுன் அணிந்திருந்தாள் நந்தனா. அந்த உடை அவளின் வடிவத்தை மிக அழகாக எடுத்துக் காட்டியது. உடையின் கழுத்து சற்றே கீழிறங்கியிருக்க, அவளின் கழுத்து டாட்டூவையும், மார்பில் புரண்ட மாங்கல்யத்தையும், மேடிட்ட அவளின் வயிறையும் ரசனையுடன் வருடியது நிரஞ்சனின் கண்கள்.

மெழுகின் சுடர் அவள் முகத்தில் அலைபாய்ந்து ஒளி வீச, அவள் மேலிருந்து கண்களை விலக்க முடியாமல், “அழகா இருக்க நந்து” என்றான் ஆழ்ந்த குரலில், உதடு கடித்துச் சிரித்தவளின் முகத்தில் வெட்கச் சாயல்.

அவள் கண்கள் மேஜையின் நடுவே அமர்ந்திருந்த சாக்லேட் கேக்கை கேள்வியுடன் பார்த்தது.

“என்ன ஸ்பெஷல்?” விசாரித்தாள்.

“நம்ம தான் ஸ்பெஷல்” கண்ணடித்தான்.

இருக்கையை அவளுக்கு நெருக்கத்தில் இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவள் கை பிடித்து, பிளாஸ்டிக் கத்தியை எடுத்துக் கேக்கை வெட்டப் போனவன், “மேக் அ விஷ் பொண்டாட்டி” என்றான்.

“அது.. அது.. பர்த் டேக்கு தான்..”

“அட, எல்லாத்துக்கும் நேரம் பார்த்துட்டே இருப்பாங்களா? விருப்பப்பட்டதை எப்ப வேணாலும் வேண்டுதலா வைக்கலாம் நந்து” கண்களில் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் நந்தனா.

“ஓகே, நீ ரொம்ப யோசிக்கிற. வேணாம். விடு.” என்றவன், வேகமாகக் கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டி விட்டான். பதிலுக்கு அவளும் தர, புன்னகையுடன் உண்டான்.

“விஷ் தான் வேணாம் சொல்லிட்ட. ம்ம், நான் உனக்கு ஒரு பிராமிஸ் பண்ணித் தரேன்” அவளோடு விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.

“என்ன, என்ன பிராமிஸ்?” அவள் திக்க, “ரிலாக்ஸ் பொண்டாட்டி” என்றான் நிரஞ்சன். காற்றுக்கு அலை பாய்ந்து அவள் முகத்தில் படர்ந்த முடியை காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டான்.

“ஏன் இப்படி அரண்டு போய்ப் பாக்கற நந்து? நான் என்ன கேட்டுட போறேன்? இல்ல, என்ன சொல்லப் போறேன்னு இப்படி டென்ஷனா இருக்க?” மறுப்பாக அசைந்தது அவள் தலை.

“சரி, விடு. புராமிஸும் வேண்டாம்.” என்றவன், நிறுத்தி நிதானமாக அவள் விழிகளைக் கூர்ந்து பார்த்தபடி, “எனக்கு ஒரு வரம் கொடுத்தியே ஞாபகம் இருக்கா?” என்று ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்துக் கேட்டான்.

‘வரம் என்றாலே வில்லங்கம் தானே?’ என்ற திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தாள் நந்தனா.

அவளின் மிரண்ட பார்வை, அவனைச் சத்தமாகச் சிரிக்க வைத்தது.

“என்ன பிரச்சனை உனக்கு நந்து? நாம இதுக்கு முன்னாடி இப்படிச் சாப்பிட்டது இல்லையா? பேசினது இல்லையா? நம்ம வீட்ல எத்தனை நாள் பால்கனில இப்படி உட்கார்ந்து நிலா வெளிச்சத்துல சாப்பிட்டு இருப்போம். சண்டை போட்டு இருப்போம்? என்ன, இங்க மொட்டை மாடி, அங்க பால்கனி. அவ்ளோ தான் வித்தியாசம். இதுக்கு ஏன் இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?”

“நான் நல்லா தான் இருக்கேன் நிரஞ்சன்” என்றாள், அவனை மேலும் நெருங்கி அமர்ந்தபடி. சிரித்தானே தவிர, மேலே ஒன்றும் சொல்லவில்லை அவன்.

இருவருக்கும் உணவை பரிமாறினாள். மாப்பிள்ளைக்கு ஸ்பெஷலாக மட்டன் வெள்ளை குருமா செய்திருந்தார் பூர்ணிமா. இரண்டு இடியாப்பம் தட்டில் வைத்து, குழம்பு பாத்திரத்தை அவன் பக்கமாக நகர்த்தி வைத்தாள்.

மாமனாரின் ஹோட்டலில் அவன் சாப்பிடும் அளவு அப்பொழுது பார்த்து அவளுக்கு நினைவு வர, எதிரில் இருந்த இடியாப்பதை பார்த்து அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஓய், என்னடி? ஒவர் சிரிப்பா இருக்கு?” அவளுக்குச் சப்பாத்தியை எடுத்து வைத்தபடி கேட்டான் நிரஞ்சன்.

“ஒன்னுமில்ல” என்றாள் உதடு கடித்து,

“நீ எதுக்குச் சிரிக்கறன்னு எனக்குத் தெரியும் நந்து. கோபம், டென்ஷன், வருத்தம் எதுவும் இல்லை இப்போ. சோ, நார்மலா தான் சாப்பிடுவேன். உனக்குத் தெரியாதா?” என்றான். எதிரே வரிசையாக வைக்கப்பட்டிருந்த உணவை காட்டி.

“சாப்பிடுங்க” அவன் தட்டில் இடியாப்பத்துடன், சப்பாத்தியும் வைத்து, குழம்பை ஓரமாகப் பரிமாறினாள்.

பத்து நிமிடங்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி மௌனமாய் உணவை உண்டனர்.

வயிறு நிறைந்ததும், மனம் சத்தம் எழுப்ப, பேச ஆரம்பித்தான் நிரஞ்சன்.

“எனக்கு அப்போ 12 வயசு நந்து. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும், வேக வேகமா ஹோம் வொர்க் முடிச்சுட்டு ஹோட்டலுக்கு ஓடுவேன்.” நிரஞ்சன் நினைவுகளை மெதுவாகப் பகிர ஆரம்பித்தான். பல முறை கேட்டது தான் என்றாலும், முதல் முறை போலவே ஆர்வத்துடன் அவனுக்குச் செவி சாய்த்திருந்தாள் அவன் மனைவி.

“அப்போ டிவியில கிரிக்கெட் மேட்ச் பார்க்க அவ்ளோ பிடிச்சிருந்தது. சனி, ஞாயிறு லீவ்ல எங்க தெரு அண்ணாங்க கூடச் சேர்ந்து கிரிக்கெட் ஆடியிருக்கேன் நந்து. சும்மா உப்புக்குச் சப்பாணியா தான் என்னை ஆட்டத்துக்குச் சேர்த்துப்பாங்க. ஆனா, அந்த வயசுல என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா ஆடின ஞாபகம். 13 வயசுல கிரிக்கெட் பைத்தியமா மாறி இருந்தேன். வீட்ல, தெருவில ஸ்கூல்ல, ஃப்ரெண்ட்ஸ் கூடன்னு எப்பவும் கிரிக்கெட் பத்தி தான் பேசிட்டு திரிஞ்சேன்.”

“ஆனா, எங்க ஸ்கூல்ல கிரிக்கெட் டீம், அதுக்குக் கோச்சிங் அப்படியெல்லாம் ஒன்னுமே கிடையாது. நம்ம ஊர்ல மொதல்ல எந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தானுங்க?” விரக்தியுடன் சொன்னான்.

“இப்போ ஓரளவு முன்னேறி இருக்கு தானே நிரஞ்சன்?”

“ம்ம். ஒரு நாள் க்ளாஸ்ல சச்சின், டிராவிட் மாதிரி பேட் பண்ணி காமிச்சுட்டு இருந்தேன். அன்னைக்கு ஈவ்னிங் என் க்ளாஸ் மேட் மதுமிதா என்கிட்ட வந்து பேசினா. என் வாழ்க்கையை மாத்தின நிமிஷம். என் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவு பண்ண நிமிஷம் அது தான் நந்து” உணர்ச்சி வசப்பட்டான் நிரஞ்சன்.

“மதுமிதா அப்பா, ஶ்ரீதரன் சீனியர் கிரிக்கெட் பிளேயர். இந்தியன் டீமுக்கு ஆடியிருக்கார். அவங்க வைஃப், பிரிஞ்சி போகவும் கிரிக்கெட்டை விட்டு வெளிய போய்ட்டார். ஆனா, சென்னை லோக்கல் கிரிக்கெட் கிளப்ல பவுலிங் கோச்சா இருந்தார். சென்னை ஐபிஎல் டீமோட பவுலிங் கோச்சா இருந்தார் அவர்.” நந்தனா மீதியை தொடர,

“ம்ம்” என்று ஆமோதித்தான் நிரஞ்சன்.

“அன்னைக்கு எங்கப்பாவை வந்து பாருன்னு என்கிட்ட சொன்னா, மதுமிதா. நாலு தெரு தள்ளி தான் அவங்க வீடு. அப்பாவோட மறுநாளே அவ வீட்டுக்கு போனேன். “பையனுக்குக் கிரிக்கெட் ஆடனும்னு ஆசை. ஸ்கூல் விட்டு வந்து சும்மா தானே இருக்கான். ஏதோ ஒன்னை கத்துக்கட்டுமே. நீங்க இவனுக்குக் கிரிக்கெட் சொல்லி கொடுங்க. காலேஜ் போற வரை விளையாடட்டும். மாசம் எவ்வளவு ஃபீஸ்னு சொல்லுங்க. நான் கட்டிடுறேன்.” அப்பா இப்படிச் சொல்லித் தான் என்னை ஶ்ரீதரன் சார் கிட்ட சேர்த்து விட்டார்.”

“ஆனா, சார் உங்க டேலன்ட் பார்த்து தமிழ்நாடு டீம்குள்ள போக வச்சார். இல்லையா?”

“எஸ் நந்து. ஆனா, அதுக்காக அவர் எவ்ளோ கஷ்டப்பட்டார் தெரியுமா? அவர் போட்ட எஃபர்ட் ஒன்னுமே இல்லாம போச்சு நந்து. நான் டீமில் இருப்பேன். ஆனா, விளையாடுற 11 பேர்ல என்னைச் சேர்க்கவே மாட்டாங்க. வெளில உட்கார்ந்து மத்தவங்க ஆடுறதை வேடிக்கை தான் பார்ப்பேன். அந்த வயசுல அவ்ளோ கோபமா வரும் நந்து. இவனுங்க ஜாதி அரசியல் எல்லாம் புரியாத காலம் அது. ஒரு நாள் முக்கியமான பிளேயர்க்கு உடம்பு முடியாம போக, வேற வழியில்லாம என்னை விளையாட விட்டாங்க.”

“ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி (Rest is history)” என்றாள் நந்தனா பெருமையாக.

“எஸ் பொண்டாட்டி. எங்ககிட்டயும் நல்ல பிளேயர் இருக்காங்கன்னு காட்டிக்கத் தான் என்னை டீம்ல வச்சிருந்தாங்க. ஆனா, நான் வெறியா ஆடி மேல வந்தேன் நந்து. ஶ்ரீதரன் சாருக்கு எப்பவும் கடமை பட்டிருக்கேன் நான். ஆனா, அவர் கடமை அதோட முடிஞ்சதுன்னு ஒதுங்கிட்டார். அவரை மாதிரி ஒருத்தரை இந்தியன் டீம் மிஸ் பண்ணிடுச்சு.” அவரைப் பற்றிப் பேசும் போதே அவன் குரலில் நெகிழ்வு.

“அவர் கிரிக்கெட்டை விட்டு வெளில போய் 20 வருஷத்துக்கு மேல ஆச்சு நிரஞ்சன். ஐபிஎல் ஆரம்பிச்சதுல இருந்து போராடி, அவர் கிட்ட பேசி பேசி, அவரைக் கரைச்சு, ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் அவரைச் சென்னை டீமோட பவுலிங் கோச்சா வர சம்மதிக்க வச்சாங்க. அவர் சென்னை டீம்ல சேர்ந்து ஒரு அஞ்சு வருஷம் தான் இருந்தார்னு நினைக்கிறேன்.” நந்தனா சொல்ல, ஒப்புதலாய் தலையசைத்தான் நிரஞ்சன்.

“தெரியும் நந்து. அப்போ நான் கொல்கத்தா டீம்ல இருந்தேன். அவரைக் கிரவுண்ட்ல பார்த்ததும் பரவசமாகி, “கோச்” அப்படினு கத்திட்டு அவர் முன்னாடியே போய் நின்னேன். “வெல் டன் நிரஞ்சன். இன்னும் நல்லா ஆடனும் நீ” அப்படினு தோள்ல தட்டிக் கொடுத்துட்டுப் போனார். அவ்ளோ தான். வேற ஒன்னுமே பேசலை அவர். என்னை எல்லோரையும் போலத் தான் நடத்தினார். என்னால மேல வந்த பையன் இவன்னு எங்கயேயும் காட்டிக்கிட்டது இல்லை அவர். நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன் நந்து. கடவுள் என் மேல ரொம்பக் கருணை காட்டியிருக்கான்.” கரகரத்த குரலில் சொன்னான்.

கலங்கிய அவன் கண்களைக் கனிவுடன் பார்த்தாள் நந்தனா.

“என் வாழ்க்கையில் எல்லாமே நல்லதா தான் நடந்தது நந்து. ஐ ஆல்வேஸ் காட் த பெஸ்ட்” என்றான் அவள் முகம் வருடி.

“யூ டிசர்வ் தே பெஸ்ட்” என்றாள் காதலுடன்.

error: Content is protected !!
Scroll to Top