இனியொரு பிரிவேது – 21 (2)

மனைவியின் உடல் நிலை வேறு அதிரடியாக அவனை எதையும் செய்ய விடாமல் தடுத்து வைத்தது.

கடந்த முறை மாத பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற போதே, “என்ன வெயிட் ஏறவேயில்ல மிசஸ் நிரஞ்சன்? ஒழுங்கா சாப்பிடுறீங்களா, இல்லையா?” என்று கண்டிப்புடன் கடுமையாகக் கேட்டிருந்தார் மருத்துவர்.

“நான் கொடுத்த டேப்லெட்ஸ் மறக்காம எடுங்க.” என்றவர், “ஸ்ட்ரெஸ் அதிகமோ மிஸ்டர் நிரஞ்சன்?” என்று அவனிடம் கேட்க, க்ளீன் பவுல்டு ஆனது போல முழித்தான் நிரஞ்சன்.

“அது வந்து டாக்டர்.. அப்படிலாம் இல்லையே..” என்று அவன் தடுமாற, நந்தனா உதட்டில் ஒளிந்து கொண்டிருந்தது கள்ளச் சிரிப்பு.

“அவங்க கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் இல்லாம பார்த்துக்கோங்க. சரியான நேரத்துக்குச் சாப்பிட வைங்க. முக்கியமா அவங்களுக்குப் பிடிச்சதை செய்ய விடுங்க.” மருத்துவர் சம்பிரதாயமாகச் சொன்ன வார்த்தைகளில், அறிவுரையில் கடைசியில் சொன்னது மட்டுமே அவன் மனதில் அழுத்தமாகத் தங்கிப் போனது.

அவளுக்குப் பிடித்ததைச் செய்ய வைக்கவே விழைகிறான் அவன். அவள் விட்டால் தானே?

இப்போதும் விட்டத்தை வெறித்து விடைகளைத் தேடியபடி அமர்ந்திருந்தான் நிரஞ்சன்.

அவன் தோளில் சாய்ந்து பேசிக் கொண்டேயிருந்த நந்தனா, சோர்வில் கண் மூடி குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருந்தாள். தன்னிச்சையாய் மனைவியின் கழுத்தை வருடிக் கொண்டிருந்தது நிரஞ்சனின் விரல்கள்.

திடீரென்று அந்த எண்ணம் தோன்ற, மாமனாருக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் அவன்.

சற்று நேரத்தில் எல்லாம் அவரே அவனை அழைத்தும் விட்டார். மனைவியைப் படுக்கையில் கொண்டு விட்டவன், மாமனாருக்கு அழைத்தான்.

“மாமா, எப்படி இருக்கீங்க?” உற்சாகம் குமிழிட கேட்டான்.

“நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. நந்து எப்படி இருக்கா? நீங்க ஃப்ரீயா இருந்தா, மும்பை வாங்களேன். பொண்ணைப் பார்க்கணும் போல இருக்கு. உங்க அத்தை கூடப் பார்க்கணும் சொன்னா” தந்தையாய் உருகினார் கார்த்திகேயன்.

“நந்து நல்லாருக்கா மாமா. கொஞ்ச நாளைக்கு ப்ளைட் டிராவல் வேண்டாம்னு நினைச்சேன் மாமா. அடுத்த மாசம் கண்டிப்பா அங்க கொண்டு வந்து விடுறேன்” என்று அவன் வாக்கு கொடுக்க,

“சரிங்க மாப்பிள்ளை” என்றார் கார்த்திகேயன். “அப்புறம் சொல்லுங்க மாப்பிள்ளை. ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க? சுகாஸோட அகாடெமில நான் க்ளாஸ் எடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே..”

அவர் பேச்சில் இடைப் புகுந்து,

“அதைப் பத்தி பேச நான் இப்போ கூப்பிடல மாமா” என்றான் நிரஞ்சன்.

“ஓ. சுகாஸ் முன்னாடியே என்கிட்ட கேட்டிருந்தான் மாப்பிள்ளை. எனக்கும் ஆசை தான்” அவர் தொடர்ந்து பேச, அந்தப் பேச்சை தொடரப் பிடிக்கவில்லை அவனுக்கு.

“சத்தியமா என்னால நந்துவை ஹேண்டில் பண்ண முடியல. என்ன கேட்டாலும் அவகிட்ட பதில் இருக்கு. எல்லாத்துக்கும் பக்காவா பாயிண்ட் வச்சிருக்கா அவ. எனக்கு மண்டை வெடிச்சுப் போகுது மாமா. உங்க பொண்ணை இத்தனை வருஷம் எப்படிச் சமாளிச்சீங்க நீங்க?” பட்டென்று அவன் கேட்க, பலத்த சிரிப்புச் சத்தம் மறுபக்கம் இருந்து வந்தது.

கார்த்திகேயனுக்கு மருமகனின் கேள்வியில் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“என்னாச்சு மாப்பிள்ளை?” என்றார் அக்கறையுடன், சில நொடி அமைதிக்குப் பின்,

“அவளைத் திரும்ப வேலையில் சேர வைக்கணும் மாமா. அதே வேலையில் அவ உட்காரணும். வீடியோ அனலிஸ்ட் நந்தனாவா நான் அவளைத் திரும்பப் பார்க்க என்ன செய்யனும் மாமா? நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண கூடாதா?” அவன் குரல் வேண்டலுடன் ஒலிக்க, மறுபுறம் கனத்த அமைதி.

“எனக்கு ஐடியா கொடுங்க மாமா. இல்லனா, உங்க பொண்ணுகிட்ட நீங்க பேசுங்க. நீங்க பேசினா, நீங்க சொன்னா, அவ கண்டிப்பா கேட்பா” வற்புறுத்தினான் நிரஞ்சன்.

அவரோ வளைந்து கொடுக்கத் தயாராக இல்லை.

“மாப்பிள்ளை, என்னை மன்னிச்சிடுங்க.” என்றவர், “எனக்கும் அவளை அனலிஸ்ட் நந்தனாவா பார்க்க ஆசையா தான் இருக்கு. அதுக்காக என்ன வேணாலும் செய்ய ரெடியா தான் இருக்கேன். ஆனா, நேரடியா அவகிட்ட பேசுறது, முடியாது மாப்பிள்ளை. இதுவரை எதுக்கும் நான் அவளைக் கட்டாயப்படுத்தினது கிடையாது மாப்பிள்ளை. இப்போ போய், அதுவும் அவ…”

“புரியுது மாமா” என்றான் நிரஞ்சன் புரிதலுடன். கர்ப்பமாக இருக்கும் மகளை வற்புறுத்த விரும்பவில்லை அவர் என்பது அவனுக்கு விளங்கியது. அவனுக்கும் அதே காரணம் தானே.

மேலும், தன் எண்ணத்தை, கவலையை அவரிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்பினான் அவன். ஆனால், இப்போது அது அர்த்தமற்றதாகப் பட அமைதியானான்.

“ஒரு விஷயம் மாப்பிள்ளை..” என்று அழைத்து, “அவளுக்கு ஒரு கெட்ட.. இல்ல இல்ல.. நல்ல குணம் இருக்கு. வீக் பாய்ண்ட்னு கூடச் சொல்லலாம். நந்து அவளுக்குப் பிடிச்சவங்களுக்காக எதையும் செய்வா.” அவர் சொல்ல,

‘எனக்கு அது நன்றாகத் தெரியுமே’ என்றது அவன் மனம். அவனுக்காகத் தானே அவள் வேலையை விட்டது.

கார்த்திகேயன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“அவங்க கேட்டு எதையுமே மறுக்க மாட்டா. அவளால முடியும்னா நிச்சயமா அதைச் செய்து கொடுத்திடுவா” என்றவர், சிறிய தயக்கத்திற்குப் பின்,

“நான் இப்படிச் சொல்லக் கூடாது தான். ஆனாலும், சொல்றேன் மாப்பிள்ளை. ஏன்னா, எனக்கும் என் பொண்ணைத் திரும்பக் கிரிக்கெட்டில் பார்க்கணும். எனக்காக இல்ல. அவளுக்காக.. உங்களுக்காக.. உங்க ரெண்டு பேரோட சந்தோஷத்துக்காக அவளைத் திரும்பவும் நான் கிரிக்கெட் கிரவுண்டில் பார்க்கணும் மாப்பிள்ளை” என்றவரின் குரல் உணர்ச்சி மிகுதியில் கரகரத்தது.

“என்னனு சொல்லுங்க மாமா” அவரது கருத்தை கேட்கும் ஆவலுடன் ஊக்கினான் நிரஞ்சன்.

“நந்துவை நோ சொல்ல முடியாத ஒரு சிட்டுவேஷன்ல நிக்க வச்சு. நீங்க கேட்டா.. கண்டிப்பா சரின்னு சொல்லிடுவா.” பெரும் தயக்கத்துடன் அதைச் சொன்னார் கார்த்திகேயன். அவருக்கு மகளை அப்படியொரு நிலையில் கொண்டு நிறுத்த விருப்பமேயில்லை என்பது அவர் சொன்ன தொனியிலயே அப்பட்டமாகத் தெரிந்தது.

“தேங்க்ஸ் மாமா. நான் என்ன செய்யலாம்னு யோசிக்கறேன்” என்றான் நிரஞ்சன். அவன் மனது ஏற்கனவே சிந்தனையில் சிறகடிக்கத் தொடங்கி விட்டிருந்தது.

“உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும், அப்பாவா சொல்லாம இருக்க முடியலை. நந்து பத்திரம் மாப்பிள்ளை. நல்லா பார்த்துக்கோங்க. நீங்களும், உங்களைக் கவனிச்சுக்கோங்க. இந்த டென்ஷனை விளையாட்டில் காமிக்கக் கூடாது நீங்க. பெர்சனல் வாழ்க்கை உங்க ஆட்டத்தை என்னைக்கும் பாதிக்க விடாம பார்த்துக்கோங்க” நிரஞ்சனுக்கு மாமனார் எதிரில் நின்று அதைச் சொல்வது போலிருக்க, கண் மூடி கேட்டுக் கொண்டான் அவன்.

“நான் பார்த்துக்கறேன் மாமா” என்ற உத்திரவாதத்தை உறுதியாக அளித்தான் அவன்.

“நல்லதுங்க மாப்பிள்ளை” என்றதோடு அழைப்பை துண்டித்துக் கொண்டார் கார்த்திகேயன்.

மனைவியை எப்படி இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்துவது என்று சிந்திக்க ஆரம்பித்த நிரஞ்சனுக்குச் சீரான எந்த உத்தியும், புத்தியில் உதிக்கவில்லை.

குறுக்கும், கோணலுமான எண்ணங்களே வர தன்னைத் தானே நொந்து கொண்டான் அவன்.

“மாசமா இருக்கப் பொண்ணு. மனசுல இருக்க ஆசையைச் சொல்லு ஆத்தா” என்று அவனது அப்பத்தா கேட்கும் போதெல்லாம் அவசரப்பட்டான் அவன்.

அவளுக்கு அப்படியொன்றும் அவதியில்லை. தன் போக்கில் நாட்களை ரசித்துக் கடத்திக் கொண்டிருந்தாள்.

“பசிக்குது டா. ஏதாவது சாப்பிட செஞ்சு கொடு. இனிப்பா இல்லனா புளிப்பா..”

“எனக்குத் தூக்கம் வரல. நீ மட்டும் தூங்கற? எழுந்திரு. பேசிட்டு இருக்கலாம்”

“ஐயோ கால் பயங்கரமா வலிக்குது, மெதுவா பிடிச்சு விடுடா. என் உடம்பு வீங்கிட்டே போகுது, நீ மட்டும் ஃபிட்டா, பார்க்க செம்மையா அப்படியே இருக்க” என்று விதவிதமாக அவனை அர்த்த ராத்திரியில் படுத்தி எடுத்தாள் நந்தனா.

அவள் முன்னர்ச் சொன்னது போலப் பிரக்னன்சி ஹார்மோன்ஸ் அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. தனிமையைக் கையாள முடியாது திணறினாள் அவள்.

அவளது பேச்சுகள், செய்கைகள், சிறுபிள்ளை தனங்கள் என எதையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை அவன். இந்நேரத்தில் இப்படித் தான் இருக்கும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து, தெளிந்து கொண்டான்.

உண்மையைச் சொல்லப் போனால் எரிச்சல் படாமல் அவளது கோரிக்கைகளைப் புன்னகையுடன் ஏற்று, இயல்பான கணவனாக ரசித்து அவளுக்குப் பிடித்ததைச் செய்தான். அவளது புலம்பல்கள் எல்லாம் பெரிதாக அவனைப் புன்னகைக்கச் செய்தது.

இரண்டு வாரங்கள் தென் ஆப்ரிக்காவிற்கு ஒரு நாள் தொடர் விளையாட சென்று விட்டு அவன் வீடு வர, பிரிவை தாங்க இயலாமையால் எப்போதும் இல்லாத விதமாக, “எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. நீ ஊர் சுத்திட்டே இருக்க. பொண்டாட்டி கூட இருக்கணும்னு பொறுப்பே இல்லாம, விளையாட போற” என்று புகார் வாசித்துச் சிணுங்கினாள் நந்தனா.

சிரித்துக் கொண்டே, “என் மேனேஜரா ஆகிடுறியா பொண்டாட்டி?” என்று அவன் கேட்க, அதற்கு அதிர்ச்சியுடன் விழி விரித்தாளே தவிரப் பதில் சொல்லவில்லை.

“ஷர்மா, ரவி ஏன் உன் ப்ரெண்ட் சுகாஸ் வரை, எல்லோருக்குமே அவங்க வைஃப் தானே மேனேஜர்ஸ். பேசாம, நீயும் எனக்கு மேனேஜரா வந்திடு. என் கூடவே சுத்தலாம். என் வேலையை நீ பார்க்கலாம். அப்புறம் எந்நேரமும் என் கூடவே இருக்கலாம்” அவன் சொல்லிக் கொண்டே போக, அவன் மார்பில் தலை சாய்த்து உறங்குவதாகப் பாவனைச் செய்தாள் அவள்.

“கேடி” என்று முணுமுணுத்தான் நிரஞ்சன்.

எந்தப் பக்கம் போனாலும் கதவை அடைத்தாள் நந்தனா. அவனுக்குக் காற்றில் முட்டிக் கொள்வது போல இருந்தது. வலிக்கவும் இல்லை. வழியும் கிடைக்கவில்லை.

error: Content is protected !!
Scroll to Top