இனியொரு பிரிவேது – 21 (1)

கணவன் சட்டெனக் கண்டுபிடித்து விடுவான் என்றே நினைத்திருந்தாள் நந்தனா. ஆனால், அவனோ குழப்பத்துடன் அவளையும், பரிசையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் கொண்ட கிட் (kit) ஒன்றை பரிசளித்திருந்தாள் அவள். நிரஞ்சன் நிச்சயம் அதைப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், சின்னக் குழந்தை உபயோகிக்கும் அளவில் சிறியதாக அனைத்தும் இருந்தது.

அவனது கைகளில் அடங்கி விடக் கூடிய அளவில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து புன்னகையுடன் பார்த்த நிரஞ்சன், “நீயும் கிரிக்கெட் விளையாட போறியா நந்து?” என்று புருவம் சுருக்கிக் கேட்டான்.

அவள் முகம் பொய் கோபத்தில் சுணங்க, “ஆமா, வுமன்ஸ் டீம்ல ஜாயின் பண்ணப் போறேன்” என்றவள், கையில் இருந்த கேமராவை ஓரமாக வைத்து விட்டு, அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள்.

“ஜூனியர் கிட் இது. இதுக்கு, பேட்ஸ்மேன் நிரஞ்சனுக்கு ஜூனியர் வரப் போறாங்கன்னு அர்த்தம்” அவன் கண்களைப் பார்த்து, கண் சிமிட்டி கிசுகிசுத்தாள்.

“புரிஞ்சுது பொண்டாட்டி. அதை நீயே சொல்லணும்னு தான் புரியாத மாதிரி நடிச்சேன்” அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழொற்றி கரகரத்த குரலில் முணுமுணுத்தான் நிரஞ்சன்.

அவளை இறுக அணைத்து, “தேங்க்ஸ்” என்றான் நெகிழ்ந்த குரலில்.

சுகாஸின் கிரிக்கெட் கோச்சிங் அகாடெமி திறப்பு விழாவின் போது, அவனது ஆறு மாத குழந்தையை நந்தனா கைகளிலேயே சுமந்து கொண்டு திரிந்தது அவனுக்கு நினைவில் வந்தது.

அப்போது தான் நடைப் பயின்று கொண்டிருந்த கேப்டனின் ஒரு வயது மகளின் பின்னேயும் அவள் சுற்றிய காட்சி இப்போதும் அவனுக்குக் கவிதையாய் நினைவில் இருக்கிறது.

சுகாஸ் மற்றும் கேப்டனின் மகள்களை, அவர்கள் இருவரும் கைகளில் அள்ளிக் கொண்டு எடுத்த புகைப்படமும் கண்களில் காட்சியாய் ஓடியது. அழகு மொத்தமும் அந்தப் புகைப்படத்தில் இருந்ததாக நினைத்தான் அவன்.

அதற்கு இணையத்தில் வந்த, “சொந்தமா குழந்தை பெத்துக்கோங்க டா” என்ற கிண்டல், சீண்டல் கருத்தும் இப்போது அவனது நினைவில் வந்து கிச்சு கிச்சு மூட்டியது.

“ஜூனியர் கிட். குட்டியா அழகாயிருக்கு நந்து. பையன் வந்தா கிரிக்கெட் ஓகே. பொண்ணு வந்தாலும்…” அவனைக் கடுமையாக முறைத்தாள் நந்தனா.

“பையனோ, பொண்ணோ கிரிக்கெட் அவங்க விருப்பம் தான்” அழுத்தமாகச் சொன்னாள்.

“கூல் டவுன் பொண்டாட்டி” சிரிப்புடன் சமாதானப்படுத்தினான்.

அடுத்து வந்த நாட்களில் மருத்துவமனை சென்று கர்ப்பத்தை உறுதி செய்து, மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற்றுக் கொண்டனர்.

நிரஞ்சனுக்கு அவர்களின் ஜூனியர் வரப் போவதில் மிகுந்த மகிழ்ச்சி. நந்தனா அவனிடம் அதைச் சொன்ன இரவு அவனிடம் இருந்த மகிழ்ச்சி அடுத்தடுத்து வந்த நாட்களில் அவனிடம் இல்லை.

மனைவிக்குப் பரிசுகளை வாங்கிக் குமித்தவனுக்கு அவன் விரும்பிய பரிசை, அவள் விரும்பும் பரிசை கொடுக்க முடியாத வருத்தம் அதிகமிருந்தது.

அதனால், எதை எதையோ யோசித்தபடியே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி சுற்றினான் அவன்.

நந்தனா அவளின் ஒவ்வொரு நாளையும் சிரமப்பட்டு நகர்த்தினாள். தலை சுத்தல், வாந்தி, மயக்கம் என்று வைத்து செய்தது அவளது வயிற்றில் இருந்த சுட்டி.

அவர்களது வீட்டில் உதவிக்கு ஆள் இருந்தார்கள். கூடுதலாக அவளை நன்றாகவே தாங்கிக் கொண்டான் நிரஞ்சன்.

இரு வீட்டு பெரியவர்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட, சில மணி நேரங்களிலேயே அங்கிருந்தார்கள் அவர்கள்.

பூர்ணிமா இம்முறை மகளுடன் ஒரு வாரம் இருந்து விட்டே மும்பை சென்றார்.

கிருஷ்ணகுமார் தன் அம்மாவை கொண்டு வந்து மருமகளுக்குத் துணையாக விட்டு விட்டு சென்றார்.

நிரஞ்சனின் அப்பத்தா அங்கிருந்ததும் நந்தனாவிற்கு நன்றாகத் தான் இருந்தது. அவள் வீட்டில் இருக்கும் நேரங்களில் பேச்சு துணைக்கு ஆள் கிடைத்ததில் அவளுக்கு நிம்மதி.

ஹோட்டல் வேலையை முன்பை போல ரசிக்க முடியவில்லை அவளால்.

சமையலில் சாதாரணமாகக் கடுகு தாளிக்கும் மணம் கூட அவளுக்கு இப்போது ஒத்துக் கொள்ளவில்லை. குமட்டிக் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹோட்டலில் ஒரே நேரத்தில் செய்யப்படும் பல்வேறு உணவுகளின் வாசம் அவளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

இஞ்சி பூண்டு வதங்கும் வாடையே வாந்தி வரச் செய்தது. குழம்பு கொதித்தால் ஹோட்டலை விட்டு வெளியில் வந்து நின்று கொள்வாள் அவள்.

சில நாட்கள் சமாளித்துப் பார்த்தாள். மேலும் ஒரு வாரம் தாக்குப் பிடித்தாள். ஆனால், அதற்கு மேல் முடியாமல், வீட்டில் பெரும்பான்மையான நேரத்தை செலவழிக்கத் தொடங்கியிருந்தாள் அவள். அவ்வப்போது சென்று மேற்பார்வை செய்வதோடு சரி. நாள் முழுக்க அங்கேயே இருப்பதெல்லாம் கிடையாது.

கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாமல் அன்று வீட்டில் இருந்த நிரஞ்சனின் கண்கள் மனைவியையே‌‍ சுற்றி வந்தது.

அவனது அப்பத்தா வெறுமே தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி கொடுக்க, அதை ருசித்து உண்டு கொண்டிருந்தாள் நந்தனா.

“புளிப்பா இருந்தா மட்டும் தான் தொண்டைகுள்ள இறங்குது” என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவள்.

அவனுக்குள் சமீபமாக ஒரு பயம். குழந்தை வரப் போவதை கூடக் கொண்டாட முடியாத அளவில் அந்தப் பயம் அவனைப் படுத்தி எடுத்தது.

மனைவி இப்படியே கர்ப்பம், குழந்தை, பிள்ளை வளர்ப்பு, ஹோட்டல் என்று அந்த வட்டதிற்குள் தன்னை மகிழ்வுடன் அமிழ்த்தி கொள்வாளோ என்பது தான் அவனது பயமாக இருந்தது.

அதில் கிரிக்கெட்டை முழுவதுமாய் மறந்து விடுவாளோ என்று பயந்தான் அவன்.

மெல்ல அவளிடம் மீண்டும் அது குறித்த பேச்சை ஆரம்பித்தான். எப்போதும் போல விலாங்காய் வழுக்கி கொண்டு நழுவினாள் நந்தனா.

நாட்கள் செல்லச் செல்ல பேச்சு வார்த்தைகள் வாக்கு வாதங்களாக மாறத் தொடங்கியிருந்தது.

“எதுக்கு இதையே பேசிட்டு இருக்கீங்க நிரஞ்சன்? ஏற்கனவே எனக்குப் பிரக்னன்சி ஹார்மோன்ஸ் உச்சத்துல நின்னு டான்ஸ் ஆடிட்டிருக்கு. இதுல நீங்க வேற கேட்டதையே கேட்டு, சொன்னதையே சொல்ல வச்சு, என்னைக் கடுப்பேத்தாதீங்க” என்று கத்தினாள் நந்தனா. அவனோ, அடங்குவதாக இல்லை.

“நீ ஏன் டிவில கூடக் கிரிக்கெட் பார்க்க மாட்டேங்கற நந்து?” என்ற கேள்வியில் அவனை அதிர்ந்துப் பார்த்தாள் நந்தனா.

சட்டெனப் பொய் சொல்ல வரவில்லை அவளுக்கு. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் அவள்.

“ஏன் நந்து? இப்போ தான் எல்லாமே மாறிடுச்சே? என்ன விமர்சனம் வந்தாலும் நான் தான் கண்டுக்கறதில்லையே? அப்புறமும் ஏன் நந்து யோசிக்கற? நீ திரும்பவும் வேலையில் ஜாயின் பண்ணலாம் இல்ல?” மனைவியின் கைப் பிடித்து அவன் கேட்க, அவன் கண்களைச் சந்திக்க மறுத்தாள் அவள்.

ஒரு முடிவை எடுத்த பின், அதில் நிலையாக நிற்க வேண்டும் என்று நினைத்தாள் நந்தனா.

வேலையில் மீண்டும் சேர்ந்து, வாழ்க்கையைச் சோதித்துப் பார்க்க அவள் விரும்பவில்லை.

வாழ்க்கையில் எது வந்தாலும் ஒரு கை பார்த்து விட வேண்டும், அதற்காக வாழாமல் இருக்கக் கூடாது என்று நினைத்தான் நிரஞ்சன்.

மனைவியை எப்படியாவது திரும்பக் கிரிக்கெட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் அவன். அல்லும் பகலும் அதே நினைப்பு தான் அவனுக்கு.

error: Content is protected !!
Scroll to Top