எப்போதும் மனைவியிடம் மனதைத் திறப்பான். இம்முறை அவனது மற்றொரு கண்ணான கிரிக்கெட்டை நாடினான்.
“நான் நெட் பிராக்டீஸ் போறேன். நீ ரெஸ்ட்…”
“நானும் வர்றேன்” என்றாள் தயக்கத்துடன்,
“நீ அங்க வந்து? எல்லோரும் கிரிக்கெட் ஆடுறதைப் பார்த்து, ஐயோ என் லைஃப்ல கிரிக்கெட் இல்லையேன்னு உடைஞ்சு உள்ளுக்குள்ள அழப் போறியா? அதுக்குத் தான் அங்க வரணும்னு ஆசைப்படுறியா?” அவள் கண்களைப் பார்த்து அவன் கேட்க,
“இந்த ஐபிஎல் சீசனை முடிச்சு கொடுத்துட்டுப் போகச் சொல்லியிருக்காங்க டீம் மேனேஜ்மென்ட்” திக்கி தடுமாறி, சிறு தயக்கத்துடன் அவள் சொல்ல, அவனுக்கு ஏதோ இடறியது. ஆனாலும், அந்நேரம் அவன் இருந்த மன நிலையில் எதையும் ஆராயவில்லை அவன்.
சென்னை அணி நிர்வாகத்தைத் திட்டிக் கொண்டே மனைவியைப் பார்த்தான்.
“வா, போகலாம்” என்றவன், அவளை அறையை நோக்கித் திருப்பி, “போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா” என்று சொல்ல, அமைதியாய் சென்று தன்னைச் சீர் செய்து, முகம் திருத்தி, உடை மாற்றி வந்தாள் நந்தனா.
கார் பயணம் முழுவதும் இருவருக்கும் இடையில் அழுத்தமாய் மௌனம் அமர்ந்திருந்தது.
நந்தனா கணவனின் பேச்சையும், அவனது கோபத்தையும் அசைப் போட்டுக் கொண்டிருக்க, நிரஞ்சனின் கைகள் பழகிய சென்னையின் சாலையில் காரை லாவகமாகச் செலுத்த, மனதை குடைந்த கேள்விகளுக்கு மூளையைக் கொடுத்திருந்தான் அவன்.
அவனது எண்ணப் போக்கை உணர்ந்தவள் போல, “நீங்க, எனக்காக யார்கிட்டயும் பேசக் கூடாது” என்றாள் நந்தனா.
“வாயை மூடிட்டு இரு பொண்டாட்டி. இருக்கக் கடுப்புக்கு காரை எங்கயாவது கொண்டு போய் மோத விட்ருவேன்” கையை ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தியபடி அவன் சொல்ல, வாயை மூடிக் கொண்டு, விரைந்து மறையும் சென்னை நகரத்தை வேடிக்கைப் பார்த்தாள் அவள்.
மைதானத்தை அடைந்ததும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருந்த வலைகளை நோக்கி நடந்தான் நிரஞ்சன்.
மெல்ல திரும்பி மனைவியைப் பார்த்து, “நாம இன்னும் பேசி முடிக்கல பொண்டாட்டி. உன் மேல இன்னும் கொலை வெறில தான் இருக்கேன். நைட் போய் மீதி கச்சேரியை வச்சுப்போம்.” மனதை பிராண்டிய குற்ற உணர்ச்சியை அவள் மேல் கோபமாகக் காட்டி விட்டுப் போனான் அவன்.
இதே மைதானத்தில் அனலிஸ்ட் நந்தனாவாக அவளைச் சந்தித்தது அவனுக்கு நினைவில் வந்தது.
ஆண்களிடம் இல்லாத கலை நயத்துடன், ஒவ்வொரு அடியையையும் நம்பிக்கையோடு எடுத்து வைத்து அவ்வளவு அழகாக, சீரான வேகத்தில் ஓடி வந்து அவள் பந்து வீசியது அவன் கண் முன் படமாக ஓடியது.
இன்று அவளின் முடிவிற்கு அவன் தான் காரணம் என்று அவனது மனசாட்சியே அவனை நோக்கி கை நீட்டி குற்றம் சாட்டியது.
அவர்களின் காதலுக்கு, கல்யாணத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது இந்தக் கிரிக்கெட் தான். அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால், மற்ற தம்பதிகளைப் போல இல்லாமல், வீட்டுத் தோட்டத்தில் அவனது பயிற்சிக்காக இருக்கும் வலையில் ஒன்றாகக் கிரிக்கெட் ஆடியவர்கள் அவர்கள்.
அவன் வீசும் பால்களைச் சிதறடித்து அவனைத் திணறடிப்பாள் அவள். ஆனால், இனி? இனியும் அதற்கெல்லாம் சமயம் வாய்க்கும் தான். ஆனால், முன்பை போல அதை ரசித்து, சிரித்து அவர்களால் செய்ய முடியுமா என்று கேட்டால் சந்தேகம் தான்.
மனைவிக்குக் குழந்தையில் இருந்தே பிரியமான ஒன்றை இப்போது அவள் பிரிய காரணம், அவள் கணவன் தன்னால் தானே என்ற காரணம் அவனை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது.
அதன் விளைவு, பயிற்சியில் கவனம் சிதறியது. பந்துகளை அடிக்காமல் தவற விட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
தலைமை பயிற்சியாளர் அவனை நெருங்கி, “ஃபோகஸ் நிரஞ்” என்று விட்டுச் சென்றார். தலையைப் பலமாக உலுக்கிக் கொண்டான். ஆனாலும், அவனால் மனதை ஒன்று குவிக்க முடியவில்லை.
“ஆஆஆஆஆ” என்று மனதிற்குள் கத்தி, மனஅழுத்தத்தைக் குறைக்க முயன்றான் அவன்.
சரியாக அந்நேரம் அங்கு வந்தான் சுகாஸ்.
“ஹேய் நிரஞ். எப்படி இருக்க? வா. காஃபி சாப்பிட்டுவிட்டு வரலாம்” என்று அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான் அவன்.
நிரஞ்சனை பேசவே விடவில்லை சுகாஸ்.
“சுகாஸ்” கோபமாகக் கர்ஜித்து அழைத்தான் நிரஞ்சன். அவனிடம் இருந்து தன்னை விடுவிக்கப் பலமாகப் போராடினான். ஆனால், சுகாஸின் பிடி இரும்பாக இருந்தது.
இருவரும் மற்ற வீரர்களின் பார்வையில் இருந்து விலகி ஓரமாக வந்த பின்னே அவனை விடுவித்தான் சுகாஸ்.
இருவரும் களத்தில் நிற்கும் மல்யுத்த வீரர்களைப் போல ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றனர். ஜல்லிக் கட்டுக் காளையாகச் சிலிர்த்து முட்டி மோத தயாராக நின்றனர்.
“யூ டோண்ட் டிசர்வ் ஹேர்” (you don’t deserve her) கசப்புடன் சொன்னான் சுகாஸ். நிரஞ்சன் முகத்தில் ஈயாடவில்லை.
“உனக்கு.. இல்லையில்ல.. நமக்கெல்லாம் நந்தனா, ரியா மாதிரி திறமையும், அறிவும் இருக்கப் பொண்ணுங்க செட்டாகவே மாட்டாங்க. அதுக்கு நாம தகுதியானவங்களும் கிடையாது. நமக்குத் தலையாட்டி பொம்மைங்க தான் லாயக்கு.”
ஏற்கனவே குற்ற உணர்ச்சியால் தவித்துக் கொண்டிருந்தவனின் மனதில் மேலும் கத்தியை சொருகி திருகினான் சுகாஸ்.
“அவளைக் கல்யாணம் பண்ணி, என்ன சாதிச்சுட்ட நிரஞ் நீ? உன்கிட்ட இருந்து எவ்ளோ ஒதுங்கி, ஒதுங்கிப் போனா அவ? உங்க ஃபோட்டோ நெட்ல வந்ததுக்கு அப்புறம் கூட உனக்கு ஓகே சொன்னாளா அவ? இல்லையே? ஏன்னா, அவ இதுக்குத் தான் பயந்தா. உன்னைக் கல்யாணம் பண்ணா, அவ வாழ்க்கையில் கிரிக்கெட் இல்லாம போய்டும்னு பயந்தா. அது உனக்குத் தெரியுமா?” நிரஞ்சனின் நடு மண்டையில் யாரோ பேட்டால் அடித்தது போல நிலை தடுமாறினான் அவன்.
சுகாஸின் வார்த்தைகள் அதன் குறித் தப்பாமல் அவனைத் தாக்கியது. அவனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
தொண்டையை நெரித்த விநோத அவஸ்தையில் எச்சில் கூட்டி விழுங்கினான் அவன்.
“எந்த நாயோ காசு பார்க்க, உன்னைப் பத்தி தப்பா பேசினா, எழுதினா, அதைச் சீரியஸா எடுத்துப்பியா நீ? நாம பார்க்காத விமர்சனமா நிரஞ். கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் என்ன மாறிடுச்சு? ஏன் இப்படிப் பண்ண?” இப்போது சுகாஸின் விரல்களும் அவனைக் குற்றம் சாட்ட, பேட்டை தரையில் ஊன்றி, அதைப் பிடித்தபடி தளர்ந்து தரையில் அமர்ந்து விட்டான் நிரஞ்சன்.
அவனுக்கு நடப்பது எல்லாம் மோசமான கனவு போலிருந்தது.
“நீ நேத்து கிரவுண்டல நடந்துக்கிட்டது பார்த்து, அவ்ளோ சந்தோஷப்பட்டேன். ஆனா, இட்ஸ் டூ லேட் இல்லையா? நந்தனா, அவ முடிவை அதுக்கு முன்னாடியே எடுத்துட்டா தானே? இப்போ நீ சரியா நடந்து என்ன புரோஜனம்? நோ யூஸ்” சலித்து, அலுத்துக் கொண்டான்.
“பொண்ணுங்க கிரிக்கெட்குள்ள வர்றது எல்லாம், எவ்வளவு கஷ்டம்னு உனக்கும், எனக்கும் நல்லா தெரியும் நிரஞ். லட்சம் இல்ல, கோடில ஒருத்தருக்கு கூடக் கிடைக்காத வாய்ப்பு அது. அதுவும் நம்மைப் போலத் திமிரும், மேல் (Male) ஈகோவும் பிடிச்சு திரியற மென்ஸ் டீமுகுள்ள வர்றது எல்லாம் அதிசயம் டா. அவளை.. அவளை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டியே நிரஞ்.” தலையும், தோள்களும் தோல்வியில் தொங்கிப் போக, முகத்தையும் நிலத்திலேயே பதித்திருந்தான் நிரஞ்சன்.
“உங்க கல்யாணத்தப்பவே நான் சொன்னேன் தானே? நான் உன்னை மிரட்டினேன். அவ சந்தோசமா இல்லனா, நீ கிரிக்கெட்டை மறக்க வேண்டியிருக்கும் சொன்னேன். ஆனா, நீ என்ன பண்ணி வச்சிருக்க? அவ வாழ்க்கையில் இருந்து கிரிக்கெட்டை.. ப்ச், நீ மட்டும் இன்னும் கொஞ்சம் மெச்சூர்ட்டா நடந்திருந்தா அவ இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டா…”
“ஸ்டாப் இட் சுகாஸ்” மூச்சு வாங்க கத்தியபடி அவன் முன் வந்து நின்றாள் நந்தனா.
அவனை எரித்து விடுவது போல முறைத்துக் கொண்டே, அங்கே துவண்டு போய் அமர்ந்திருந்த கணவனைக் கைக் கொடுத்து தூக்கி விட்டாள் அவள். அவனோ எழுந்திருக்க மறுத்தான்.