இனியொரு பிரிவேது – 19 (3)

நந்தனா முதலில் வர, காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு அவளின் பின்னே வந்தான் நிரஞ்சன்.

வீட்டிற்குள் நுழைந்தவள் ப்ரேக் அடித்து நிற்க, அவள் மேல் இடித்து அவனும் நின்றான். அங்கே நடுவீட்டில் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார் கார்த்திகேயன்.

“என் பொண்ணு என்னைக்குமே அனலிஸ்ட் நந்தனாவா தான் இந்த உலகத்துக்குத் தெரியணும்” என்ற அவரின் குரல் நிரஞ்சனின் காதில் எதிரொலிக்க, “இவரையும் இப்போ சமாளிக்கணுமா?” அலறினான் அவன்.

“அப்பா, எப்ப வந்தீங்க?” மனைவியின் குரல் கேட்டு நிரஞ்சன் அங்குப் பார்க்க, அப்பாவுக்கு அருகில் அமர்ந்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.

அவன் அங்கேயே நிற்க தலையைத் திருப்பி, “வாங்க மாப்பிள்ளை.” என்றார் கார்த்திகேயன்.

அவன் இதயம் இரு மடங்காகத் துடிக்க, அவரிடம் சம்பிரதாயப் பேச்சுகள் பேசினான்.

“நெட் பிராக்டீஸ் முடிச்சுட்டு வர்றீங்க போல. போய் ரெப்ரெஷ்ஷாகிட்டு வாங்க மாப்பிள்ளை. சாப்பிடலாம்” என்று கார்த்திகேயன் சொல்ல, அதற்காகக் காத்திருந்தவன் எழுந்து மாடிக்கு இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஓடினான்.

அரை மணி நேரம் கழித்து அவன் கீழே வர, பூர்ணிமா அவனிடம் நலம் விசாரிக்கத் தொடங்கினார். எப்போதும் போல மிக இயல்பாக நடந்து கொண்டார்கள் அவர்கள். ஆனால், கணவன், மனைவி இருவரும் கேள்விகளை எதிர்நோக்கி காத்திருந்தனர். கார்த்திகேயன் எதையும் கேட்கவில்லை.

இரவு உணவை நிரஞ்சன் இரண்டு சப்பாத்தியுடன் முடித்துக் கொண்டு எழ, கார்த்திகேயன் அவனோடு எழுந்து கொண்டார்.

அம்மாவும் மகளும் பேச்சுச் சுவாரசியத்தில் மூழ்கியிருந்தனர்.

“தோட்டத்துல நடக்கலாமா மாப்பிள்ளை?” அவர் கேட்க, “வாங்க, மாமா” என்று முன்னே நடந்தான் நிரஞ்சன்.

அவனுக்கு ஏனோ இப்போது பயமே இல்லை. மனது ஒரு விதமான அமைதியை அடைந்திருந்தது.

மெல்லிய வெளிச்சத்தில் பூச்செடிகள் அத்தனையும் உறங்கிக் கொண்டிருக்க, “ரொம்பக் கோபமா இருக்கீங்களோ?” கார்த்திகேயன் கேட்க, விலுக்கென்று விதிர்த்துத் திரும்பினான் நிரஞ்சன்.

லேசாகச் சிரித்து, “உங்க கோபம் எனக்குப் புரியுது மாப்பிள்ளை. அவ இப்படி ஒரு முடிவை எடுப்பான்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்று அவர் சொல்ல, இறுகியது அவன் முகம்.

“அச்சச்சோ. நான் உங்களைத் தப்பா சொல்லல மாப்பிள்ளை” அவன் தோளில் கைப் போட்டு, அவன் முகம் பார்த்து சொன்னார் அவர்.

“உங்களுக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல மாப்பிள்ளை.” என்று வானம் பார்த்தவர், “உட்காருங்க” என்று அங்கிருந்த கல் இருக்கைகளைக் காண்பித்தார்.

இருவரும் அமர, “நந்தனா புத்திசாலி தான். ஆனா, ரொம்பச் சென்சிடிவ்வான பொண்ணு. உங்களுக்கு அவளைப் பத்தி நான் சொல்லத் தேவையில்ல. இருந்தாலும் சொல்றேன். தனக்கு எது நடந்தாலும் அதை அறிவா யோசிச்சு சரியா ஹேண்டில் பண்ணிடுவா. ஆனா, அவளுக்குப் பிடிச்சவங்களுக்கு ஒன்னுன்னா.. எல்லோரையும் போல இதயத்தால தான் யோசிப்பா.” அவர் சொல்வதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

“எனக்குக் கிரிக்கெட் வாய்ப்புக் கிடைக்காத கோபம் அவளுக்கு இன்னமும் இருக்கு. இப்போ சுகாஸ் விஷயத்தில் இன்னமும் காயம் பட்டிருக்கணும் அவ. ரியா தான் அவளுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். அவ மூலமா தான் சுகாஸ் பழக்கம். படிப்பை முடிச்சு நேரா கிரிக்கெட்குள்ள வந்தா, ஒன்னுமே தெரியாது என் பொண்ணுக்கு. உங்களை எல்லாம் பார்த்து மிரண்டிருப்பா. அப்போ சுகாஸ் தான் அவளைப் பார்த்துக்கிட்டான். இப்ப கூட அவன் சொல்லி தான் நந்து வேலையை விட்டதே எனக்குத் தெரியும். காலையில அவன் கூடத் தான் சென்னை வந்தோம் நாங்க”

‘ஒரு வார்த்தை சொன்னியா டா சுகாஸ்’ மனதில் அவனைத் தாளித்தான் நிரஞ்சன்.

“அவளுக்குப் பிடிச்ச ரெண்டு பேரோட வாழ்க்கையில் ஏற்கனவே கிரிக்கெட் இல்லைனு ஆகிடுச்சு. அது உங்களுக்கும் நடந்திட கூடாதுன்னு அவ பயப்படுறான்னு நினைக்கறேன்” அவர் சொல்ல,

“ஐயோ மாமா. நான்..”

“உண்மையைச் சொல்லுங்க மாப்பிள்ளை. நானும், என் பொண்ணும் மறைமுகமா உங்களுக்குப் பிரஸர் கொடுக்கறோம் தானே? உலகத்துக்கு இல்லைனாலும், என் பொண்ணுக்கு தினம் உங்களை நிரூபிக்க நினைக்கறீங்க இல்லையா?” அவன் கண்களைப் பார்த்து அவர் கேட்க, பொய் சொல்ல முடியவில்லை அவனால்.

“நந்து உங்களுக்கு அந்த அழுத்தத்தைக் கொடுக்க வேணாம்னு நினைச்சிருக்கணும். நீங்க, நீங்களா இருக்கணும்னு தான்…”

“நான் விமர்சனத்தை சரியா ஹேண்டில் பண்ணியிருக்கணும் மாமா. கொஞ்சம் தடுமாறிட்டேன்” குற்ற உணர்வுடன் அவன் ஆரம்பிக்க,

“அட போங்க மாப்பிள்ளை” என்று அவன் தோளில் தட்டினார் கார்த்திகேயன்.

“நீங்க நடந்துக்கிட்டது நார்மல் மாப்பிள்ளை. நாலு பேருக்கு முன்னாடி ஒருத்தர் நம்மை, ஏய்னு மரியாதை இல்லாமலே சொன்னாலே கோபம் பத்திக்கிட்டு வரும். நூறு கோடி மக்கள் பார்க்கற, படிக்கற நியூஸ்ல, நெட்ல உங்களைப் பத்தி தப்பா வந்தா, மோசமா விமர்சனம் பண்ணா? கேவலமா குடும்பத்தை உள்ள இழுத்தா? கொலை வெறி வரத்தான் செய்யும் மாப்பிள்ளை. அது தான் மனுஷ இயல்பு. நேர்மையான விமர்சனங்களை நாமளும் ஏத்துக்கத் தான் செய்யறோம். ஆனா, எல்லா விமர்சனங்களும் நேர்மையா இருக்கறது இல்லையே” அங்கலாய்த்தார் அவர்.

“இப்போ தான் ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம். அப்போ எல்லாம் பிளேயர் வீட்டு மேலே கல் எறியரது. அவங்க உருவ பொம்மை எரிக்கறதுன்னு எவ்ளோ அராஜகம் பண்ணுவாங்க தெரியுமா இந்த ரசிகர்கள். காலம் மாற மக்களும் மாறுறாங்க. அவ்ளோ தான். ஆனா, தங்களை மாற்றிக்க மாட்டாங்க. ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கு மனஅழுத்தம் கொடுத்துட்டே இருப்பாங்க. பொதுவெளிக்கு வந்துட்டா, நாம பொதுச் சொத்துன்னு அவங்களுக்கு நினைப்பு. இதையெல்லாம் கடந்து வாங்கன்னு சொல்றது எனக்கு ரொம்ப ஈஸி. ஆனா, உங்க இடத்தில இருந்து பார்த்தா தான் உங்க நிலைமை புரியும்”

புரிதலுடன் புன்னகைத்தான் நிரஞ்சன்.

“நாலு பேர் நாலு விதமா சொல்லுவான் மாப்பிள்ளை. எதையும் கண்டுக்காம உங்களுக்குச் சரின்னு பட்டதைச் செய்ங்க. உங்க கோச் சொல்றதை கேளுங்க போதும். கிரிக்கெட் அனிச்சை செயல் போலத் தானா வரணும் மாப்பிள்ளை. உங்களுக்குத் தெரியாததா?” என்றவர்,

“எப்பவும் போல உங்களோட பெஸ்ட் கிரிக்கெட் ஆடுங்க” மீண்டும் அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

“நந்தனா முடிவில் எனக்கு வருத்தம் தான். ரொம்பவே. என்கிட்ட சொல்லாத மாதிரி, உங்ககிட்டயும் சொல்லி இருக்க மாட்டான்னு நினைக்கறேன்” அவர் கேட்க, குறுஞ்சிரிப்புடன் தலையசைத்தான் அவன்.

“எங்க அவ முடிவை மாத்திடுவோமோன்னு பயந்து நம்மகிட்ட சொல்ல மாட்டா மாப்பிள்ளை. சின்னதில் இருந்தே அப்படித் தான். உங்க கல்யாணத்துல கூட, எங்க கல்யாண தேதி முடிவு பண்ணிட்டீங்களாப்பான்னு தானே கேட்டா? என்கிட்ட பெர்மிஷன் கேட்டாளா? கிடையாதே. அவளுக்குச் சரின்னு பட்டா, அதைச் செய்திட்டு வந்து தான் நம்மகிட்ட சொல்வா. பெரும்பாலும் தப்பான முடிவெடுக்க மாட்டா. தப்பு பண்ண மாட்டா. அதுனால நானும் அவளைப் பெருசா கண்டிச்சது இல்ல. ஆனா, இப்போ”

“எனக்கு ரொம்பக் கோபம் மாமா. என்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கலாம். ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லியிருக்கலாம். அனலிஸ்ட் மாமா அவ…” அவன் குரல் உடைய,

“சாரி, மாப்பிள்ளை” மகளுக்காக மன்னிப்பு கேட்டார் கார்த்திகேயன்.

“அவ முடிவு மாறுற வரை நீங்க பொறுமையா இருக்கணும். அவளை எப்பவும் போலப் பார்த்துக்கணும்” தந்தையாக அவர் சொல்ல,

“என்ன சொல்றீங்க மாமா?” அதிர்ச்சியுடன் கேட்டான் அவன்.

“அவளால கிரிக்கெட் இல்லாம இருக்க முடியாது மாப்பிள்ளை. இப்ப கூட என்ன பண்ணிட்டு இருக்கா நினைச்சீங்க? சுகாஸ் ஓபன் பண்ண போற கிரிக்கெட் கோச்சிங் அகாடெமிக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா.”

“வாவ். நந்து முன்னாடி சொன்னா மாமா. ஆனா, நான் சரியா கவனிக்கல. ஆனா, இந்தச் சுகாஸ் சொல்லவே இல்ல பாருங்க மாமா. இன்னைக்குக் கூட வந்து அப்படிச் சண்டை போட்டான். ஆனா, இதைப் பத்தி ஒன்னுமே பேசல”

நிரஞ்சன் கோபமாகச் சொல்ல,

“இப்ப தான் ஐடியா லெவல்ல இருக்காங்க மாப்பிள்ளை. அதான் சொல்லி இருக்க மாட்டான். அவன் வைஃப் ரியா அப்பாவும் என்னைப் போலக் கோச் தானே? அதான் அவனுக்கு இப்படியொரு யோசனை. ஏதோ ஒரு வகையில் கிரிக்கெட்குள்ள இருக்கோம் நாங்க.”

“நல்ல ஐடியா மாமா. நிறையப் பசங்க கிரிக்கெட்குள்ள வருவாங்க.” ஆத்மார்த்தமாகச் சொன்னான் நிரஞ்சன்.

“அதுக்குத் தான் பிளான் டிசைன் பண்ணிட்டு இருக்கா நந்து. கொஞ்ச நாள் அதுல ஃபோகஸ் பண்ணுவா. அப்புறம் அவ தலை தானா நம்ம பக்கம் தான் திருப்பும்” சிரிப்புடன் அவர் சொல்ல, நிரஞ்சன் முகத்திலும் எதிரொலித்தது அது.

“அவளுக்கு எல்லாமே ரொம்ப ஈசியா கிடைச்சது மாப்பிள்ளை. அதான் அருமை, பெருமை தெரியல.” தீவிரமான குரலில், வருத்துடன் சொன்னார்.

“என்ன சொல்லுங்க மாப்பிள்ளை, கார்த்திகேயன் பொண்ணா இல்லாம இருந்திருந்தா அவ கிரிக்கெட்குள்ள வர்றது சாத்தியமா? ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கூட எங்க வேணாலும் படிக்கலாம். ஆனா, அனலிஸ்ட் படிப்பு, வேலை எல்லாம் அவ அப்பா எனக்குக் கிரிக்கெட் தெரியப் போய்த் தானே அவளுக்குத் தெரிஞ்சது? நான் இல்லனா என்ன பண்ணியிருப்பா?”

“அவ டேலண்டட் மாமா. அதுல சந்தேகமே இல்ல” மனைவிக்காகப் பரிந்து கொண்டு வந்தான் நிரஞ்சன்.

“கண்டிப்பா மாப்பிள்ளை. எனக்கும் அதுல சந்தேகமே கிடையாது. நான் என்ன சொல்ல வர்றேன்னா, அவளுக்கு எல்லாமே கையில வந்து விழுந்தது மாப்பிள்ளை. அனலிஸ்ட் கோர்ஸ் படிச்சுட்டு இருக்கும் போதே அவ திறமையைப் பார்த்து, தன் கூடவே வச்சுக்கிட்டார் இந்தியன் டீமோட அனலிஸ்ட் சிவராஜ். அவர் சொல்லி சென்னை டீம் வீடியோ அனலிஸ்ட் போஸ்ட் அவளுக்குக் கிடைச்சது. கிடைச்ச பதவியை, வாய்ப்பை போராடி தக்க வச்சுக்கிட்டா தான். ஆனா, அதோட அருமை தெரியலை பாருங்க மாப்பிள்ளை. சட்டுனு வேணாம்னு உதறிட்டு வந்துட்டா இல்ல?”

“அவளுக்கு ஸ்ட்ரெஸ் மாமா. அதான்..”

“உலகத்துல இருக்க எல்லாருக்கும் ஸ்ட்ரெஸ் இருக்கத் தான் செய்யுது மாப்பிள்ளை. அதுக்காகக் கையை வீசிட்டு வந்தா பிரச்சனைக்குத் தீர்வாகிடுமா?” தீர்க்கமாக அவர் கேட்க, பதிலில்லை அவனிடம்.

“எதுவுமே நம்ம கையை விட்டு நழுவி போனதுக்கு அப்புறம் தான், அதோட மதிப்பு தெரியும். கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையைக் கொஞ்ச நாள் நந்து வாழ்ந்து பார்க்கட்டும்.” அவர் சொல்ல,

“அவளைத் திரும்பவும் கிரிக்கெட்குள்ள நான் கொண்டு வருவேன் மாமா” தீர்க்கமாகத் தன் முடிவை சொன்னான் நிரஞ்சன்.

“எனக்கு அவளைப் பத்தி கவலையில்ல மாப்பிள்ளை. நீங்க இந்த நியூஸை எப்படி ஹான்டில் பண்றீங்களோன்னு பயந்துட்டு, உங்களுக்காகத் தான் ஓடி வந்தேன் நான்” சிரித்தபடி சொன்னார் கார்த்திகேயன்.

“தாங்க்ஸ் மாமா” என்றான் புன்னகையுடன்.

“அவ விரும்பினா திரும்ப வரட்டும் மாப்பிள்ளை. குழந்தையில் இருந்து அவளுக்குக் கிரிக்கெட் தான் பொழுது போக்கு. முன்ன கார்த்திகேயன். இப்போ நிரஞ்சன். அவ வாழ்க்கையில் கிரிக்கெட் இருந்துட்டே இருக்கு. இனி மேலாவது அவ, அவளா வாழட்டும் மாப்பிள்ளை. லெட் ஹெர் லிவ் அ லிட்டில்” என்றார் தந்தையாகக் கரினசத்துடன்.

“ஒரு சுத்து உலகத்தைப் பார்த்திட்டு அப்புறம் அவ ஒரு முடிவுக்கு வரட்டும்” கார்த்திகேயன் சொல்ல, “சரி தான் மாமா” என்றான் நிரஞ்சன்.

“உங்க விஷயத்துல அவ முடிவு ரொம்பச் சரி தான்” கண்களில் அன்பையும், பெருமிதத்தையும் தேக்கி நிரஞ்சனைப் பார்த்து, அவன் தோளில் தட்டிக் கொடுத்தார் கார்த்திகேயன்.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top