அவசரமாக அலைபேசியை எடுத்து கணவனை அழைத்தாள் அவள். இரண்டு முறை முழுதாக அடித்து ஓய்ந்தது அலைபேசி. நிரஞ்சன் எடுக்கவேயில்லை.
“என்னடா பண்ற?” செல்லமாக அலுத்துக் கொண்டாள். கணவன் பயிற்சிக்கு இடையில் இருப்பான், அதனால் தான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்று தோன்ற, அதற்கு வாய்ப்பு அதிகம் என்றது அவளது மனம்.
அந்த நினைப்பே மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்க அவள் முகமெங்கும் மகிழ்வின் ரேகைகள்.
உடை மாற்றி, முகம் கழுவி அவள் உணவருந்த செல்லத் தயாராக, அந்நேரம் அவளைக் காணொளி அழைப்பில் அழைத்தான் நிரஞ்சன்.
“ஹாய் டா” என்றாள் கண்கள் மின்ன. உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருக்க, மைதானத்தில் நிறைந்திருந்த ஒளி வெள்ளத்தில் பளிச்சிட்டான் நிரஞ்சன்.
துண்டால் முகம் துடைத்தபடி, “என்ன பார்வை?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தினான்.
“உன்னை இப்போ கட்டிக்கணும் போல இருக்கு” என்றாள், அவன் மேலிருந்து கண்களை அகற்றாமல்.
சிரிப்பை அடக்கி, “மும்பையில் போதி மரம் இருக்கா என்ன?” என்று நக்கல் அடித்தான் அவன்.
“ம்ம், இருக்கு. எங்க வீட்ல இருக்கு. நம்ம பெட்ரூம்ல தான்” என்று படுக்கையைச் சுற்றி காண்பித்தாள் அவள்.
அவனிடம் இருந்து சிறிய பெருமூச்சு வெளிப்பட்டது.
“என்ன பொண்டாட்டி? எதுக்குக் கால் பண்ண?”
“உங்களைப் பார்க்கணும் போல இருந்தது. கால் பண்ணேன். தப்பா?” உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க, உதடு பிரியாமல் புன்னகைத்தான் நிரஞ்சன்.
“ம்ஹூம். பார்க்கணும் போலவா? இருக்கும். இருக்கும்” என்று போலி கோபத்துடன் சொன்னவன், “பார்த்திட்டியா?” என்றான் அவள் கண்களைக் காணொளியில் ஊடுருவி, அந்தக் கண்களில் இருந்த தீவிரத்தை, கேள்வியைக் கண்டும், காணாதது போல இருந்தாள் அவள்.
பின்னே காலையில் அவனிடம் சண்டையிட்டு கிளம்பி வந்து விட்டு, இப்போது காதல் வசனம் பேசினால்? அவனும் தான் என்ன செய்வான்?
“ம்ம், பார்த்துட்டேன். ஆனா, பத்தல” என்றாள், எதிரே தெரிந்த அவன் முகம் தொட்டு,
“உனக்கு என்னமோ ஆச்சு போ” என்று சலித்தவன், அவளது பார்வை மாறாதது கண்டு, “என்னைக் கொல்லாத பொண்டாட்டி” என்றவனின் குரலில் மருந்துக்கும் கோபமில்லை.
‘இவனால் எப்படித் தன்னைச் சட்டென மன்னிக்க முடிகிறது?’ என்று அவள் வியந்து கொண்டிருக்க,
“உடம்புக்கு எப்படி இருக்கு நந்து? நல்லாருக்கத் தானே? ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா, உடனே கால் பண்ணு பொண்டாட்டி. நான் வந்துடுறேன். அத்தை, மாமா கூடவே இரு. தலையில் அடிப்பட்டது வீக்கம் குறைஞ்சிடுச்சா?, வலி எதுவும் இல்லை தானே பொண்டாட்டி” அன்பும், அக்கறையும் நிரம்பி வழிய விசாரித்தான்.
அவளுக்குக் கண்கள் கலங்க, “ஓய் நந்து. என்னம்மா பண்ணுது? நான் கிளம்பி வரவா?” பதட்டமாக, பரிவாக, பரிதவிப்புடன் அவன் கேட்க, அவன் மேலான அவளது வியப்பு கூடிக் கொண்டே போனது.
“சாரி” என்றாள், குரலில் மனதை தேக்கி வைத்து.
“என்ன நந்து?” புரியாமல் அவன் விழிக்க,
“ஐ ஆம் சாரி நிரஞ்சன். அன்னைக்கு நான் அப்படி நடந்துட்டு இருக்கக் கூடாது. நான் உங்ககிட்ட இருந்து விலகி ஓடியிருக்கக் கூடாது. படியில் கவனமா இறங்கி…”
“ஹேய் நந்து” என்றழைத்து அவளது பேச்சை நிறுத்தினான் அவன்.
“நான் தான் உன்னை அப்படி ஒரு சிட்டுவேஷன்ல நிறுத்தினேன். உன் கோபம் நியாயமானது நந்து” அவன் சொல்ல சொல்ல மறுப்பாகத் தலையசைத்தாள் நந்தனா.
“என்ன தலையை ஆட்டுற? என் மேல தான் தப்பு நந்து. கொஞ்சம் கூட உன்னோட ஹெல்த்தை பத்தி யோசிக்காம.. சாரி, பொண்டாட்டி. உனக்கோ, குழந்தைக்கோ ஏதாவது ஆகியிருந்தா.. என்னை நான் மன்னிச்சு இருக்கவே மாட்டேன்” அவன் குரல் உடைந்து கரகரக்க, அந்நேரம் அவனை அணைக்க முடியாததற்குக் காரணமான தூரத்தை மனதில் சபித்தாள் நந்தனா.
“நானும்..” என்று ஆரம்பித்தவள் அப்படியே நிறுத்திக் கொண்டாள். திரும்பத் திரும்ப அதையே பேசுவதில் என்ன மாறி விடப் போகிறது? அதனால், பேச்சை மாற்றினாள்.
“பிராக்டீஸ்ல இருக்கீங்களா?” அவள் கேட்டதும் அவன் கண்களில் பளபளப்பு.
“நெட் பிராக்டீஸ்ல இருக்கேன்” என்றான் புன்னகையுடன்.
அதில் அவன் சொல்லாமல் சொன்ன செய்தி அவளுக்கு நன்றாகப் புரிய, சூரியனை கண்ட அல்லி போல மலர்ந்தது அவள் முகம்.
அந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் அவன் விளையாடப் போகிறான் என்பது தான் அது.
ஏதேதோ பேச நினைத்தாள். என்னென்னமோ கேட்க நினைத்தாள். ஆனால், அதையெல்லாம் நேரில் பார்க்கும் போது பேச சொல்லியது அவள் மனது.
“லேட்டாகுது தானே? வீட்டுக்குப் போங்க. ரெஸ்ட் எடுங்க. ஒழுங்கா சாப்பிடுங்க” என்று அவள் அடுக்க,
“உடம்பை பார்த்துக்கோ நந்து. நான் சீக்கிரம் அங்க வர்றேன்” அலைபேசியில் அவள் முகம் தொட்டு அவன் சொல்ல, பேச்சு மறந்தவளாகத் தலையசைத்தாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மனமே இல்லாமல் அழைப்பைத் துண்டித்தான் நிரஞ்சன்.
பெற்றோர்களுடன் அமர்ந்து இரவு உணவை முடித்துக் கொண்டு, மொட்டை மாடியில் அப்பாவுடன் சிறிது நேரம் நடை பயின்று விட்டு படுக்கைக்கு வந்தாள் நந்தனா.
தூக்கம் தூர நிற்க, மனம் சிந்தனைகளால் நிறையத் தொடங்கியது. அடுத்து வந்த நாட்களும் அப்படியே தான் சுற்றினாள் அவள்.
அன்று மதிய உணவை முடித்து விட்டுச் சோஃபாவில் அமர்ந்து எதிரில் இருந்த கணவனின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தனா.
“நிரஞ்சன் கிருஷ்ணகுமார்” இந்திய கிரிக்கெட் பிரபலம். அப்படியே நின்ற வாக்கில் சிக்ஸ் அடித்துக் கொண்டிருந்தான் அந்தப் புகைப்படத்தில். இமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தனா.
“நந்து, என்னடா யோசனை?” என்றபடி பூர்ணிமா அவளுக்குப் பக்கத்தில் வந்து அமர, பக்கென்று சிரித்து விட்டாள் அவள்.
அம்மா என்ன கேட்கப் போகிறார் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். மகள் அதைச் சரியாகக் கணித்துச் சிரித்ததில் பூர்ணிமா முகத்திலும் புன்னகை பூத்தது.
“உன் முடிவு மத்தவங்களை விட உன்னை வருத்தக் கூடாது நந்து” என்றார் அவளின் சிந்தனை ஓட்டத்தை அறிந்தவராக.
“ம்மா..” என்றாள் அதிர்ந்து.
“யாருக்காக இவ்ளோ அடம் பிடிக்கிற நந்து? இது உன்னோட வாழ்க்கை. இங்க தப்பு, சரி எதுன்னு உனக்குத் தான் தெரியும். அடுத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்காம, மனசுக்கு சரினு படுறதை செய். நீ எப்படி முடிவை மாத்தலாம்னு யாரும் உன் கழுத்துல கத்தி வைக்கப் போறது கிடையாது.” மகளின் விரல்களை உருவி விட்டபடி சொன்னார் பூர்ணிமா.
“ரெண்டு வருஷம் கழிச்சு திரும்பி பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடக் கூடாது நந்து. ஐயோ, அன்னைக்கே நான் இதைச் செய்திருக்கலாமேனு நினைக்கக் கூடாது. வருந்தக் கூடாது. இது தான் சரியான நேரம்னா இப்பவே முடிவை மாத்திக்கோ. காலம் போனதுக்கு அப்புறம் கலங்கி ஒரு பிரயோஜனமும் இல்ல.” அம்மாவை குழப்பத்துடன் ஏறிட்டாள். மனதைப் படிக்கும் மந்திரம் எதையாவது கற்று வைத்திருக்கிறாரா என்ற கேள்வியுடன் அவள் பார்க்க, சத்தமாகச் சிரித்தார் பூர்ணிமா.
“உன் மனசு, உன் முகத்துல எழுதி ஒட்டியிருக்கு நந்து” என்றார் மகளின் கன்னம் கிள்ளி.
“ம்மா..” என்று சிணுங்கி, செல்லம் கொஞ்சிய மகளின் முகத்தில் வெட்க சாயல்.
“அம்மா எப்பவும் சொல்றது தான் நந்து. இது உன் வாழ்க்கை. உனக்கு என்ன வேணும்னு உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது. உனக்குப் பிடிச்சதை செய். தப்பும் தவறுமா முடிவுகள் எடுக்கறது மனித இயல்பு டா.”
நந்தனா ஆட்சேபித்து முறைக்க,
“நம்ம முடிவு சரியா, தப்பானு காலம் தான் முடிவு செய்யும் நந்து. நேற்றைய முடிவு இன்னைக்குத் தப்பா படலாம். நாலு வருஷம் கழிச்சு அதுவே சரின்னும் படலாம்” பூர்ணிமா சிரித்துக் கொண்டே சொல்ல,
“அம்மா…” என்று கத்தினாள் நந்தனா.
“அனலிஸ்ட் வேலையைக் கிரிக்கெட்டோட நிறுத்திக்கோ நந்து. வாழ்க்கையை இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி குழப்பிக்கக் கூடாது. வாழ்க்கையை அதன் போக்குல வாழ்ந்தா தான் சுவாரசியம்” பூர்ணிமா தீவிரமாகச் சொல்ல, தலையை எல்லாப் பக்கமும் அசைத்தாள் நந்தனா.
அவளது ஆராய்ச்சி மூளை தன் வேலையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
நிரஞ்சனுடன் பேசி விட்டு உறங்கப் போனாள். ஆனால், மறுநாள் முழுவதும் அவன் அழைக்கவேயில்லை.