இனியொரு பிரிவேது – 19 (2)

அவள் எதிர்பார்த்ததைப் போல அங்குத் தான் இருந்தான் அவன்.

“வா, வா நிரஞ்சன். எப்படி இருக்க?”

“என்ன தம்பி தனியா வந்திருக்க? மருமக எங்க?”

“கோபமா இருக்கியா?.என்னடா ஆச்சு? எவ்ளோ நேரமா கேட்டுட்டு இருக்கேன்? ஏதாவது பதில் சொல்றியா?”

“காட்டு கத்தல் கத்திட்டு இருக்கேன், அப்பான்னு ஒரு பயம், மரியாதை இருக்கா உனக்கு?”

“இப்போ பதில் சொல்லப் போறியா இல்ல, உங்கம்மாக்கு போன் போடவா? ஆங், உங்கம்மாக்கு எல்லாம் பயப்பட மாட்ட நீ. மருமகளுக்கு ஃபோன் போடுறேன் இரு”

“சோத்துக்குச் செத்தவன் மாதிரி ஏன்டா இப்படிச் சாப்பிடுற?” கிருஷ்ணகுமார் கடந்த ஒரு மணி நேரமாக மகனிடம் கேள்வி கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார். அவனோ, ஒரு வார்த்தை கூட அவரிடம் பேசாமல், உணவில் கவனம் செலுத்தியிருந்தான்.

அவனைப் போலவே பின் வாசல் வழியாக நுழைந்து, நேராகக் கிட்சனிற்குள் வந்தாள் நந்தனா.

பதட்டமும், பரபரப்புமாக அவள் வர, கிட்சென் மற்றும் உணவு அருந்தும் அறை இரண்டுக்கும் நடுவில் இருந்த ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் இடத்தில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

பஞ்சத்தில் அடிப்பட்டது போல அவன் உணவை விழுங்கிக் கொண்டிருக்க, மகனை கரிசனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணகுமார்.

“போதும் தம்பி. இன்னும் எவ்ளோ சாப்பிடுவ. வயிறு கெட்டுப் போகும் தம்பி” அப்பா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அப்போது அங்கு அரக்கப் பரக்க வந்து நின்ற மனைவியைப் பார்த்தான் அவன்.

அவன் கண்களில் மின்னலாய் குற்ற உணர்வு ஓடி மறைந்தது. அவளைத் தனியாக விட்டு வந்ததைக் குறித்து வருந்தி, “சாரி” என்றான்.

சுவரில் ஒற்றைக் காலை உயர்த்தி வைத்து, சாய்ந்து நின்று உணவை உண்டு கொண்டிருந்த கணவனைக் கண்ணெடுக்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள் நந்தனா.

“வாம்மா” என்ற கிருஷ்ணகுமார், அவளுக்காகத் தண்ணீரை நீட்ட, “நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கேட்டு, தண்ணீரை வாங்கிக் கொண்டாள் நந்தனா.

அவள் பார்வை மீண்டும் கணவனின் மேல் பதிந்தது. அவனுக்கு அருகில் இருந்த சிறிய நீள் மேஜையில் காலி தட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அத்தனையும் அவன் தான் உள்ளே தள்ளியிருக்கிறான் என்பது புரிந்து அவனைக் கோபமாக முறைத்தாள் அவள்.

அவர்களைப் பொருட்படுத்தாமல் தயிர் சோறை, வத்தக் குழம்பு கலந்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

“மீன் சாப்பிட்டு தயிர் சாப்பிட கூடாது தம்பி” அப்பாவின் அக்கறையை அலட்சியம் செய்தபடி அவன் உண்ண, அவனை நோக்கி நடந்தாள் நந்தனா.

அவன் கைப் பிடித்து வெளியில் இழுத்துக் கொண்டு போய், உணவருந்தும் அறையில் காலியாக இருந்த மேஜையில் அமர வைத்தாள்.

அவ்வளவு தான். அவனைச் சூழ்ந்து கொண்டார்கள் ரசிகர்கள். ஓடிப் போய்க் கையைக் கழுவி விட்டு வந்தான் அவன்.

“என்னை அலைய விட்ட இல்ல? அனுபவி” என்று முணுமுணுத்தாள் நந்தனா. அவனால் மனைவியை முறைக்க மட்டுமே முடிந்தது.

அது முன் மாலை நேரம் என்பதால் மிகச் சொற்ப வாடிக்கையாளர்களே ஹோட்டலில் இருந்தனர். அவர்களில் சிலர் நிரஞ்சனை அடையாளம் கண்டு விட அவனிடம் பேச ஆவலுடன் வந்தனர்.

அதில் சிலர் புகைப்படம் எடுக்க விரும்ப மனைவியை எட்டி இழுத்து தனக்கு அருகில் நிறுத்தினான் நிரஞ்சன்.

அவன் ரசிகர்களுடன் பேசத் தொடங்க, அங்கிருந்து நகர்ந்து உள்ளே மாமனாரை தேடிப் போனாள் அவள்.

கதவை திறந்ததும் குமித்து வைத்திருந்த காலி தட்டுகள் தான் அவள் கண்ணில் பட்டது. அதைக் கவலையுடன் பார்த்தாள் அவள்.

கோபம், வருத்தம், அழுகை, மனஅழுத்தம் என அதீத உணர்வுகள் அவனைத் தாக்கும் போது மட்டுமே இப்படி அளவில்லாமல் உண்ணுவான் கணவன் என்பதை நன்கு அறிவாள் அவள்.

“என்னம்மா நடந்தது? அவனைக் கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்கறான். நீயாவது சொல்லலாம் இல்ல? என்ன வருத்தம் அவனுக்கு இப்போ?” மாமனாரின் கேள்வியில் மருண்டு விழித்தாள்.

கிருஷ்ணகுமாருக்கு இதற்கு முந்தைய இதே போன்ற நிகழ்வு கண் முன் வந்து போனது.

முதல் முறை நந்தனாவை பெண் கேட்டு போய் அவளின் தந்தை மறுக்க, அப்போது இப்படித் தான் கோபத்தை உணவோடு சேர்த்து விழுங்கினான் நிரஞ்சன். இரண்டாம் முறை சுகாஸ் திருமணத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் வெளியாகி, அப்போது நந்தனாவும் திருமணத்திற்கு மறுப்பு சொல்ல, சோகத்தைச் சுகமாக உணவில் தான் கரைத்தான் நிரஞ்சன்.

‘இப்போது என்னவோ?’ என்று கேள்வியாக மருமகளைப் பார்க்க, மெல்ல தொண்டையைச் செருமி சீர் செய்து கொண்டாள் நந்தனா.

“நான் வேலையை விட்டுட்டேன் மாமா” என்றாள் மெதுவாக.

கையில் இருந்த அலைபேசியைத் தவற விடப் பார்த்தார் அவர். சட்டென அதைப் பற்றி அவர் கைகளில் கொடுத்தாள் நந்தனா.

“ஏன் மா?” என்றவர். “அவனா காரணம்?” என்று வேகமாகக் கேட்க, பதட்டத்துடன், “இல்ல மாமா. நானா தான் வேலையை விட்டேன். கொஞ்சம் பிரச்சனை. சமாளிக்க முடியல” தந்தி போலப் பதில் சொன்னாள் அவள்.

அவரோ, நம்பாத பார்வை பார்த்தார்.

“என்னை அங்க மாட்டி விட்டுட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ?” கதவை திறந்து அடிக்குரலில் கத்தினான் நிரஞ்சன்.

அப்பா நின்றிருந்த நிலையைப் பார்த்ததும், “நேரமாச்சு பா. கிரவுண்ட்ல இருந்து நேரா இங்க தான் வந்தோம். வீட்டுக்கு கிளம்பறேன்.” என்றான், எதுவும் நடவாதது போல.

“நாளைக்கு வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும். பேசணும்” கட்டளையாகச் சொன்னார் கிருஷ்ணகுமார்.

“முடியாது பா. கொல்கத்தா கூட மேட்ச் இருக்கு. டிக்கெட் அனுப்பறேன். நீங்க வாங்க. நாங்க இன்னொரு நாள் பொறுமையா அம்மாவை பார்க்க வர்றோம்” என்றான்.

“தம்பி…” என்று அவர் ஏதோ சொல்ல வர, “வர்றோம் பா” என்று கத்தி விட்டு, மனைவியின் கைப் பிடித்து வெளியின் வந்தான் அவன்.

“நான் வந்து எல்லாம் சொல்றேன் மாமா” பின்னோடு வந்தவரைப் பார்த்து அவள் சொல்ல, தலையசைத்து உள்ளே சென்றார் கிருஷ்ணகுமார்.

காரின் கதவை மனைவிக்காகத் திறந்து விட்டான் நிரஞ்சன். அவளோ வீம்பாக ஏற மறுத்தாள், “சாரி நந்து. கோபமா இருந்தேன்…” அவன் கெஞ்சலாக ஆரம்பிக்க, முறைத்தாள் நந்தனா.

“பிளீஸ், பிளீஸ்” என்று கெஞ்சி அவளைக் காரில் ஏற வைத்தான்.

அவர்கள் அடையாரை அடையும் போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி மனைவியின் பக்கம் திரும்பினான்.

“இனி மேல் இப்படிப் பண்ண மாட்டேன் நந்து. என்னைத் தேடினியா? ரொம்ப அலைய விட்டுட்டேனா‍?” அவன் கேட்க கேட்க அவளுக்குக் கோபத்தில் மூச்சு வாங்கியது.

காரில் விளக்கை அணைத்து அவன் மேல் பாய்ந்தாள் அவள்.

“எப்பப் பாரு என்னை டென்ஷன் பண்ணி.. இதென்ன விளையாட்டு நிரஞ்சன்? கொஞ்சம் கூடப் பொறுப்பேயில்ல. நம்ம ரெண்டு பேரும் எப்போ தான் நம்ம வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கப் போறோம்?” அவள் கோபத்தில் பொரிய,

“அடிக்காத நந்து. நாளைக்கு மேட்ச் இருக்கு” அலறினான் அவன்.

அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் அவன் முகமெங்கும் அடித்து வைத்தாள்.

“அதென்ன வயசுக்கு ஏத்த மாதிரி நடக்கிறது? அப்படி ஒன்னும் அவசியமில்ல. சில ஃபீலிங்ஸை உன்கிட்ட மட்டும் தான் என்னால காட்ட முடியும். நீ என்கிட்ட எவ்ளோ டைம் சும்மாவே கோபிச்சுட்டு மும்பை போய் இருப்ப? அப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?..”

“பழி வாங்குறியா டா? அதுக்கு இப்பவா சான்ஸ் கிடைச்சது உனக்கு? ஏற்கனவே எவ்ளோ டென்ஷன். இதுல என்னை அலைய விட்ட இல்ல? சென்னைல எனக்கு என்ன தெரியும்?” அவன் பாவமாகக் கண்ணையும் மூக்கையும் சுருக்க,

“நாளைக்கு உனக்கு மேட்ச் இருக்கா? இருக்கட்டும். கையை உடைச்சு விடுறேன், போய் நல்லா விளையாடு.” அவன் கையை இறுக்கி பிடித்தாள். அதில் அவளைச் சுற்றி அணைக்க முயன்றான் அவன்.

“கையை விடுடா” என்று பல்லைக் கடித்தபடி கத்தியவளின் பற்கள் அழுத்தமாக அவன் கழுத்தில் பதிந்திருந்தது.

“நந்து…” என்று வலியில் அரற்றியவனின் கரம் அவளின் கூந்தலை பற்றியது.

“பல் தடம் பதிய போகுது நந்து. யாராவது பார்த்து கேட்டா.. முதல்ல அதைப் பார்த்தா என்ன நினைப்பானுங்க” அவன் பதற, நிதானமாகத் தலையை உயர்த்திக் கண்ணடித்தாள் நந்தனா.

அவன் தலை முடியை கொத்தாகப் பிடித்து, அவன் முகத்தைக் காரின் இருக்கையில் பின்னால் சாய்த்து, அவனது தாடையை நோக்கி குனிந்தாள்.

“ஐய்யோ நந்து.” என்று அலறியவனின் அனைத்து செல்களும் ரெட் அலர்ட்டில் இயங்கியது. கண்ணிமைக்கும் கணத்தில் அவளைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் நிரஞ்சன். சட்டெனச் சிரித்து விட்டனர் இருவரும்.

அதே சிரிப்புடன் தான் வீடு திரும்பினார்கள்.

error: Content is protected !!
Scroll to Top