இனியொரு பிரிவேது – 20 (1)

“தேவைகள் தான் தீர்வுகளைத் தீர்மானிக்குது நந்து. உன்னோட வாழ்க்கை இது. இங்க உனக்கு எது வேணும்னு நீ தான் முடிவு பண்ணனும். வேலையை விட்டது, உனக்குச் சந்தோசம்னா, அதுல தான் உனக்கு மன நிம்மதி கிடைக்குதுன்னா அது தான் சரியான முடிவு டா.” மகளின் கன்னம் பற்றிச் சொன்னார் பூர்ணிமா.

மகள் வேலையை விட்டது பெற்றோர்களுக்கு அதிர்ச்சி தான். அதிக வருத்தமும் கூட. ஆனால், மகளின் மகிழ்ச்சியே முக்கியம் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

அம்மா, மகள் இருவரும் பேசிக் கொண்டே வெளியில் வர, அங்கே வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் மாமனாரும், மருமகனும்.

மாமனார் பந்து வீச, மருமகன் பேட் செய்து கொண்டிருந்தான்.

“வாவ், சூப்பர் ப்பா” துள்ளி குதித்து அவர்களிடம் ஓடினாள் நந்தனா. அலைபேசி கேமராவை திறந்து புகைப்படங்களாக எடுத்து தள்ளினாள் அவள்.

“போதும் நந்து” என்று மகளைப் பார்த்து சொன்ன கார்த்திகேயன், மருமகனிடமும் அதையே சொன்னார்.

“போதும் மாப்பிள்ளை. தூங்கப் போங்க. நாளைக்கு உங்களுக்கு மேட்ச் இருக்கு வேற. நாங்களும் காலையில மும்பை கிளம்பறோம்” என்று அவர் சொல்ல,

“ஒரு வாரம் இங்க இருந்துட்டுப் போகலாம் இல்ல மாமா?” என்றான் நிரஞ்சன்.

“அச்சோ, முடியாது மாப்பிள்ளை. இன்னொரு முறை வர்றோம். இன்னைக்கே அவசரமா தான் கிளம்பி வந்தோம்.”

“அம்மாவை இங்க விட்டுட்டு போங்க ப்பா.” என்றாள் நந்தனா சலுகையாக.

“நீங்க ரெண்டு பேரும் டைம் கிடைக்கும் போது மும்பை வாங்க. நான் இல்லாம அப்பாவால சமாளிக்க முடியாது” என்று விட்டார் பூர்ணிமா முடிவாக.

கார்த்திகேயன் மகளை ஒன்றுமே கேட்கவில்லை. அவளும் அவருக்கு எந்த விளக்கங்களும் கொடுக்கவில்லை.

சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் படுக்கச் சென்றனர்.

“கோபம் போச்சா?” கணவனை இடித்துக் கொண்டு அமர்ந்தபடி கேட்டாள் நந்தனா.

“என்ன கோபம்?” என்று கேட்டவன், அலைபேசியைப் பார்த்து விட்டுச் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

அவள் கேள்வியாகப் புருவம் உயர்த்த, அலைபேசியை அவளிடம் நீட்டினான்.

“சென்னை ஐபிஎல் அணியை உற்சாகப்படுத்தி, ஊக்கமளிக்கச் சென்னை வந்தார் சுகாஸ் பட்டேல்.”

“இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் சுகாஸ் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட, தனது சக வீரர்களைச் சந்தித்துப் பேசி உற்சாக மூட்டினார். அவர்களுக்குப் பயிற்சியில் தேவையான அறிவுரைகளை வழங்கினார்”

அலைபேசியில் செய்திக் குறிப்பு ஓட, அதிர்ச்சியில் விரிந்தது அவளின் கண்கள்.

அவளுக்கு மாலை கேப்டன் சுகாஸிடம் சொன்னது தான் நினைவுக்கு வந்தது.

“நீ உன் ப்ரெண்டை பார்க்க வந்த. ஆனா, நாளைக்கு நியூஸ் எப்படி வரும்னு யோசிச்சா எனக்கு இப்பவே சிரிப்பா வருது” என்றாரே, எத்தனை சரியா கணித்திருக்கிறார்.

செய்தி குறிப்பை தொடர்ந்து புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட, அதில் நிரஞ்சனின் கன்னத்தைப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தான் சுகாஸ்.

“என்னதிது?” என்றாள் கணவனிடம் அதைக் காட்டி, “உன் ப்ரெண்ட் என்னைக் கொஞ்சுறான் நினைச்சியா? அவன் சிரிச்சிட்டே என்னை மிரட்டிட்டு இருந்தான். ஆனா, ஃபோட்டோல பார்க்க என்னைக் கொஞ்சுற மாதிரி இருக்கு. ச்சை” என்றான் முகத்தைச் சுளித்து.

கலகலவென்று நகைத்தாள் நந்தனா.

“அப்படியே இதையும் பாரு” என்று அலைபேசியை வாங்கி, சென்னை அணியின் முகநூல் பக்கத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அங்கயேயும் சுகாஸின் புகைப்படங்கள் தான் நிறைந்திருந்தது.

“அடப்பாவிகளா..” என்று எரிச்சலுடன் வியந்தாள் நந்தனா. ஒரு பக்கம் கோபமாக வேறு வந்தது.

சுகாஸ் அந்த வருடம் ஐபிஎல் விளையாடாத போதும் கூட அவனை இப்படி அணியின் லாபத்திற்காக, விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது அவளுக்கு அதீத எரிச்சலூட்டியது.

“அவங்க நம்மை ஃபோட்டோ எடுக்கும் போதே இதை நான் எதிர்பார்த்தேன்” கடுப்புடன் அவள் சொல்ல,

“இட்ஸ் ஆல் இன் தே கேம் நந்து” என்றான் நிரஞ்சன் தோளை குலுக்கி.

“என்ன கேமோ? ச்சே. எல்லாமே அரசியல் தான் இங்க.” புலம்பினாள்.

ஒரு பெருமூச்சுடன் அவள் படுக்கத் தயாராக, “வெயிட் நந்து. தூங்க போறதுக்கு முன்னாடி இதையும் பார்த்திடு” என்று அவளை எழுப்பி, அவனது கை வளைவில் அமர வைத்தான்.

“இன்னும் என்ன நியூஸ் பாக்கியிருக்கு?” கண்கள் சொருக கேட்டாள். ஆனால், மறுநொடி காதில் விழுந்த செய்திக் குறிப்பில் அவளது தூக்கம் துடைத்தெறிய பட்டது.

அனிச்சையாய் கணவனை மேலும் நெருங்கி அமர்ந்தாள் நந்தனா.

“இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் மனைவி நந்தனா, தனது வேலையை ராஜினாமா செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இனி அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சென்னை அணியின் வீடியோ அனலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது”

“சென்னை அணியின் தொடர் தோல்விகள் தான் காரணமா?”

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட, அவளுக்குப் படபடத்தது.

அந்தக் காணொளியை மூடி விட்டு, இணையத்திற்குள் நுழைந்தாள். பல தளங்களில் அது தான் பிரதான பேச்சாக இருந்தது.

கமென்ட் பாக்ஸில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள் சிலர். முன் முடிவுகளோடு அவளின் முடிவிற்கு நிரஞ்சனையே குற்றம் சாட்டினார்கள். இருவருக்கும் கருத்து வேறுபாடு என்பது வரை சென்றிருந்தார்கள் மக்கள்.

“ஃபேமஸாகிட்ட பொண்டாட்டி” என்று கண் சிமிட்டினான் நிரஞ்சன்.

அவள் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருக்க, “ஹேய், கண்டுக்காம விடு நந்து. என்ன, ரெண்டு நாளைக்குப் பேசுவாங்க. அப்புறம் அவங்களுக்குப் பேச வேற ஏதாவது விஷயம் கிடைச்சுடும். நம்மை மறந்திடுவாங்க. நாம இனிமேல் இந்த மாதிரி நியூஸ், போஸ்ட், வீடியோஸ் ‍எதுக்கும் ரியாக்ட் பண்ண மாட்டோம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஞாபகம் இருக்கு தானே?” அவள் கண் பார்த்து அவன் கேட்க, அதில் கலக்கமே நிறைந்திருந்தது.

“நியூஸ் எப்படி? யார் சொல்லியிருப்பா?” என்ற கோணத்தில் யோசித்துக் கேள்வி கேட்டாள் நந்தனா.

அப்போது தான் அதையே யோசித்தான் நிரஞ்சன். அவர்களது நெருங்கிய வட்டம் தவிர வேறு யாருக்கும் இன்னமும் அவள் வேலையை விட்டது தெரியாது எனும் போது அவள் யோசிப்பதிலும் அர்த்தம் இருக்கவே செய்தது.

“நாம பேசிட்டு இருக்கும் போது ராஜ் தான் வந்தான்” என்றான் நிரஞ்சன் யோசனையுடன். மறுப்பாக அசைந்தது அவள் தலை.

“அவனா இருக்காது” என்றாள் திடமாக.

“நானும் அவன் தான் சொல்லி இருப்பான்னு சொல்லலையே. அவன் வந்தான்னு தானே சொன்னேன்”

“ச்சே, இப்படி எல்லோரையும் சந்தேகப்பட வைக்கறாங்க‍ளே” கோபத்தில் பொரிந்தாள்.

“என்ன பண்ணலாம் நந்து?” மனைவியை இழுத்து தனது மடியில் இருத்தி கொண்டு அவன் கேட்க, அவன் கழுத்தில் முகம் புதைத்து, “ஒன்னும் பண்ண வேணாம். போரடிக்கற வரை பேசிட்டு போகட்டும். யார் என்ன பேசினா நமக்கு என்ன?” என்றவளின் உதடுகள் அவனது காதை உரசிக் கொண்டிருந்தது.

சடுதியில் மாறும் காலநிலை போல அவன் மனநிலையும் சட்டென மொத்தமாக மாறிப் போனது.

“ம்ம். கரெக்ட்” என்றவன், “இன்னைக்கு நிறையச் சாப்ட்டுட்டேன். கொஞ்சம் எக்சர்சைஸ் பண்ணா தான் எனக்குத் தூக்கம் வரும்” அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்தான்.

“உங்களை யாரு அப்படிச் சாப்பிட சொன்னா?” எகிறினாள்.

“ப்ச். அந்தப் பேச்சை எடுக்காத”

“ஓஹோ, இன்னமும் கோபமா? காலையில யாரோ என்னைக் கோபத்துல கொன்றுவேன் சொன்னாங்க? என் பேரை சொல்லாத சொன்னாங்க” கிசுகிசுத்தாள்.

“கொல்றது தான் நந்து. காதலால், கட்டிலில் கொல்வது. காமமும், காதலும் போட்டி போட்டுக் கொள்வது. வெட்கம் கொன்று, மயக்கம் கொள்வது. ஆடை கொன்று முயக்கம் கொள்வது.”

“இப்போ பேசியே கொல்லாத டா” அவள் சலிக்க, உடல் குலுங்க சத்தமின்றிச் சிரித்தான் நிரஞ்சன்.

“நிரஞ்சன்..” என்றாள் சிணுங்கலாக,

“என் பேரை அப்படியே சொல்லிட்டே இருப்பியாம்” என்றான் அவளின் உதட்டை உதட்டால் உரசி.

“முடியாது…” உதடசைத்தாள். ஆனால், அதற்கு மாறாக அவன் பேரை தான் அவ்விரவு முழுவதும் உச்சரித்துக் கொண்டேயிருந்தாள் அவள். அவளோடு இணைந்தான் அவன். கோபம், மயக்கம், சிணுங்கல், தாபம், சரணடைதல் எனப் பல்வேறு நிலைகளில் பலவிதமாக ஒலித்தது அவர்கள் குரல்.

error: Content is protected !!
Scroll to Top