நிரஞ்சன், சுகாஸ் இருவரும் மைதானத்தில் இருந்து வெளியேற, சென்னை அணி ஓடி வந்து அவர்களை அணைத்துக் கொண்டது.
சுகாஸின் மனைவி ரியாவின் முகத்தைச் சரியாக அந்நேரம் ஒளிபரப்ப, அவள் கண்களில் தான் எத்தனை மகிழ்ச்சி. கைக் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு மலர்ந்த புன்னகையுடன் நின்றிருந்தாள் ரியா.
அவளின் மகிழ்ச்சியை நந்தனாவும் உணர, இதழ்கள் தாமாகப் புன்னகைத்தன.
சென்னை அணியினர் வரிசையாக எதிரணிக்குக் கைக் கொடுத்துக் கொண்டே செல்ல, நந்தனாவின் பார்வை பட்டாம் பூச்சியாய் நிரஞ்சனை சுற்றியே பறந்தது.
அவள் கேட்டாள் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்த கணவன், தன் கூச்ச சுபாவத்தையும் பொருட்படுத்தாமல் பல்லாயிர கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சட்டையைக் கழற்ற துணிந்ததை நினைத்தால், அவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பது கூடத் தெரியவில்லை. கணவனின் மேல் கொஞ்சம் கோபமாகக் கூட வந்தது. அவள் கேலியாக, விளையாட்டுக்கு சொன்னதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை அவளின் விளையாட்டு வீரன்.
அவள் மட்டும் சுகாஸிடம் சொல்லி எச்சரித்திருக்காவிட்டால், என்னவாகியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவளால்.
கணவனுக்குப் பிடிக்காத ஒன்றை, அவன் விரும்பாத ஒன்றை கட்டாயப்படுத்திச் செய்ய வைத்து விட்டு, அவளால் எப்படி அவன் முகத்தைப் பார்க்க முடியும்?
“வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு இருக்கு” மனதில் சொல்லிக் கொண்டவளுக்குக் கோபம் தான் வரவில்லை.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக அவள் கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனால், இன்று அவள் நிச்சயமாகக் கிரிக்கெட் பார்ப்பாள் என்று சரியாகக் கணித்த கணவனை அவளால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்து தானே கேமராவை பார்த்துப் புன்னகைத்தான். சட்டையைக் கழற்ற வேண்டாம் என்று சுகாஸ் தடுத்ததும் கேமராவை முறைத்தான். அவளை இவ்வளவு துல்லியமாக அறிந்து வைத்திருந்த கணவனை நினைக்கையில் அவள் இதயமெங்கும் இதமான உணர்வு.
ஒருவித வைராக்கியத்துடன், வீம்பாக எல்லா விதத்திலும் கிரிக்கெட்டில் இருந்து விலகியே இருந்தாள் அவள்.
ஆனால், இன்று பல மாதங்கள் கழித்து அவளுக்குப் பிடித்த ஒன்றை கண்டு ரசித்ததில், அதிலும் கணவனின் அதிரடி ஆட்டத்தைக் கண்டதில் அவள் மனம் தானாக இளகி இருந்தது.
நள்ளிரவை தொடும் நேரத்திலும் உறக்கம் வராமல், போட்டியை தொடர்ந்து நடைபெறும் பரிசு கொடுக்கும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதிகச் சிக்ஸ் விளாசியதற்காக நிரஞ்சனுக்குப் பரிசு தொகை வழங்கப்பட்டது. கூடவே, அவனது சிறப்பான பேட்டிங்கால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தான் அவன். பெருமையாய் அவனைப் பார்த்திருந்தாள் நந்தனா. அங்கே மைதானத்தில் நின்று அவனுக்காகக் கைத் தட்ட முடியாததற்காய் அக்கணம் மிகவும் வருந்தினாள்.
“போதும் நந்து. நேரமாச்சு பாரு மா, எழுந்திரு. தூங்க போ. நாளைக்குக் காலைல இதே மேட்ச்சை திரும்பவும் போடுவான். அப்போ பாரு” கார்த்திகேயன் மகளைக் கைப் பிடித்து எழுப்பி விட, தொலைக்காட்சி திரையில் சுகாஸ் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு, விளையாட்டு காட்டியபடி, அவன் குடும்பத்துடன் நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்துக் கொண்டே அறையை நோக்கி நடந்தாள் அவள்.
அவளை நிறுத்தி, “சூடா இந்தப் பாலை குடிச்சுட்டுப் போய்ப் படு நந்து” என்றார் பூர்ணிமா.
“வேண்டாம் மா” என்றவள், அம்மாவின் முறைப்பில் அடங்கி, வேறு வழியின்றி அதை வாங்கிக் குடிக்கத் தொடங்கினாள்.
காலி கிளாஸை அவள் நீட்ட, அதைக் கையில் வாங்கிக் கொண்டார் கார்த்திகேயன்.
“போய்த் தூங்கு நந்து. காலையில சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா எழுந்துக்கோ. அம்மா உன்னை எழுப்ப மாட்டா? என்ன?” அவர் சொல்ல,
“சரிங்க ப்பா.” என்று படுக்கப் போனாள் நந்தனா.
அறைக்குள் நுழைந்ததும் அலைபேசியை எடுத்து கணவனை அழைக்கப் போனாள். இந்நேரம் அவனிடம் அலைபேசி இருக்காது, அது அவனது உடை மாற்றும் அறையின் லாக்கரில் இருக்கும் என்பது ஞாபகம் வர, அவனுக்கு வெற்றிக்காக வாழ்த்துகள் சொல்லி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு, படுக்கையில் சரிந்தாள் நந்தனா.
நேரம் நள்ளிரவு ஒன்றை தொட்டுக் கொண்டிருந்தது. ஆனால், தூக்கம் அவளைத் தொடாமல் தூரவே நின்றது.
அலைபேசியை மீண்டும் எடுத்துப் பார்த்தாள். ஒரு செய்தியும் இல்லை. கணவன் இந்நேரம் சென்னை அணி வழங்கும் வெற்றி கொண்டாட்ட பார்ட்டியில் இருப்பான் என்று நினைத்தபடியே மெல்ல உறங்கிப் போனாள் நந்தனா.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் உறக்கம் ஏதோ சிறிய சத்தத்தில் கலைய, புரண்டு படுத்தாள். ஆனால், புரள விடாமல் தடுத்தது அவள் வயிற்றில் கனமாய்ப் பதிந்திருந்த கரம். தூக்கம் துடைத்தெறிய பட, ஆழ மூச்சிழுத்துக் கண்ணைத் திறக்க முயன்றாள். மூச்சுக் காற்றில் முழுவதுமாய் அவன் வாசம் நிறைய, பட்டென்று விழிகள் விரித்துத் திரும்பிப் பார்த்தாள்.
அவனது அடர்ந்த கேசம் நெற்றியை மறைக்க, அதை மொத்தமாக விலக்கி அவன் முகம் பார்த்தாள். மார்பு கூடு சீரான மூச்சில் ஏறியிறங்க, நல்ல உறக்கத்தில் இருந்தவனின் தோளை பிடித்து உலுக்கி, “நிரஞ்சன், எப்போ, எப்படி வந்தீங்க?” தூக்கம் வழிந்த கண்களில், ஆச்சரியம் மின்ன கேட்டாள்.
“இப்ப தான் நந்து” கண்ணைத் திறக்காமல் கிசுகிசுத்தான், தூக்கம் நிறைந்த குரலில்.
“எப்படி? இப்போ தானே சென்னையில் இருந்தீங்க? அதுக்குள்ள எப்படி மும்பை வந்தீங்க?” அவன் புறமாகத் திரும்பிப் படுத்து அவள் கேள்விகளை அடுக்க,
“தூக்கம் வருது நந்து. டையர்ட்டா இருக்கு பொண்டாட்டி” என்றான் அவளை இழுத்து தன் மேல் சரித்து.
நேற்றைய போட்டியில் முதல் இரண்டு மணி நேரங்கள் பீல்டிங், அடுத்த இரண்டு மணி நேரம் பேட்டிங் என்று கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மைதானத்தில் இருந்திருக்கிறான் அவன். அதுவும் கடற்கரையை ஒட்டிய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காற்றுக்குப் பஞ்சமாகத் தான் இருந்தது. அப்படி ஒரு வெக்கை. பகலில் சூரியன் விட்டுச் சென்றிருந்த சூடு அப்படியே மிச்சமிருந்தது.
அனைவருக்கும் உடலின் நீர் முழுவதும் வியர்வையாக வழிந்து ஓடி இருந்தது. போதாதற்கு அவன் வேறு பேட்டிங்கில் ஓடி, ஓடியே ரன் எடுத்து சோர்ந்து ஓய்ந்து போய் இருந்தான். ஒவ்வொரு போட்டிக்கு பின்னும் பல மணி நேர நல்ல ஓய்வும், உறக்கமும் அவனுக்குத் தேவை என்பதை அறிந்தவளுக்கு, சென்னையில் இருந்தவன், அதற்குள் எப்படி மும்பை வந்தான் என்ற கேள்வியும், குழப்பமும் தான் பிரதானமாக இருந்தது.
“ஃப்ளைட் தெரியுமா, ஃப்ளைட்? அதுல வந்தேன் பொண்டாட்டி. நீ ரொம்ப யோசிக்காம, தூங்கு” என்றான்.
“ம்ம். அப்ப கூட உடனே எப்படி வர முடியும்? இப்ப தானே மேட்ச் முடிஞ்சது?” அவள் குழப்பத்துடன் கேள்வி கேட்க, உடல் குலுங்க சிரித்தான் நிரஞ்சன்.
“டைம் பாரு” என்றான் சிரிப்புடன்.
ஏசி ஓடிக் கொண்டிருக்க, ஜன்னல்கள் அனைத்தையும் மறைத்திருந்தது திரைச் சீலைகள். அதன் உபயத்தால் அறை இன்னும் இருளில் மூழ்கியிருக்க, எட்டி அலைபேசியை எடுத்தாள் நந்தனா.
“அச்சோ, காலைல பத்தரை மணி ஆச்சா?” என்று அவள் அதிர, “நான் ஒன்பது மணிக்கு வந்தேன் நந்து” என்றான் நிரஞ்சன்.
சென்னை – மும்பை போட்டிக்கு இன்னும் ரெண்டு நாட்கள் இருக்க, கணவன் தன்னைப் பார்க்கவே, உடல் அசதியையும் பொருட்படுத்தாமல் அடித்துப் பிடித்து மும்பை ஓடி வந்திருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.
மெல்ல எழுந்து, முதுகுக்குத் தலையைனை வைத்து, படுக்கையில் சாய்ந்து, சரிந்து அமர்ந்தான் நிரஞ்சன். அவனது கழுத்தில் கரம் கோர்த்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள் நந்தனா.
“தேங்க் யூ” என்றாள், தலையைப் பின்னுக்கு இழுத்து, அவன் கண்களைப் பார்த்து.
“எதுக்காம்?” கண்களைச் சுருக்கி கேட்டான். அந்தக் கண்களில் இன்னும் தூக்கம் மிச்சமிருந்தது.
“இந்தச் சீசன் ஐபிஎல் ஆடுறதுக்கு..” குற்ற உணர்ச்சியில் அவள் குரல் உள்ளே போக, ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தினான். அவளின் வயிறு இடிபடாமல், வாகாக அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
“ஹேய் நந்து. நீ கேட்டு நான் செய்யாம இருப்பேனா? எனக்கு அங்க நீ இல்லாத குறை ஒன்னு மட்டும் தான் உறுத்திட்டே இருந்தது. மத்தபடி, கிரிக்கெட் ஆட எனக்குக் கசக்குமா என்ன? ம்ம், சொல்லு?” கேட்டவனை, இமைக்காமல் பார்த்திருந்தாள் நந்தனா.
“சாரி” என்றாள். அவள் விழிகளை ஆராயும் பார்வை பார்த்தான் நிரஞ்சன்.
“இப்போ எதுக்குச் சாரி?” பெருவிரலால் அவள் கன்னம் வருடி அவன் கேட்க,
“உங்க கூடச் சண்டை போட்டு, கூடவே உங்களுக்குக் கண்டிஷன் போட்டுட்டு மும்பை வந்ததுக்கு” என்றவள், “உங்களை.. உங்களை ஜெர்சி கழட்ட சொன்னதுக்கு..” என்று தடுமாற, சிரித்தான் நிரஞ்சன்.
“இட்ஸ் ஓகே நந்து. அப்படியாவது உன்னை…” என்று ஆரம்பித்தவன், அந்தப் பேச்சை திரும்பத் தொடங்க விரும்பாமல், “வேண்டாம், விடு” என்று முடித்துக் கொண்டான்.
“நான் தான் சாரி சொல்லி அப்பவே உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன் தானே? நான் சத்தியமா விளையாட்டுக்கு தான் சொன்னேன். அதான் உடனே, அப்படி எதுவும் பண்ணிடாதீங்கன்னு மெசேஜ் பண்ணவும் செய்தேன். நீங்க அதைப் பார்த்தீங்க தானே? அதுக்கு அப்புறமும் ஏன் ஜெர்சியைக் கழட்ட போனீங்க? திமிரு உங்களுக்கு. உடம்பு முழுக்கத் திமிரு” அவன் மார்பில் மொத்தினாள்.
“அடிக்காத நந்து” என்று கத்தியவனின் குரலில் சிரிப்பு சிதற, கோபமாக முறைத்தாள் அவள்.
“நான் மட்டும் சுகாஸ்கிட்ட சொல்லி இருக்கலைன்னா என்னாகி இருக்கும்? இதுல கேமராவை பார்த்து முறைக்கறீங்க வேற” அவள் பல்லை கடிக்க, “கோபப்படாத நந்து” என்று கொஞ்சினான் அவன்.
“என்னவாகி இருக்கும்? நான் எல்லோருக்கும் ஃப்ரீ ஷோ காட்டியிருப்பேன்.” அடக்க முடியாமல் அவனே சிரித்தும் விட,
“அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு? நான் சொன்னா, அதைச் செஞ்சே ஆகணுமா?” குரலை உயர்த்தினாள்.
அவளின் கன்னம் பற்றி, கண்களுக்குள் ஆழ பார்த்து, “எஸ்” என்றான் ஆழ்ந்த குரலில் நிரஞ்சன்.
“நீ கேட்டு என்னால எதையும் மறுக்க முடியாது. என்னோட வீக்னஸ் நீ பொண்டாட்டி. ஆனா, என் பலமும் நீ தான். நீ சந்தோசமா இல்லாம, நான் மட்டும் எப்படிச் சந்தோசமா இருக்க முடியும்?” அவன் கண்களும், வார்த்தைகளும் அவளை ஆழமாகத் தாக்கியது.