இனியொரு பிரிவேது – 20 (3)

இப்போதும் அர்த்தமற்ற பேச்சுக்களைப் பேசியபடி, ஒருவரை ஒருவர் ஒட்டி உரசிக் கொண்டு, கால் புதைய கடற்கரையில் நடந்து விட்டு வீடு திரும்பினார்கள்.

நள்ளிரவில் அசந்து உறங்கும் மனைவியையே பார்த்தபடி படுத்திருந்தான் நிரஞ்சன்.

அவள் முகம் அதிகாலை வானம் போலப் பளிச்சென்று நிர்மலமாக இருந்தது.

“சந்தோசமா இருக்கியா நந்து?” பலமுறை அவளிடம் கேட்ட கேள்வியை, இப்போதும் அவளிடம் கேட்டான் அவன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளா, எழுந்து பதில் சொல்லப் போகிறாள்?

அவன் குரலை உணர்ந்து அனிச்சையாய் அவனை நெருங்கிப் படுத்தாள் நந்தனா. அதில் அவளைச் சுற்றியிருந்த போர்வை விலக, கழுத்து பளிச்சென்று அவன் கண்களில் விழுந்தது.

மூன்று சின்னஞ்சிறு பறவைகள் சிறகடித்துக் கொண்டிருந்தது அவளின் கழுத்தில். அவன் விரல் அனிச்சையாய் நீண்டு அந்த டாட்டூவை வருடியது.

“இதுக்கு அர்த்தம் ஃபிரீடம். சுதந்திரமா நானும் இந்தப் பறவைகளைப் போலப் பறக்க விரும்பறேன்” கல்யாண இரவில் அவள் கொடுத்த விளக்கம் இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. ‘அவளது சிறகுகளை முறித்து விட்டேனோ நான்?’ அவன் மனதில் மீண்டும் குற்ற உணர்வு.

டாட்டூவை மென்மையாக வருடிக் கொண்டேயிருந்தான்.

“ம்ம். தூங்கு டா” சிணுங்கினாள். சிரித்தான்.

“ஐ ஆம் லவ்விங் திஸ் லைஃப் நிரஞ்சன்” அவன் கேள்வி கேட்கும் போதெல்லாம் அவள் சொல்லும் பதில், இதுவாகத் தான் இருக்கும்.

அவனும் அதை நம்பத் தான் விரும்பினான். ஒருவேளை நம்பியும் இருப்பான். மனைவி அவனோடு கிரிக்கெட் டூர்களில் உடன் வந்திருந்தால், அவள் சொன்னதை நிச்சயம் நம்பி இருப்பான் நிரஞ்சன்.

ஹோட்டல், அதை விட்டால் வீடு. மாமியார், நாத்தனார் வீடு, அம்மா வீடு என்று ஊரை சுற்றி வந்த நந்தனா, வெகு கவனமாகக் கிரிக்கெட்டை தவிர்த்தாள்.

அவனிடம் கிரிக்கெட் பற்றிப் பேசுவது கூடக் கிடையாது. அவனோடு மட்டுமல்ல, தனியாகக் கூட அவள் கிரிக்கெட் பார்ப்பது கிடையாது. கிரிக்கெட் பார்க்காமல் இருப்பதையே வேண்டுதல் போலக் கடுமையாகக் கடைப்பிடித்தாள் அவள்.

அவன் இழுத்து பிடித்து அமர வைத்து, “இந்த மேட்ச் அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?” என்று ஆரம்பிக்கும் போதே, ஏதாவது ஒரு வேலையைக் காரணம் காட்டி எழுந்து போய் விடுவாள் அவள்.

தொடக்கத்தில் அவனும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதுவே தொடரவும் கவலையுறத் தொடங்கினான்.

“நந்து.. நந்து.. சென்னை டீம்க்கு இன்னும் வேற அனலிஸ்ட் அப்பாயிண்ட் பண்ணல அவங்க. நீ ஏன் திரும்ப ஜாயின் பண்ண கூடாது?” அவன் கேட்டால் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாள் அவள்.

“சிவராஜ் ஏன் உனக்கு அப்புறம் யாரையும் அசிஸ்டன்ட்டா சேர்க்கல நந்து?” பிடித்து வைத்து கேட்பான்.

“என்னைக் கேட்டா? அவர்கிட்டயே கேளுங்க” என்று பிடிக் கொடுக்காமல் பேசுவாள் நந்தனா.

அவனுக்குச் சுவரில் முட்டிக் கொள்ளும் உணர்வு. முட்டுச் சந்தில் வழி தேடும் சோர்வு.

இந்தப் பேச்சுகள் சில சமயங்களில் வாக்கு வாதங்களில் கூட முடித்திருக்கிறது. ஆனால், நந்தனா அவன் பக்கம் சாய்வதாகவே இல்லை.

அவள் கிரிக்கெட்டை மறக்கவில்லை. மாறாக ஒதுக்கினாள், தவிர்த்தாள். அதைப் பார்க்கையில் அவனது எண்ணம் வலுத்துக் கொண்டே போனது.

“உன்னைத் திரும்பவும் எப்படிக் கிரிக்கெட்குள்ள கொண்டு வர்றது நந்து? எனக்கு ஐடியா கொடேன்” ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிடம் பேசிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

“என்ன பண்ற டா? ஏதோ உளறிட்டே இருக்க? தூக்கம் வரலையா உனக்கு?” அவன் குரலில் தூக்கம் கலைய, பாதிக் கண்ணைத் திறந்து கேட்டாள் நந்தனா.

அவன் உதடு பிதுக்க, “விடிய விடிய எல்லாம் பிராக்டீஸ் பண்ணக் கூடாது. தூங்கு” என்று அவனை இழுத்து அணைத்தாள். மெல்லிய சிரிப்புடன் அவளோடு ஒன்றி கண்களை மூடினான் நிரஞ்சன்.

நாட்கள் நகர, மாதங்கள் கடந்திருந்தது.

அன்று சுகாஸின் கிரிக்கெட் கோச்சிங் அகாடெமி திறப்பு விழா. அவன் வளர்ந்த ஊரான உத்திர பிரதேசத்தில் கிரிக்கெட்டை வளர்க்க விரும்பினான் சுகாஸ். மிகப் பிரம்மாண்ட வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய சென்டரை நேர்த்தியாகக் கட்டி முடித்திருந்தான். மாணவர்கள் சேர்க்கை கூடத் தொடங்கியிருந்தது.

திறப்பு விழாவிற்கு அரசியல் புள்ளிகள், தொழில் பிரபலங்கள், கிரிக்கெட் முதலைகள் என யாரையும் அழைக்கவில்லை அவன்.

அவனது குடும்பம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு மட்டுமே அழைப்பு. நண்பர்கள் வரிசையில் கேப்டன் மற்றும் நிரஞ்சன் வந்து விட்டதால் அவர்களையும் அழைத்திருந்தான் அவன். அவர்களைத் தவிரக் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட யாரும் அங்கில்லை.

ரோஜா வண்ண மென்பட்டில் அரங்கத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தாள் நந்தனா.

நிரஞ்சனும் பட்டு, வேட்டி சட்டையில் தான் இருந்தான். அவன் மட்டுமல்ல. சுகாஸ், ரியா கூட அதே நிற புடவை, வேட்டி தான் அணிந்திருந்தார்கள்.

ஒருவித தயக்கத்துடன் கேப்டன் மற்றும் அவரின் மனைவிக்கும் உடைகளைப் பரிசளித்திருந்தாள் நந்தனா. அவர்களின் அளவுக்குத் திருத்தி அதையே அணிந்திருந்தனர் அனைவரும்.

“லவ்லி சாரி நந்து. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார் கேப்டனின் மனைவி. அவர் முகத்தில் மாறா புன்னகை.

“உத்தரப்பிரதேசத்தில் தமிழ் நாட்டு கொடியை உசரமா பறக்க விடுற பாரு நீ” கிண்டலாகச் சொன்னான் நிரஞ்சன். அன்றைய செய்திகளில் அவர்களது புகைப்படங்கள் களைகட்டும் என்பதாலே சொல்கிறான் என்பது புரிய, சிரித்து, உதடு சுழித்து விட்டுப் போனாள் அவள்.

சில மாதங்களுக்கு முன்னர்த் தான் சுகாஸ், கேப்டன் இருவரும் ஒரே நாளில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்கள்.

மற்ற கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் ஆடுவார்கள் என்றாலும் கூட, அவர்களின் ஓய்வு அறிவிப்பை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

சுகாஸிடம் மணிக்கணக்காகச் சண்டை போட்டாள். கோபித்துக் கொண்டு பல நாட்கள் பேசாமல் இருந்தாள். அவனது தொடர் சமாதானத்தில், அவளே இறங்கியும் வந்திருந்தாள்.

“வா, வா, நிரஞ். டைமாச்சு” சுகாஸ் அழைக்க, அவனோடு உள்ளே சென்றார்கள்.

திறப்பு விழா மிகச் சிறப்பாக, மன நிறைவாக நடந்து முடிந்திருந்தது. அந்த நாளின் முடிவில் மகிழ்வுடன், நிறைவுடன் அவர்களிடம் விடைப் பெற்றுச் சென்னை திரும்பினார்கள் இருவரும்.

அடுத்த வாரமே டி20 தொடருக்காக ஆஸ்திரேலியா சென்று விட்டான் நிரஞ்சன்.

பத்து நாட்கள் கழித்து அவன் சென்னை திரும்ப விமான நிலையத்தில் அவனுக்காகக் காத்திருந்தாள் நந்தனா.

நான்கே எட்டில் அவளை நெருங்கி, “ஹேய் பொண்டாட்டி” தோளோடு சேர்த்தணைத்து விடுவித்தான்.

“நானே வீட்டுக்கு வந்திருப்பேன் நந்து. உனக்கு வீண் அலைச்சல்” அவன் புகார் வாசிக்க, அவள் புன்னகைத்தாள்.

விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வீடு வரும் போதே, நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம்.

பயணக் களைப்பு போக நிரஞ்சன் குளித்து விட்டு வர, உறங்கத் தயாராகினர்.

விளக்கை அணைத்து பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், அசதியில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் நிரஞ்சன். மெதுவாக எழுந்து மீண்டும் விளக்கை ஒளிர விட்டாள் நந்தனா.

முகத்தில் வெளிச்சம் பட்டதும், புரண்டு படுத்தான் நிரஞ்சன்.

“நிரஞ்சன்.. நிரஞ்சன்…” காதில் கிசுகிசுத்து எழுப்பினாள்.

“நந்து, பிராக்டீஸ் நாளைக்கு..” அவன் தொடங்க, அவன் உதட்டில் வலிக்காமல் அடித்தாள்.

“எப்பவும் அதே நினைப்பு தான். எழுந்திருங்க. இனிமே உங்களுக்குப் பிராக்டீஸே கிடையாது” அவனை மென்மையாய் உலுக்கி எழுப்பியபடி சத்தமாகச் சொன்னாள்.

“என்னது? என்ன சொன்ன? ஏன் பிராக்டீஸ் கிடையாது?” தூக்க கலக்கத்துடன் அவன் கேட்க,

“அது அப்படித் தான்” என்றாள் அழுத்தமாக.

“ஓய்..” என்று அவன் திரும்ப, படக்கென்று விலகினாள். அவளைப் பிடிக்க நகர்ந்து, அப்படியே எழுந்து அமர்ந்தான் நிரஞ்சன்.

சட்டென விளக்கை அணைத்தாள் நந்தனா.

“இந்நேரத்தில என்ன விளையாட்டு நந்து?” என்று தூக்கம் கலைந்த எரிச்சலுடன் ஆரம்பித்தவனின் குரல் மெழுகுவர்த்திகள் ஒளிரத் தொடங்கவும் அப்படியே நின்று போனது.

“ஹேப்பிப் பர்த் டே நிரஞ்சன்” அவன் முன் அமர்ந்து, அவன் முகம் பற்றிச் சொன்னாள் நந்தனா. அவன் முகம் நிறைத்தது புன்னகை.

“வாங்க, கேக் கட் பண்ணுங்க” கைப் பிடித்து இழுத்தாள்.

“எப்போ ரெடி பண்ண நந்து?”

“நீங்க வர்றதுக்கு முன்னாடியே. இப்ப ஜஸ்ட் கேக் மட்டும் செட் பண்ணேன்” சொல்லிக் கொண்டே பிளாஸ்டிக் கத்தியை நீட்டினாள்.

கேக்கை வெட்டப் போனவன் கரம் அந்தரத்தில் நிற்க, “ஐ வில் மேக் அ விஸ்” என்றான்.

“ம்ஹூம். செய்ங்க செய்ங்க” சிரிப்புடன் தலையாட்டிச் சொன்னாள்.

“நந்து..” என்று அவளின் கரம் பற்றினான். எதையோ கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்து,

“ஓகே. நீங்க கேட்க வேண்டாம். உங்களுக்கு இந்த முறை நானே வரம் தர்றேன்” கண்ணடித்துச் சொன்னாள்.

“ஹேய் செல்லாது. செல்லாது. நான் தான் கேட்பேன்” வேகமாக மறுத்தான்.

“அதெல்லாம் செல்லும், செல்லும். நான் தான் கொடுப்பேன்” என்றவள், கையைப் பின்னே நீட்டி பளபளத்த பார்சலை எடுத்து, அவன் கைகளில் வைத்தாள்.

“கிஃப்ட் கூட வாங்கி வச்சியா நந்து?” மலர்ந்தது அவன் முகம்.

“பிரிச்சு பாருங்க” மூச்சை பிடித்துக் கொண்டு சொன்னாள்.

“என்ன இருக்கு?” புருவம் உயர்த்தி அவளிடம் கேட்டுக் கொண்டே பிரித்தவனின் கண்கள் வியப்பில் விரிந்து கொண்டது. அவனால் பார்வையை அகற்ற முடியவில்லை. பரிசை புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

கைகளில் இருந்த பரிசையும், மனைவியையும் பேச்சு மறந்தவன் போல மாறி மாறிப் பார்த்தான் நிரஞ்சன்.

உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தனா. அவள் கைகளில் இருந்த கேமரா நிரஞ்சனின் முகப் பாவங்களைக் கச்சிதமாகப் பதிவு செய்து கொண்டிருந்தது.

“ஏதாவது சொல்லு டா” என்றாள் நந்தனா.

“ஆங்…” என்றான் கண்களில் கேள்வியுடன்.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top