சூரியன் அன்று உக்கிரமாக இருந்தான். அக்னி நட்சத்திரம் வெயிலை அக்னியாகப் பொழிந்தது. வியர்வையில் தொப்பலாக நனைந்தபடி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் சென்னை அணி வீரர்கள்.
நந்தனா, சுகாஸ் இருவரும் மௌனமாய் அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“நிஜமா ரிட்டயர்மென்ட் அநௌன்ஸ் பண்ண போறியா சுகாஸ்?” விடை அறிந்தே கேட்கப்படும் வினாக்களுக்கு என்ன விளக்கம் கொடுப்பது?
“நீ இன்னும் பத்து வருஷம் கிரிக்கெட் ஆடலாம். வயசும், வாய்ப்பும் இருக்கும் போது, ஏன் வெளில போற?” அவளுக்குக் காரணங்கள் தெரியும். ஆனாலும், அவனே சொல்வது போல வராதே என்ற எண்ணத்துடன் சுகாஸிடம் கேட்க,
“வயசு இருக்கு. ஆனா, வாய்ப்பிருக்கா நந்து?” கடினமான குரலில் கேட்டான் அவன்.
“உனக்குத் தெரியாததா நந்து? என்னை ஏன் பேச வைக்கற?” சலித்துக் கொண்டான்.
“ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் சீரிஸ்க்குச் சான்ஸ் கொடுத்திட்டு, அதுக்கு அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்குக் கண்டுக்க மாட்டாங்க. வெட்டியா சான்ஸ் இல்லாம வீட்ல உட்கார்ந்திருக்கணும். இவனுங்களைக் கேட்டா, நீ ஒழுங்கா ஆடலை. ஃபார்ம்ல இல்லைன்னு மொக்கை காரணம் சொல்லுவாங்க. ஆனா, அவங்களுக்கு வேண்டிய ஆளுங்களுக்கு மட்டும் வாய்ப்பை வாரி வழங்குவாங்க. இந்தக் கேவலமான பாலிடிக்ஸை சகிச்சுட்டு இங்க இருக்கணுமான்னு இருக்கு நந்து. மரியாதையா நாம விலகிறது நல்லது. இல்லையா?” என்று அவன் கேட்க, அவளுக்கு அப்பாவின் நினைவு வந்தது.
திறமை, அனுபவம் இதெற்கெல்லாம் இங்கு மரியாதையே கிடையாது என்று நினைக்கையிலே உலகின் மீதே கோபமாக வந்தது.
“ஐபிஎல் ஆரம்பிச்ச வருஷத்துல இருந்து சென்னைக்கு ஆடுறேன். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலே. தமிழ்ல செல்ல பேர் வச்சு கூப்பிட்டு, என்னை அவ்ளோ ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சாங்க சென்னை ஃபேன்ஸ். ஆனா, மேனேஜ்மென்ட் என்ன பண்ணுச்சு? சாதிக்கும் போது தூக்கி வச்சு ஆடிட்டு, சரியும் போது தூர எறிய பார்க்கறாங்க. அவ்ளோ தான் என் மதிப்பா நந்து? என்னை மரியாதையில்லாம நடத்தி, என்னோட ஃபிட்னெஸ் பத்திக் கேள்வி கேட்டு, அல்மோஸ்ட் வெளில போகச் சொல்லாத குறை தான். ஆனா, அதை அவங்க யோசிக்கறது தெரிஞ்சதும் நான் வெளில வந்துட்டேன்” அவன் குரல் கரகரக்க, அவனைக் கனிவாகப் பார்த்தாள் நந்தனா.
இந்திய அணி வீரர்கள் தேர்விற்காக வைக்கும் யோயோ தேர்வில் அவன் தோல்வியுற்றது அவனை இப்படித் தாக்கும் என்று அவனே எதிர்பார்த்திருக்க மாட்டான் என்பது புரிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏனென்றால், ஐபிஎல் ஆடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இங்குக் கிடையாது.
“அவங்களைப் பொறுத்தவரை நாங்க என்ன பெருசா பேசிட்டோம் அப்படினு நினைக்கலாம். அவங்களுக்கு அது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு வலிச்சது. வலிக்குதுன்னு அவங்களுக்குக் காட்ட நினைச்சேன். அதான், கேப்டன் எவ்ளோ எடுத்துச் சொல்லியும் கேட்காம இந்த வருஷம் ஐபிஎல்ல இருந்து விலகினேன். கிரிக்கெட் மூலமா வர்ற பேர், பணம், புகழ் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் நந்து. மரியாதை முக்கியம் இல்ல?” அவள் தலை தானாக ஆடியது.
“இப்போ நீ ஏன் கிரிக்கெட்டை விட்டுப் போற? நீ நீயா இருக்க முடியலைன்னு தானே? அதே தான் எனக்கும். நான், நானா கெத்தா இருக்க முடியாத இடத்தில நான் ஏன் இருக்கணும்? நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கேன் தான். அதுக்காக என்ன வேணாலும் கேட்பாங்களா?”
“இதையெல்லாம் பார்த்தா இங்க குப்பை கொட்டவே முடியாது சுகாஸ்.
இந்தக் கோபம், ரோசம், சுயமரியாதை இதை வச்சு நாம ஊறுகாய் தான் போடணும். அவமானங்களைச் சகிச்சுட்டு வாழ..”
“அதுக்கு அவசியமில்ல நந்து” பட்டென்று சொன்னான் சுகாஸ்.
“என்னமோ பண்ணு போ” முகத்தைத் திருப்பிக் கொண்டு அவள் சொல்ல, அதில் தனக்கான அன்பையே கண்டான் அவன்.
“ப்ச், என்னை என்ன பண்ண சொல்ற நந்து? விளையாடும் போது எதிரணி ஆள் கிட்ட கூட ஈகோ காட்டாதவன் நான். ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்போட தான் ஆடுவேன். ஆனா, உலகம் ஏன் எனக்கான மரியாதையைத் தர மாட்டேங்குது” அவன் ஆற்றாமையுடன் கேட்க, அமைதியாய் வீரர்களின் பயிற்சியை வெறித்தாள் நந்தனா.
“ஹேய் சுகாஸ். எப்ப வந்த?” என்று கேட்டபடி கேப்டன் அங்கு வர, அவர்களின் பேச்சுத் தடைப்பட்டது.
இருவரும் எழுந்து அவரிடம் போனார்கள்.
“இவ கூடச் சண்டை போட வந்தேன்” என்றான் சுகாஸ். கண்ணை உருட்டினாள் நந்தனா.
அதைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தார் கேப்டன். சுகாஸை இறுக்கமாக அணைத்து விடுவித்தார் அவர்.
“நீ உன் ப்ரெண்ட்டை பார்க்க வந்த. ஆனா, நாளைக்கு நியூஸ் எப்படி வரும்னு யோசிச்சா எனக்கு இப்பவே சிரிப்பா வருது” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்ல, அந்நேரம் அங்கு வந்தனர் சென்னை அணியின் சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களை நிர்வாகிப்பவர்கள்.
“அடப்பாவிகளா” என்று அதிர்ந்தான் சுகாஸ். அவனைப் போல அதிரவில்லை மற்ற இருவரும். இங்கு அனைத்துமே விளம்பரம் தான். வியாபாரம் தான் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
நந்தனா அங்கிருந்து மெல்ல நழுவினாள்.
கேப்டன், “பாய்ஸ்” என்று உரக்க அழைக்க, பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அனைவரும் சில வினாடிகளில் சுகாஸை சுற்றி இருந்தனர். அவனுக்குக் கடுப்பு தான். ஆனாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவன்.
வீரர்கள் அவனைச் சூழ்ந்து நலம் விசாரிக்க, அனைவருடனும் கலந்துரையாட தொடங்கினான் அவன்.
நிரஞ்சனை அவனே நெருங்கி, அவன் கன்னம் பற்றிக் கொஞ்சி, “சாரி நிரஞ்” என்றான். அத்தனையையும் கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தன.
“என் டார்லிங்கை ஒழுங்கா பார்த்துக்கோ. இப்பவும் உன்னை மிரட்ட தான் செய்யறேன். எப்பவும் அவளுக்காகக் கேள்வி கேட்க நான் இருக்கேன்” என்றான் சிரித்துக் கொண்டே.
அந்தச் சிரிப்பைப் பார்த்து, “நடிக்கப் போய் இருக்கலாம் நீ” என்றான் நிரஞ்சன்.
“நல்ல ஐடியா நிரஞ். யோசிக்கறேன்” என்று கண்ணடித்தான் சுகாஸ். சிரித்தார்கள் இருவரும்.
நந்தனா அங்கிருந்து போனதும் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.
காணொளியில் மூழ்கி அவள் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்க, பெருமூச்சுடன் அவள் அருகில் வந்து நின்றான் சுகாஸ்.
அந்த அரவத்தில் நந்தனா நிமிர்ந்து பார்க்க, “ரியா தனியா இருக்கா. நான் கிளம்பறேன் நந்து” என்று விடை பெற்றான் அவன்.
“சந்தோஷமா இரு” என்று தலைக் கோதி விட்டுப் போனான். அவளுக்குக் கண் கலங்கியது.
மனம் அலைபாய எழுந்து சென்று, காஃபியுடன் வந்து மீண்டும் அமர்ந்தாள் அவள். வேலை அவளை உள்ளே இழுத்துக் கொள்ள நேரத்தை மறந்து போனாள்.
“வீட்டுக்கு கிளம்பல நந்து?” என்று கோச் கேட்கவும் தான் நேரத்தை பார்த்தாள் அவள். ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்கள் விரிய, “இதோ கிளம்பிட்டேன் கோச்” என்று தனது கணினியை மூடி, அதற்கான பையில் வைத்தாள்.
தனது பொருட்களை எல்லாம் கையில் அள்ளிக் கொண்டு அவள் அலுவலக அறையை விட்டு வெளியில் வர, கண்கள் தாமாகக் கணவனைத் தேடியது.
மைதானத்தில் இல்லை அவன். கார் நிறுத்துமிடம் சென்றாள். அங்கேயும் அவனைக் காணவில்லை.
அவனது அலைப்பேசிக்கு அழைத்துக் கொண்டே வாயிலை நோக்கி வேக நடைப் போட்டாள். அவளது அழைப்பையும் எடுக்காமல் புறக்கணித்தான் அவன்.
அவள் மேலிருக்கும் கோபத்தில் விட்டு விட்டுச் சென்றிருக்கிறான் என நினைத்து கால் டாக்ஸி வரவழைத்து வீடு திரும்ப யத்தனித்தாள். கார் அவர்கள் பகுதியை நெருங்கும் போது ஏதோ தோன்ற, வண்டியை திருப்பி நேராக மாமனாரின் ஹோட்டலுக்கு விடச் சொன்னாள்.