“நந்து.. நந்தனா.. நந்து.. சாரி.. கண்ணு முழிச்சுக்கோ நந்து.. பயமா இருக்கு நந்து. இப்படிப் பண்ணாத. கண் முழிச்சு என்னை நாலு அடி அடிச்சுடு. உன் இஷ்டம் போலத் திட்டு. ஆனா, இப்படிப் பேசாம படுத்திருக்காத நந்து. என்னால உன்னை இப்படிப் பார்க்க முடியல. தப்புப் பண்ணிட்டேன் நந்து. அதுக்காக இப்படியா என்னைத் தண்டிப்ப?” கதறலாய் கேட்டுக் கொண்டே இருந்த குரலில் இருந்த பயம், அன்பு, உரிமை, பரிதவிப்பு எனக் கலவையான உணர்வுகள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் காதில் தொடர்ந்து ஒலித்து, தொல்லை செய்து கொண்டேயிருந்தது.
போதிய ஓய்விற்குப் பின் கண் விழிப்பது போல, உறக்கத்தில் இருந்து எழுந்தாள் நந்தனா.
பதட்டமும், அமைதியும் நிறைந்திருந்த அறையில் அவளின் விரல் கோர்த்து அமர்ந்திருந்த கணவன், அவள் கண் விழித்ததும் கதறி மருத்துவரை அழைத்தான்.
அவளுக்கு ஒன்றுமில்லை என்றார்கள். காயமோ, ரத்தமோ.. ம்ஹூம் எதுவுமில்லை. தலையில் பட்ட அடியை விட, மன அழுத்தம் தான் அவளுக்கு இரண்டு நாள் மயக்கதிற்கு, நினைவில்லாமல் இருந்ததற்குக் காரணமாக இருக்கும் என்றார் மருத்துவர்.
குழந்தையைப் பற்றித் தான் முதலில் விசாரித்தாள் நந்தனா. அவளிடம் வயிற்றில் அடிபடவில்லை என்று உத்திரவாதம் தந்து, ஸ்கேன் செய்தும் காண்பிக்க, தம்பதிகள் இருவரும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அப்போது தான் வெளியிட்டனர்.
அதற்கு முன்பே கணவனை யாரென்று தெரியவில்லை என்று சொல்லி, நினைவுகளை இழந்தது போல நடித்து, அவனைக் கலங்க வைத்ததை இப்போது நினைக்கையில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. தான் மிகவும் கீழிறங்கி விட்டது போல அசிங்கமாக உணர்ந்தாள் நந்தனா.
அதை நினைத்து இப்போது மெல்ல தலையில் அடித்துக் கொண்டாள்.
மருத்துவமனையில் இருந்த வரை அவள் கைப் பிடித்து மென்மையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேயிருந்த நிரஞ்சன் அவள் கண்களுக்குள் வந்தான்.
சரியான உணவும், தூக்கமும் இன்றி எப்படிச் சோர்ந்து போய் இருந்தான் அவன். இப்போது அந்த முகத்தை நினைக்கையிலும் அவளுக்கு மனதை பிசைந்தது.
அன்று தொலைக்காட்சியில் அவர்களைப் பற்றிய செய்தி வர, அவன் பதறியது அவளுக்குக் கண் முன் வந்தது. யார் தகவல் கொடுத்திருப்பார்கள் என்று இப்போதும் யோசித்தாள் நந்தனா. ஆனால், அதை ஆராய விரும்பவில்லை அவள். அதைக் காட்டிலும் முக்கியமான விஷயங்கள் அவள் முன் அணி வகுத்து நின்றனவே.
அன்றைக்கு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரையும் எல்லாம் நன்றாகத் தான் சென்றது. அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் அவள் தான் ஆரம்பித்தாள்.
நிரஞ்சன் ஐபிஎல் ஆட வேண்டும் என்று அவள் வற்புறுத்த, அவன் மறுக்க, மீண்டும் ஒரு நீண்ட விவாதம். அதைத் தொடர்ந்த சமாதானம்.
நந்தனா யோசித்துப் பார்த்தாள், எப்போதும் கணவனை அவளுக்குத் தகுந்தாற் போல அவள் வளைத்துக் கொண்டே இருக்கிறாள் என்பது உரைத்தது. ஆனால், பதிலுக்கு அவனுக்கு வளைந்து கொடுத்தாளா அவள், என்று அவனோடு வாழ்ந்த நாட்களைப் புரட்டிப் பார்த்தால், அப்படி ஒரு நிகழ்வே இல்லை. அவளின் மனசாட்சியும் அதற்கு நான் சாட்சி என்று ஒத்து ஊதியது.
நிரஞ்சன் விரும்பி கேட்க கேட்க எத்தனை முறை திருமணத்தை மறுத்தாள் அவள்? அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சியவனைக் கண்டு கொள்ளாமல் காயப்படுத்தி இருக்கிறாள்.
தான் காயப்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அவனை, அவனுடனான திருமணத்தை மறுத்து.. அது மட்டுமா? வீடு தேடி வந்த அவன் குடும்பத்திடம் கண்டிப்புடன் பேசி அனுப்பிய கார்த்திகேயன்.
“சாரி நிரஞ்சன்” அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டாள் நந்தனா.
திருமணத்திற்குப் பின்னும் கூட விமர்சனங்களை அவன் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துத் தடுமாறிய போதெல்லாம், அவள் திடமாக நின்றிருக்கலாம். மாறாக அதை எதிர்பார்த்து அல்லவா காத்திருந்தாள் அவள்? அவன் தடுமாறுவான் என்று தானே திருமணத்தை அவள் வேண்டாம் என்றது.
அவனை அரவணைத்தாள், ஆறுதலாக நின்றாள் தான். ஆனாலும், அவளுமே விமர்சனங்களைச் சரியாகக் கையாளவில்லை தானே? இன்னும் அதிக முதிர்ச்சியுடன் அதை உள்வாங்கி, கணவனோடு சிரித்து, கேலி செய்து கடந்திருக்கலாம் தானே? நேர் மாறாக, ஒவ்வொரு முறை அவளைப் பற்றி, அப்பா கார்த்திகேயன் பற்றிய செய்தி வரும் போதெல்லாம் எத்தனை பதறினாள்? நிரஞ்சனை உற்று நோக்கி கொண்டே அல்லவா திரிந்தாள்?
அதனால் தான் அவனும் பதட்டமாகினானோ? இறுதியில் அவனுக்காக இல்லை, அவளுக்காகத் தான் அவள் வேலையை விட்டது. தான் காயப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் மட்டுமே அவள் வேலையை விட்டது.
கணவன், கிரிக்கெட் இரண்டிற்கும் நடுவில் சம நிலையைக் கொண்டு வர முடியாமல் போனது நிச்சயம் அவள் தவறு தானே? வேலையில் கவனத்தைப் பதிக்க முடியாது திணறியது கண்டிப்பாக அவள் குற்றம் தான். ஆனால், அவள் ராஜினாமா செய்ததும், பழி கணவன் மேல் அல்லவா விழுந்தது.
அன்றில் இருந்து போராடிக் கொண்டேயிருக்கிறான். அவன் கேட்டால் மறுப்பது தானே அவளின் வழக்கம். அதையே தொடர்ந்து செய்த தன் முட்டாள்தனத்தை எண்ணி இப்போது நொந்துக் கொண்டாள் நந்தனா.
“இந்தச் சீசன் ஐபிஎல் நீங்க விளையாடுறீங்க. அப்படி விளையாடினா சென்னை – மும்பை மேட்ச் ஆட மும்பை வருவீங்க. அப்போ உங்க கூட நான் வருவேன். இல்லன்னா.. என்னை மறந்திடுங்க” கணவனைக் கார்னர் செய்து விட்டு, அப்பாவுடன் கிளம்பி வந்தது அவளுக்கு நினைவு வந்தது.
அவளுக்குத் தெரியும், கணவன் அவளுக்காக எதையும் செய்வான். அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்க அவன் எந்தத் தூரத்திற்கும் செல்வான் என்பதை அறிவாள் அவள்.
இப்போதும் அவளுக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வான் என்பது நிச்சயம்.
அவளின் திருமண வாழ்வின் இரண்டரை ஆண்டுகளில் தான் எத்தனை மேடு பள்ளங்கள்?
சந்தோசம், சண்டை, சமாதானம், சிரிப்பு, முறைப்பு, ஊடல், கூடல் என்று சுவாரசியமான நாட்களை மெல்ல அசைப் போட்டாள். அவளுக்கு அந்த நிமிடம் குறை என்று ஒன்றுமேயில்லை. கணவனின் மேல் எந்தப் புகாரும் இல்லை.
அவள் மட்டும் அன்று சண்டையிட்டு, படிகளில் இறங்கி ஒடியிருக்கா விட்டால், இன்றைக்கு இப்படித் தனியாக அமர்ந்திருக்கக் கூட நேர்ந்திராது.
அவள் மனம் நிரஞ்சனை சுற்றியே வந்தது. அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
அவன் முகம் காணாது யுகங்கள் கடந்தது போலிருக்க, அலைபேசியைத் தேடினாள்.
“நந்து மா, என்னடா பண்ற? ஜூஸ் தரவா? சில்லுனு குடிக்கறியா? இல்ல, டின்னர் சாப்பிடலாமா? சப்பாத்தி, சாதம் ரெண்டும் இருக்கு. உனக்கு வேற எதுவும் வேணுமா நந்து?” என்ற அம்மாவின் உரத்த கேள்வி அவளை நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது.
இன்று, இந்நேரம் கணவன் எங்கிருப்பான்? என்ற யோசனையுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள் நந்தனா. அங்கே படுக்கையை ஒட்டிய மேஜையில் இருந்த அவளின் அலைபேசியைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
“இதோ வர்றேன் மா” என்று குரல் கொடுத்தாள். அறையின் கதவை திறந்து எட்டிப் பார்த்தார் பூர்ணிமா.
“தூக்கமா நந்து?” என்று அவர் கேட்க,
“இல்லம்மா. சும்மா படுத்திருந்தேன். பத்து நிமிஷம் கொடுங்க, வந்துடுறேன் மா” என்றவள், “எனக்காக எதுவும் ஸ்பெஷலா செய்ய வேண்டாம் மா. என்ன இருக்கோ, அதையே கொடுங்க” என்று சேர்த்து சொல்ல, “நீ முதல்ல முகம் கழுவிட்டு வாடா நந்து” என்று விட்டுப் போனார் பூர்ணிமா.
அறையில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன் சென்று நின்றாள் நந்தனா. அதில் பொருத்தியிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
மருத்துவமனை வாசம் அவளிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்திருக்கவில்லை.
மெல்ல வயிறை வருடி, “சாரி செல்லக் குட்டி. அம்மா யோசிக்காம ஓடிட்டேன். இனி மேல் இப்படிப் பண்ண மாட்டேன் என்ன? உங்களுக்கு அப்பா எப்பவும் கதை சொல்லிட்டே இருப்பாரே? உங்க கூடச் சும்மாவே பேசிட்டே இருப்பாரே? அப்பா எப்பவும் அப்படித் தான் குட்டி, ஸ்வீட் அப்பா. ஆனா, அம்மா கூடச் சண்டை போடுறது எல்லாம் நீங்க கண்டுக்கக் கூடாது என்ன? இனி எங்க பிரச்சனையில் உன்னை மறக்க மாட்டேன்.. இல்ல, இல்ல.. மறக்க மாட்டோம். சரியா குட்டி? அம்மா சாரி. அப்பா, வெரி வெரி சாரி. ஓகே? நீங்க வெளில வாங்க, உங்களுக்கு நிறைய நிறையக் கிஸ் கொடுத்து அம்மா சாரி சொல்லிடுறேன். டீல்?” என்று வயிற்றில் இருந்த குழந்தையிடம் கணவனிடம் போலவே டீல் பேசினாள் நந்தனா. ஏனோ அது மனதுக்கு ஒருவித ஆறுதலை அளித்தது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் நிரஞ்சன் தான் அந்த வேலையைப் பார்ப்பான். குழந்தையிடம் பேசிக் கொண்டேயிருப்பான். நான்காம் மாதத்தில் இருந்தே அதைச் செய்கிறான் அவன்.
குழந்தைக்குச் சொல்லும் சாக்கில் அவளிடம் தான் அவனது கிரிக்கெட் போட்டிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பான்.
அவள் முறைக்க, “அப்பா இன்னைக்கு ஒரு சிக்ஸ், அஞ்சு ஃபோர் அடிச்சேன் பாப்பூ. ரெண்டு விக்கெட் எடுத்தேன் தெரியுமா?” என்று அவளைப் பார்த்து கண்ணடித்து, சிரிப்புடன் குழந்தையிடம் பேசுவான்.
“என்ன பண்றீங்க? தூங்கறீங்களா? அம்மா சாப்டாங்களா? அம்மா ஹேப்பியா இருக்காங்களா? இல்ல, கோபமா இருக்காங்களா? உங்களால ஃபீல் பண்ண முடியுதா பாப்பூ?” அவளின் மணி வயிறை மென்மையாய் வருடி, அதை விட மென்மையாய் பேச்சுக் கொடுப்பான் நிரஞ்சன்.
இப்போது அதை நினைக்கையில் அவளுக்குக் காரணம் புரியாமல் கண்கள் பனித்தது.