மறுநாள் கொல்கத்தா அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டிருந்தது.
அவ்வளவு தான், அந்த வருடம் சென்னை அணியின் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்து, தரை மட்டமானது.
அதன் பின்னான நாட்கள் நிரஞ்சன் ஓய்வில் இருக்க, அவனோடு ஒரு புது வாழ்க்கையை வாழத் தொடங்கியிருந்தாள் நந்தனா.
காலையில் எழுந்ததில் இருந்து ஒன்றாக அவரரவர் வேலையைப் பார்த்தனர். நிரஞ்சனின் இரண்டு ரெஸ்டாரன்ட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள் நந்தனா.
புதுத் தொழிலை கற்றுக் கொண்டாள்.
அங்குத் தேவையான மாற்றங்களைச் செய்தாள். புதிதான உணவு வகைகளை அறிமுகப்படுத்தினாள். இணையத் தளப் பக்கம் தொடங்கி விளம்பரங்கள் செய்தாள். தொழில் முன்பை காட்டிலும் சூடு பிடிக்கத் தொடங்கியது.
அத்தோடு நில்லாமல், மாமனாரின் ஹோட்டலிலும், அவருடன் கலந்தாலோசித்து அங்கும் தேவையான நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தாள்.
இந்தப் புதிய களம் அவளுக்குப் புத்துணர்வை அளித்தது. மனதை திசைத் திருப்ப உதவியது.
கிருஷ்ணகுமாருக்கு மருமகளின் முடிவில் அத்தனை வருத்தம். அவளிடம் நேரடியாகவே சொல்லி விட்டார் அவர்.
“ஒரு ஹோட்டல் ரன் பண்றது எவ்ளோ கஷ்டம்னு என்னைக் கேட்டா அடுக்கிட்டே போவேன் மா. ஆனா, உங்க வேலை, உங்க கிரிக்கெட். அது இன்னமும் எனக்குப் புரிய மாட்டேங்குது. ஆனா, அதுல இருக்கக் கஷ்ட நஷ்டங்கள் உங்களுக்குத் தான் தெரியும். நான் எதுவும் தெரியாம கருத்து சொல்லக் கூடாது தான். ஆனா, உலகத்துல தீர்க்க முடியாத, சமாளிக்க முடியாத பிரச்சனை எதுவுமே கிடையாது மா. தீர்வை தேடி இருக்கலாம் நீ. என் பையனை போலவே எனக்கும் ரொம்ப வருத்தம் மா. ஆனா, அவனைப் போலவே உன்னோட முடிவை நானும் மதிக்கறேன்” அரிதாகப் பேசும் மாமனார். ஆனால், அர்த்தமுள்ள பேச்சு மட்டுமே அவர்களுக்குள் இருக்கும்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று அவள் யோசிக்க, “உன் திறமையை இனி நம்ம ஹோட்டல்ல காட்டு மா. நாளைக்கு எனக்குப் பின்னாடி நீங்க தானே பார்க்கணும்” என்று கிருஷ்ணகுமார் சொல்ல, மலர்ந்து புன்னகைத்தாள் நந்தனா.
அதற்குப் பின் அதைப் பற்றிய பேச்சே அவர்களுக்குள் வரவில்லை. மாமனாரை போல இல்லாமல் மாமியார் புவனா, அவளது வேலை குறித்து எல்லாம் விசாரிக்கவே இல்லை.
அடிக்கடி மகனும், மருமகளும் ஒன்றாக வீடு வருவதிலயே மகிழ்ந்தார் அவர்.
இப்போது குடும்ப விழாக்களுக்கு மகன் தவறாமல் கலந்து கொள்வதால் இன்னும் மகிழ்ந்து போனார் அவர்.
நிரஞ்சன் ஊரில் இருந்தால் மனைவியோடு முழு நேரத்தையும் செலவிட்டான். அவன் போட்டிக்காக வெளிநாடுகள், வெளியூர்கள் செல்லும் போது உடன் செல்ல மறுத்து விட்டாள் நந்தனா. முதலில் மனைவி வந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினான் அவன். ஆனால், போகப் போக அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளது விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தான்.
அவர்களின் வாழ்வு இயல்பாக, மகிழ்வாக, சீராகச் செல்லத் தொடங்கியிருந்தது. அதை அவர்கள் அப்படி மாற்றிக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எப்போதும் போல அவர்களைப் பற்றிய செய்திகளும், நிரஞ்சனின் ஆட்டம் குறித்த பாராட்டும், விமர்சனங்களும் வந்த வண்ணம் தானிருந்தன.
பாராட்டு, விமர்சனம் இரண்டையும், ஒரே பார்வையில் பார்க்கக் கடினப்பட்டுக் கற்றுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
அவ்வப்போது மனைவி பற்றி வரும் செய்திகளை மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்போது மட்டும் கோபத்தில் வெடித்து விடுவான்.
அது போன்ற சமயங்களில் அவனது கோபம் அவளுக்குப் பழகியிருந்தது.
அவனை நிற்க வைத்து, வளைத்து வளைத்து மனைவி குறித்துக் கேள்வி கேட்ட போதெல்லாம் புன்னகைத்து கடந்து விடுவான் நிரஞ்சன். ஆனால், வீடு வந்து வெடிப்பான், அது வேறு விஷயம். ஆனால், பொதுவெளியில் எதையும் காட்டிக் கொள்வதில்லை. ஒரு முகச் சுளிப்பு கூட இருக்காது.
மனைவியின் புது அவதாரம் அவனுக்குப் பிடிக்கவே செய்தது. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நாட்களை அவனுக்குப் பரிசளித்துக் கொண்டிருந்தாள். அன்று கூட அவன் தங்கை நிவேதாவின் வீட்டு விசேஷத்திற்குச் சென்று விட்டு அப்போது தான் வீடு திரும்பி இருந்தார்கள்.
அவள் அணிந்திருந்த பட்டுச் சேலையைக் கூட மாற்றாமல், பூனை போல அவனை உரசிக் கொண்டே வந்தாள்.
“என்ன நந்து?” என்றான் சோஃபாவில் சாய்ந்தமர்ந்து.
ஒரு நாள் போட்டி தொடருக்காக நியூசிலாந்து சென்று விட்டு இரண்டு நாட்கள் முன் தான் வீடு திரும்பியிருந்தான் அவன். கிட்டத்தட்ட மூன்று வார பிரிவு. அவனுக்கும் மனைவியை அதிகம் தேடியது.
தளிர் பச்சை நிற புடவையில் பசுமையாகத் தெரிந்தாள் மனைவி. நகையும், பூவும் அவளைப் பொலிவாகக் காட்டியது.
இதே போல அலங்காரத்தில் அவளை முதல் முறையாக ஒரு நவராத்திரி நாளில் பார்த்தது அவனுக்கு நினைவிற்கு வந்தது. கூடவே அவளின் நடனமும் கண் முன் வர, அந்நாளின் நினைவில் புன்னகைத்தான்.
“பீச் போகலாமா?” கண்ணைச் சுருக்கி கெஞ்சலாக அவள் கேட்க, எப்படி மறுப்பான் அவன்?
“இந்நேரமா?” என்றான்.
ஏனென்றால் நேரம் இரவு பணிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
“பிளீஸ் டா. கால் புதைய மண்ணுல நடக்கணும் போல இருக்கு” அவன் கரம் கோர்த்து அவள் கேட்க, சிரிப்புடன் எழுந்து கொண்டான் நிரஞ்சன்.
காரில் அத்துமீறி நுழைந்தது காற்று. உடல் சிலிர்க்க, சிரித்துச் சேலையை இழுத்துப் போர்த்தினாள்.
சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் நிரஞ்சன். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியை தவிர்த்து, வீடுகள் இருக்கும் பகுதியில் நடந்தனர். அந்நேரம் கடற்கரையில் சொற்ப ஜனங்களே இருந்தனர். இருளில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை.
இரவும், நிலவும், தனிமையும், கடற்காற்றும், குளிரும், பிரியமானவர்களின் அண்மையும் இருவருக்கும் இனிமை சேர்த்தது.
இது அடிக்கடி நிகழும் நிகழ்வு தான். இருவருக்கும் இப்படி நிலவொளியில் வெளியில் வருவது அதிகம் பிடித்திருந்தது. அவர்களுக்கேயான அற்புத கணங்கள். ரசித்து அனுபவித்தனர்.
காரில் நீண்ட இரவு பயணம். கடற்கரையில் காலாற நடப்பது எனக் கடலும், காற்றும் அவர்களின் காதலை ஆழமாக்கியது.
நிரஞ்சனுக்குப் புகழும், பேரும் வந்த பின் கிடைக்காத அரிய பொக்கிஷ தருணங்களை அவனுக்குப் பரிசாகக் கேட்காமலேயே வழங்கினாள் நந்தனா. கிரிக்கெட் வீரன் நிரஞ்சனாக அவனால் இப்போதெல்லாம் அத்தனை எளிதாகப் பொது இடங்களுக்குச் செல்ல முடியாதே. தவிர்க்க முடியாத இடங்களில் கூட ரசிகர்கள் அவனைச் சூழ்ந்து கொள்வார்கள். அவனது பிரைவசி பறிபோகும். அது போதாதென்று இதையும் செய்தியாக்கி விடும் மீடியா.
அதனால் இரவுகளில் ஊர் சுற்ற பழகி கொண்டார்கள் அவர்கள்.