இனியொரு பிரிவேது – 2 (1)

கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் நந்தனா. தொலைக்காட்சி நிறுத்தப்பட்டுப் பல நிமிடங்கள் ஆகியும் கூட, கண்களில் அந்தக் காட்சி ஓட, காதுகளில் செய்திக் குறிப்பு ஒலித்துக் கொண்டே இருக்க, அவளின் மனது ஒரு நிலையின்றி அலைபாயத் தொடங்கியிருந்தது.

அவளின் மனதை படித்தவனாக அவளை நெருங்கி இறுக்கமாக அணைத்து விடுவித்து விட்டு தன் வேலையில் மூழ்கினான் நிரஞ்சன்.

கணவனின் தொடுகை அவளைக் கொஞ்சமும் இளக்கவில்லை. மாறாக மேலும் இறுக தான் செய்தது.

அவளுக்கு நினைவு தெரிந்து தொலைக்காட்சி நிறுவனங்களும், மக்களும் இப்படி இருந்ததில்லை. அடுத்தவரின் வாழ்வை, சொந்த பக்கங்களை இப்படி எட்டிப் பார்த்ததில்லை. ஆனால், அது ஒரு காலம். அப்போதும் பிரபலங்களின் சொந்த வாழ்வை அறிந்து கொள்ளும் ஆவல் நிச்சயம் பலருக்கு இருக்கத் தான் செய்தது. ஆனால், இப்போது போல வெறிக் கொண்டு அலைந்தது கிடையாது.

‘அப்படியும் சொல்ல முடியாது’ என்று அவள் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தது அவளின் மனசாட்சி. இளவரசி டயனாவின் மரணம் ஒன்று போதுமே அதற்குச் சான்று.

பிரபலங்கள் தும்மினால் கூட அதைத் தலைப்பு செய்தியாக்கி விடும் அவசரம் இருக்கும் வரை, அவர்கள் வாழ்வு இப்படித் தான் இருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் அவளுக்கு அப்படியே எழுந்து எங்காவது ஓடி விட வேண்டும் போலிருந்தது.

அவளையும், நிரஞ்சனையும் அறியாதவர்கள் இருக்கும் ஒரு தேசத்திற்குத் தப்பியோடி விட வேண்டும். ஆனால், சாத்தியமற்ற ஒன்றை கற்பனை செய்து கூடப் பார்க்க விரும்பாமல் அந்த எண்ண ஓட்டத்தையே தடுத்து நிறுத்தினாள் நந்தனா.

அறையைத் தன் வேக நடையால் அளந்து கொண்டிருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

அலைபேசியில் தான் பேசிக் கொண்டிருந்தான். ஆனால், அத்தனை ஆக்ரோஷமாக, வார்த்தைகளையும், வசவுகளையும் அவன் அள்ளி வீசுவதைப் பார்க்கையில் அவளுக்குப் படபடப்பாக வந்தது.

தற்போது ஒளிப்பரப்பான செய்தி குறித்துத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கணித்தவள், அவனது பேச்சை கவனிக்க முயன்றாள்.

ஆனால், மனம் அதில் லயிக்காமல் அவளுக்கு வேறொன்றை குறித்து நினைவூட்டி பயமுறுத்தியது.

மூன்று நாட்களுக்கு முன்பு, “இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற போகிறேன்” என்று நிரஞ்சன் அவளிடம் சொன்ன நிமிடம் அவள் கண் முன் வந்து சென்றது.

அதைத் தொடர்ந்த அவர்களுக்குள் நிகழ்ந்த காரசாரமான வாக்குவாதம், சண்டை வரை நீண்டு, இறுதியில் விபத்தில் கொண்டு போய் விட்டதைச் செய்தி நிறுவனங்கள் அறிந்தால் என்னவாகும்?

அதுவும் அவள் இரண்டு நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில், மயக்கத்தில் இருந்தால் என்பதை அறிந்தால்? கூடுதலாகச் செய்திக்கு சுவை சேர்க்க அவள் கர்ப்பிணி வேறு.

ஒற்றை ரன் கிடைத்தால் போதும் என்று பந்தை, பேட்டின் நுனியால் தொட்டவனுக்கு, பந்து நேராகச் சிக்ஸருக்குப் போனால் எப்படி இருக்கும்? ஜாக்பாட் தான். ஆடித் தீர்த்து விடுவார்கள்.

அதை நினைக்கையிலேயே அவள் உடல் முழுவதும் பதட்டம் சூழ, கைகள் அனிச்சையாய் நடுங்கத் தொடங்கியது.

அலைபேசியில் பேசிக் கொண்டே, ஓரப் பார்வையில் அவளைப் பார்த்த நிரஞ்சன் சட்டென அவளை நெருங்கி, அவள் முகத்தை இழுத்து தன் வயிற்றில் பதித்துக் கொண்டான்.

“இது நமக்குப் புதுசில்ல நந்து. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். ரிலாக்ஸ்” என்றான். மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்த நந்தனாவின் கண்கள் அவனிடம் மன்னிப்பை யாசிக்க, “ப்ச், நந்து” என்று அவளை அதட்டி விட்டு, மீண்டும் அலைபேசிக்குள் அமிழ்ந்து போனான் அவன்.

“அவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? நான் ஆபீஸியல் ஸ்டேட்மென்ட் எதுவுமே கொடுக்காம, எப்படி நியூஸ் போடுவானுங்க?”

“எவன் சொல்லி நியூஸ் போட்டான் அவன்? எனக்குத் தெரிஞ்சாகணும்?”

“அவன் போட்ட செய்திக்கு ஆதாரம் கொடுக்கச் சொல்லு அவனை. முடியாதா? நம்ம லாயர் பேசுவார் சொல்லு. அவரை முதல்ல அவனுங்க கிட்ட பேச சொல்லு. நோட்டீஸ் அனுப்ப சொல்லு மேன்”

ஆத்திரம் கண்ணை மறைக்கக் கத்திக் கொண்டிருந்தான் நிரஞ்சன். அவளுக்கு அவனது இந்த முகம் மிகவும் பழகியது. மைதானத்தில் நிதானத்திற்குப் பெயர் போனவன் நிரஞ்சன். ஆனால், அவனது நிதானம் தவறினால், “சாது மிரண்டால் காடு கொள்ளாது” கதை தான். பெரும்பாலும் அவள் தான் சிக்கிக் கொள்வாள். ஆனால், இன்று அவனது டீம் மாட்டிக் கொண்டு முழிக்கின்றனர்.

“அப்படியொரு நியூஸ் வந்ததுக்கான தடமே இருக்கக் கூடாது சேகர். நீங்க என்ன பண்ணுவீங்கன்னு ‍எனக்குத் தெரியாது”

“பெரிய அரசியல் கட்சி நடத்துற நியூஸ் சேனல்னா, அவன் இஷ்டத்துக்கு என்ன நியூஸ் வேணும்னாலும் போடுவானா?”

“அவன் ஒரு மொக்கை டீம் வச்சுட்டு கப் அடிக்க முடியலைன்னா, எப்பவும் ஜெயிக்கற டீம்ல இருக்கவனை டார்கெட் பண்ணுவானா? இருக்கு, இந்த வருஷமும் அவனுங்களுக்கு இருக்கு. வந்துட்டானுங்க. கப் அடிக்கத் துப்பில்ல. ஆனா, இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம் நல்லா பார்ப்பானுங்க.”

எல்லை மீறிக் கொண்டிருந்த கணவனின் கோபத்தைப் பார்க்கையில், நந்தனாவிற்குத் தன் மீதே கோபமாக வந்தது.

“நிரஞ்சன்…” அவள் குரலுக்குத் திரும்பியவன் பேச்சை நிறுத்தவில்லை.

“என்னைப் பத்தி மட்டும் தான் நியூஸ் போடணும். என் பொண்டாட்டியை பத்தி ஒரு வார்த்தை பேசினாலும், அவனுங்களை என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது. வார்ன் பண்ணி வை அவனுங்களை.”

“இவனுங்களுக்கு எல்லாம் என்ன தான்டா வேணும்? எங்களை நிம்மதியாவே வாழ விட மாட்டானுங்களா? என் பொண்டாட்டியை பத்தி எதுக்குப் பேசுறானுங்க? அவளை ஏன் இதுக்குள்ள இழுக்கணும்? அவ தான் ஏற்கனவே கிரிக்கெட்டை…”

அதற்கு மேல் ஒரு வார்த்தையைக் கூடக் கேட்க முடியாமல், பல்லைக் கடித்து, தன் உணர்ச்சிகளை அடக்கி, பார்வையை எதிரில் இருந்த சுவரில் பதித்தாள் நந்தனா.

நாம் உயிராக நேசிக்கும் ஒன்றே நமக்கு எதிராகத் திரும்பினால்? என்ன தான் செய்ய முடியும்? கைக் கட்டி வேடிக்கைப் பார்ப்பதை தவிர?

அவர்களின் இத்தனை மன உளைச்சலுக்கும் காரணம் அவர்கள் இருவரும் அதிகமாக நேசிக்கும் கிரிக்கெட்.

நேசிக்கும் ஒன்றையே வெறுக்கும் நிலை அவளுக்கு.

error: Content is protected !!
Scroll to Top