தொலைக்காட்சி செய்தி குறிப்பும், அவளின் கணவனும் முடிக்காமல் விட்டதை முடித்து வைத்தது அவள் மனம்.
“இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் மனைவி நந்தனா, தனது வேலையை ராஜினாமா செய்து கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதின் காரணம் என்ன?” கடந்த வருடத்தின் செய்தி இப்போது அவளின் மனதில் ஓட, மனம் கலங்கி கண்ணீராக வழிய பார்க்க, உதடு கடித்துக் கண்ணீரையும் சேர்த்து உள்ளுக்குள் இழுத்தாள் நந்தனா.
அவள் நந்தனா கார்த்திகேயனாக இருந்த வரை அவள் மீது மீடியா வெளிச்சம் பட்டதே கிடையாது. அப்போதும் அவள் கிரிக்கெட்டில் தான் இருந்தாள். ஆனால், அவள் நந்தனா நிரஞ்சனாக மாற முடிவெடுக்கும் முன்னே உலகம் அவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தது. அவளைப் பின் தொடர ஆரம்பித்தது.
ஊடக வெளிச்சம் தன் மேல் விழுவதை நந்தனா என்றுமே விரும்பியதில்லை.
நிரஞ்சனை முதலில் அவள் மணக்க மறுத்ததற்குக் கூட அது தான் காரணம். அவனுக்கும் அது தெரிந்து தான் இருந்தது.
“ஹலோ, விளையாட்டைப் பத்தி மட்டும் பேசுங்க. என்னைப் பத்தி, என் பர்பாமென்ஸை பத்தி பேசுங்க. ஏன் தேவையில்லாம என் பொண்டாட்டியை, நந்தனாவை உள்ள இழுக்கறீங்க? அதுக்கு என்ன அவசியம்?”
மீடியாக்களைப் பார்த்து இதே கேள்வியைப் பல முறை கேட்டிருக்கிறான். ஆனால், நிரஞ்சனின் கேள்வியில் இருக்கும் நியாயம் யாருக்கும் புரியப் போவதில்லை.
“என் மனைவி நந்தனா கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் போது, அது அவளின், எங்களின் தனிப்பட்ட விஷயமாக இருக்கையில், அதைப் பற்றி நீங்கள் ஏன் பேச வேண்டும்? செய்தியாக்க வேண்டும்?” என்பது தான் நிரஞ்சனின் கேள்வி.
ஆனால், செய்தி ஊடங்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, நிரஞ்சனின் சக விளையாட்டு வீரர்களுக்குமே அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்தது. இன்றும் பதில் அறிய பலரும் வெகு ஆவலாகக் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
எத்தனை வித கேள்விகள், யூகங்கள்? அவர்கள் பதிலளிக்க மறுத்த போது தாங்களாகவே ஒரு முடிவுக்கும் வந்து தானே விட்டார்கள்.
அனைவரின் விரல்களும் நிரஞ்சனை தான் குற்றம் சாட்டியது. அது அவர்களுக்கு மிக எளிதாகவும் இருந்தது.
அவனை அந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கத் தான் அவளும் விரும்பினாள். ஆனால், அதை நடத்திக் காட்டுவது அத்தனை எளிதாக இல்லை.
“நந்து” மென்மையாக அழைத்தவனை நிமிர்ந்து நோக்கும் துணிவின்றி அவள் தலை குனிய, “என்ன?” என்று அவளின் முகத்தை நிமிர்த்தினான் நிரஞ்சன்.
“சாரி” என்றவள், “நாம ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கறது..”
“யாருக்கும் தெரியாது. நியூஸ் வரை கண்டிப்பா போகாது. போக விட மாட்டேன். அதுக்கு நான் பொறுப்பு. நம்பு நந்து, பிளீஸ்” அவள் கேள்வியை முடிக்கும் முன்பே, உத்திரவாதமான பதிலை அவன் தர, விழி மூடித் திறந்தாள் நந்தனா.
அறைக்கதவை மெலிதாகத் தட்டி விட்டு, அந்நேரம் உள்ளே வந்தார் மருத்துவர் விஷால்.
அவரைப் பார்த்ததும் தான் அவள் செய்த மற்றுமொரு மடத்தனமும் அவளுக்கு உறைத்தது.
கணவனையே மறந்தது போல அல்லவா நடித்தாள் அவள். “கடவுளே, என்னைக் காப்பாத்து” முணுமுணுத்தவள், “ஹலோ, டாக்டர் விஷால்” என்று புன்னகைக்க, பதிலுக்குப் புன்னகைத்து விட்டு, தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினார் அவர்.
மெல்ல தொண்டையைச் செருமி, அவரின் கவனத்தை ஈர்த்தவள், “டாக்டர்” என்று அழைக்க, அவளுக்குத் தேவையான மருந்துகளை எழுதிய படியே, “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மிசஸ். நிரஞ்சன்?” என்று கேட்ட விஷால், “நான் நிரஞ்சனோட பயங்கர ஃபேன்” என்று சிரித்துக் கொண்டே பதிலும் சொல்ல, சங்கடமாக அவரைப் பார்த்தாள் நந்தனா. இது அவளுக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒன்று. மலர்ந்து புன்னகைத்தாள் அவள்.
“எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் மேட்ச்ஸஸ் பார்ப்பேன் மிஸஸ். நிரஞ்சன். முன்னாடி ஸ்கூல், காலேஜ் டைம்ல நானும் தெருக் கிரிக்கெட் விளையாடினது உண்டு, தெரியுமா?” விஷால் சொல்ல, சத்தமாகச் சிரித்தாள் நந்தனா. ஆனாலும், அவளின் கண்களில் தொக்கி நின்ற கேள்வியைப் படித்தவராக,
“என்னோட வேலையை நான் ரொம்பவே மதிக்கறேன் மிஸஸ். நிரஞ்சன். நீங்க என்னோட பேஷன்ட். உங்களைப் பத்தின எந்தத் தகவலும், என்னைக்கும் என் மூலமா வெளில போகாது. நீங்க என்னை நம்பலாம்.” என்று அழுத்தமாகச் சொல்ல,
ஒரு நொடி அவரைச் சந்தேகப்பட்டதற்குத் தன்னைத் தானே நொந்துக் கொண்டாள் நந்தனா.
“ஐ அம்..” மன்னிப்பை கேட்க அவள் முன் வந்த நொடி, கை நீட்டி அவளின் பேச்சை தடுத்தார் மருத்துவர்.
“உங்க இடத்தில நான் இருந்தாலும், இதைத்தான் செய்திருப்பேன். இட்ஸ் ஓகே” என்றவர், “உங்க ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு. கைனகாலஜிஸ்ட் மட்டும் ஒரு டைம் வந்து உங்களைப் பார்த்திடட்டும். அவங்ககிட்ட உங்க டவுட்ஸ் எல்லாம் கேட்டுக்கோங்க. அவங்க சரினு சொன்னா, உடனே நீங்க வீட்டுக்குக் கிளம்பலாம்”
“சரி” என்று எல்லாப் பக்கமும் ஆடியது அவள் தலை.
முழுதாக மூன்று மணி நேரங்கள் கழித்து, இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்தார்கள்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. மனைவிக்காகக் காரின் கதவை திறந்து, அவள் இறங்க உதவியாகக் கை நீட்டினான் நிரஞ்சன்.
“இப்படிப் பயமுறுத்திட்டியே தங்கமே” என்று அங்கலாய்த்த படி வந்து நின்றார் நிரஞ்சனின் அப்பத்தா. அந்நேரத்தில் அவரை எதிர்பார்க்காத நந்தனா, அதிர்ந்து விழிக்க, “உள்ள கூட்டிட்டு வா, தம்பி” என்று அவர் சொல்ல, மௌனமாய்க் கணவனோடு இணைந்து நடந்தாள் நந்தனா.
அரை மணி நேரம் கழித்து அவர்கள் தங்களின் தனி அறைக்குள் வர, “சாரி நிரஞ்சன்” என்றாள் நந்தனா, தன் மனதில் ஆழத்தில் இருந்து. அவளுக்கு மிக நெருக்கத்தில் வந்து நின்று, “என் தப்பு தானே? நீ ஏன் சாரி சொல்ற நந்து? சில டைம் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுன்னே தெரியல நந்து” வானை வெறித்த விழிகளை, விரல் கொண்டு அழுத்தியபடி புலம்பினான் அவன்.
“உனக்கு ஏதாவது ஆகியிருந்தா? என்னை நான் மன்னிச்சிருக்கவே மாட்டேன் நந்து” உணர்ச்சி வேகத்தில் அவன் குரல் நடுங்க,
“உங்களுக்கு அடி எதுவும்…?” கேட்டுக் கொண்டே அவன் முகத்தை ஆராய்ந்தாள் நந்தனா.
“எனக்கு ஒன்னும் ஆகலை நந்து. கிரவுண்ட்ல கண்டபடி விழுந்து, எழுறது எனக்கு ஒன்னும் புதுசில்லையே? அதுனால பெருசா அடிபடல நந்து” அவன் அழுத்தி சொல்ல,
“ம்ம்” என்றாள்.
“நியூஸ் பார்த்து டீம் எப்படி ரியாக்ட் பண்ணாங்க. மேனேஜ்மென்ட் உங்களை எதுவும் கேள்வி கேட்டதா?” நந்தனா தயக்கத்துடன் சிறு குரலில் கேட்க, நன்றாக அவளைத் திரும்பிப் பார்த்து,
“அந்த நியூஸ் ஆன்லைன்ல இருந்து எடுத்தாச்சு நந்து. டீம், அவங்களா கேட்கறதுக்கு முன்னாடி, நானே தேவையான பதில் கொடுத்துட்டேன்”
அவன் தீர்க்கமாகச் சொல்ல,
“என்ன? என்ன பதில் சொன்னீங்க?”
“உனக்குத் தெரிஞ்சது தான்..”
“நிரஞ்சன்..” அவள் கோபமாக அழைக்க,
“வா, படுக்கலாம். யூ நீட் ரெஸ்ட்” என்று பேச்சை மாற்றி, மனைவியின் கைப்பற்ற முனைந்தான் நிரஞ்சன்.
தனை நோக்கி நீண்ட அவன் கரத்தை வேகமாகத் தட்டி விட்ட நந்தனா, “பதில் சொல்லுங்க நிரஞ்சன். என்ன சொன்னீங்க?” கத்தினாள்.
அமைதியாய் அவள் விழிகளில் தன் பார்வையைப் பதித்து நின்றான் அவன்.
“இந்த வருஷம் ஐபிஎல்ல நீங்க விளையாடுறீங்க” நந்தனா குரல் கத்தியின் கூர்மையுடன் வர,
“ப்ச், இல்ல பொண்டாட்டி. இந்த வருஷம் நான் விளையாடலை. தொடரில் இருந்து விலகறேன்னு சொல்லிட்டேன்” நிதானமாக வந்தது நிரஞ்சனின் பதில்.
“சும்மா உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நீங்க ஆட முடியாது நிரஞ்சன். லீகல் காண்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கீங்க. பல கோடி கொடுத்து உங்களை இந்த வருஷமும் டீமில் ரீட்டைன் பண்ணி இருக்காங்க. சரியான காரணம் இல்லாம நீங்க விலக…” கிண்டலாக வளைந்தது அவனது உதடுகள். அவன் பார்வையில் இருந்த கேலி அவளை மேலே பேச விடவில்லை.
“சின்ன அடி போதும் நந்து. ஜஸ்ட் அ ஸ்மால் இஞ்சுரி இஸ் இனஃப். அந்த ஆண்டவனே நினைச்சாலும் என்னை விளையாட வைக்க முடியாது”
விளையாட்டை அவன் வினையாகப் பேசிக் கொண்டிருக்க, இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிற அவனை இமைக்காமல் பார்த்தாள் நந்தனா.
மெல்ல திரும்பி தனக்குப் பின்னால் எட்டிப் பார்த்த நிரஞ்சன், “பால்கனியில் நிக்கறோம் நந்து. லேசா ஸ்லிப்பாகி நான் கீழே விழுந்தா கூடப் போதும். பலமான அடி கன்பார்ம்” அவன் கண் சிமிட்டி சொல்ல,
“நிரஞ்சன்…” அடித் தொண்டையில் இருந்து கத்தினாள் நந்தனா.
“நீ மட்டும் என்னை இப்படி இறுக்கி பிடிக்கலன்னா..” அவன் சொல்லவும் தான், தாங்கள் நின்றிருந்த நிலையையே கவனித்தாள் நந்தனா. கணவனின் இரு பக்கமும் கைக் கோர்த்து, இறுக அணைத்திருந்தாள் அவள். அவனோ, பேசிக் கொண்டே போனான்.
“நான் யோசிக்காம டிரை பண்ணி பார்த்திடுவேன் நந்து. இங்கிருந்து குதிச்சா போதும். என் தலை, கை, கால் இல்லனா முதுகு எங்கயாவது அடிபடும் தானே? அப்புறம் டீமுக்கு நான் எதுவும் காரணம் சொல்லத் தேவையில்லை, ரைட்? அவங்களுக்கு மெடிக்கல் டீம் பதில் சொல்லிக்கும்” அவன் பேச, பேச கண்களை இறுக மூடிக் கொண்டாள் நந்தனா.
கோபமும், ஆத்திரமும் அவளின் தலையில் தாறுமாறாக ஏறிக் கொண்டிருந்தது.
அவள் முகம் பற்றி, “கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் பொண்டாட்டி. சோ, நியாயமா விளையாடுவோம் சரியா?” என்று நிரஞ்சன் தீவிரமாகக் கேட்க, நந்தனாவின் கண்களில் அனல் பறந்தது.
“ஒன்னு நாம ரெண்டு பேரும் கிரிக்கெட்குள்ள இருக்கோம். இல்லனா, ஜோடியா ரெண்டு பேரும் வெளில வர்றோம். எப்படி? ஃபேர் (fair) கேம் இல்ல?” ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் கேட்க, அவளின் இரத்த அழுத்தம் இலக்கின்றி உயர்ந்து கொண்டிருந்தது.
“ஏன் இப்படிப் பண்றீங்க நிரஞ்சன்?”
இந்த வாக்குவாதம் தங்களுக்குள் ஒயவே ஓயாது என்றே அவளுக்குத் தோன்றியது. ஒரு முடிவை எட்ட முடியாமல் அவர்கள் படும் பாடு.
மனைவியின் ஓய்ந்து போன தோற்றமும், குரலும், அவள் முகத்தில் தெரிந்த சோர்வும், பிள்ளை சுமக்கும் அவளின் உடல் நிலையும் அறிந்த நிரஞ்சனுக்குத் தன் மீதே கோபமாக வந்தது.
பதட்டமாகத் தலைக் கோதிக் கொண்டான் அவன். மனைவியின் முகம் பார்க்காமல், “ஓகே, நந்து. உனக்கு என்ன பிரச்சினை? நாம ரெண்டு பேரும் ஒரே ஐபிஎல் டீம்ல இருக்கறது தானே?” அவன் கேட்க,
“இல்ல” என்று கத்தினாள் நந்தனா.
“நீ வேற டீமுக்கு போ நந்து. ஏதாவது ஒரு டீம். ஆனா, நீயும் கிரிக்கெட்டில் இருக்கணும். ஐபிஎல்ல இருக்கணும். அப்போ தான் நானும் உள்ள வருவேன். இந்தச் சீசன் ஆடுவேன். நீ இல்லாம, நானும் இல்ல.” அவன் திடமாகச் சொல்ல, விழிகளை விரித்து ஆத்திரத்துடன் அவனைப் பார்த்த நந்தனா,
“நான் ஏன் வேற டீமுக்கு போகணும்? நீங்க போக வேண்டியது தானே? உங்க பழைய டீமுக்கு நீங்க போங்க. இல்லையா, பஞ்சாப் ஓனர் கீர்த்தி உங்களைக் கொத்திட்டு போக எந்நேரமும் ரெடியா தானே இருப்பா? அவ டீமுக்கு போங்க நிரஞ்சன். நான்… நான் ஏன் வேற டீமுக்கு போகணும்?” என்று கத்த,
“அட, நீ தானே பொண்டாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன? அதுக்குள்ள மறந்துட்ட? ப்ச், லீகல் காண்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கேன் டார்லிங். அப்படிப் பொசுக்குனு கிளம்பி நான் வேற ஒரு டீமுக்கு போக முடியாது நந்து. உனக்குத் தெரியாததா என்ன?” ஆழ்கடலின் அமைதியுடன் வந்தது அவன் பதில்கேள்வி.
“இல்ல, நீங்க வேற டீம் போங்க. ஃபர்ஸ்ட் உங்களை யாரு எங்க டீமுக்கு வரச் சொன்னா? ஏன் வந்தீங்க?” எதுவும் செய்ய இயலா கோபம் அவளைச் சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி கேட்கச் செய்தது.
நிரஞ்சன் மெல்லிய சிரிப்புடன் நீண்டதொரு விசில் அடித்தான். மனைவியை இடைவெளியின்றி நெருங்கி நின்று, “உங்க டீமுக்கு நான் வந்திருக்கக் கூடாது தான். தப்பு தான். ஆனா, உன்னோட இந்தக் கோபம் எல்லாம் என்னை உன் டீமுக்கு எடுக்கச் சொன்னவங்க மேல இல்ல உனக்கு வரணும் பொண்டாட்டி?” அவள் கண்களைப் பார்த்து அவன் கேட்க, எச்சில் கூட்டி விழுங்கினாள் நந்தனா.
“நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஐபிஎல் பிளேயர் ஆக்ஷனில் (auction) என் பேரை உங்க டீமுக்கு பலமா ரெக்கமண்ட் பண்ணது யாரு? அதுவும் லிஸ்ட்ல இரண்டாவது பேரா என் பேரை போட்டுக் கொடுத்தது யாரு? நிரஞ்சன் கிருஷ்ணகுமாரை ஏலத்தில் எடுத்தே ஆகணும்னு டீமுக்கு பிரஸர் கொடுத்தது யாரு?”
எப்போதும் அவனின் இந்தக் கேள்வி அவளை வாயடைக்கச் செய்து விடும். இன்றைக்கும் அதையே தான் செய்தது. என்ன பதில் சொல்வாள் நந்தனா? கட்டுக்கடங்கா கோபத்தை அடக்கி, மௌனமாக அவனை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
அவளுக்கு வந்த கோபத்திற்கு அக்கணம் தலையை எதிலாவது நன்றாக முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
“நந்து..” மென்மையாக அழைத்தான் நிரஞ்சன்.
ஆட்டம் தொடரும்…