இனியொரு பிரிவேது – 17 (3)

அவளின் வார்த்தைகள் முடிக்கப்படாமல் அந்தரத்தில் தொக்கி நிற்க, “என்னடா?” என்றாள் அவன் கன்னத்தில் கைப் பதித்து.

கண்களோடு, உதடுகளையும் இறுக மூடிக் கொண்டான் நிரஞ்சன்.

கடந்த சில நாட்களாக மனதில் உறுத்தி கொண்டேயிருந்தது அவளின் முடிவு. ஏனோ அந்நேரம் தான் எடுத்த முடிவு சரியென்று பட்டது அவளுக்கு.

“எந்த விமர்சனத்தையும் மனசுல ஏத்தி…” அவள் ஆரம்பிக்க,

“ஷட் அப். நான் என்ன குழந்தையா நந்து? ஸ்டாப் டெல்லிங் மீ த சேம் திங்” இரைந்தான்.

“அவன் விமர்சனம் பண்ணல நந்து. கேவலமா, அவ்ளோ கீழிறங்கி.. ச்சை.. தெருக் கிரிக்கெட் ஆடுறவன் கிட்ட கூட ஒரு நேர்மை இருக்கும். ஆனா, இங்க? அசிங்கமா பேசினான் நந்து”

அவனே மனைவியின் மென்கரத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான்.

“ஆனா, பதில் கொடுத்தேன் பொண்டாட்டி. சரியான பதில். அந்நேரம் அது தான் தோணுச்சு. சொல்லிட்டேன்.”

“என்ன சொன்னீங்க?” மென்மையாய் வினவினாள்.

“தைரியமும், கட்சும் இருந்தா இதையே என் பொண்டாட்டி கூட இருக்கும் போது சொல்லிப் பாருடா, லூசர். நீ போடுற பாலை சிதறடிச்சு, உன் பால்ஸை கட் பண்ணி உன் கையில கொடுத்திடுவா சொன்னேன்” அதிர்ச்சியில் அவள் விழிகள் தெறித்து விடுவது போல விரிந்தது.

“என்ன? என்ன சொன்னீங்க?” நம்ப முடியாமல் மீண்டும் கேட்டாள்.

அவளுக்கு அதிர்ச்சியும், சிரிப்பும் ஒன்றாக வந்தது. அவளுக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகள் அத்தனையும் சொல்லி அவனை அர்ச்சித்தாள்.

“சாரி, வெரி சாரி நந்து. அந்த லூசர் தான் உன்னைப் பத்தி பேசினான்னா, நானும் அசிங்கமா அதுக்குள்ள உன்னை இழுத்திருக்கக் கூடாது. சாரி” அவளின் ஒவ்வொரு விரலாகச் சொடக்கிட்டுக் கொண்டே அவன் மன்னிப்பு கேட்க,

“முதல்ல…அவன்.. என்ன.. சொன்னான்?” என்று முக்கியமான கேள்வியைக் கேட்டாள் அவள்.

நிரஞ்சனின் தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறியிறங்க, “நான் சரியா ஆடி இருந்தா, அவன் பேசவே வாய்ப்பு இருந்திருக்காது” குற்ற உணர்வுடன் ஆரம்பித்தவனைக் கை நீட்டி நிறுத்தினாள் நந்தனா.

“கிரிக்கெட் கடவுள்னு இந்தியா மட்டுமில்ல, உலகமே கொண்டாடினவரும் கூடப் பல முறை சொதப்பியிருக்கார். இது விளையாட்டு. அவ்ளோ தான். இங்க முன் கூட்டி எதையும் முடிவு பண்ண முடியாது. அந்த நிமிஷம் உங்களுக்கு வீசப்படுற பாலை தான் அடிக்கணும். அதைப் பேட்டால் தொட முடிந்தா அடிக்கப் போறீங்க.. எப்ப பாரு.. என்னால தான்னு பேச்சு.” என்று அவன் முகத்தில் அறைவது போலச் சொன்னவள்,

“அவன் என்ன சொன்னான்?” என்று மீண்டும் அழுத்திக் கேட்க, மெதுவாகச் சொன்னான் நிரஞ்சன்.

கைகள் இறுக, பற்கள் அரைபட, வார்த்தைகள் விஷமாக வெளிவந்தது.

“பொண்டாட்டி கிட்ட அது மட்டுமில்ல நிரஞ். கொஞ்சம் கிரிக்கெட்டும் பிராக்டீஸ் பண்ணு” என்று நக்கலாக, அவனைக் கோபப்படுத்த வேண்டுமென்றே சொல்லியிருந்தான் எதிரணி பந்து வீச்சாளன்.

ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துப் போன நிரஞ்சன், மறுகணமே அவனுக்கு நடுவிரலை காட்டி விடத் தான் விரும்பினான். ஆனால், “பிராக்டீஸ்” என்ற வார்த்தை அவனை அதிகம் பாதித்தது. அது அவர்களுக்கு அந்தரங்கமானது. அவனுக்கும், நந்தனாவிற்கும் மட்டும் ரகசிய அர்த்தம் பொதிந்த வார்த்தையை, சாதாரணமாகச் சொல்லி அவன் சீண்டவும், கோபத்தால் தூண்டப்பட்டான் நிரஞ்சன்.

இது போன்ற கீழ்த்தரமான சீண்டல்கள் அவனுக்குப் புதிதல்ல. ஆனால், ஆட்டத்திற்குள் தொடர்பே இல்லாமல் அவன் மனைவியை இழுத்து பேசியது அவனுக்குப் புதிது. எதிரில் இருந்தவனை அடித்து நொறுக்கும் வெறியை கிளப்பியது.

சரியான நேரத்தில் கேப்டன் மட்டும், “நிரஞ்” என்று கத்தி இருக்கா விட்டால், ஆத்திரத்தில் நிச்சயமாய் அவன் வாயை உடைத்திருப்பான் நிரஞ்சன். அடித்து அவன் முகரையைப் பெயர்த்திருப்பான். நேரம் அவனுக்குக் கொஞ்சம் சகாயம் செய்திருந்தது. தப்பித்தான் அவன்.

ஆனால், விரைவில் அடி வாங்குவான் என்பது உறுதி. அவனது மோசமான நடத்தையின் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் ஆடுவதே சந்தேகம் தான். எதிரணி கேப்டன் அவனைக் கடுமையாக எச்சரித்ததை நிரஞ்சன் தான் பார்த்தானே.

அதை விடச் சென்னை அணியின் தலைவனின் பார்வை அவனைக் கூறு போட்டதே. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்று பலமாக நம்புகிறவர் அவர். இந்திய அணியில் அந்தப் பவுலரின் இடம் இனி சந்தேகத்திற்கு உரியது தான். மன்னிப்பு மட்டும் போதாது. தொடர்ந்து தனது நன்னடத்தையின் மூலமே தன்னை நிரூபித்து அவன் அணிக்குள் வர முடியும். “அனுபவிக்கட்டும்” என்று நினைத்துக் கொண்டான் நிரஞ்சன்.

“விடுங்க நிரஞ்சன். லூசர் அவன். அவனை அடிக்க நமக்கு வாய்ப்பா கிடைக்காம போய்டும். அப்போ பார்த்துக்கலாம்” என்ற மனைவியை வாய் பிளந்து ஆச்சரியமாகப் பார்த்தான் நிரஞ்சன்.

“ரிலாக்ஸ் நிரஞ்சன், இட்ஸ் ஆல் இன் த கேம்” என்று அவனைச் சமாதானப்படுத்த தொடங்கினாள் அவள்.

இருவருக்கும் அந்த வார்த்தைகள் உள்ளுக்குள் உறுத்தலை கொடுத்தது என்னவோ உண்மை தான். அதிலும் தான் எடுத்த முடிவிற்கு இப்போது மனதார மகிழ்ந்தாள் நந்தனா.

நன்றாக யோசித்துப் பார்த்தால், அவளுக்கு அவளது முடிவு அர்த்தமற்றதாகக் கூடப்பட்டது. ஆனாலும், தன் முடிவில் இருந்து மாறப் போவதில்லை அவள்.

ஏதேதோ பேசி தங்களின் மனநிலையை மாற்ற முயன்றனர் இருவரும்.

“இனி யார் என்ன பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்று அன்றைய அவனது செயலாலும், வார்த்தையாலும் அவளுக்கு அழுத்தமாக உறுதி அளித்தான் நிரஞ்சன்.

“அவனை வெளில எங்கயாவது பார்த்தா அடிச்சுடவா பொண்டாட்டி?” நிரஞ்சன் தீவிரமாகக் கேட்க, “ரவுடி மாதிரி பேசாதீங்க” என்று அவன் மீசையைப் பிடித்திழுத்தாள் நந்தனா.

“ஆனாலும், அவன் கண்டிப்பா ஒரு நாள் வாங்குவான்” என்று மட்டும் உறுதியாகச் சொன்னான் அவன். சிரித்தாள் நந்தனா.

அன்றும் அவனிடம் தன் முடிவை சொல்ல மறந்து போனாள் அவள். ஏற்கனவே இருவரின் மனநிலையும் மிக மோசமாக இருக்க, அதை மேலும் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை அவள்.

சென்னை அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே பாக்கி இருந்தது. புள்ளி பட்டியலில் கீழிருந்து இரண்டாம் இடத்தில் இருந்ததால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை அந்த வருடம் இழந்திருந்தார்கள் அவர்கள்.

எப்படியும் இறுதி போட்டிக்கு செல்லப் போவதில்லை, இனி எதற்கு உயிரை கொடுத்து ஆடிக் கொண்டு என்று இளம் வீரர்கள் முணுமுணுக்க, நிரஞ்சன் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் எல்லாப் போட்டியும் முக்கியம் என்று பயிற்சிக்குக் கிளம்பினார்கள்.

நந்தனா அதற்கு மேலும் விஷயத்தைத் தள்ளிப் போட விரும்பாமல், கணவனிடம் தன் முடிவை போட்டு உடைத்தாள்.

கொல்கத்தா அணியுடன் மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி மோதவிருக்க, முன் தினம் இரவு தான் சென்னைக்கு வந்திருந்தனர்.

வீட்டில் இருந்து பயிற்சிக்காக மைதானம் செல்ல காரை கிளப்பினான் நிரஞ்சன்.

“நந்து, வேகமா வா” என்று அவன் கத்தி அழைக்க, அப்போது தான் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தாள் நந்தனா.

மாடியை ஒட்டிய பால்கனிக்கு வந்தவள், “கொஞ்சம் மேல வாங்க நிரஞ்சன்” என்று பதிலுக்குக் கத்த, “டைமாகுது நந்து” என்றான் அவன்.

“பிளீஸ்” என்று அவள் கெஞ்ச, இறங்கி உள்ளே சென்றான் நிரஞ்சன்.

“என்ன விஷயம் நந்து? டைமாகுது இல்ல? சீக்கிரம் வா” என்றவனைப் பதட்டமாகப் பார்த்தாள் அவள்.

“என்ன நந்து? ஏன் இப்படி வேர்க்குது உனக்கு? உடம்புக்கு ஏதும் முடியலையா?” அசையாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள் அவன் மனைவி.

“போகலாம் நிரஞ்சன். நைட் பேசலாம்” திக்கினாள் நந்தனா.

அவனைக் கடந்து படிகளில் கீழிறங்கப் போனவளை இழுத்து நிறுத்தினான் அவன்.

“நாலு நாளா நீ சரியில்ல. ரொம்ப யோசிக்கற. என்னமோ சொல்ல வர்ற. ஆனா, சொல்லல. இப்போ சொல்லு” அழுத்தமாய் அவன் கேட்க, எச்சில் கூட்டி விழுங்கினாள் நந்தனா.

“ம்ம். சொல்லு நந்து.” சுவரில் சாய்ந்து நின்று கேட்டான்.

நந்தனாவின் கண்கள் வீட்டை சுற்றி வந்து கணவனில் பதிந்தது.

அவளை நெருக்கமாக இழுத்து, “என்ன நந்து? என்ன பிரச்சினை?” அவன் அக்கறையுடன் அன்பு கலந்து கேட்க, அவன் மார்பில் பார்வையைப் பதித்து, “நான்.. நான்.. ரிசைன் பண்ணிட்டேன் நிரஞ்சன்” சொல்லியே விட்டாள் நந்தனா. அவள் கைகளை அதிர்ச்சியில் நழுவ விட்டான் நிரஞ்சன்.

ஒரு கணம் மயான அமைதி அங்கே. இருவரின் கண்களும் ஒன்றையொன்று சந்திக்க, அவன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. அதை மீறிய வலி.

அனிச்சையாய் அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினான் நிரஞ்சன்.

“நிரஞ்சன்” என்று கை நீட்டியவளை, “தொடாத, என்னை” கத்தி தடுத்தான் அவன்.

“ஏன்?” என்றான் கரகரத்த உடைந்த குரலில்.

மெல்ல அவனை நோக்கி அடி எடுத்து வைத்தாள் அவள். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, “தூர போடி. என் பக்கத்துல வந்த கொன்னு போட்டுருவேன்” வீடே அதிரும் வண்ணம் அடித் தொண்டையில் இருந்து கத்தினான் நிரஞ்சன்.

“என் கண் முன்னால நிக்காம போய்த் தொலை. உன்னைக் கொன்றுவேன் நான்.”

“என்னைக் கேட்டியா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல தோணுச்சா உனக்கு?” அந்தக் குரலில் இருந்த வலியில் அவளுக்குக் கண்கள் கலங்கியது.

“நிரஞ்சன்”

“என் பேரை சொல்லாத. என் கண் முன்னால நிக்காத. வர்ற கோபத்துக்கு உன்னைக் கொன்றுவேன் போடி” அவள் கண்களைப் பார்த்துக் கர்ஜித்தான்.

உடல் நடுங்க ஓரடி பின்னே எடுத்து வைத்தாள் நந்தனா.

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top