இனியொரு பிரிவேது – 18 (3)

“எழுந்திருங்க நிரஞ்சன்” ஹிந்தியில் கத்தினாள். அதே கணீர் குரலில் சுகாஸை கைக் காட்டி, “உங்களைக் கேள்வி கேட்க இவனுக்கு எந்த ரைட்ஸிம் கிடையாது” என்றாள் தீர்க்கமாக.

மனைவியை அதிர்வுடன் நிமிர்ந்துப் பார்த்தான் நிரஞ்சன்.

“நீ யார் என்னைக் கேள்வி கேட்கன்னு இவன் வாயை உடைக்காம, அவனைப் பேச விட்டு என்ன வாய் பார்த்திட்டு இருக்கீங்க நீங்க? இவன் எப்படி உங்களைப் பேசலாம்?” யாரிடமும், யாருக்காகவும் கணவனை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை அவள். அவனுக்காகத் தான் நேசிக்கும் கிரிக்கெட்டையே மறக்க துணிந்தவள் அவனையா விட்டுக் கொடுப்பாள்?

“உனக்கு என்ன கேட்கணுமோ அதை என்கிட்ட நேரா கேளு சுகாஸ். அவரை ஏன் நிக்க வச்சுக் கேள்வி கேட்டுட்டு இருக்க? என்னை எப்படி மதிக்கறியோ, அப்படித் தான் அவரையும் மதிக்கணும் நீ. இல்லனா…”

“சாரி” என்றான் சுகாஸ். நிரஞ்சனை நெருங்கி அவன் தோளில் கைப் போட்டு, “சாரி. ரொம்பப் பேசிட்டேன். எனக்கு.. எனக்கு.. இன்னமும் நம்ப முடியல நிரஞ்” என்றான் ஆற்றாமையுடன்.

ஒரு நல்ல நண்பனாகச் சுகாஸின் மனக் குமுறல் நிரஞ்சனை அதிகம் பாதித்தது.

அவன் கேள்விகளில் இருந்த நியாயமும், உண்மையும் நிரஞ்சனை தொந்தரவு செய்தது.

“உன் இஷ்டத்துக்குப் பேசிட்டு சாரி சொல்லிட்டா ஆச்சா? நீ பேசினது இல்லைனு ஆகிடுமா, இல்ல சரின்னு ஆகிடுமா சுகாஸ்? பேட்டை தொட்ட பால் தொட்டது தான். அடிச்சதுக்கு அப்புறம், அதைத் திரும்ப எடுக்க முடியுமா சொல்லு?” அவன் முகத்திற்கு நேராகக் கை வீசி அவள் கேட்க,

“நோ பால்னு டிக்ளேர் பண்ணி, அதே பாலை திரும்பப் போட வைக்கலாம் ஜீனியஸ். நோ பால்ல நிரஞ் எக்ஸ்பர்ட் வேற” சுகாஸ் சூழ்நிலையை லகுவாக்க முயன்று பேச, அவன் சொன்ன உதாரணத்தில் தம்பதிகள் முகத்தில் இளநகை வந்து போனது. நிரஞ்சன் அந்நிலையிலும் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டான்.

நந்தனாவை நெருங்கி, “சாரி நந்து. அவனை நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது தான். ஆனா, உன் மேல அவ்வளவு கோபம். நான் உன்னைப் போலத் தான் அவனையும் பார்க்கறேன். எனக்கு நீ வேற, அவன் வேற இல்ல. சோ, உன்கிட்ட பேசுறது போலவே..” அவன் விளக்கம் கொடுக்க, மறுப்பாகத் தலையசைத்தாள் நந்தனா.

“சாரி. என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது சுகாஸ். நீ அவர்கிட்ட ரொம்ப ரூடா பேசிட்டிருந்த. இனி மேல் இப்படிப் பண்ணாத. இன்னைக்கு போல இன்னொரு முறை மன்னிக்க மாட்டேன் நான்” என்றாள் தீவிரமாக.

“ஓகே. சாரி. சாரி. தெரியாம இல்ல, தெரிஞ்சு தான், ஆனா முட்டாள்தனமா பேசிட்டேன். மன்னிச்சிடு. பிளீஸ்” கைப் கூப்பிக் கத்தினான் சுகாஸ்.

“நீயே சொல்லு, என்ன பண்ணா என்னை மன்னிப்ப? உன் ஆள் கால்ல விழவா?” என்று நிரஞ்சனின் காலை நோக்கி அவன் குனிய,

சட்டெனப் பின்னால் நகர்ந்து, “ஸ்டாப் இட். போதும் உங்க டிராமா. நிறுத்துங்க ரெண்டு பேரும்” என்று அவர்களை அதட்டி அடக்கினான் நிரஞ்சன்.

சுகாஸ், நந்தனா இருவரும் இப்போது அவனைப் பார்த்தனர்.

“உனக்கு நான் விளக்கம் சொல்லணும்னு அவசியம் இல்ல சுகாஸ். ஆனாலும், உங்க ப்ரெண்ட்ஷிப்பை மதிச்சு சொல்றேன். கேட்டுக்கோ. இன்னைக்குக் காலைல தான் என்கிட்ட வேலையை விட்டுட்டேன்னு சொன்னாங்க உன்னோட ஜீனியஸ் நந்தனா. அதுவரை எனக்கும் அது பத்தி எதுவும் தெரியாது. அந்த நிமிஷத்துல இருந்து இந்தச் செகண்ட் வரைக்கும், என்னை நானே கேள்வி கேட்டு, என்னால தான்னு குற்றம் சாட்டி.. நொந்துட்டு இருக்கேன். அதுல நீ இன்னும்…”

“சாரி நிரஞ். பிளீஸ். ஐ ஆம் சாரி” இடையிட்டு மனதார மன்னிப்புக் கேட்டான் சுகாஸ்.

“தேவையில்லை” என்றான் நிரஞ்சன், ஒற்றை வார்த்தையில்.

அந்நேரம், “நிரஞ் பைய்யா, கோச் உங்களைத் தேடுறார்” என்று ராஜ் அவர்களைத் தேடி வந்து சொல்ல, “ஓகே. இதோ, வர்றேன்” என்று விட்டு மனைவியிடம் திரும்பினான் நிரஞ்சன்.

“உன்னோட முடிவால, நீ பண்ண இந்தக் காரியத்தால நான் பயங்கரக் கோபமா இருக்கேன் நந்து. ஆனா, அது உன்னோட முடிவு. ஐ ரெஸ்பெக்ட் தட். அதுக்காக நீ யாருக்கும் விளக்கம் கொடுக்கத் தேவையில்ல. யார் கேட்கற கேள்விக்கும் பதில் சொல்லணும்னு அவசியமும் இல்ல. புரிஞ்சுதா?” நிறுத்தி நிதானமாக அவன் ஹிந்தியில் கேட்க, அன்றைய தினம் முதல் முறையாகப் புன்னகைத்தாள் நந்தனா.

“ஹான் நிரஞ். நல்லா புரிஞ்சுது. ஆனா, நான் பேச போறது உன் வைஃப் நந்தனா கிட்ட இல்ல. என் ஃப்ரெண்ட் நந்தனா கிட்ட… அது உனக்குப் புரிஞ்சுதா?” என்று ஹிந்தியில் அவனுக்குத் திருப்பிக் கொடுத்தான் சுகாஸ்.

“ஹிந்தி தெரியாது. போடா” என்று தமிழில் அவனிடம் அசட்டையாகச் சொன்ன நிரஞ்சன்,

“பேசிட்டு இரு. வந்துடுறேன்” என்று மனைவியிடம் வாயசைத்து விட்டுப் பயிற்சிக்குப் போனான்.

நிரஞ்சன் போனதும், நந்தனாவின் முன் வந்து கைக் கட்டி நின்றான் சுகாஸ். அவனிடம் இருந்து விலகி, அங்கிருந்த பார்வையாளர் இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்தாள் அவள்.

அவளைப் பின் தொடர்ந்து அவனும் சென்று அமர்ந்தான்.

மீண்டும் மன்னிப்பை வேண்டினான் சுகாஸ். “நிரஞ் கிட்ட நான் அப்படிப் பேசினது தப்பு தான். சாரி” என்றான்.

மௌனமாய்ச் சென்னையின் மொட்டை வெயிலை முகத்தில் வாங்கிக் கொண்டு, வானத்தை வெறித்தாள் நந்தனா.

அரை மணி நேரத்திற்கு முன்பு, ரியா அவளை அழைத்திருக்காவிட்டால் சுகாஸ் வந்ததே அவளுக்குத் தெரிந்திருக்காது. அவள் மட்டும் அங்கு வராமல் இருந்திருந்தால் கணவனை இன்னும் குதறி இருப்பான் சுகாஸ் என்றே அவளுக்குத் தோன்றியது. அவனது அன்பும், கோபமும் புரிந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“நந்து, நீ ரிசைன் பண்ணிட்டன்னு நியூஸ் கேட்டு இந்தச் சுகாஸ் நேத்தெல்லாம் ஒரே புலம்பல். காலையில சென்னை கிளம்பினான். சாரி, இப்ப தான் உனக்குக் கால் பண்ண முடிஞ்சது” என்றாள் ரியா.

“ஓ..” என்ற நந்தனா. “நீ உடம்பை பாரு ரியா. ரெஸ்ட் எடு. சுகாஸை நான் பார்த்துக்கறேன்.” என்றாள்.

“அவன் ரொம்பக் கோபமா இருந்தான் நந்து. கேப்டன் கிட்ட, நீங்க எப்படி அவளைப் போக விடலாம்னு ஒரே சவுண்டு. முதல்ல உன் ஆளு, அந்தப் பவுலருக்கு சரியான பதிலடி கொடுத்தார்னு பாராட்டி, புகழ்ந்து பேசிட்டு தான் இருந்தாங்க. அப்போ பார்த்து உன் பேச்சு வந்திருக்கும் போல.. கேப்டன், நந்தனாவை டீம் மிஸ் பண்ணும்னு சொல்லிட்டார் பேச்சு வாக்கில். அவ்ளோ தான். அப்போல இருந்து வீட்டுக்குள்ள தாண்டியா (Dandiya Dance) ஆடிட்டு இருக்கான். காலையில முதல் வேலையா அங்க கிளம்பிட்டான் போல. நான் தூங்கிட்டேன் நந்து. இல்லனா, உனக்கு முன்னாடியே சொல்லி வார்ன் பண்ணி இருப்பேன்” என்றாள் ரியா.

“உடம்பை பாரு ரியா. நல்லா சாப்பிடு. இந்த மாதிரி நேரத்துல உனக்கும் குட்டிக்கும் தூக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்.” என்று விட்டு அழைப்பை துண்டித்தாள் நந்தனா.

சுகாஸின் மனைவி ரியா எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். அதன் பொருட்டே அத்தனை அக்கறையும், பரிவும்.

இருவரும் பேசியதை அசைப் போட்டுக் கொண்டே அவள் வெளியில் வர, கணவனும் சுகாஸிம் கீழே ஒன்றாக நிற்பதை கண்டதும் பதறியடித்து அவர்களிடம் ஓடி வந்தாள் அவள்.

இப்போது ஒருவித கோபத்துடன், இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள் நந்தனா.

“ஏன் நந்து?” என்றான் சுகாஸ். அந்தக் குரலில் இருந்த அன்பில் அவளுக்குத் தொண்டையடைத்தது.

“நீ ஏன் இந்தச் சீசன் ஐபிஎல் ஆடலை. ஏன் விலகின? சீக்கிரம் ரிட்டயர்மென்ட் அனௌன்ஸ் பண்ண போற தானே? கேள்விப்பட்டேன். ரெண்டுத்துக்கும் தெளிவான காரணம் சொல்லு. அதுக்கு அப்புறம் நான் உன் கேள்விக்கு விளக்கமா பதில் சொல்றேன்” சரேலென்று தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான் அவன்.

“பதில் இல்ல தானே? அதே தான் எனக்கும். உனக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?”

“என் முடிவும், உன் முடிவும் ஒன்னு கிடையாது நந்து. நான்.. நான்.. வேணாம். உனக்கு இருக்கத் திறமைக்கு, உனக்குக் கிடைச்சுருக்க வாய்ப்புக்கு நீ எடுத்த இந்த முடிவு. சரியே கிடையாது. சென்னை ஐபிஎல் டீமின் வீடியோ அனலிஸ்ட். இங்க பல ஆண்களுக்கே கிடைக்காத அரிய வாய்ப்பு. அதை..”

“ஆண்களுக்குக் கொம்பு முளைச்சு இருக்கு பாரு” அவள் படபடக்க,

“பேச்சை மாத்தாத” கத்தினான் சுகாஸ்.

“நிரஞ்சனும் எல்லா ஆண்களைப் போல…”

“அவரைப் பத்தி பேசாத” கடுமையாக எச்சரித்தாள்.

“ஓகே ஓகே” என்று தோள் குலுக்கினான்.

“உன்னைப் போலத் தானே எல்லோரும் யோசிப்பாங்க? என்னோட இந்த முடிவுக்கு எல்லோரும் அவரைத் தான் கேள்வி கேட்க போறாங்களா? அவரைக் கை நீட்டி குத்தம் சொல்லப் போறாங்களா?” கேட்ட அந்த மென் குரலில் கலவரம் அதிகமாக இருந்தது.

பதில் சொல்லாமல் அவளை முறைத்தான் சுகாஸ். அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே யோசித்தாள் தான். பிரச்சனையை எப்போதும் போல எல்லாக் கோணத்திலும் அலசி ஆராய்ந்தாள் தான். ஆனாலும், நிதர்சனம் எப்போதும் வேறாக அல்லவா இருக்கிறது.

“ஒரு விஷயத்தைச் செய்யறதுக்கு முன்னாடி யோசிக்கணும். செஞ்சு முடிச்சுட்டு…” சுகாஸ் கோபமாக ஆரம்பிக்க, அவன் பேச்சில் குறுக்கே புகுந்தாள் நந்தனா.

லேசாக உதடு வளைத்து சிரித்து, “நான் அனலிஸ்ட் சுகாஸ். ஒரு போட்டி முடிஞ்சதுக்கு அப்புறம், வெற்றியோ, தோல்வியோ அது எப்படி நடந்ததுன்னு ஆராயுறது தான் என்னோட வேலையே. உன் பாஷையில் சொல்லணும்னா ஒரு விஷயத்தைச் செஞ்சு முடிச்சுட்டு ஆராயலாம் தப்பில்ல. அப்ப தானே தப்புகள் கண்ணுக்கு தெரியும். அதே தப்பை இனி பண்ண மாட்டோமில்ல?” அவள் கேட்க, பல்லைக் கடித்தபடி அவளை முறைத்தான் சுகாஸ்.

“பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க? திறமை, வாய்ப்பு, வேலை, எல்லாம் இருந்தும், அது உங்க கையில கிடைச்சும், குடும்பம் குட்டினு காரணம் காட்டி அதை உதறிட்டுப் போறது, என்ன மாதிரியான தியாகம்? எனக்குப் புரியவே மாட்டேங்குது” சுகாஸ் அவள் கண்களைப் பார்த்து கேட்க,

“என்ன சொன்ன? குடும்பம் குட்டிக்காகத் தியாகம் பண்றோமா? நீயும் தான் கிரிக்கெட்டை விட்டுப் போற. ஆல்ரெடி போய்ட்ட. ஆனா, உன் குடும்பத்தை விட்டுட்டியா என்ன?” அவள் அழுத்தமாகக் கேட்க,

“டார்லிங். அது வேற..”

“எல்லாம் ஒன்னு தான்.” என்றவள், “ஸ்ட்ரெஸ் கழுத்தை நெரிக்குது. என்னால சமாளிக்க முடியல. நான் என்னால முடிஞ்ச அளவு டிரை பண்ணேன். ஆனா, மோசமா தோத்துப் போய்ட்டேன்” உடைந்தாள்.

“கிரிக்கெட், நிரஞ்சன் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். இங்க இருக்கற.. இந்த எல்லாத்துக்கும் குறை சொல்ற மெண்ட்டாலிட்டி நான் நேசிக்கும் ரெண்டையும் சீக்கிரமே என்னை வெறுக்க வச்சுடும்னு தோணுச்சு.”

“இதுவா, அதுவான்னு ரெண்டுக்கும் நடுவுல கிடந்து அல்லாடினேன் சுகாஸ். கிரிக்கெட் இல்லாம என்னால இருக்க முடியும். ஆனா, நிரஞ்சன்? கற்பனை பண்ணி பார்க்கவே நான் விரும்பல. அவர் போதும்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு அதான் சரின்னு படுது. பொண்ணுங்க எங்க இருந்தாலும் சாதிப்போம். அதுக்காகக் குடும்பத்தை உதறிட்டுப் போய்த் தான் சாதிச்சு காட்டணும்னு அவசியமில்ல.”

“கிரிக்கெட் இல்லையா? எனக்குப் பிடிச்ச வேற எதையாவது செஞ்சிட்டு போறேன். சாதிக்கக் களமா இல்ல? கிரிக்கெட்டை விட்டுட்டு நீயும் அதைத் தானே செய்யற?” இம்முறை பதிலின்றி மௌனமாய் அமர்ந்திருந்தான் சுகாஸ்.

அவனையே எடுத்துக்காட்டி அவள் கேள்விக் கேட்கும் போது, என்ன பதில் சொல்வான் அவன்?

“என்னையும், எங்கப்பாவையும் சொல்லித் தானே அவரை விமர்சனம் பண்றாங்க. நான் சீன்ல இல்லனா? என்ன பண்ணுவாங்க? அவரோட பெர்ஃபார்மென்ஸ் மட்டும் தானே பார்ப்பாங்க?”

“இடியட். உனக்கு அறிவே இல்ல. நீ எங்க இருந்தாலும் நிரஞ்சன் பொண்டாட்டி தான். அனலிஸ்ட் நந்தனா தான். ஃபேமஸ் கோச் கார்த்திகேயன் பொண்ணு தான். உங்களைச் சொல்லி அவனை விமர்சனம் பண்ணிட்டே தான் இருப்பாங்க. நாளைக்கே உன் பேரை திரும்பவும் உள்ள இழுப்பாங்க? ஐயோ நான் கிரிக்கெட்ல இல்லை, அவரைப் பேசாதீங்க சொல்லப் போறியா? நான்சென்ஸ்.”

“யார் என்ன சொன்னாலும் இனி நிரஞ்சன் பார்த்துப்பார்.” என்றாள் கணவனை விட்டுக் கொடுக்காமல் நம்பிக்கையுடன்.

“அப்புறம் ஏன் வேலையை விடுற டார்லிங்? உன் முடிவை மாத்திக்கக் கூடாதா?” அவள் கைப் பிடித்து அவன் கெஞ்சலாகக் கேட்க,

“எனக்கு மட்டும் ஆசையா சுகாஸ்? செய்யும் தொழிலே தெய்வம் சொல்வோம் தமிழ்ல. ஆனா, நான்? கொஞ்ச நாளா அவ்ளோ சொதப்பல். இந்த வருஷம் சென்னை டீம் மோசமா பெர்பார்ம் பண்ணதுக்கு ஐ ஃபீல் ரெஸ்பான்சிபில்”

“கம் ஆன் நந்து. அதுல உன்னோட தப்பு என்ன இருக்கு? இந்த இடியட்ஸ் சரியா ஆடலை…”

“இல்ல. என்னால எதையும் சரியா ஆராய முடியல. அனலிஸ்ட்டா, அனலைஸ் பண்ணல. ஸ்ட்ரெஸ் என்னை வேலை பார்க்க விடல. எனக்கு இப்போ மன அமைதியும், நிம்மதியும் வேணும்னு தோணுது சுகாஸ். நிரஞ்சன், அப்பா, அம்மா, நீ, இப்படி எனக்காக நிறையப் பேர் இருக்கீங்க. அது போதும் எனக்கு. கிரிக்கெட் வேண்டாம்”

மனஅமைதியும், நிம்மதியும் வேண்டும் என்று சொல்பவளிடம் என்ன சொல்வான் அவன். அவளது முடிவை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டான் சுகாஸ்.

அன்றைய நாள் முழுவதுமே நிரஞ்சன் கோபமாகத் தான் இருந்தான்.

அவன் கோபத்தில் பயிற்சி முடித்து எங்கோ கிளம்பி போய் விட, அவனுக்காக அலைந்து, திரிந்து என அவளைப் பதற வைத்தான் அவன்.

ஒரு வழியாகக் கண்டுபிடித்துச் சமாதானமாகி வீடு திரும்பினர்.

நிரஞ்சன் மனைவியின் பின்னே வீட்டுக்குள் வந்தான்.

அங்கே கால் மேல் கால் போட்டு அமர்ந்து தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார், “என் பொண்ணு என்னைக்குமே அனலிஸ்ட் நந்தனாவா தான் இந்த உலகத்துக்குத் தெரியணும்” என்று இரண்டு வருடங்களுக்கு முன் அவர்களின் திருமணத்தை மறுத்த நந்தனாவின் தந்தை கார்த்திகேயன்.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top